கண்ணதாசன்-பிறந்தநாள்-நக்கீரன்-படம்இசைக்கவி ரமணன்

தெருவிளக் மைமுட்டும் விட்டிலாய்ச் சொல்லெலாம்
தினமுமவன் கதவுதட் டும்
தேனே எனைக்கொஞ்சம் தேற்றிவி டெனக்கெஞ்சிச்
சிறுவிரல் பற்றிநிற் கும்
கருவங்க ளில்லாத கட்டிவெண் ணெய்நெஞ்சம்
கண்ணன் ஒசிந்த மஞ்சம்
சரிபாதி பெண்மையில் பறிபோன நெஞ்சிலே
சங்கீத ஜதிகள் புரளும்
உருவாக வந்தவொரு மருமத்தைக் கொண்டாட
ஒருவாழ்க்கை போதவிலையே
ஒளியாக அவன்பாடல் நுழையாத நெஞ்சங்கள்
ஒன்றுமே மீதமிலையே!

சென்னை மீனம்பாக்கம் அ.ம. ஜெயின் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, நுண்கலைத் துறைச் செயலராக இருந்தேன். அப்போது நானும் என் நண்பன் திரு கே. பாலசுவாமிநாதனும் எங்கள் கழகத்தைத் திறந்து வைக்கக் கண்ணதாசனை அழைக்கச் சென்றோம். சென்னை ஹென்ஸ்மென் சாலையில் எளிய வீடு. வெளியே உட்கார்ந்திருந்தோம். யாரோ உள்ளே போய்ச் சொன்னார்கள்.

தும்பைப்பூ வேட்டி, பனியன், கையில் நாளேடு, கண்களில் குடிச்சிவப்புடன் கவிஞர் வெளியே வந்தார். தடாலென்று காலில் விழுந்தேன். (வேறு வழியின்றித் தானும் விழுந்து பிற்பாடு கோபித்துக்கொண்டான் பாலா!) முழங்கையைச் சொறிந்தபடி, ‘எனக்கு ஊசியெல்லாம் போட்டுக்கணும். என்னால வரமுடியாது,’ என்றார் கவிஞர். ‘நீங்க குளிச்சிட்டு வாங்கையா, அப்புறமாப் பேசிக்கலாம்,’ என்றேன். குழந்தையாட்டம் சரியென்று ஒத்துக்கொண்டு சென்றார். பிறகு உள்ளே அழைத்தார்கள். பளிச்சென்று உட்கார்ந்திருந்தார் படுக்கையில். ரொம்ப இனிமையாகப் பேசினார். ‘தம்பி, மாலைநேரம் வேண்டாம், மத்தியானமாக வரேனே.’ என்று சொல்லிக் காலண்டரில் தேதியைக் குறித்துக் கொண்டார்.

மகிழ்ச்சியும் பெருமையுமாக நாங்கள் கல்லூரி திரும்பினோம்! நாங்கள் கூப்பிட்டுக் கண்ணதாசன் வருகிறார் என்றால் சும்மாவா? ‘என்னடாது சினிமாக்காரளையெல்லாம் கூட்டிண்டு வராய்நீ?’ என்று மலையாளமும், தமிழுமாக அதட்டினார் கல்லூரி முதல்வர் திரு வி வி ராமன். ஒருவழியாய் அவரைச் சமாளித்துவிட்டு, எல்லா வகுப்புக்களிலும் நுழைந்து சொல்லிவிட்டு, அப்படியே கல்லூரி விடுதிக்குப் போய், நண்பர்களிடம் சொல்லிவிட்டு, விழா அரங்கத்தில் காத்திருந்தோம்.

கண்ணதாசன் வரவில்லை! ஆளைப் பிடிக்கவும் முடியவில்லை! என் நிலைமையை எப்படிச் சொல்வது? கவிஞர் கல்லூரிக்கு வரக்கூடாது என்று நினைத்த ஆசிரியர்களுக்குத்தான் எத்தனை குரூரமான மகிழ்ச்சி!

அப்புறம் என்னவாயிற்று?

என் நண்பர்களின் கோபமான பார்வைகள், ஆசிரியர்களின் கிண்டலான சிரிப்புக்கள் இவற்றையெல்லாம் ஒருவாறு சகித்துக் கொண்டு, வெட்கத்தில் மேலும் வகுப்பறையைப் புறக்கணித்து, வழக்கம்போல் மரத்தடியில் தஞ்சம் புகுந்தால், பாம்பு வந்து சிதறினோம்! சமணர் கல்லூரியில், பாம்பை அடிக்கக் கூடாது! அது கடிப்பதைப் பற்றிய தடையுத்தரவு எதுவுமிருந்ததாகத் தெரியவில்லை!

