நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… -5
ரிஷி ரவீந்திரன்
குழாயினுள்ளிருந்து ரத்தம் வருவதைக் கண்ட பாட்டி ‘வீல்’ என அலறி மயக்கமாகிக் கீழே விழுந்தார்.
ரங்கராஜ் திடுக்கிட்டான். அதிர்ச்சியில் கை கால்களெல்லாம் நடுங்க ஆரம்பித்தன. இனம்புரியா ஒருவித பய உணர்வு அட்ரிலினை ஆட்டிப்படைத்தது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரை ஜிவ்வென பய உணர்வுகள் பீரிட்டன. இதயம் மிக வேகமாக அடிக்க ஆரம்பித்தது. இதயத்துடிப்பின் ஓசையை நன்றாக உணரமுடிந்தது.
ஆழமாய் மூச்சினை உள்ளிழுத்து மூச்சினை மெதுவாய் வெளியேற்றி சில நொடிகளில் தன் நிலைக்கு வந்தான்.
மூளையின் நியூரான்கள் வேகமாக செயல்பட ஆரம்பித்தன. இது நிஜமாகவே ரத்தம் தானா…? லேப்பினில் கொடுத்து சோதித்தால் என்ன….? அருகிலிருந்த பீங்கான் ஜாடியினை எடுத்து ரத்தத்தினை சேகரித்தான்.
——————–
பூச்சா……
ரங்கராஜின் வீட்டு மாடுகளை மேய்த்துக்கொண்டிருப்பவன். ரயில் போன்று நீண்டிருக்கும் ரங்கராஜின் பண்ணையாட்களின் குடியிருப்பில் இவனுக்கெனத் தனியாக ஒரு குடிசை வீடு. யாருடனும் அதிகமாய் பேசாது தனியாகவே சுற்றித் திரிபவன். தலையில் துண்டினை தலைப்பாகையாக்கியிருந்தான். கருப்பு கம்பளியை உடல் முழுதும் போர்த்திக்கொள்வான். கையில் ஒரு நீண்ட கம்பு. குழந்தைகளை பயங்கொள்ள வைக்கும் ஒரு முக அமைப்பு.
ஊரிலிருந்து வெகுதொலைவிலிருக்கும் இலந்தைமரக் கண்மாய், கிறுக்கு முருங்கைமரக் காடு, சின்னத் தோட்டம், ஜக்கம்மா கோயில், பெரிய தோப்பு, ஐயவார் செட்டு, பூச்சக்காபட்டி எனப் பல இடங்களுக்கு மாடுகளை ஓட்டி அவைகளை வயிறார மேயவிட்டு மாலை நேரம் வீடு திரும்புவான். பாட்டுப் பாடிக்கொண்டே இடையிடையே மாடுகளை நோக்கி, “பா……பா……” எனச் சப்தமெழுப்பிக்கொண்டிருந்தான்.
தனிமை ஒரு வரமே – மனமே
தனிமை ஒரு வரமே
இனிமை அது தருமே – உனக்கு
இனிமை அது தருமே
தன்னையே அறிந்து கொள்ள
தன்னிலை உணர்ந்து கொள்ள
தண்ணென்ற அமைதியும் சேர
தானாய் அமையும் அந்த தனிமை (தனிமை )
ஆயாசம் துடைத்துப் போக்க
அகிலம் முழுவதும் அணைக்க
அன்பும் உள்ளத்தில் ஊற
அருகில் நெருங்கும் அந்த தனிமை (தனிமை )
இயற்கையை இனிதே ரசித்து
இயைந்த மனதுடன் நெருங்கி
இணைந்தே என்றும் களிக்க
இயல்பாய் இசையும் அந்த தனிமை (தனிமை )
ஒலி வடிவில்
[audio:http://vallamai.com/wp-content/uploads/2010/07/thanimai_RS_Mani1.mp3|titles=thanimai_RS_Mani]
என ராகம் போட்டு பாடிக்கொண்டிருந்தான்.
————
ரங்கராஜ், உடனடியாக அருகிலிருக்கும் ரத்தப் பரிசோதனை நிலையத்திற்கு விரைந்தான்.
