-கே.ரவி-

tumblr_l7s4lk4qtC1qc5cc5o1_500

புழுக்கம் தாங்கவில்லை, உஸ் அப்பா! தோட்டத்தில் சென்று அமர்கிறேன். அப்பாடா, ஜில்லென்று ஒரு காற்று (‘காதல்’ இல்லை) என்னைத் தீண்டியது. இல்லை, சீண்டியது. ‘என்ன ஓய், கவிதை வேணுமா?’

ஏனோ தெரியவில்லை, கவிதையிடம் எனக்கு அப்படியோர் ஈடுபாடு! வெறி! ஆங்கிலத்தில் சொன்னால், an obsession. ஏன்? காரணம் புலப்படவில்லை. என்ன விட்ட குறை தொட்ட குறையோ!

சிந்தித்துப் பார்த்தால் கவிதையால் பெரிய சமூகப் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கவிதை பெரும்பாலும் பயன்படுவதுபோல் தோன்றுகிறது.

இன்னும் சற்று அணுகிப் பார்த்தால் மனத்துக்கு ஒர் ஆறுதல் அளிப்பதாக, அல்லது, மனத்தைப் பண்படுத்துவதாக, இப்படி வேறு சில பயனுள்ள பணிகளைச் செய்யும் சாதனாமாக அது தெரியலாம். இதெல்லாம் என் கவிதைப் பித்துக்குக் காரணமாக இருக்க முடியாது.

கவிதை எனக்குப் பயன்படுகிறது என்பதை விட, அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதை விட, ஒரு கருவியாகக் கவிதை என்னைப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கவிதையை ஒரு சாதனமாகவோ, வாகனமாகவோ என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்னை ஆட்கொண்ட ப்ரபஞ்ச சக்தி அது என்றே நம்புகிறேன். “நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பி விட்டோம்” என்பது பாரதி வேதம்.

மீண்டும் அறிவு குறுக்கிடுகிறது. அது சொல்கிறது: ‘இதெல்லாம் ஒருவித மாயா வாதம். ஆங்கிலத்தில் delusion என்பார்களே அதை போன்ற ஒரு மனநோய்.’

அறிவு ஆயிரம் சொல்லும். அதனால்தான் அதைச் சிற்றறிவு என்கிறோம். அதைக் கடந்து போனால்தான் பேறறிவாகிய அருட்கடலில் நீந்த முடியும். கவிதை அந்தப் பேரறிவோடு சம்பந்தப்பட்டது. இதுவும் என் நம்பிக்கை!

எப்படியாவது தன் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பே கவிதை எழுதத் தூண்டுகோல் ஆகிறது. அருகிலோ, எதிரிலோ இருக்கும் நபரிடம் தன் வியப்பையோ, சோகத்தையோ, சினத்தையோ, விரக்தியையோ ஒருவன் மிக எளிதாகப் பேசும் மொழியிலேயே பகிர்ந்து கொண்டுவிட முடிகிறது. அருகில், அல்லது, எதிரில் இல்லாத நபர்களுடனும் அதைப் பகிர்ந்து கொள்ள அவன் ஆசைப்பட்டால் அதைப் பிறகு படித்துப் பார்க்கக் கூடிய வகையில் எழுதி வைக்க நேரிடுகிறது. அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் படாதபோது, எழுதி வைப்பவற்றைத் தக்க முறையில் பாதுகாக்க வசதிகள் இல்லாத போது, தான் சொல்வதைக் கேட்பவர் மனப்பாடம் செய்து அப்படியே பிறருக்குச் சொல்லக் கூடியவாறு சொல்லும் வழக்கம் உண்டாயிற்று. அதற்குச் செய்யுள் நடையே உதவியது.

பேசும் மொழிகளாகவே இருந்துவிட்ட பல மொழிகளின் நடுவே, செய்யுள் மொழியாக உருவெடுத்ததால்தான், நன்றாகச் செய்யப்பட்டது என்ற பெயர் சம்ஸ்க்ருதத்துக்கு ஏற்பட்டதோ? பேச்சே செய்யுள் நடையில் அமைந்த மொழியாக வளர்ந்ததுதான் தமிழோ?

அந்த விசாரணையை விட்டுவிடுவோம். மேலே சொன்னது ஓரளவு செய்யுள் தோன்றிய வரலாற்றின் அடிப்படையாக இருக்கக் கூடும். ஆனால், கவிதை . . . ! அதன் கதை வேறு!

