தணிக்கை என்றதொரு முட்டுக் கட்டை:14:

4

இன்னம்பூரான்

முட்டுக் கட்டையைத் தட்டிப் பிடுங்கும் படலம்.

 

சிறு வயதில் செவி வாய் செய்தி: சர்வாதிகாரியான ஹிட்லர், முதல் காரியமாக, ஆடிட்டர் ஜெனரலை டிஸ்மிஸ் செய்தாராம். ஆனால், அவருடன் பழகி வந்த இளவரசர் ஃப்ரெட்றிக் கிருஸ்டியன், அதிபர் மாளிகையின் கழிவறையை மாற்றி அமைக்க, அரசு பணத்தில் கை வைக்கக்கூடாது என்று ஆடிட்டர் ஜெனரல் சொன்னதாகவும், அவரும் கட்டுப்பட்டார் என்று எழுதியிருக்கிறார். அதை விடுவோம். ஒரு பேச்சுக்கு சொன்னேன். இந்தியாவில் ஒரு உதாரணம். மதராஸ் மாகாணத்தின் கவர்னரின் மனைவி லேடி வில்லிங்டன், விதியை மீறி, அவரின் பிரத்யேக ரயில் பெட்டியில் பயணித்தார். கணிசமான அபராதம் கட்ட வைத்தார், அவரின் விருந்தாளியாக வந்த ஆடிட்டர் ஜெனரல். இந்தியாவில் உள்ளதைப் போல், பாகிஸ்தானில் தணிக்கைத் துறைக்கு சுதந்திரம் கிடையாது என்பார்கள். ஆனால், அங்கு அவர் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். சீனாவோ சர்வாதிகாரப் போக்குள்ள நாடு. அங்கு இன்றைய பேச்சு: ‘அந்த நாட்டின் பொது செல்வ நிலையின் 27 விழுக்காடு பஞ்சாயத்து, முனிசிபாலிடி போன்ற அரசு அமைப்புகளின் கடன் ($ 1.7. ட்ரிலியன்) என்று ஆடிட்டர் ஜெனரல் சொல்கிறார் என்பதே. தொழில் ரீதியாக, பல நாடுகளின் தணிக்கைத் துறைகளுடன் தொடர்பு இருந்ததால், இதை எல்லாம் எழுதுகிறேன். இன்று பெரிதும் பேசப்படும் ‘முட்டுக் கட்டையை தட்டிப் பிடுங்கும்’ விவகாரத்துக்கு, இது பீடிகை.

போதாக்குறைக்கு, நமது தலைமைத் தணிக்கை அதிகாரி திரு. விநோத் ராய் அவர்கள் ஜூன் 25 அன்று சிம்லாவில் ஆற்றிய உரை, எரிகிற தீவட்டியில் எண்ணையை விட்டது போல அமைந்து விட்டது; ஒரு சுருக்கம்: இந்தியாவில் தற்காலம் நிலவி வரும் அரசியல் ஆளுமை, அறநெறி, நம்பிக்கைத் தளங்கள் ஆகியவை நேர்மையாக இயங்க, ஆவன செய்யவேண்டும்…இன்றைய உலகளாவிய சூழலில், பாமர இந்தியன் தான் மேடையில் இருக்கவேண்டும்…இன்றைய பிரச்சனைகள் புதியன இல்லை என்றாலும், பளிங்கு நீர் (என் உபமானம்) போல் பொது வாழ்வு இருக்கவேண்டும், தெளிவாக. ஊழலை ஒழித்து, அரசு உருப்படியாக தொண்டு செய்ய வேண்டும்…கடமையிலிருந்து அநேகர் கழண்டு விடுகிறார்கள்…’

ஹூம்! உள்ளதை சொன்னால் உடம்பு எரியும்! அவருடைய கடமையை பார்ப்போம்.

நம் அரசியல் சாஸனம் ஆடிட்டர் ஜெனரலின் கடமைகளைப் பட்டியலிடுகிறது: (1971ல் ஆடிட் சட்டம் இயற்றப்பட்டது).

பாராளுமன்றம்/சட்டசபை ஒதுக்கிய தொகைகள் அந்த, அந்த பணிகளுக்கு மட்டும் செலவிடபட்டனவா?: ஆய்வு செய்க.