தான் கொண்டு வந்திருந்த ரத்தத்தினைக் கொடுத்து எல்லா சோதனைகளையும் செய்யச் சொன்னான்.
அங்கே மேசையின் மேல் மஞ்சள் நிற ரப்பர் வளையங்களிருந்தன.
’இதெல்லாம் என்ன….? ஒரே மஞ்சள் கலர் வளையமா இருக்கு….?’
’கேன்சர் பேஷண்ட்களுக்கு தன்னம்பிக்கையளித்து ஆதரவு தெரிப்பதற்காக….” என்று கூறிக்கொண்டே ஒரு வளையத்தினை ரங்கராஜிடம் நீட்டினான்.
வளையம் மஞ்சள் கலர் கைக்கடிகாரம் போன்றிருந்தது. எல்லா பகுதிகளும் ஒரே சீராகவும் எதிரெதிர் திசையில் சற்றே விரிந்தும் காணப்பட்டது. விரிந்த ஒரு பகுதியில் மட்டும் முக்கோண வடிவினில் எடையில்லா ஒரு சிறிய மெட்டாலிக் அமைப்பு.
“எத்தனை வாட்டி கீழே போட்டாலும் உடையாது ஸார்…. ஸ்ட்ராங் எலாஸ்டிக்…” என்று கூறிக்கொண்டே ஓங்கி தரையினில் அடித்தான்.
‘நீங்களும் ஒன்னு வாங்கி புற்று நோயாளிகளுக்கு ஆதரவு கொடுங்களேன் ப்ளீஸ்….’
ரங்கராஜின் அனுமதியை எதிர்பாராது ரங்கராஜின் வலது மணிக்கட்டில் நுழைத்துவிட்டு,
‘பத்தே ரூபாதான் ஸார்…..’ எனத் தன் க்ளோ-அப் பற்களைக் காட்டிப் பணம் கேட்டான்.
ரத்தப் பரிசோதனைக்கூடத்திலிருந்து வெளியேறி தன் ராலே சைக்கிளை எடுத்துக் கொண்டிருக்கும்பொழுது….
எதிரே சிவப்புச்சட்டைக்காரன் தன் ஹைதரலி காலத்திய பஜாஜ் ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணுவதற்காக உதைத்துக்கொண்டிருந்தான்.
ரங்கராஜின் மனதினில் இதே காட்சி ஏற்கெனவே நிகழ்ந்திருந்தைப்போன்ற ஒரு உணர்வு,
இதே இடம், இதே மனிதன், இதே சட்டை, இதே ஸ்கூட்டர், இதே தன்னுடைய ராலே சைக்கிள் அப்படியே அச்சு அசலாய் ஏற்கெனவே நடந்திருந்ததைப் போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது.
அவனது முகத்தினைக் கூர்ந்து நோக்கினான்.
புருவங்களுக்கு மேலே சந்தனம் கிடைமட்டமாக செவ்வகமாகப் பூசியிருந்தான். வெள்ளைக் கலரில் ஃபேண்ட். பாக்யராஜ் கண்ணாடி ஃப்ரேம். சிகையை அலைஅலையாய் கோதியிருந்தான்.
ரங்கராஜ் ஒரு கணம் ஸ்தம்பித்தான்.
இதே காட்சி தனக்கே இதற்கு முன் இதே விதமாய் நிகழ்ந்ததாய் மனதினில் ஒரு மின்னல். ஆனால் இப்பொழுதுதான் அது நிகழ்கின்றது. இதே சந்தனப் பொட்டு, இதே சிவப்புக் கலர் சட்டை, இதே வெள்ளைக் கலர் பேண்ட், இதே பஜாஜ் ஸ்கூட்டர். இதே இடம், இதே தன் பச்சை நிற ராலே சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து விடுவித்து கிளம்ப எத்தனிக்கும்பொழுது…..
இந்த நிகழ்வு ஏற்கெனவே நிகழ்ந்தது போன்றும் இது ஒரு மறு ஒளிபரப்பு போன்றும் தோன்றுகின்றதே…?
ஆனால் இதற்கு முன்னால் இப்படி எந்த ஒரு நிகழ்வும் நிகழவில்லை.
இது ஏன் இப்படி…..?
இப்பொழுது ரங்கராஜிற்கு நிஜமாகவே தலை வலிக்க ஆரம்பித்தது.
அருகிலிருந்த ஆனந்த பவனில் ஒரு காபி சொல்லிவிட்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பாவதைப் போன்று நம் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் மீண்டும் அதே சம்பவங்கள் நிகழுமா…? இது அறிவியலில் எவ்வளவு தூரம் உண்மை….? அதற்குரிய நிகழ்தகவு என்னவாய் இருக்கும்….?
காபியின் மணம் நாசியினைத் துளைத்தது. தூரத்தில் சர்வர் காஃபியினைக் கொண்டு வந்துகொண்டிருந்தார். டம்ளரில் காபியின் நுரை பொங்கி வழிந்து டபராவில் எப்பொழுது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையிலிருந்தது. காபியை உறிஞ்சிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். எதிரே பளிச்சென ஒரு அறிவிப்பு பிரசுரம். பிரம்மஸ்ரீ கோபால்ஜி சிவகாசி பேருந்து நிலையத்திற்கருகே விருதுநகர் ரோட்டிலுள்ள ஒரு திறந்த வெளி அரங்கில் ராமாயண உபன்யாசம் செய்யவிருப்பதாய் அறிவிப்பு.
கோபால்ஜி ஒரு யோகி. ஆனால் அவர் பாமர மக்களிடைய பிரபல்யமடைந்தது உபன்யாசங்களினால்…. பொதுவாகவே எல்லா சாமியார்களும் போலிச்சாமியார்களே…! சந்தர்ப்பவாதிகளே…! என்ற கொள்கையுடைவயவன் ரங்கராஜ். தாடி ராமசாமி மாமா இவரைப் பற்றிச் சொல்லியிருந்ததால் சென்று சந்திக்க எண்ணினான்.
அம்பலாமடத்திலிருந்து பழனியாண்டவர் தியேட்டருக்குச் செல்லும் வழியில் ஒரு வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தினான். தற்பொழுது சுவாமிஜி இந்த வீட்டில்தான் ஒரு மாத காலமாக சிவகாசி முகாமிற்காகத் தங்கியிருக்கின்றார்.
சுவாமிஜி திருநெல்வேலிக்காரர். பிரிட்டிஷ் காலத்தில் மருந்தாய்வாளர் பணிக்குப் படித்துவிட்டு சிறிது காலம் மருந்தாய்வாளராய்ப் (ட்ரக் இன்ஸ்பெக்டர்) பணியாற்றிவிட்டு வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு யோகா, தவம், உபன்யாசம் என அவரது வாழ்க்கை 180 கோணத்தில் முற்றிலுமாகத் தடம் மாறியிருந்தது. மடிசார் புடவையில் அவரது வாழ்க்கைத் துணை. இல்லறத்தையே நேர்மையான துறவறமாக மேற்கொண்டிருந்தனர்.
சுவாமிஜி இப்பொழுது தவத்திலிருக்கின்றார் எனவும் இன்னும் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களில் தவம் முடித்து வெளியே வருவார் எனவும் அதுவரை ஹாலில் காத்திருக்கும்படியும் அவரது வாழ்க்கைத் துணை கேட்டுக்கொண்டார்.
சுவாமிஜி இப்பொழுது தவம் முடித்து வெளியே வந்து அனைவருடனும் தாராளமாக துள்ளலாய் நகைச்சுவையுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
சுவாமிஜியிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.
அறிமுகம் செய்யும்பொழுதே, ’ஐயா நான் யாரையும் எளிதில் நம்பிவிடுவதில்லை…. குறிப்பாக சாமியார்களை…. ஏன்னா முக்காவாசிப் பேர் ஃப்ராடாய்த்தான் இருக்றாய்ங்க….’ என்றான்
சுவாமிஜியிடம் புன்முறுவல்.
’யாரையும் நீ நம்பத் தேவையில்லை….. உன்னை நீ நம்பு…..’
‘………………………….’
’எதாவது கேட்க விருப்பமா…..?’
‘யெஸ் சுவாமிஜி…’
’இந்த யோகா தவம் இதெல்லாம் எதற்கு செய்யணும்….? ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதைதான் ஞாபகம் வர்ரது…. ’
‘என்ன கதை….?’ சுவாமிஜி
‘ஒருவன் நீண்ட வருடம் தவமிருந்து நீரில் நடக்கும் வித்தையைக் கற்றுக்கொண்டானாம். நாலணா கொடுத்திருந்தால் பரிசல்காரன் அக்கரை சேர்த்திருப்பானே….? நாலணாவிற்காக அத்தனை வருடங்களை வீணாக்கிவிட்டானே….’
’சரி…. யோகா என்றால் என்ன……?’
“உடற்பயிற்சிதானே…..?”
குழுமியிருந்த கூட்டமோ எதோ கேட்கக்கூடாத ஜோக்கினைக் கேட்டது போன்று கொல்லெனச் சிரித்தனர்.
”யோகா என்பது சமஸ்க்ருதத்தில் இணைத்தல் என்று பொருள்.”
“எதனுடன் இணைவது…..?”
“உடல், மனம், ஆன்மா, இறைவன்….. என அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் இணைப்பது…. நீ நினைப்பது மாதிரி உடலை ரப்பர் போல் வளைப்பதோ அல்லது எதிரியை ஒரே அடியில் சட்னியாக்கிவிடுவதோ யோகா அல்ல….”
’தினசரி காலையில் நம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் யோகா எனச் சொல்லிக்கொடுக்கும் உடற்பயிற்சிகள் யோகா இல்லையா….? ’
‘எவரொருவர் முகம் தேஜஸாக இருக்கின்றதோ… அவர் ஒரு யோகி…..’
“——————”
”சுவாமிஜி, இந்த மனதினை அடக்குவது எப்படி….?”
“அதை ஏன் அடக்க வேண்டும்….?”
“மனம் அடங்கினால் தானே மனம் ஒருமைப்பாடு கிடைக்கும்….?”
“மனதினை அடக்க அடக்க எண்ணங்கள் தாறுமாறாகத் தறிகெட்டு ஓடும்….”
“அது எப்படி சுவாமிஜி….?”
“சரி…. ஒரு இரண்டு நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டு அமர். குத்து விளக்கின் ஜ்வாலையை மனதினில் நிலை நிறுத்தி தவம் செய்…. உன் மனமெல்லாம் அதிலேயே இருக்கட்டும்…. கவனம் சிதற வேண்டாம்….”
ரங்கராஜ் தியானத்திலமர்ந்தான்.
ஜ்வாலையை மனதினில் நினைத்து தாரணை செய்தான்.
மனம் இயங்கிக்கொண்டிருந்தது. இரண்டு நிமிடங்கள் முடிந்ததாய் சுவாமிஜி அறிவித்தார்.
”எப்படி இருந்தது….? ஜ்வாலையை மட்டும்தானே நினைத்தாய்….?”
“நோ சுவாமிஜி…. மனம் எங்கெங்கோ அலைந்து உங்கள் அறிவிப்பு வரும் சமயம் ஒரு பெண்ணின் மஞ்சள் நிற சேலையில் இருந்தது…”
“ஜ்வாலையிலிருந்து எப்படி அங்கே சென்றது….?”
“தெரியவில்லை சுவாமிஜி….”
“ஜ்வாலைக்கும் சேலைக்கும் எப்படி லிங்க் வந்தது….?”
தெரியவில்லை என்பதாய் ரங்கராஜின் கைகள் விரிந்தன.
“மஞ்சள் நிற சேலைக்கு முன்னால் மனம் எங்கிருந்தது….?”
“ஒரு ஆட்டோவில்….”
“அதற்கு முன்…..?”
”ஒரு டீக்கடையில்….”
“அதற்கு முன்…..?”
“சூரியன்….”
“அதற்கு முன்….?”
“ஜ்வாலை….”
அட…! என ஆச்சர்யமானான் ரங்கராஜ். லிங்க் பிடிபட்டுவிட்டதே…!