இந்தக் கணத்தில், என் மனத்தின் அடித்தளத்தில், “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”, என்ற பழைய திரைப்பாடல் மெட்டில், “செய்யுள் என்பதும் கவிதை ஆகலாம்” என்று தொடங்கும் ஒரு முழுப்பாட்டு ஒலிக்கிறது. ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

“சொல்லும் சொல்லும் சேரும் போது கானமாகலாம்
சொல்கடந்து செல்லும் போது மோனமாகலாம்
சொல்மலர்ந்து சுடரெழுந்து ஞானமாகலாம்
செய்யுள் என்பதும் கவிதை ஆகலாம்”

“செய்யுள் என்பதும்” என்பதில் உள்ள அந்த உம்மைக்கு எத்தனை உம்மா வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்ன அழுத்தம்!!

கவிதை பற்றிச் சிந்தித்து ஒரு கட்டுரை எழுதும்போது இதென்ன குறுக்கீடு? அந்தப் பாட்டையே முணுமுணுக்கும் மனத்தை அடக்க முல்கிறேன். அட, மனத்தின் ஒரு மூலையில் எங்கோ ஒரு கேலிச் சிரிப்பொலி வேறு கேட்கிறதே!

மன்னித்துக் கொள்ளுங்கள், இந்த அறிவு ரீதியான முயற்சியின் நடுவே ஒரு பாடல் குறுக்கிட்டது போல், வேடிக்கையான காட்சி ஒன்று, மனத்திரையில்தான், இப்பொழுது குறுக்கிடுகிறது.

1642141-bigthumbnail

உடல் பிரிந்து வெறும் ஆவியாக, (அப்படித்தானே நாம் சொல்லாக்கம் செய்து கொண்டிருக்கிறோம்!), திரிந்து கொண்டிருக்கும் ஓருயிர் (?), வான்விளிம்பில் தோன்றும் வர்ணஜாலங்களில் தன் நெஞ்சம் பறிகொடுத்து ( ஆவிக்கு நெஞ்சம் உண்டோ?), எப்படியாவது தன் வியப்பையும் பரவசத்தையும் வெளிப்படுத்தத் துடிக்கிறது. அது ஆவியா ஏதாவது தேவதையா? கந்தர்வக் கன்னியா? (எப்படி நான் அதைப் பெண்பால் என்று தீர்மானித்தேன்? என் பெண்ணீர்ப்புச் சக்தியின் தன்முனைப்பே காரணமோ!!!). அதே கணத்தில் பூமியில் நான் வானத்தின் அழகை ரசித்தபடி அதில் மனம் பறிகொடுத்து, மெய்மறந்த நிலையில் இருக்கிறேன். என் துடிப்பும், அந்தத் தேவதையின் துடிப்பும் ஓரளவு ஒரே அதிர்வு நிலையில் ஸ்ருதி சேர்கிறது. என்ன ஆச்சர்யம்! பாடலொன்று ( அடடா, மீண்டும் பாடலா?) குபீரென்று என் உட்செவியில் ஒலிக்கிறது. அதை உருவாக்கியது அந்தத் தேவதையா, நானா, வானா? யார் இதைத் தீர்மானிப்பது? பாடல் முண்டியடித்துக் கொண்டு வருகிறது:

“நானும் அந்த வானும் இங்கே நந்த வனத்துத் தோழிகள்
நாளும் இரவும் ஒளியும் நிழலும் நாங்கள் உருட்டும் சோழிகள்”

யாரோடு யாரைப் பகிர்ந்து கொள்ள யார் பாடும் பாடலிது?

அறிவைக் கொண்டு சொற்கள் தேடி அடுக்கிச் செய்யும் செய்யுள்கள் வேறு, கவிதை வேறு. அறிவுக்கு உருவாக்கும் ஆற்றல் கிடையாது. கற்பனையின் தனிப்பட்ட சக்தி அது. அறிவு ஆக்கும் கருவி இல்லை. காக்கும் கருவி. “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்பதே வள்ளுவர் வாக்கு. “அறிவினால் ஆகுவதுண்டோ?” என்பதும் வள்ளுவர் கேள்வி. எனவே அறிவு ஆக்கும் கருவி இல்லை. அதனால்தான் அதைச் சிற்றறிவு என்கிறோம். பேரறிவு என்ன என்றால் . . . ., அட, காற்று நின்று விட்டதே! மரம், செடி, கொடிகள் ஆடாமல் அசையாமல் மெளனத்தை அடைகாக்கின்றன. காற்று மீண்டும் வரக்கூடும், வரும். காத்திருக்கிறேன்; வரட்டும், மேலும் எழுதுகிறேன், வந்தால்!