கணக்கு வழக்கு எப்படி வழங்கப்படவேண்டும்?: கூறிடுக.
மாநில தணிக்கை மேற்பார்வை.

பொதுக் கணக்குக் குழுவின் நண்பராக, தத்துவப் போதகராக, மார்க்க பந்துவாக, தொண்டு செய்யவும்.

தணிக்கை அறிக்கைகளை ஜனாதிபதி/கவர்னர் ஆகியோருக்கு அனுப்பவேண்டும். (அவர்கள் பாராளுமன்றத்துக்கு/சட்டசபைக்கு அனுப்புவார்கள்.)

பாராளுமன்றத்தின் ஏஜெண்ட் அவர் என்க. அவரின் கடமை, பணி, பொறுப்பு அதை சார்ந்ததே.

இத்தனை சுளுவான சமாச்சாரம் இல்லை, இது. ஆயுள் காப்பீட்டு கழகம், ரிசர்வ் வங்கி, தேசீய வங்கிகள் எல்லாம், சொக்கட்டான் காய் நகர்த்தும் மாதிரி, ஆடிட்டுக்கு வராமல் நழுவின. ஆயுள் காப்பீட்டு கழகம் தான் முதல் பலிகடா; உபயம்: சீ.டி.தேஷ்முக் – நிதி அமைச்சர்.

நாடாளுமன்றத்திலேயே அவரைச் சாடியது, அக்காலத்து ஆடிட்டர் ஜெனரல், ஏ.கே. சந்தா. கெலித்தது, அமைச்சர். அதனால் தான் ‘வாரிண்டு போகணுமானால் வாரியம் ஆக்கு’ என்ற சொல வடை.

இன்று நிலைமை படு மோசம். தோராயமாக, வருடா வருடம் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவு, ஆடிட் செய்யப் படுவதில்லை. ஆகவே, சர்வ வல்லமை நாடாளுமன்றமும், இருண்ட காலத்தில்! 1971ம் வருட ஆடிட் சட்டத்தை, மீள் பார்வை செய்ய வேண்டும் என, கிட்டத தட்ட ஐம்பது வருடங்களுக்கு பிறகு ஆடிட்டர் ஜெனரல் மடலிட, அது ‘கிடப்’ஸில், இரு வருடங்களாக! அவர் கேட்கும் நியாயம்:

இருபது வருடங்களுக்கு முன் வந்த தாராளமயக் கொள்கையை அவர் குறை கூறவில்லை. அதன் விளைவாக, தணிக்கையிலிருந்து தப்பித்தோடும் செலவுகளை பற்றி அவர் கவலை. விவரங்களும், ஆலோசனைகளும் அவர் கொடுத்தும், காஷ்ட மெளனம்.

தணிக்கை வினாக்களுக்கு விடை அளிப்பதில் ஏகப்பட்ட தாமதம். தகவல் உரிமை சட்டம் போல, இங்கும் 30 நாட்கள் கெடு, சட்டப்படி விதிக்க வேண்டும் என்கிறார்.

ஆடிட் ரிப்போர்ட்டுகளை மன்றத்தின் முன் வைப்பதில், அரசுகள் காட்டும் சுணக்கம் மிகவும் அதிகப்படி. வீராணம் ஆடிட் ரிப்போர்ட்டை அன்றைய தி.மு.க. அரசு தாமததித்ததை, இந்திரா காந்தி சென்னையிலேயே பழித்தார். ஆனால், டில்லி மெட்ரோ அறிக்கையை மத்திய அரசு ஒரு வருடம் தாக்கல் செய்யவில்லை. ஆடிட்டர் ஜெனரல், இந்த ‘சேம்ஸைட் கோல்’ விஷயத்தில் சட்டப் பூர்வமான தீர்வு கேட்கிறார்.

அரசு செலவின் பன்முகம்: தனியாருடன் கூட்டு; பஞ்சாயத்து, மகளிர்  மகளிர் இயக்கம் என்றெல்லாம் புதிய, புதிய வகைகளில் செலவு  செய்யும், வடிகால் இல்லாத வாய்க்கால்கள்; தன்னார்வக் குழுக்களின் பங்கு இத்யாதி. இவற்றை முறையாக தணிக்கை செய்ய வேண்டிய சட்ட மாறுதல்கள்.