ஜ்வாலையை நினைத்தோம்…. அது சூடாக இருப்பதாய் மனம் நினைத்தது. உடனே மனதினில் சூரியன் வந்தான். மிகவும் உஷ்ணமாய் மனம் நினைத்தது. ஒரு டீ குடித்தால் என்ன….? என மனம் நினைத்தது. மனம் டீக்கடைக்கு ஓடியது. எதிரே ஒரு ஆட்டோ ஓடியது… அதன் நிறம் மஞ்சள்… எதிரே வரும் பெண்ணும் மஞ்சள் நிற சேலையோ….? என மனம் தன்னிச்சையாய் கட்டுப்பாடின்றி ஓடியது….
அடி மனதினில் ஜ்வாலையும் அதன் மஞ்சள் நிற ஒளியும் தேக்கப்பட்டதால் டீக்கடையிலிருந்து மனம் ஆட்டோவிற்கும் சேலைக்கும் தாவியது. ஜ்வாலையின் மஞ்சள் நிறம் அவனது நினைவின்றியே உஷ்ணத்திலிருந்து ஆட்டோ…. சேலை என தாவியது.
ஆழ்மனதினில் தேக்கப்படும் எதுவும் தன்னிச்சையின்றித் தானாகவே கட்டுப்பாடின்றி நிகழ்கின்றதே….? இதனால்தானோ சைக்கிள் ஓட்டுவதும், கார் ஓட்டுவதும், நீச்சலடிப்பதும் எல்லாம் அடிமனதினில் ஆழமாய்ப் பதிந்து தன்னிச்சையாக நம் நினைவின்றி செயலுக்கு வருகின்றதோ….? இதனால்தானோ அலுவலகங்களில் வேலைக்குச் சேர முன் அனுபவம் தேவை என்கின்றனரோ….?
ஆக மனம் ஒன்றுடன் ஒன்றினை இணைத்துப் பார்க்கின்றது. எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தன்னிஷ்டத்திற்குப் பயணிக்கின்றதே….? இது ஆபத்தன்றோ….?
”மனதினை அடக்க அடக்க அது ஓடும்…… கட்டுப்பாடின்றி ஓடும்…. எனவே மனதினை அடக்காதே….. ”
“என்ன சுவாமிஜி….? எல்லா சுவாமிஜிகளும் மனதினை அடக்க வேண்டும் என்கின்றனர். நீங்கள் இப்படிச் சொல்கின்றீர்….?”
“மனதினை அடக்க அடக்க அது ஓடும்…. அதனை விரித்துவிடு…. மனதினை விரிக்க விரிக்க அங்கே சமாதி நிலை ஏற்படும்…. எண்ணங்களற்ற நிலை…. இறை நிலை….”
”சுவாமிஜி… இந்த தவம் செய்வதனால் மாயாஜாலம் எதாவது செய்ய முடியுமா….?”
“சித்து….?”
“யெஸ்…”
“முடியும்… இயற்கையைக் கூட தன்னிஷ்டத்திற்கு வளைக்க இயலும். நான் பல ஞானியர்களைக் கண்டிருக்கின்றேன். தங்களின் தவ வலிமையால் பெரும் புயலினை அமைதிப்படுத்தியிருக்கின்றனர். பெரும் மழையின் வேகத்தினைக் குறைத்திருக்கின்றனர்……. தவத்தில் சிறந்த ஒரு யோகி பிறரைத் தன் வயம் இழுப்பதற்காகவோ அல்லது தன்னலத்திற்காகவோ அற்ப விஷயங்களில் ஈடுபடமாட்டார். ”
“இதற்கு என்ன ஆதாரம்….? நிரூபிக்க இயலுமா…? ஒரு சின்ன நிரூபணம் வேண்டும்…. இப்பொழுதே இதனை விஞ்ஞான விதிகளில் ஆராய்ச்சி பண்ண விரும்புகின்றேன்….”
“நித்யசாந்தி பிக்கு…..”.
தன் சிஷ்யர் ஒருவரினை அழைத்தார்.
இளைஞர் ஒருவர் வந்தார்.
“பிரபஞ்ச சக்தியைப் பயன்படுத்தி எதேனும் ஒன்று செய்து காட்டு….” கோபால்ஜி.
அங்கிருந்த ஒரு பருமனான மனிதரை அழைத்தார். அவரது எடை 87 கிலோ என ஊர்ஜிதப் படுத்திக்கொண்டார். அவரை நாற்காலியில் அமர வைத்தார்.
அங்கிருந்த நால்வரை அழைத்து இரண்டு ஆட்காட்டி விரல்களினை ஒன்றிணைத்து மற்ற விரல்களினை மடித்து வைத்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டார். இப்பொழுது ஒருவர் இடது முழங்கால் தொடையிலும் இன்னொருவர் வலது முழங்கால் தொடையிலும் மூன்றாமவர் இடது தோள்பட்டையிலும் நான்காமவர் வலது தோள் பட்டையிலும் ஆட்காட்டி விரலினைச் செலுத்தி தூக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.
ஊஹூம் முடியவில்லை.
அடுத்தபடியாக உள்ளங்கைகளை நாற்காலி மனிதரின் தலைக்கு மேலே ஒன்றின் மீது ஒன்றாக இடைவெளி விட்டு அடுக்கப்பட்டு,
“கண்களை மூடிக்கொள்ளுங்கள்…. ஆழமாய் மூச்சினை உள்ளிழுத்து வெளியிடுங்கள்….. மூச்சினை உள்ளிழுக்கும்பொழுது பூமியிலிருந்து உங்கள் உள்ளங்கால்கள் வழியே ஆற்றல் உள்ளே வரட்டும்…. மூச்சினை வெளியே விடும்பொழுது உங்களின் உள்ளங்கைகளின் வழியே வெளியேறட்டும்.… அந்த ஆற்றலானது நாற்காலி மனிதரின் உடலில் பட்டு அவரின் பூத எடையைக் குறைக்கட்டும்…. அவரது உடல் ஒரு லேசான இலவம்பஞ்சு தலையணை போலாகின்றது இப்பொழுது….. “ இப்படியாக பயிற்சி சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் கண்களைத் திறந்து நாற்காலி மனிதரை முன்பு போன்று தூக்கச் சொன்னார். எளிதாக தூக்க முடிந்தது.
[youtube=http://www.youtube.com/watch?v=WCkPmwexrng=640&h=385]
ரங்கராஜினால் இதனை நம்ப முடியவில்லை.
இங்கே இயற்பியல் விதிகள் பொய்யாகின்றதா….? நோ…. வேறு எதுவோ இருக்கலாம். நம் கண்களுக்கோ நம் அறிவுக்கோ இப்பொழுது எட்டவில்லை. எது நிஜம் என யோசி….
சுவாமிஜியிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.
இரவு.
மொட்டைமாடியில் படுத்துக்கொண்டிருந்தான். இதெல்லாம் எப்படி சாத்தியம்….? இது இயற்பியல் விதிகளுக்கு முரணானது அன்றோ…?
அப்பொழுது அந்தரத்தில் ஒரு மண்டையோடு ரங்கராஜினை நோக்கி வந்து கொண்டிருந்தது
.
தொடரும்…….
நன்றி….
பாடலாசிரியர் மதுமிதா
இசையமைத்துப்பாடிய ஆர்.எஸ்.மணி கனடா
என் நண்பன் நித்ய சாந்தி பிக்கு
என் குருஜி பிரம்மஸ்ரீ கோபால்ஜி
It is more interesting now…story examples are amazing
I would like to meet குருஜி பிரம்மஸ்ரீ கோபால்ஜி! I m at venshagan@gmail.com!
கேப்டன் கணேஷ்,
பிரம்மஸ்ரீ கோபால்ஜி இப்பொழுது எங்கிருக்கின்றார் எனத் தெரியவில்லை. என் மாணவப் பருவத்தில் 1986 களில் சந்தித்தது. அதன்பின்னர் எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. நான் பல்வேறு இடங்களில் வசிப்பதால் அவரை மீண்டும் காண இயலவில்லை.
நல்ல பதிவு.
உங்களிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன்.
நன்றி ஐயா.
சிந்தனையைத் தூண்டும் கதையோட்டம். ஒலி – ஒளி இணைப்புகள், கதைக்கு வலுச் சேர்க்கின்றன. ’இது கட்டுக் கதை இல்லை; உண்மை நிகழ்வுகளிலிருந்து பெற்ற சாரம்’ என நிறுவுகிறீர்கள். வாழ்த்துகள்.