ஒருநாள் மதியம் திடீரெனக் கல்லூரிக்கு ஒரு தொலைபேசி வருகிறது. ‘தம்பி! இன்று ஓய்வாக இருக்கிறேன். இதோ மாலை 4.30 மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ங்க தம்பி,’ என்றது கவிஞரின் குரல். (இந்த இடத்தில் நீங்கள் என்னை வடிவேலுவாகப் பார்த்தல் அவசியம்! ஆஹா!..) கல்லூரி முதல்வரிடம் ஓடினேன்; காலில் விழாத குறைதான். பிறகு எங்கள் அரங்கத்தில் ஏற்பாடுகளைச் செய்தேன். கூடமாட ஓரிருவர் ஒத்தாசை செய்தார்கள். வகுப்பறைகளில் சென்று அறிவிக்க வேண்டும்; அங்கோ தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்! ஆசிரியர்கள் கறாராக மறுத்துவிட்டார்கள். நொந்துபோன நான் என்ன செய்தேன்? நமக்குத்தான் மரத்தடி இருக்கிறதே, அங்கே அமர்ந்து சில நிமிடங்கள் நிழல் பருகினேன்.

பிறகு, மாணவர் விடுதி வாசலில் ஒரு கரும்பலகையில் கவிஞர் வருகிறார் என்று எழுதிவைத்துவிட்டு இனி என்ன நடக்கிறது பார்ப்போம் என்றிருந்துவிட்டேன்.

ஐந்து மணிக்கு நிகழ்ச்சி. 4.45 க்குக் கவிஞர் வந்திறங்கினார். தும்பைப்பூ வேட்டி. சந்தன நிறத்தில் சட்டை. ‘என்ன தம்பி, எம்மேல கோபம் ஒண்ணுமில்லயே?, என்றார். அந்தக் காதற்சோலையின் கீதக்குயிலிடம் கோபிப்பதெப்படி? வகுப்பறைகளில் தேர்வு தொடர்கிறது. யாரும் வெளியே வரக்காணோம். பதறிப்போன நான், நிலைமையைச் சமாளிக்க, கவிஞரைக் கல்லூரி முதல்வரின் அறைக்கு அழைத்துச் சென்றேன். அவரை ‘வாங்கோ வாங்கோ,’ என்று அன்புடன் அழைத்த முதல்வர் அடுத்த கணமே என்னைப் பார்த்து, ‘என்னடா நீ க்ளாசுக்கே வரமாட்டேங்கறாய்?’ என்று அதட்ட, அப்போது கண்ணதாசன் என்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. ‘சார் அதெல்லாம் அப்புறமா வச்சுக்கலாம் சார்,’ என்றேனா, உடனே அடுத்த எல்லைக்குத் தாவிவிட்டார் முதல்வர். ‘இவன் என்னமாக் கவிதை எழுதுவான் தெரியுமோ?’ என்று கண்ணதாசனைக் கேட்டார். அவர், ‘அப்படியா?’ என்று என்னைப் பார்த்தார். நானோ, கூசிப்போய், முதல்வரைப் பார்த்து, ‘சார், சார் சும்மா இருங்களேன்,’ என்றேன். அவரா விடுவார்? ‘ரேடியோ ஸ்டேஷனுக்குப் போனோம். இவன் பத்து நிமிஷத்தில பாட்டே எழுதிட்டானாக்கும்,’ என்று பிடிவாதமாய்ச் சொன்னார்.

கவிஞர் என்னைப் பார்த்த பார்வையில் நான் மறுபடி என்னை நிறுவ முயன்று தொலைந்து போனேன்..

‘நன்னாத்தான் படிச்சிண்டிருந்தான். திடீர்னு பாருங்கோ கவிதை எழுதறேன்னு கெளம்பி க்ளாசைக் கோட்டை விட்டுட்டான்,’ என்று சொல்லி, விடாப்பிடியாய் குருவாயூரப்பனைப் பற்றி மலையாளத்தில் நாலுவரி பாட்டு என்ற பெயரில் பாடாய்ப் படுத்தினார். இன்றென்ன, மாறிமாறி விபரீதங்களாய் நடக்கிறதே என்று வேறு வழியின்றிக் கூட்டமில்லாத கொட்டகைக்குக் குற்ற உணர்வுடன் அவரைக் கூட்டிச் சென்றேன்.

