வீதியில் கிடைத்த ஞானம்
இசைக்கவி ரமணன்
வார்ப்பிலேயே நான் ஊர் சுற்றி. புதிது புதிதாய் மனிதர்களைத் தெரிந்து கொள்வதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி. கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால், மனம்திறந்து பேசத் தயாராக இருக்கிறார்கள் பலர். வெகு சிலரோ, கை குலுக்கினால், மறைவாக விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான இந்தியர்கள் ‘ஹலோ’ சொன்னதுமே நம் வேலை, சம்பளம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்! சிலருக்கு இந்த மாதிரிக் கேள்விகள் மிகவும் எரிச்சல் மூட்டுவதால், அவர்கள் பிரேதத்தை எழுப்பினாற்போல் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். அட, அதுதான் அவர்களுக்கு எத்தனை இயல்பாக வருகிறது! என்னைப் பலமுறை, பலரும் இந்தக் கேள்விகள் கேட்டதுண்டு. சொல்லத் தயங்கக் கூடிய அளவுக்குச் சம்பளம் நான் ஒரு போதும் வாங்கியதில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்! ஒருமுறை சென்னை மின்சார ரயிலில்:
“ஓஹோ! அது பெரிய பத்திரிகையாச்சே! நல்ல சம்பளம் இருக்குமே!”
– ம்
“ என்ன ஒரு அம்பதாயிரம் இருக்குமா?”
ஆஹா! இவர்களுக்குத்தான் என்ன நம்பிக்கை! அதற்கு எத்தனை பூஜ்ஜியங்களோ? ஐந்தாம் தேதி சம்பளம். ஆறு, ஏழு, எட்டு வரை தேதிகள் சரியாகவே இருக்கின்றன. அப்புறம் உடனே 28, 29, 30 என்று வந்துவிடுமே! முதல் வாரமே முப்பதாம் தேதி வருகிற கதையை இவருக்கு எப்படித் தெரிவிக்க!
“அட, ஒரு அஞ்சு பத்து முன்ன பின்ன இருக்குமோ என்னமோ?” விடுவதாயில்லை அவர்.
உடனே, பக்கத்தில் இருப்பவர், “அட் என்னங்க நீங்க இதெல்லாம் போயி அவருகிட்ட கேட்டுகிட்டு? அவருதான் பத்திரிகைப் பேரைச் சொல்லிப் பதவியையும் சொல்லிட்டரில்லெ? அப்புறம் நாமாத் தெரிஞ்சுக்க வேண்டியதுதானே? இதெல்லாம் கேக்கணுமாக்கும்? என்னங்க தம்பி நாஞ் ஜொல்றது? என்ன ஒரு அறுபது எழுபது இருக்கத்தானே செய்யும்!,” என்று என்னையும், அவரையும் மாறி மாறிப் பார்த்தபடிச் சொன்னார்.
அறுபது எழுபதா?? குபீரென்று சிரித்து விட்டேன். அவர்கள் ரசிக்கவில்லை. நிலைமையைச் சமாளிக்க அவர்களிடம் சொன்னேன். “ஒண்ணுமில்லைங்க; ஒரு ஜோக் நெனவுக்கு வந்துது. ரெண்டு பேர் பேசிக்கறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரைக் கேக்குறாரு : ‘ஏங்க எங்க வேலை செய்யறீங்க?’ அவரு, ‘நான் …பத்திரிகையிலெ மேனேஜரா இருக்கேன்.’ கேட்டவரு உடனே, ‘பேஷ் பேஷ்! அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க?’ ன்னாரு.
நம் சக பயணிகளுக்கு இதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. சம்பளம் என்னன்னு கேட்டா நேராச் சொல்ல வேண்டியதுதானே என்பது போல் முறைத்துக் கொண்டார்கள். முதலில் கேட்டவரைக் கேட்காதே என்று சொன்னவர், முணுமுணுத்தார்: ‘ஆமா, பத்திரிகைக் காரங்க சம்பளத்தத்தான் ரொம்ப நம்பி இருக்காங்களாக்கும்.’ சரி, இனிமேல் எங்கே போனாலும் சம்பளச் சீட்டைக் கொண்டு போக வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர், தமிழ்ப் பத்திரிகையை ஒரு உதறு உதறிப் பிரித்து அதில் முகத்தை மறைத்துக் கொண்டார்.
ரயில் ஒரு நிலையத்தில் நிற்கும் முன்னே இளைஞனொருவன் இறங்க முயன்று அசிங்கமாக விழுந்தான். நிறையச் சிராய்த்திருக்கும். கண்ணாடி போட்டிருந்த அந்தக் கறுத்த மனிதர் சொன்னார், “ பாத்தீங்களா! பெத்தவங்க எவ்வளவு பாடுபட்டுப் பணத்தச் செலவழிச்சி படிக்க வச்சி அனுப்பறாங்க. இங்கெ என்னடான்னா பொறுக்கி மாதிரி விளுந்து கெடக்குறானே!” பக்கத்தில் இருந்தவரோ, “இதுக்குத்தாங்க சொல்றேன். புருசன் பொண்டாட்டி சேரும்போது பாத்துச் சேரணும்,” என்றார்! கறுத்த முகம் ரொம்பக் கருத்துப் போயிற்று!