இந்த கச்சா எண்ணைத் துறை ஆடிட், அரசு கேட்ட பின் 2006ல் தொடங்கி, பல இன்னல்களைக் கடந்து ஆகஸ்ட் 2010ல் ஒரு நிலைக்கு வந்ததாகத் தெரிகிறது. ஆனால், தனியார் ஒப்பந்தக்காரர்களும், மத்திய அரசும் செய்த இழுபறி…!

ஆடிட்டர் ஜெனரல், பாவம், வாராவாரம் ரிமைண்டர் அனுப்பறார்.

பார்க்கலாம்.

(தொடரும்)

பி.கு.1. “‘பரமபதசோபானப்படத்தில் பாம்பின் தலையில் கைவைத்து அதலபாதாளத்துக்கு வருவது போல, ரெலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பேனியின் பங்கு விலை 8 விழுக்காடு  விழுந்து ரூ. 868.40 க்கு வந்து விட, ஆயிரக்கணக்கான ‘நம்பினோர் பாமரமக்கள்’ உள்பட எல்லாருக்கும் பட்டை நாமம்: ரூ. 24,750 கோடி. காரணம், இந்த வரைவு ஆடீட் ரிப்போர்ட் கசிவு. இதை எல்லாம் கணக்கிடுவது எப்படி சாமி?”

பி.கு.2.இந்த கட்டுரையில் தற்கால நிலைமை சுட்ட, நான் பயன்படுத்தியது, ஹிந்து இதழில் ஜூலை 24, 2011 அன்று வந்த கட்டுரை. காப்புரிமை & நன்றி: ஹிந்து:

| http://www.thehindu.com/todays-paper/

article2130489.ece

பி.கு.3. புது தில்லி, ஜூன் 27: நாடாளுமன்ற பொது கணக்கு குழு செவ்வாய்க்கிழமை கூடுகிறது. அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தணிக்கை என்றதொரு முட்டுக் கட்டை:14:

  1. ஆயுள் காப்பீட்டு கழகம் தான் முதல் பலிகடா; உபயம்: சீ.டி.தேஷ்முக் – நிதி அமைச்சர்.//

    இந்தச் செய்தி இன்று வரை தெரியாதது. ம்ம்ம்ம்ம். அரசு மலை முழுங்கி மஹாதேவனாகவே இருந்து வருகிறது. எதுக்கும் அசைந்து கொடுப்பதில்லை. ஜோஷி சொல்றதை மட்டும் கேட்டுக்குமா என்ன?? வாய்ப்பே இல்லை. 🙁

  2. I have also worked in Audit and Accounts Department. Observations of AG/CAG in many schemes are not appreciable. No full scale audit in many departments. If done in full scale. many more lapses would surface.

  3. வரலாறு சமயங்களில் நம்மை திகைக்கவைக்கிறது. ஆடிட்டர் ஜெனெரலுக்கு நாடாளுமன்றத்தை விளித்து தன்னிலை விளக்கம் கொடுக்க உரிமை உண்டு. இந்த ஆயுள் காப்பீட்டு விஷயத்தில், நிதி அமைச்சரை எதிர்த்து, அன்றைய ஆடிட்டர் ஜெனெரல் திரு.ஏ.கே. சந்தா நாடாளுமன்றத்தில் சொற்பொழிவாற்றினார். ‘கூரை மீது நின்று கூவுது கோழி’ என்று கேலி செய்தார், தேஷ்முக். சந்தா அவர்களின் தீர்க்கதரிசனம் இன்று தெரிகிறது. ஒரு சின்ன விஷயம். பிரதமர் கூட ஓய்வு பெற்ற பிறகு, அரசு இல்லத்தை காலி செய்யவேண்டும். ஆயுள் காப்பீட்டு மன்றத்தின் தலைவர்களும், அவர்கள் இறந்து பல்லாண்டுகள் ஆன பிறகும், அவர்களது சந்ததியும் அந்த மன்ற குடியிருப்புகளில் ‘காலணா’ வாடகையில் நிரந்தரவாசம்; அப்படி லீஸு! ஆடிட்காரன் விடுவானா? அதான்!

    தற்காலம் கூட, ஆடிட்டர் ஜெனெரல் நாடாளுமன்றத்தை விளிக்கும் நாள் நெருங்கிவிட்டதோ?

  4. Welcome, Mr.Sridharan. Please explain, ‘appreciable’. Will not full scale audit become too expensive and counter-productive?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *