பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 31
சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 5:
செம்மொழித் திட்டத்தின் கீழ் செய்யக்கூடிய பணிகளைப் பற்றி உங்கள் கருத்துகள் என்ன?
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
ஒரு செம்மொழிக்குச் செவ்விலக்கியம் இருக்கும். தமிழ் எழுதப்படுவதற்கு முன்னால் எழுதப்பட்ட சில மேற்காசிய மொழிகள் செம்மொழிகள் என்று கருதப்படுவதில்லை. இவற்றில் செவ்விலக்கியம் இல்லாததும் இதற்கு ஒரு காரணம். செவ்விலக்கியம் என்னும்போது தத்துவம் போன்ற புனைதல் இல்லாத எழுத்துகளும் அடங்கும். தமிழில் முதல் இலக்கியம் தோன்றிய காலத்தில் இத்தகைய எழுத்துகள் இல்லையென்றாலும் கவிதை இல்க்கியமே செம்மொழித் தகுதிக்குப் போதும்.
ஒரு இல்க்கியம் உன்னதமாக்வும் பின்வரும் இலக்கியங்களைப் படைப்போருக்கு ஒரு ஆதர்சமாக்வும் இருக்கும்போதே செவ்விலக்கியம் எனப்படும். இந்தத் தகுதி இலக்கியத்தின் காலப் பழமையால் மட்டும் வருவதல்ல. இக்காலத் த்மிழ் இலக்கிய ஆசிரியர்க்ளிடம் மேலைநாட்டு எழுத்தாளர்களின் செல்வாக்கு காணப்படுகிறதே தவிர தமிழ்ச் செவ்விலக்கியத்தின் செல்வாக்கு காணப்படவில்லை. இன்றைய படைப்பாளிகளுக்கு செவ்விலக்கியத்தில் பயிலரங்கு நடத்தலாம்.
செவ்விலக்கியம், சில பண்டிதர்கள் நினைப்பதைப் போல, நவீன இலக்கியத்துக்கு மாற்று அல்ல; அதற்கு உரம். இன்று த்மிழ் இலக்கிய விமரிசனம் மேலை நாட்டு இலக்கியக் கொள்கையின் அடிப்படையிலேயே நடக்கிறது. விமரிசனத்தில் தமிழ்ச் செவ்விலக்கியக் கொள்கைகளின் ப்யன், பொருத்தம் பற்றி விமரிசனப் பயிலரங்குகளில் விவாதிக்கலாம். தமிழ்ச் செவ்விலக்கியத்தைப் பயில்பவர்களும் பயிற்றுபவர்களும் கல்வி நிறுவனங்களில் குறைந்து வ்ருகிறார்கள். இந்தப் போக்கை மாற்ற வேண்டும். செவ்விலக்கியத்தைப் பயிற்றுவிக்கத் தனிப் பணியிடங்களைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தோற்றுவிக்க வேண்டும். செவ்விலக்கியத்தில் தனிப் பயிற்சி பெறுபவர்கள் இன்னொரு செம்மொழி பயில வேண்டும். இவர்களில் சிலர் மொழி பெயர்ப்புப் பணியில் ஈடுபட ஒரு தற்கால் மொழியிலும் திறன் பெற வேண்டும். மொழி பெயர்க்க்ப்பட்ட இலக்கியங்கள் பிற மொழியினர் கைக்குப் போய்ச்சேர வணிக நூல்விற்பனை நிறுவங்களோடு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கும். பிற மொழிகளில் ஒப்பிலக்கியப் பாடம் நடத்தும் ஆசிரியர்களைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து மொழி பெயர்த்த இலக்கியங்களை அறிமுகப்படுத்தலாம்.
செவ்விலக்கணம் தமிழில் செவ்விலக்கியத்தின் முக்கியமான அம்சம். செவ்விலக்கணத்தை நவீனத் தமிழின் இலக்கணத்தோடு ஒப்பிட்டுச் செய்யும் ஆராய்ச்சி அவசியம். செவ்விலக்கிய மொழியின் ஆராய்ச்சி மொழியியல் துறைகளில் மிகுதியாக நடந்திருக்கிறது. இன்னும் ந்டக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதைத் திறம்படவும் விரைவாகவும் செய்யச் செவ்விலக்கியம் முழுவதையும் எண் வயப்ப்டுத்த வேண்டும், இது மதுரைத் திட்டத்தின் கீழ் தனி நபர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சியால் ந்டந்துவருகிறது. இன்னும் பல இலக்கிய நூல்களையும் உரைகளையும் எண் வய்ப்படுத்தும் தேவை இருக்கிறது. இலக்கிய மொழியின் சொல், பொருள், இலக்கண ஆராய்ச்சி செய்யத் தேடு பொறி தேவை. தேடு பொறி தேடும் வகையில் இலக்கியத தரவு வங்கி கட்டமைக்கப்பட வேண்டும். தானாக்ச் சந்தி பிரிக்கும் மென் பொருள் படைத்தால் ஆய்வுக்கும் கற்பதற்கும் உதவியாக இருக்கும்.
செம்மொழி இலக்கிய மொழி மட்டுமல்ல. செவ்விலக்கிய காலத்துக் கல்வெட்டுகளின் மொழியும் செம்மொழியே. ஆவணத் தமிழுக்கு முன்னோடியாக இருப்பது கல்வெட்டு மொழி. இந்த மொழியை ஆய்வுக்கு உட்படுத்தக் கல்வெட்டுகளை எண் வயப்படுத்த வேண்டும்.
செம்மொழியையும் செவ்விலக்கியத்தையும் சரிவர அறிந்து கொள்ள அவை வழங்கிய ச்மூக, பொருளாதாரச் சூழ்நிலை பற்றிய அறிவு வேண்டும். இதைப் பெற, காலனிய காலத்திலிருந்து நடந்துவரும் அகழாய்வை வலுப்படுத்த வேண்டும். முக்கியமாக, கடல் அகழாய்வு மேற் கொளளப்பட வேண்டும். தொல்பொருள் ஆய்வில் பயிற்சியைப் பெருக்க வேண்டும். கல்வெட்டுகளைப் படிக்கும் திறனும் இதில் அடங்கும். செம்மொழிக் காலத்துத் தடயங்களின் மதிப்புப் பற்றி மக்களுக்குப் புரிந்துணர்வு வேண்டும், அண்மையில் வெளிவந்த ஒரு பத்திரிக்கைச் செய்தியின்படி, இரும்புக்காலத் தமிழர்களின் ஈமச் சடங்குகள் பற்றித் த்கவல் தரும் கற்களை வீடு கட்டுவதற்குப் பொதுமக்கள் எடுத்துச் செல்கிறார்கள். பூமிக்குள் கல்லெடுக்கும் கம்பெனிகள் இபபடிப்பட்ட தலங்களை அழித்து விடுகிறார்கள். சிதிலமடைந்த பழைய கோயில்களுக்கும் சிலைகளுக்கும் இதே கதிதான். தமிழரின் வரலாற்றையும் சாதனைகளையும் காட்டும் தடயங்களைப் பாதுகாப்பதன் தேவையைப் பொது மக்களுக்கு உண்ர்த்தும் வகையில் பிரச்சாரம் நடத்த வேண்டும். தமிழைக் காப்பதில் தமிழரின் வரலாற்று எச்ச்ங்களைக் காப்பது முக்கிய இடம் பெற வேண்டும்.
செவ்விலக்கியத்தைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த இலக்கிய நயத்தை விளக்கும் சொற்பொழிவுகள் நடந்த வண்னம் இருக்கின்றன. பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு செவ்வில்க்கியத்தை அறிமுகப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். செவ்விலக்கியக் காட்சிகளை விளக்கங்களோடு படப் புத்தகங்களாகவும் , ஒளித் தட்டுகளாகவும், குறுந் தட்டுகளாகவும் வெளியிடுவது ஒரு வழி; யூடூபில் (You Tube) ஏற்றுவது இன்னொரு வழி. இன்று இணைய தளத்தில் பழைய இலக்கியத்தின் ஒலிப் பதிவுகளும் செய்திகளும் உள்ளன. ஆனால் எல்லாமே படித்து முடித்த தலைமுறையினருக்கு. இந்த ஊடகத்தைத் தமிழ்ப் புத்தகத்தை எடுத்துப் படிக்காத தலைமுறையினருக்குத் தமிழ் இலக்கியத்தில் பிடிப்பு ஏற்படுத்தப் பயன்படுத்த வேண்டும்.
செம்மொழி இலக்கியத்தை ஆய்வுக்கு உட்படுத்துவதும் இக்காலத் தமிழர் வாழ்க்கையில் பொருளுள்ளதாகக் கொண்டு வருவதுமே செம்மொழித் திட்டத்தின் இரு கணகளாகும். உல்க அள்வில் மனிதனின் படைப்புத் திறனுக்கும் படைப்புக் கொடைக்கும் தமிழ்ச் செவ்விலக்கியமும் ஒரு சான்றாக இருப்பதை, தமிழர் மட்டுமல்ல, உலகினர் அனைவரும் தெரிந்துகொள்ள வழிவகுக்கும் வகையில் ஆராய்ச்சி அமைய வேண்டும். தமிழின் செம்மொழிப் பாரமபரியம் புதிய தலைமுறையினருக்குக் கிரீடத்தின் பாரமாக்வோ பழ்ம்பெருமை பாடுவதாகவோ இல்லாமல் அவர்கள் வாழ்க்கையைக் கலாச்சார ரீதியில் செழுமைப்படுத்துவதாக ஆகும்படி செய்ய வேண்டும். செம்மொழிக்கு இக்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் இடம் இல்லை. செம்மொழியைப பழைய இலக்கிய வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திய விதம் இன்றைய தமிழுக்கு இலக்கிய மெருகேற்றும் முயற்சியில் கை கொடுக்கும்
(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)