குறளின் கதிர்களாய்…(30)
-செண்பக ஜெகதீசன்
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. (திருக்குறள் – 523: சுற்றந்தழால்)
வளமான வாழ்க்கைக்கு,
வாழவேண்டும்
சுற்றத்துடன் சேர்ந்து…
சுற்றத்தாருடன் மனங்கலந்து
சேராதவன் வாழ்க்கை,
கரையில்லாத குளத்தில்
நிறைந்திடும்
நீருக்கு நிகராகும்…!
குறும்பாவில்…
கரையற்ற குளத்தில் நிறைந்திடும்
நீர்போலாகும் வாழ்க்கை,
மனமொன்றி சுற்றத்துடன் சேராதவர்க்கு…!
மரபுக் கவிதையில்…
கரையது யில்லாக் குளமும்தான்
கடல்போல் பெரிதாய் இருந்தாலும்,
விரைந்தே வந்திடும் நீரெல்லாம்
வெளியே போய்விடும் நிற்காமல்,
உரைத்திடும் கதையிது வாழ்வினிலே
உறவுடன் ஒன்றிடா வாழ்க்கையது
கரையிலா குளத்து நீர்போலக்
கணத்திலே போய்விடும் வீணாவே…!
லிமரைக்கூ…
வளமாய் வாழ்ந்திடு சுற்றத்துடன் சேர்ந்து,
அல்லாத வாழ்வது
கரையில்லா குளமாகும் நீரெல்லாம் தீர்ந்து…!
கிராமிய பாணியில்…
கொளத்தப்பாரு கொளத்தப்பாரு
காஞ்சிபோன கொளத்தப்பாரு,
கொளத்துக்குத்தான் கரவேணும்
கரயிருந்தா தண்ணிசேரும்,
கரயில்லா கொளத்திலதான்
வந்ததண்ணி வீணாப்போவும்
எந்தத் தண்ணியும் தங்காதே…!
கதயிதுதான் வாழ்க்கயில…
ஒறவோட சேந்துவாழ்ந்தா
நல்லதுதான் எல்லாத்துக்கும்,
இல்லன்னா ஓம்பொளப்பு
கரயில்லா கொளத்துத்தண்ணி கதயாவும் பாத்துக்க
கருத்தோட நடந்துக்க…!
குற்றம் கண்டால் சுற்றமில்லை என்பதை இன்றைய குறள் விளக்கம் மூலம் அத்தனையிலும் அழகாக சொன்ன குறளரசர் மரபுக் கவிதையில் ஒரு படி மேலே சென்று விட்டார்.
குறள்வழி கருத்தை பல்சுவையில் பரிமாறிய விதம் அருமை. அமீர் அவர்கள் குறிப்பிட்டது போல் மரபுக்கவிதை மற்றவற்றை விடவும் அதிகம் ஈர்த்தது. அற்புதமான இம்முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் தங்களுக்கு.
கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
திருவாளர்கள், அமீர், கீதா மதிவாணன் ஆகியோருக்கு
மிக்க நன்றி…!