முதல்வர் அறையிலிருந்து அரங்கத்தின் மேடைக்கு நேரடியாகச் செல்லக் குறுக்கு வழியொன்றுண்டு. செல்லும்போது, ‘என்ன தம்பி, மாணவர்களெல்லாம் வந்துட்டாங்களில்லெ?’ என்று கவிஞர் கேட்டதை நான் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

மேடையில் கால்வைத்தால், ஊசிவிழ இடமில்லாமல், சன்னலிலெல்லாம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள்! என்னால் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. தட்டிக் கொடுத்த கவிஞரோ மிக உற்சாகமா கிவிட்டார்!

மைக்கைப் பிடித்து வாழ்த்துச் சொன்னேன்:

கையிலொரு கிண்ணம் கண்ணெதிரில் பெண்மை
கட்டுடல் காட்டி நிற்க

கட்டான மெத்தையின் கடிமலர்ப் பாயிலே
கவிமகன் காத்திருக்க

வெய்யிலொடு நிழலும் வீணையொடு விரலும்
விளையாடச் சேர்ந்திருக்க

தையலரின் கொல்லிடையில் தாளங்கள் போட்டிவன்
தட்டாத கவிபாடுவான்!

என்று வாய்க்கு வந்ததைச் சொல்லி மகிழ்ந்தேன். மாணவர்களின் கரவொலி அரங்கைப் பிளந்தது. கவிஞர், தன்னுரையில், மிகச் சிறப்பாக என்னைப் புகழவும், என் நண்பர்களெல்லாம் போட்ட சத்தம் இன்னும் காதில் ஒலிக்கிறது.

எந்த ஊர் என்றவரே, பார்த்தேன் சிரித்தேன் இரண்டு பாடல்களையும் இனிமையாகப் பாடினார். வருவேன் என்றவர் வரவில்லை. எதிர்பார்க்காத போது வந்து நின்றார் பிடிவாதமாக! 15 நிமிடங்கள்தான் இருப்பேன் என்றுசொல்லிவிட்டு ஒருமணி நேரம் பேசினார்.

என் ஆருயிர்க் கவிஞனை நான் சந்தித்த இரண்டாவது இனிய தருணம் என்றும் மறப்பதற்கில்லை!

வெள்ளைமனம் பிள்ளைமனம் வீதியினில் வெந்தமனம்
தினம்வீழ்ந் தெழுந்த மனமே
வேதங் களும்தமிழின் வேகங்க ளும்வந்து
விளையாடும் விந்தைமனமே
முள்ளைமல ராய்க்கொண்டு மொத்தம்கீ றக்கண்டு
முடியா தழுதமனமே
மூண்டவொரு துன்பமே முக்திதரும் பாடலாய்
மூண்டெழுந் தாடுமனமே
வெள்ளத்தை விரல்தொட்டுத் திரியாக்கிச் சந்நிதியில்
சிறுதீபம் ஏற்றுமனமே
விட்டாலும் விலகாத விந்தைமிகு கவிஞன்புகழ்
வீதியினில் பாடுதினமே!
எந்த ஹோட்டல் என்று நினைவில்லை. கவிஞர் சோர்வுடன் படுத்திருக்கிறார். அருகே நான் மட்டும் அமர்ந்திருக்கிறேன்.

“என்ன தம்பி, எல்லாரும் “கவிஞரே! முதல் வரியிலேயே அப்படியே செக்சைப் பிழிஞ்சு குடுங்க பாட்டிலே,” என்கிறார்கள். நானும் 30 வருசமாப் பிழிஞ்சிட்டுதானே இருக்கேன். கோபத்திலெ, “ஆண்டவன் படச்ச ஒடம்புதானடி ஆடை எதுக்கு அவசியமா” ன்னு ஒரு பல்லவியைத் தூக்கிப் போட்டேன். உடனே, “வேணாமுங்கோ! சென்சார்லெ வெட்டிப்புடுவாங்கோ,” அப்படீங்கறான்.

அவர் பலத்த சோர்வுடன் காணப்பட்டார். காதலால் கண்ணனைத் தொட்டு, தனது கவிதையால் நமக்கும் அவனைக் காட்ட வல்ல அந்தக் கவிஞரை எப்படிப் பாடாய்ப் படுத்துகிறார்கள் என்று எனக்கு வருத்தம். எனக்கு 17 அல்லது 18 வயதிருக்கும். அவருடைய பாடல்களும் கவிதைகளும்தான் எங்களுக்குப் பெரிய ஊக்கம். அவரைபோல் இன்னொருவன் பாட்டெழுத முடியாது என்னும் அபிப்பிராயம், இன்று தீர்மானமாகக் கனிந்திருக்கிறது.

