நடராஜன் கல்பட்டு

“கோசூ ஒரு சாய் குடு. குரியா எனக்கு காப்பீ குடு. நனெக்கொந்து சாய் தொகுண்ட்பாப்பா.” இவையெல்லாம் எங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தின் கணினிப் பிரிவில் கேட்கும் ஒலிகள்.

“எந்த பூடீ. சாய் ஆறிப் போகுதில்லெ. வேகம் குடி.” இது என்னைப் பார்த்து செல்ல அதிகாரத்துடன் சொல்லப் படும் வார்த்தைகள்.

அதென்ன பூடீ என்கிறிர்களா? அதுதான் ப்யூடி (beauty).

குரியக்கோஸ் எங்கள் அலுவலகத்தில் உள்ள சிற்றுண்டி சாலையை நடத்துபவர். கேரளத்துக்காரர். வயது சுமார் 35 இருக்கும். முரடன் போன்ற தோற்றம்.

சிற்றுண்டி சாலை நடத்துவது மட்டுந்தான் அவர் வேலை என்று இல்லை. விடு பார்த்துக் கொடுக்க வேணுமா? கோசு. வீட்டு மனை வாங்கப் போகிறீர்களா? கோசு. அவருக்கே சொந்தமாக பங்களூரில் இரண்டு மூன்று வீட்டு மனைகள் உள்ளனவாம். உழைப்பாளி அவர்.

குரியக் கோசுக்கு தாய் தந்தை இல்லை. இல்லை என்றதும் தாய் தந்தை இல்லாமல் எப்படிப் பிறந்தார் என்று கேட்காதீர்கள். யார் அவர்கள், உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதெல்லாம் தெரியாது குரியனுக்கு. சின்ன வயதில் அவரை இந்த ஊரில் சாய் கடை நடத்தும் நாயர் ஒருவர் இங்கு அழைத்து வந்தாராம்.

சனிக் கிழமைகளில் அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என்று பெயர். ஆனால் வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பும் போது மாலை 6 மணியாகி விடும். மற்ற நாட்களிலோ இரவு 7 அல்லது 8 மணியாகிடும் வீட்டிற்குக் கிளம்பும் போது. நல்ல வேளை வீடு ஸ்கூட்டரில் ஒரு நிமிடமும், நடையில் 3 நிமிட நேரமும் ஆகிடும் தூரத்தில் தான் உள்ளது.

அதிக நேரம் வேலை செய்திட உடலில் தெம்பு வேண்டுமே. அதை அளிப்பது குரியக்கோஸ் தான்.

சனிக் கிழமைகளில் நான் மதிய உணவிற்கு வீட்டிற்குச் செல்வதில்லை. குரியக்கோஸிடம் இரண்டு சப்பாத்திகள் வாங்கி உண்பேன்.

மதியம் பசி வந்ததும், “கோஸு எனக்கு ரெண்டு சப்பாத்தி வேணும்” என்றால் வந்திடும் கோபம் அவருக்கு.

“உரங்கிப் போயோ? சப்பாத்தி வேணுமெங்கில் முந்தே பறயணும்” என்பார் சற்று கோபமான குரலில்.

சப்பாத்தி வந்து மேஜையில் ஆறிக் கொண்டிருக்கும். நான் பணியில் மூழ்கி இருப்பேன். என்னைத் தூக்கி வாரிப் போடும் கோஸின் குரல், “எந்த பூட்டீ இன்னும் தின்னிட்டில்லையோ? வேகம் தின்னு. கை களுவு. வேலெ பாரு.”

மேலதிகாரிகளுக்கு மதிய உணவு அளித்த பின் அவசர அவசரமாக அன்று செய்ததில் மிச்சம் மீதி இருக்கும் உணவை எல்லாம் ஒரு பெரிய டிபன் கேரியரில் நிரப்பி வேகமாக வெளியே எடுத்துச் செல்லுவார் கோஸ்.

எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம், இவருக்கு பெரிய குடும்பம் இருக்குமோ அல்லது அந்த உணவை எல்லாம் விற்று விடுகிறாரோ என்று.

ஒரு நாள் கேட்டே விட்டேன், “கோஸ் இந்த கேரியர்லெ இருக்கறதெல்லாம் வித்தூடுவீங்களா?” என்று.

“அறியணுமோ? என் கூட வா.” நானும் தொடர்ந்தேன் அவரை எனது வண்டியில். நேராக ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார். அங்குள்ள சமையல் அறையில் டிபன் கேரியரை வைத்து விட்டு வெளியே வந்து, அங்கிருந்த ஒரு கிழவியிடம் பேசினார்.

“எந்தா குஞ்சுமோள் சுகந்தன்னே?”

“என்ன இன்னிக்கி?”

“ஓளன்.”

அடுத்த கணம் அவர் கன்னத்தில் முத்தமிட்டாள் அந்தக் கிழவி.

“குஞ்சுமோன் சுகந்தன்னே?” இது ஒரு கிழவரைப் பார்த்து. இப்படியே ஒவ்வொருவரையும் கட்டித் தழுவி விசாரித்தார் குரியக்கோஸ்.

கோஸைக் கண்டதுந்தான் என்ன ஒரு பிரகாசம் பஞ்சடைந்த அவர்கள் கண்களில்!

சமையல் அறையில் இருந்து ஒரு பெண் காலி டிபன் கேரியரைக் கொண்டு வந்து கொடுத்தாள். நாங்கள் திரும்பினோம் அலுவலகம்.

உருவத்தில் முரடனாகக் காட்சி தரும் இந்த கல்லுக்குள் தான் என்ன ஒரு ஈரம்!

(கதையல்ல. நிஜம் இது. எனது மகள் சொல்லிட நான் எழுதியது.)

நடராஜன் கல்பட்டு 11-05-2012

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *