குறளின் கதிர்களாய்…(32)

-செண்பக ஜெகதீசன்

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.
(பண்புடைமை: திருக்குறள்-1000)

புதுக் கவிதையில்…

அசுத்தமான கலத்தில் வைத்த
ஆவின் பாலும்
திரிந்துபோய்,
தகுதியற்றதாகிவிடும் பருகுதற்கே…!

இதுபோல்தான்
பண்பற்றவன் பெற்ற
பெருஞ்செல்வமும்
பயன்படாது நல்லதற்கே…!

குறும்பாவில்…

அழுக்குப் பாத்திரத்தில் நல்லபாலும் திரிந்திடும்…
அதுபோல் பயனற்றதாகும்
பண்பற்றவன் கொண்ட பெரும்பொருளும்…!

மரபுக் கவிதையில்…

ஆவின் பாலைக் கறந்தெடுத்து
     அடுப்பில் வைத்துச் சூடாக்கித்
தேவைக் கேற்பக் குடித்திடவே
     தூய்மை யற்ற கலத்திலிட்டால்,
நாவில் வைக்க முடியாமல்
     நலமே கெட்டுத் திரிவதுபோல்
பாவி மனிதனின் பெரும்பணமும்
     பலனே யிலாமல் போய்விடுமே…!

லிமரைக்கூ…

பாத்திர அழுக்கில் பால்மாறும் குணம்,
பயன்தராது அதுபோல்
பண்பே இல்லாதான் கைநிறை பணம்…!

கிராமிய பாணியில்…

பாலுபாலு பசும்பாலு
கொறயில்லாத நல்லபாலு…

குடிக்கு முன்னே காச்சிடணும்
கொவளைல வூத்தி ஆத்திடணும்,
ஆத்துற பாத்திரம் அழுக்கானா
அத்துன பாலும் தெரஞ்சிபோவும்…

பாலு கததான் பணத்துக்கும்,
பொல்லா மனுசன் பணமெல்லாம்
நல்லது எதுக்கும் ஒதவாதே
தெரஞ்ச பாலா வீண்தானே…!

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(32)

  1. லிமரக்கூ இந்த வாரம் அழகாக சொல்கிறது.

  2. கருத்துரை வழங்கிய திரு. அமீர் அவர்களுக்கு
    மிக்க நன்றி…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க