என் உள்ளங் கவர்ந்த கவிஞன், இப்படிச் சோர்வதா? நான் அவருடைய வரிகளையே அவருக்குச் சொல்லில் காட்டினேன்:

பெண்களை விட்டென்ன பேரின்பம்? உயிர்காக்கும்
கண்களை விட்டென்ன கடவுள்நெறி? ஒன்பதுவாய்ப்
புண்களை விட்டென்ன புதுப்பார்வை? அனுபவிக்கும்
எண்களை விட்டென்ன இசைத்தருமம்? போடா போ!

காமுகனும் மாண்டான் கடவுள் நெறி பேசும்
மாமுனியும் மாண்டான்! மற்றதிலே யார்பெரியர்?
நாமுடலைப் பார்ப்போம் நமதுடலைப் பெண்பார்ப்பாள்
சாமி நமதுசுகச் சரித்திரத்தைப் பார்க்கட்டும்!

ஏது மறந்து விட்டீர்களா?

எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா! நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா!

பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா!
இறந்த பின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா!

நீங்கள்தானே எழுதினீர்கள்?

வருடுவார் கைக்கெலாம் வளைகின்ற தெய்வம் என்
வாழ்க்கையைக் காக்கவிலையே!
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல் தாலாட்டிடும்
மதுரை மீனாட்சி உமையே!

மீனாட்சி உங்கள் பக்கத்தில்தானே இருக்கிறாள்?

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி!
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னிதி!
அதுதான் காதல் சன்னிதி!

வேறு யாரும் இப்படி எழுத முடியுமா?

என்று கிட்டத்தட்ட அரைமணி நேரம் நான் கவிஞரின் கவிதைகளையும், பாடல்களையும் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லியும், பாடியும் காட்டினேன். சொல்லச் சொல்ல அந்தச் சந்தனமுகம் அப்படியே மலர்ந்துகொண்டே வந்தது. கவிஞர் பதிலாகச் சொன்ன வார்த்தைகளை அப்படியே தருகிறேன்:

“தம்பி! இனி பார்! பேனாவெ நிமித்திப்
பிடிக்கிறேன்,” என்றது அந்தக் குழந்தையுள்ளம்.

சரி, எதற்காக அந்த ஹோட்டல் அறையில் அவரைச் சந்தித்தேன்?

நங்கைநல்லூரில் குருவாயூரப்பனுக்காக ஆலயமெழுப்புகிறார்கள், கேரள பாணியில். என் தந்தை தற்காலிகப் பிரதான பூஜகராக இருக்கச் சம்மதிக்கிறார். சின்னக் கூரையடியில் படத்தை வைத்துப் பலநாட்கள் பக்திப் பாடல்கள் பாடினோம். நான் தபலாவுடன் வந்துவிடுவேன்

பஜனை சம்பிரதாயமெல்லாம் வடமொழியிலேயே இருக்கிறது. அந்த மரபில் நாமே பாடலெழுதினால் என்னவென்று தோன்றியது. மணிசார் மெட்டுப் போடச் சம்மதித்தார். மளமளவென்று பாடல்களை எழுதினேன். அற்புதமாக இசையமைத்தார் அவர். எங்களோடு பல குழந்தைகள் சேர்ந்துகொண்டு பாடுவார்கள். அந்த அனுபவத்தைச் சொல்லிவிட முடியாது. அந்தக் கண்ணன் பாடல்கள் இன்றும் இனிக்கின்றன.

கோவில் கட்டி முடிந்தவுடன் ஒரு சிறப்புச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப் பேச்சுவந்தது. யாரை அழைக்கலாம் என்ற விவாதத்திற்கு ராதாகிருஷ்ண சாஸ்திரியார்தான் முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது அவருக்கு வயது 66. நாங்கள் நண்பர்கள்! தலைமுறை இடைவெளி எல்லாம் பொய்த்துப்போன நட்பு எங்களுடையது. அவர் பெரிய ஞானி என்பதை அன்று அறிந்தேன்; இன்று அதன் விவரத்தை அசைபோடுகிறேன்! எளியர்க்கெல்லாம் எளியவரான அரிய ஞானி.

அவர்சொல்லி விட்டார், ‘கண்ணதாசனைக் கூப்பிடுங்கள்.’ யாரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை! அந்தப் பணி எனக்கு வழங்கப்பட்டது. இல்லையானால் நான் பறித்துக்கொண்டிருப்பேன்! அதற்காகத்தான் அந்த ஹோட்டல் அறையில் அவர் முன் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

‘வர்ரேன் தம்பி! நீ கூப்பிட்டு நான் வாராம இருப்பேனா?’ என்றார்.

