காமராசருக்கு ஒரு வெண்பா மாலை – பாகம் 3

0

‘அப்பச்சி’ முப்பது

துரை.ந.உ.

காமராசருக்கு ஒரு வெண்பா மாலை

நக்கீரன் வம்சம் இவர் :

காந்திவழி யில்மனிதம் காத்திருப்போம் என்றவர்;

காந்தியின்ஓர் வார்த்தைக்குக் கண்டனமும் செய்தார்

தவறைத் துணிந்துதட்டிக் கேட்பார்; எதற்கும்

தயங்காத நக்கீரன் பார்.                               (21)

கே – பிளான் / காமராஜர் திட்டம் :

புதிய தலைமுறை முன்செல்ல வாழ்த்தி

முதிய தலைமுறை தானாய் ஒதுங்கி

வழிவிடச் சொன்னார்; பதவி விலகி

வழிகாட்டித் தான்நின்றார் முன்பு.                                               (22)

வருமானவரிக்கான தலைவரின் விளக்கம் :

கூரைக்குள் என்ன இருக்கும்; எதுவுமில்லா

ஏழையிடம் என்னதான் வாங்க முடியும்;

வளரும் இடத்தில் வரிவாங்கு; மூழ்கித்

தளர்வோர்க்கு நன்றாய் உதவு.                        (23)

1963 – கடலில் இறங்கினார் :

’இறந்தவர்கள் மீள முடியாது; நம்பி

இருப்போரை மாளாமல் காத்திடுவோம்’ என்று

புயலில் அழிந்த தனுஷ்கோடி வந்து

செயல்பட்டார் எல்லார்முன் நின்று.                   (24)

கார்மேகம் காமராஜ் :

வேலைவாய்ப்(பு) உண்டாக்க எண்ணெய்;சுத் தப்படுத்தும்

ஆலையுடன்; சேலம் இரும்பாலைக் கொண்டுவந்தார்;

நெய்வேலி மின்நிலையம் தந்தார்; தமிழகத்தின்

பொய்க்காத கார்மேகம் பார்.                          (25)

அணைகளின் நாயகன் :

வீழும் உழவைப் பெருக்கித் தமிழகத்தின்

வாழ்வுயர்த்த ஒன்ப(து) அணைகள் அமைத்தார்;

’அணைகளின் நாயகன்’ என்ற பெயரால்

நினைவில் இருப்பார் நிலைத்து.                       (26)

கடைசிச் செய்தி / 1975குடியரசுதினச் செய்தி :

’அன்புக்(கு) அடிபணிவோம்; மிஞ்சிடும் ஆளுமையின்

முன்அஞ்சோம் என்னும் உறுதியில்  நாம்நிலைப்போம்’

தம்இறுதிச் செய்தியில் தானைத் தலைவர்

நமக்களித்த ஊக்கக் குறிப்பு.                          (27)

1975/அக்டோபர் -2 :

தென்நாட்டுக் காந்தி இறந்தநாள் வந்தமைந்த(து)

இந்நாட்டுக் காந்தி பிறந்தநாள் அன்று;

குருவின் பிறந்தநா ளில்சாந்தி என்ப(து)

எவரும் அடைந்திடா(த) ஒன்று.                       (28)

உலகப் பார்வை :

பெரும்தலைவர் நம்மைப் பிரிந்தநாள் அன்று

பதறி உலகம் கதறி எழுதியது;

’இந்தியா வின்கடைசி காந்திய வாதியும்

மண்ணுள் மறைந்துவிட்டார்’ என்று.                   (29)

இன்றும் இருக்கிறார் :

நம்முள்ஓர் அங்கம்என்(று) ஆனார்; வழிகாட்டும்

’நம்மவர்’ என்றவரைப் போற்றுகிறோம், நம்மிடையே

இல்லா(து) இருந்தாலும் இன்றுவரை; மூவேந்தர்க்(கு)

இல்லாச் சிறப்பாகும் இது.                            (30)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.