‘சூடா கட்லேஸ்’ என்று வந்தான் வேர்க்கடலைப் பையன். தூரத்திலிருந்து ஒரு குரல், ‘ஏய் கடல! இங்கிட்டு வா!’ நம்ம பயல் அதைக் கவனித்தது மாதிரித் தெரியவில்லை! உடனே மறுபடியும், ‘ஏய்! என்ன கூப்டேனில்லா? வா இங்கிட்டு!’ உடனே இவன், ‘யோவ் சொம்மா அலியாதெ! அல்லாம் வர்றாங்க இரு.’ என்றான். இந்த இருதுருவத் தமிழ் உரையாடலை ரசித்துக் கொண்டிருந்த (கேட்டபடியே எழுத சிஃபியில் சம்மதிக்க மாட்டார்கள்!!!) நான் பயலைப் பார்த்து லேசாய்ச் சிரித்தேன். அவனும், தனக்குத் தோழமை கிடைத்தது போல், அழகாய்ச் சிரித்தான். நான் வாங்குவேன் என்று தெரியும் போல! அவனே வந்து கையில் கடலையைக் கவிழ்த்தான், கொஞ்சம் கூடுதலாக! ‘துன்னு, நல்லாருக்கும்,’ என்ற பாவனையில் புருவத்தை உயர்த்தினான்.
காரணமே இல்லாமல் என்னிடம் இனிமையாக இருக்கிறார்கள். அதேபோல் காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் கடுமையாக இருக்கிறார்கள். எங்கள் அலுவலக காண்டீனில் ஒருவர் காப்பி கலந்து தருவார். நாங்கள் வரிசையாக நின்று டபரா டம்ளரை எடுத்துக் கொண்டு போகவேண்டும். ஒவ்வொருவரையும், தேவையே இல்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு திட்டுவார். என் முறை வரும்போது, திடீரென்று அவர் முகத்தில் புன்னகையும், அந்த உணர்ச்சி மாற்றத்தில் நெற்றியில் வியர்வையும் அரும்பும்.
யோசித்துப் பார்க்கிறேன். நான் எங்கே போனாலும் எல்லோரும் என்னிடம் சரளமாகவும், ரொம்பவும் பேசுகிறார்கள். ஆட்டோவில் போனால் அவ்வளவுதான்! முக்கால் மணி நேரம், ஓட்டுனர் தன் கதையை ஒரு காட்சி மிச்சம் வைக்காமல் சொல்லி விடுவார்! ஒருமுறை ஓர் ஆட்டோக்காரர் பர்ஸிலிருந்து அவரது வைப்பாட்டிப் புகைப்படத்தை கனமுடையாக எனக்குக் காண்பித்து வெட்கம் வேறு பட்டுக்கொண்டார். அதெல்லாம் பரவாயில்லை. பேச்சு சுவாரசியத்தில் அவர்கள் என்பக்கமே திரும்பிக் கொண்டு பேசிக்கொண்டே ஓட்டுவார்கள்; அதுதான் வயிற்றில் புளியைக் கரைக்கும்!
நெடுந்தொலைவு பேருந்தில் பயணம் செய்யும்போது, ஓட்டுனரும், கண்டக்டரும் நல்ல நண்பர்களாகி விடுவார்கள். அதற்கு ஒரு காரணமும் உண்டென்று வைத்துக் கொள்ளலாம். நிறுத்தும் இடத்திலெல்லாம், அவர்களது வால்போலவே இருப்பேன். விட்டுவிட்டுப் போகமாட்டார்கள் என்ற தைரியத்தில் நிதானமாகச் சாப்பிடலாம்! அப்படியும் ஒருமுறை, மைசூருக்கும், பெங்களூருக்கும் நடுவில், இயற்கை அன்னை ஒரேயடியாக அழைக்க, கண்டக்டரிடம் சொல்லிவிட்டுத்தான் இறங்கினேன். மறந்துபோய் அவர் விசில் ஊதிவிட்டார். இங்கேயோ, பாசனத்திட்டம் கட்டுக்கடங்காமல் இறங்கிக்கொண்டிருக்க, திடீரென்று பேருந்து கிளம்பிவிட, நான் திரும்பவௌம் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் பட்ட அவஸ்தை! அப்புறம், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ஓர் ஆட்டோவில் பாய்ந்து, ஓட்டுனர் முன் பத்து ரூபாய்த் தாளை நீட்டவும், அவர் பேருந்தைத் துரத்தினார். ஒரு சிறு தெருவைத் தாண்டி மெயின் ரோட்டில் நுழையப் போகிறது பேருந்து. அதற்கப்புறம் அதைப் பிடிக்க வாய்ப்பேயில்லை. இரு வண்டிகளும், பக்கம் பக்கமாகச் சென்ற தருணம், நான் பேருந்தின் ஓட்டுனரைப் பார்த்துக் கையசைத்துக் கத்தினேன்! அவரோ, நான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் என்று நினைத்து, பலமாகக் கையாட்டி கியரை மாற்றினார். ஆட்டோக்காரர் கிட்டத்தட்டத் தற்கொலை ரீதியில் குறுக்கே பாய்ந்து நிறுத்த, நான் தாவி ஏறினேன். நடந்ததைப் புரிந்துகொண்ட கண்டக்டர், தலையைச் சொறிந்தபடியே ‘த்சொச்சொச்சோ’ என்றார். கன்னட மொழியில், அதைவிடவும் பெரிதாய் மன்னிப்புக் கேட்டிருக்க முடியாது! பேருந்து ஓட்டுனர்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். நான் தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பேன். அதற்கு அவர்கள் விளக்கம் சொல்லத் துவங்கி தங்கள் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிக் கவிழ்ப்பார்கள். நான் ஆர்வத்தோடு கேட்பேன்!
மனிதர்கள், கேட்பதே பேசுவதற்காகத்தான்! என்ன, கேட்கிறீர்களா?!