அந்தத் திருநாளும் வந்தது. அவரை அழைத்துவரவேண்டும். அதற்காய்ச் சென்றேன். அவர் தயாராகிறார். டிரைவர் அவருக்குத் தலையில் எண்ணெய் தேய்த்துவிடுகிறார். அப்போது பார்த்து வந்தாரையா நெடுமாறன்! அந்தக் கணமே கவிஞரை ராஜ்பவனுக்கு அழைத்தார். கவிஞர் நங்கைநல்லூர்க் கூட்டத்தைப் பர்றிச் சொன்னால் அவரோ ‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம்’ என்றார். நான் நெடுமாறனை எவ்வளவு நேசித்திருப்பேன் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்! நான் கவிஞரைக் கெஞ்சாத குறையாகப் பார்த்தேன்.

‘தம்பி! கவலைப்பட வேண்டாம். நாம ராஜ்பவனில தலயக்காட்டிவிட்டுப் போவோம்,’ என்று அவரிருந்த வண்டியிலேயே ஏற்றிக்கொண்டார். பளபளவென்று இருந்தார். பேசிக்கொண்டே வந்தார்:

“பெண்ணென்றாலே பதமானது, இதமானது, சுகமானது, குளிர்ச்சியானது,” என்று அடுக்கிக் கொண்டே ஒரு கல்லூரி வாசலில் நின்றுகொண்டிருந்த மாணவிகளைச் சற்றே காதலுடனும், கவிதா கர்வத்துடனும் பார்த்துப் புன்னகைத்தபடியே வந்தார்.

“நான் திமுகவில் இருந்தபோது, அண்ணாத்துரை போலக் கம்பனைத் தாக்கிப்பேசவேண்டும் என்பதற்காகக் கம்பராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்தேன். கம்பனைப் படிக்கப் படிக்க நான் அவனிடம் ‘சரண்டர்’ ஆகிவிட்டேன். 800 கம்பராமாயணச் செய்யுள்கள் எனக்கு மனப்பாடமாயின. தம்பி! அவைதான் இன்றுவரை எனக்குச் சோறுபோடுகின்றன,” என்றார்.

ராஜ்பவனில் யாருக்கோ காத்திருந்தும் அவர் வராததால், ‘சரி நாம கெளம்புவோம்,’ என்றார். நெடுமாறன் இன்னும் வேறெங்கோ போகலாம் என்க, நான் குருவாயூரப்பனை வேண்ட, கவிஞர், ‘அதெல்லாம் முடியாது. அந்தத் தம்பிக்கு நான் வாக்குக் குடுத்துட்டேன், வாப்பா,’ என்றதும்தான் எனக்கு உயிர் வந்தது.

வழிநெடுகப் பேச்சுத்தான். ‘தம்பி! வாழ்த்துக் கவிதை சொல்வீங்கள்லே?’ என்றார்!

நேரமாகிவிட்டது. நாங்கள் கோவிலை நெருங்க நெருங்க, மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ‘ஐயோ! கிராமத்து ஜனங்கள்ளெல்லாம் பாவம், பொறுமை இழந்துபோய்ப் போறாங்களே!’ என்று வருத்தப்பட்டார். ஆனாலும் என்ன? தரிசனம் செய்துவைத்தார் என் தந்தை. மேடையேறினார் கவிஞர். கூட்டம் அலைமோதியது!
வாழ்த்துக் கவிதை சொன்னேன். வானளாவப் புகழ்ந்தார் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ பற்றி மேம்போக்காகப் பேசினார்.

திடீரென்று, ‘தம்பி, வாங்க ஒங்க வீட்டுக்குப் போவோம்,’ என்றாரையா! அவரும் சில நண்பர்களுமாக வந்தார்கள். ‘சக்கரெ போடாம ஒரு டீ!’ என்று என் அம்மாவிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். அவரை, ரெயில்வேகேட் வரை சென்று அங்கே இறங்கிக் கொண்டேன்.

‘நான் மறுபடி இங்கே வந்து பேசுவேன் தம்பி,’ என்றார். எனக்கு நம்பிக்கையில்லை. எல்லாம் நாம் நம்புகிறபடி, அல்லது நம்பாதபடி நடக்கிறதா என்ன?!