கரவொலிகள் ஓய்ந்துவிடும் ராக்கா லத்தில்lean-against-the-wind-by-Radu-Voinea
காதருகே வந்துசில கவிதை சொல்லிப்
பறந்துவிடும் தென்றலைநீ பார்த்த துண்டா
பாவனையாய் அதுசொன்ன மந்தி ரத்தை
மறந்துவிட முடியாது என்றைக் கேனும்
மனத்துக்குள் இடிமுழக்கம் செய்யும் அன்று
கரவொலிகள் ஓய்ந்துவிடும் கண்ணீர் சூழும்
கடலுக்கு நடுவிலொரு தீ உண்டாகும் – கண்ணீர்க்
கடலுக்கு நடுவிலொரு தீயுண் டாகும்

கவிதையொரு மனோதர்மம் கலைந்த கூந்தல்
கற்பனைகள் சிறகடித்துப் பறக்கக் கண்டும்
புவியெல்லாம் புதுமெருகு தோன்றக் கண்டும்
புலப்படாது திடீரென்று நடுங்கும் நெஞ்சில்
தவிக்கின்ற உணர்வுகளில் தனிமை யூற்றில்
தாகத்தால் மனம்வரண்டு தளரும் போதில்
சுருக்கென்று முள்குத்திச் சிரித்துக் கொள்ளும்
சுவடுகளே தெரியாமல் விரைந்து செல்லும் – வந்த
சுவடுகளே தெரியாமல் விரைந்து செல்லும்

நேருக்குநேர் அதையும் பார்ப்ப தற்கு
நிச்சயித்த விழிகளுடன் காத்தி ருந்தேன்
கார்மேகம் நகர்கிறது கனவு காட்டிக்
கள்ளநிலா மறைகிறது சாரல் வேறு
யார்யாரோ வருகின்றார் ஓடு கின்றார்
அதைமட்டும் காணவில்லை அந்த நேரம்
இதயத்தைத் தூளாக்கும் சிரிப்புச் சத்தம்
இருள்கிழிக்க வந்ததொரு வெட்டு மின்னல்
உதிரத்தைச் சூடேற்றி என்னை நானே
உறிஞ்சுகிற ஆவேசம் அதற்குப் பேர்தான்
உன்மத்தம் உயர்கவிதை உணர்ச்சி போதை
எங்குமே செல்லாத புதிய பாதை

ஓசைகளின் விளிம்பினிலே ஊஞ்ச லாடும்
உற்சாகம் உள்மனத்தின் இயக்க மெல்லாம்
ஆசைகளாய்ப் பரிணமிக்கும் அர்த்த ஜாமம்
அனுபவங்கள் மலர்கின்ற உதய காலம்
புரியாத நுணுக்கங்கள் புலனா கின்ற
புதுப்பார்வை உலகாளும் புலமை யோகம்
தரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்
தறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை
உன்மத்தம் உயர்கவிதை உணர்ச்சி போதை
எங்குமே செல்லாத புதிய பாதை

 

காற்று வாங்கப் போனேன் – பகுதி 2

போன பகுதியை எங்கே நிறுத்தினேன்? நான் நிறுத்தவில்லையே! காற்று நின்றது, கட்டுரையும் நின்றது. காற்றுக்கும் கவிதைக்கும் என்னய்யா சம்பந்தம்? பாடலாகவே வந்தது பதில்:

மனமலரைத் தென்றல் வருடிவிடும் – ஒளி
மகரந் தங்கள் சிதறிவிழும்
தினமிது போல்சில கவித்துளிகள் – எட்டுத்
திசைகளி லும்விழும் சுடர்ப்பொறிகள்

(மனமலரை)

கனவிலி ருந்தொரு துளிவிழலாம் – பல
காட்சிக ளும்அதில் பதிந்திடலாம்
ஒவ்வொரு துளியும் ஒருவிதை யாய்ச்சில
உள்ளங்க ளில்சென்று விழுந்திடலாம் – பே(ர்)
அண்டங்க ளாயவை மலர்ந்திடலாம்

(மனமலரை)
வண்ணமும் வாசமும் போலல்ல வோநம்
எண்ணமும் கற்பனையும்
வண்டுக ளாய்ப்பல வார்த்தைக ளைமன
வாசலில் கொண்டுவரும் – தேன்
கவிதைகள் மொண்டுதரும்

(மனமலரை)
அடிப்படை யில்நாம் ஓருயிரே – வெளி
அதிர்வுக ளில்பல வடிவங்களே
என்குரல் உந்தன் உயிர்த்துடிப்பே
எதிரொலித் தாலதில் தோய்ந்துவிடு – உன்னை
ஏந்திக்கொண் டாலதில் சாய்ந்துவிடு

(மனமலரை)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.