வல்லமை – சிந்தனை செயல், முன்னேற்றம் – தலையங்கம்
பவள சங்கரி
போதை அரக்கனை அறவே அழிப்போம்!
சூன் 26 ஆம் தேதி உலக போதை தடுப்பு மற்றும் போதை மருந்து கடத்தல் தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது. பெற்றோரும், ஆசிரியரும், பொது மக்களும் மிகவும் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய கால கட்டம் இது. காரணம் தெருவிற்கு தெரு திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளையும் மீறி பல விதமான போதை மருந்துகள் சந்தையில் வெகு எளிதாகக் கிடைக்கக் கூடிய வகையிலேயே இருக்கிறது.குழந்தைகளுக்கு இன்று எந்த அளவு நன்மைகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மூலம் கிடைக்கிறதோ அதைவிட ஒரு பங்கு அதிகமாகவே தீமைகளும் விளைகின்றன என்பதும் நிதர்சனம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படித்தால் மட்டும் போதும் என்று இருந்து விடாமல் அவர்கள் யாருடன் பழகுகிறார்கள், தீய சேர்க்கை ஏதேனும் இருக்கிறதா, அல்லது ஏதேனும் தீய பழக்கங்கள் குறிப்பாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனரா என்பதை வெகு தீவிரமாக கண்காணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இல்லையென்றால் முதலுக்கே மோசம் என்பது போல் ஆகிவிடும் வாழ்க்கை.
என் தோழி ஒருத்தி, கணவர் பணி காரணமாக வட நாட்டின் பக்கம் சில காலம் வாழ்ந்து விட்டு வந்தவர்கள். பல வருடங்களாக அவளைப் பார்க்கவில்லை. ஆள் நல்ல சிவப்பாக வாட்ட சாட்டமாக இருப்பார். அன்று அவளைப் பார்த்த எனக்கு பேரதிர்ச்சி. அவளும் உருக்குலைந்து கருத்துப் போய் இருந்தாள்.அவளை நெருங்கி காரணம் கேட்ட போது அந்த அதிர்ச்சி பன்மடங்காக உயர்ந்து விட்டது. ஆம் திருமணம் ஆகி பல ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாமல் தவமாய்த் தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளை. கணவனும், மனைவியும் இருவரும் அரசுப் பணியில் இருப்பவர்கள். மகனுக்கு கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுத்து ராசா வீட்டு கன்றாக வளர்த்து விட்டனர். திடீரென அவன் படிப்பிலும், நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் இருந்ததனால், அவனை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தவுடன் தான் தெரிந்தது அவன் போதை மருந்து பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது. தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது பெற்றோருக்கு. பின் அவனுக்கு வைத்தியம் பார்த்து, மாதக்கணக்காக சிறப்பு கண்காணிப்பில் வைத்திருந்து திருத்திக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டிருக்கிறது. இப்படி கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதை விட்டு ஆரம்பத்திலிருந்து குழந்தைகள் மீது கவனம் செலுத்தி வந்தால் இது போன்று அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாமே.
ஆசிரியர்கள் குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கரை செலுத்துவார்களேயானால் இது போன்று தீய பழக்கங்களுக்கு ஆட்படும் மாணவர்களை மிக எளிதாக ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து தடுக்கவும் முடியும். அதற்கு அவர்களுக்கு வேண்டுவதெல்லாம், ஊரார் குழந்தையையும் தன் குழந்தையைப் போன்று எண்ணி அக்கரை காட்டும் மனிதாபிமானம்தான்.
உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி வரும் இன்றைய காலகட்டத்தில் நம் கலாச்சாரங்களிலும் பலவித மாற்றங்கள். மது பானங்கள் அருந்துவது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்கள் நண்பர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகவும், அச்சமின்றியும் கடைபிடிக்கப் படுகின்றன. ஆரம்பத்தில் கம்பெனி கீப் அப் செய்வதற்காக என்று ஆரம்பிக்கும் பழக்கம் பிற்காலங்களில், அதற்கு அடிமையாகிப் போகும் வண்ணம் மாறிவிடும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இளைஞர்களுக்கு ஒரு முறை கூட முயற்சி செய்து பார்க்கும் எண்ணம் கூட வர விடக்கூடாது.
மதுபானங்களுடன்,அபின், கஞ்சா, ஓபியம், கோக்கைன், எல்.எஸ்.டி போன்ற பலவிதமான போதை மாத்திரைகளும் எளிதாக வெளிச்சந்தைகளில் கிடைப்பதும் அதிர்ச்சியான விசயமாக இருக்கிறது.
போதை மருந்துகளை முற்றிலும் ஒழிக்க வேண்டுமானால், இதை சந்தைப்படுத்தும் வியாபாரிகளையும், இடைத் தரகர்களையும் தண்டிக்கும் சட்டத்தை மிகக் கடுமையாக்க வேண்டும்.அதற்காக அரசாங்கம் முழு முயற்சி எடுக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். அதற்குத் தேவையான அதிக நிதியையும் ஒதுக்க அரசாங்கம் தயங்கக் கூடாது.. அது மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்தும் இணைந்து கைகோர்த்து இந்த போதை எனும் அரக்கனை ஒழித்துக் கட்ட முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் உலக மாந்தர் அனைவரும் ஒரு நாள் சுகாதாரக் கேடு மட்டுமன்றி பொருளாதார நலிவையும் சந்தித்து தலை குனிய வேண்டிவரும் என்பதும் திண்ணம்.
பொருத்தமான தலையங்கம். மேற்கு நாடுகள் தடுமாடுகின்றன, தும்பையும், வாலையும் விட்டு விட்டு. நாமாவது சற்று கட்டுப்பாட்டில் இருப்போம். தமிழ்நாட்டில் கஞ்சா பயிருடுவது ஒரு நெருடல். தீயிட்டுக்கொளுத்த வேண்டும்.
போதை மருந்து ஒழிப்பு நாள் செய்தி நம்மைத் தலை குனிய
வைக்கிறது. சங்ககாலப் புலவர்கள் ( அவ்வை உள்பட ) கள்
உண்டு களித்தனர் என்பது வரலாறு. ஆனால் வள்ளுவர், கள்
உண்பது மனித குலத்திற்கு எதிரானது என்று உறுதிபடத்
தெரிவித்து விட்டார். கள், உடல் நலம்,உள்ள நலம்,அறிவு,
முதலியவற்றையும் கெடுப்பதோடு குடிப் பெருமையையும்
கெடுக்கிறது. ஒருவன் தன் உணர்வை இழந்து மயங்கிக்
கிடபதற்காக தன் பொருளைக் கொடுத்து கள்ளை வாங்குதல்
அறிவில்லாத செயலே என்று கள்ளுண்ணாமை அதிகாரத்தில்
“கையறி யாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறி யாமை கொளல்” என்ற குறளில் தெரிவிக்கிறார்.
இந்தக் கள் இப்போது போதை மருந்தாகவும் பரிமாணம்
எடுத்து உலகையே சீரழிக்கிறது. அரசியல்வாதிகள்,
அதிகாரிகள் சிந்திக்க மாட்டார்கள். இளைய தலைமுறை
சிந்திக்கட்டும்! எதிர்கால இந்திய சிறக்கட்டும்!
இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.