கவிஞர் வந்துசென்றபின்பு, நங்கைநல்லூரில் ஐயாவுக்குக் கொஞ்சம் மதிப்பு கூடித்தான் போயிற்று. அவர் புகழ்ந்தவிதம் அப்படி. சாலையிலே நான்நடந்தால் சாளரத்துத் திரைவிலகும்! பஸ் ஸ்டாண்டில், கல்லூரி மாணவிகள் கொத்துக்கொத்தாய்த் தென்படுவார்கள். அவர்களது பார்வைகளில் திடீரென்று கிளம்பிவிட்ட மின்னல், நெஞ்சத் தொடுவானத்திலிருந்து ஆயிரமாயிரம் பட்டாம் பூச்சிகளை ஒரே கணத்தில் உயிர்ப்பித்தன! ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் அடிவானத்தில் பறந்தன! அழகுக் கார்த்திகைத் தீபங்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தன! நானும் நண்பர்களும்
ஏற்படுத்திய நல்லூர் இலக்கிய வட்டக் கவியரங்கங்களுக்குக் கவிதை கேட்க ஜனங்கள் வரத்துவங்கினார்கள்!

“நான் நல்லபாட்டு எழுதி நாளாயிற்று. ரொம்பநாள் கழித்து நான் ஒருநல்ல பாடல் எழுதிய திருப்தி எனக்கு வந்தது,” என்று தனது ‘இரண்டு மனம் வேண்டும்’ பாடலைக் குறிப்பிட்டார். அதில் ஒரு கண்ணி, படத்தில் வருகிறது; பதிவில் இல்லை.

சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறுமுன்னே அடுத்த காயம்
உடலிலென்றால் மருந்துபோதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்?

காயம் என்பது தேகமென்று நமக்குத் தெரியும் (காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா) கரைவது காயம். தகனமாகி அல்லது சீரழிந்து போவது தேகம். என்ன பொருத்தமாய்ப் பெயர்வைத்திருக்கிறார்கள்! பிறப்பின் தொடர்ச்சி பின்னும் துன்பத்தையே அதிகரிக்கிறது என்கிற மகத்தான தத்துவத்தை இத்தனை எளிய வார்த்தைகளில் எப்படித்தான் சொன்னாரோ? உடலாய்ப் பிறப்பெடுத்து பட்ட துன்பங்களும், நம்மைப் பற்றிக்கொண்ட துயரங்களும், உள்ளத்தில் தங்கி விடுவதால்தான் துன்பம் தொடர்கிறது!

‘கடவுளைத் தண்டிக்க என்னவழி?’ என்றது சினமன்று; ஆற்றாமை. அதன்பின்னும், நேசம்தான் இருக்கிறது. ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ என்ற பாடலிலும் இதைக் காண்கிறோம். குணமற்ற பரம்பொருளுக்கு நாம் குணங்களைக் கற்பித்துவிட்ட பிறகுக் குறைசொல்லத் தாமதமோ தயக்கமோ ஏது??!!

கவிஞர் மறுபடியும் நங்கைநல்லூர் வந்தார். இந்தமுறை ஏற்பாட்டில் நானில்லை. நான் அவரைச் சந்திப்பதே கடினம் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள் கோவில் ஊழியர்கள். பாவம் அவர்கள்! கவிஞர் என்னை வலுக்கட்டாயமாக மேடையிலேற்றி, மைக்கைக் கொடுத்து “ம்” என்றபோது என்ன செய்வார்கள்! அன்று அவர் பகவத் கீதையைப் பற்றிப் பேசவந்தார். எனவே, அமரர் திரு கி.வா.ஜ. அவர்கள் தலைமையில் நான் அரங்கேற்றிய என் ‘அர்ச்சுனன் பார்வையில் கண்ணன்’ என்ற கவிதையிலிருந்து சிலபகுதிகளைச் சொன்னேன். சூழ்நிலையில் கசப்பு தலைதூக்கியிருந்ததால், கவிதையைச் சொல்லி முடித்தவுடனேயே கிளம்பிவிட்டேன்.

மறுநாள் நண்பர்கள் என்னைப் பரபரப்புடன் தேடினார்கள். சிலர், நான் கிளம்பிவிட்டதற்காகக் கடிந்துகொள்ளவும் செய்தார்கள். ஏனென்றால், பேசிக்கொண்டிருக்கும்போது கவிஞருக்குத் திடீரென்று நானும் என் கவிதையும் நினைவுக்கு வந்து சில நிமிடங்கள் அவர் எனக்குச் சூட்டிய புகழ்மாலையில் கூட்டத்தினர் திக்குமுக்காடிப் போனார்களாம். என் நண்பர்களெல்லாம் கண்ணீர் விடுமளவுக்குக் கவிஞர் பேசிவிட்டாராம். (விவரம் ரொம்ப ஓவராக இருந்ததால் அதைத்
தவிர்த்துவிட்டேன்)

நாங்கள் நங்கைநல்லூரை விட்டு பெசெண்ட் நகருக்கு மாறிவிட்டோம். என் தந்தை, “நம்மால் வீடு வாங்க முடியாது. மாறுவோமே!,” என்றும் “முட்டாள்கள் வீடு கட்டுவார்கள்; அறிவாளிகள் குடியிருப்பார்கள்,’ என்றும் சொல்லி அம்மாவைச் சமாளிப்பார். நான் மறுபடிக் கவிஞரைச் சந்திக்கவில்லை. அது என்னியல்பு. கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், கி.வா.ஜ., பத்மா சுப்ரமணியம், இளையராஜா, சிவாஜி கணேசன், ம.பொ.சி., எம்.எஸ்.சுப்பலக்ஷ்மி, ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், விக்கிரமன் போன்ற பலரைச் சந்திக்கவும், பழகவும் வாய்ப்புக் கிடைத்தது.

அதென்னமோ, பொதுவாக நான் கவிதை எழுதுகிறவன் என்பதை அவர்களிடம் சொல்வதுமில்லை.
மறுபடிச் சந்திக்க முயற்சி செய்வதுமில்லை. இது என் நண்பர்களுக்குக் கோபத்தை வரவழைக்கும். என்னால் மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சூழலை அறவே விட்டுவிட்டுத்தான் அடுத்த சூழலில் நுழைவதென்பது என்னியல்பு…

இவ்வாறிருக்க, ரத்னகிரீச்வரர் கோவிலில் கவிஞர் கண்ணதாசன் பேசுகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்துவிட்டுச் சென்றேன். கவிஞர் கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருந்தார். கூட்டம் நெருக்குகிறது. கோவில் நிர்வாகிகள் ஏகக் கெடுபிடி செய்தார்கள். “கவிஞரே!” என்றேன் மெதுவாக. சட்டென்று திரும்பிப்பார்த்து, “தம்பி! அங்க நின்னுகிட்டு என்ன செய்றீய! வாங்க இப்படி!,” என்றார். தோளில் கைபோட்டுக்கொண்டு வலம்வரும் போதுதான் எத்தனை பெருமை! இன்பம்!

அவருக்கு நாற்காலி போட்டு மைக் வைத்தார்கள். எல்லோரும் கீழே உட்கார்ந்துகொண்டிருந்தோம். “என்ன? வாழ்த்து ஒண்ணும் கெடையாதா?” என்றார் கண்ணைச் சிமிட்டி! பிரமுகர்கள் என்னை விடமாட்டார்கள் என்றேன். காதில் விழாததுபோலிருந்த அவர், என்னைத் தனக்கு மிகவருகே வைத்துக்கொண்டார். சம்பிரதாயமாக வரவேற்புச் சொல்ல வந்த கோவில்காரரைத் தடுத்து, மைக்கைப் பிடித்து, “தம்பி ரமணன் என்னைப் பற்றி வாழ்த்துக்கவிதை சொல்லும்,” என்றாரே பார்க்கலாம். அடுத்த சிலநிமிடங்கள் எனக்கும் அவருக்கும் உள்ள நேசத்தைத் தரிசித்தன….

“இரக்கமுள்ள நெஞ்சிலிருந்துதான் கவிதை பிறக்கும்,” என்று துவங்கி, நெஞ்சாரப் பாராட்டினார். கிளம்பும்போது, கைபற்றி வாழ்த்துச் சொல்லி, “அமோகமா வருவீஹ” என்றார்.

அதன்பிறகு நான் அவரைச் சந்திக்கவில்லை. அவரும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. இரண்டுபேர் என்னுயிரோடு கலந்தவர்கள். ஒன்று, பாரதி. என் ஆவேசத்திற்கும், அறச் சீற்றத்திற்கும் அவன் காரணம். இரண்டு, கண்ணதாசன். எனது இசைப்பாடல்களுக்கும், அவற்றின் எளிமைக்கும், அவற்றில் அடிநாதமாகத் ததும்பும் காதலுக்கும் அவனே ஆதர்சம்.

எனக்குக் கண்ணதாசனின் கவிதைகள், பாடல்கள், அவற்றின் குறைநிறைகள் தெரியும். அதைவிட, அவரது கவியுள்ளம் எனக்குக் கண்கூடு. அதெபோல், பாரதியோடு நான் வாழ்ந்ததுபோலவும், அல்லது பாரதி என்னில் வாழ்வது போலவும் நான் உணர்வேன்.

இந்த இரண்டு கவிஞர்களுக்குப் பிறகு எத்தனையோ சிறந்த கவிஞர்கள், பாடலாசிரியர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் இருந்த இடத்தில் யாரும் அமரவில்லை; அது முடியாது: அதுவே அவர்களது சிறப்பு.

எந்தவீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தபோதும்
எந்தமனதில் எந்த உணர்ச்சி எழுந்தபோதும்
அந்தக் குயிலின் அழகுப்பாடல் அங்கே கேட்கும்
ஆறுதலாய் மாறுதலாய் அலைகள் மோதும்!
சொந்தமான நண்பன்போல் தோளைத்தட்டும்
சுட்டுவிரல் தொட்டுவிழி நீர்துடைக்கும்
இந்தவுயிர்ச் சித்திரத்தின் வண்ணமாக
இதயத்தில் கலந்துவிட்டான் கண்ணதாசன்!

வானிலிருந் தவனிறங்கி வரவு மில்லை
வந்தவனுக் கொன்றும்நாம் தரவுமில்லை
தேனிலிருந் தெழுந்துவந்தான்; தெரியு மந்தத்
தெருமுனையின் ஒளியினிலே நடந்து வந்தான்
ஊனணிந்து வந்தவன்தான்; உயிருக்குள்ளே
பூந்தமிழின் மென்சிறகால் புளகம் தந்தான்
மானிடத்தின் உணர்ச்சியெல்லாம் யாழா யாக்கி
மடியிலிட்டு வாசித்தான் கண்ண தாசன்!

காதலுக்கு நாயகனோ? கன்னிப் பெண்கள்
கடைவிழிக்குச் சேவகனோ? கள்ளை மிஞ்சும்
போதைக்குப் பூஜகனோ? புனைவிலாத
புதுமைக்குக் காவலனோ? பெண்மனத்தின்
வாதையெல்லாம் கற்றவனோ? மனித நெஞ்சுள்
வந்துநின்று பார்த்தவனோ? தமிழின் நீண்ட
காதையிலே வீதியிலே வீட்டுக் குள்ளே
காதுக்குள் கேட்கின்றான் கண்ணதாசன்!

கங்கைநதி பொங்கிவரும் சரளம்; வட்டக்
களரிநிலா முங்கிவரும் லலிதம்; சுட்ட
பங்கியெழும் புகையைப்போல் லஹரி; அந்தப்
போதையிலே பரிகசிக்கும் தெளிவு; வெள்ளைச்
சங்கினிலே பாலெடுத்துப் பாரிஜாதப்
பனியிதழால் தொட்டெடுத்த பாஷை; நான்காம்
சங்கத்தின் முற்றநிலா கண்ண தாசன்
சாவென்ப தறியாத காதல் நேசன்!

சாலையிலே என்கவிஞன் நடக்கும் போது
சாளரத்துத் திரைவிலகும் கண்கள் மொய்க்கும்
வேலையிலே நான்வியர்வை சிந்தும்போது
தென்றலென அவன்பாடல் நெஞ்சைக் கொஞ்சும்
மூலையெல்லாம் துரத்திவந்து பாலாய்க் கொட்டி
முட்டவரும் கண்றினையும் முந்தும் அன்னை
ஞாலத்தில் ஒருமனிதன் மிஞ்சும் மட்டும்
நம்மோடு குடியிருப்பான் கண்ணதாசன்!

(நன்றி : நமது நம்பிக்கை, கோவை)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மனங்கவர்ந்த கவிஞனுடன் மறக்கமுடியாத கணங்கள்

  1. நல்ல பகிர்வு. கண்ணதாசனை நான் எப்பொழுதும் அருமைக் கவிஞர் என்றே குறிப்பிடுவேன். அரசியல் பகைவர்களாலும் காதலிக்கப் பட்ட கவிஞர் அவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் நிரந்தரமஅக இடம் பெற்றவர். ரமணனுக்கு நன்றி. கே.ரவி

  2.  அன்பு ரமணன் ஜி  உங்களைக் கண்டு மிகப்பெருமை கொள்கிறேன் . திரு கண்ணதாசன் முன் உங்கள் இசையை அளித்ததும் அவரே உங்கள் திறமையைப்புகழ்ந்ததைக்கண்டு இந்த சகோதரி மனம் நிறைந்து வாழ்த்துகிறாள்.
    திரு கண்ணதாசன் அவர்களைப் பற்றியும் சில புது தகவல்கள் கிடைத்தன .
    வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.