வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்
பவள சங்கரி
கல்வியா, செல்வமா ?
— ’எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’,என்பதற்கொப்ப கல்விக்கூடங்கள் கோவிலாகவும் கற்பிக்கும் ஆசிரியர்கள் கடவுளாகவும் கருதப்பபடும் நம் இந்தியாவில் தான் இன்று கல்வி வியாபாரப் பொருளாக ஆகிவிட்டது வேதனைக்குரிய விசயமாகும்.கல்விப்பணி என்பது, திண்ணைப் பள்ளி ஆரம்பித்த ஆரம்பக் காலந்தொட்டே சமூகச் சேவை என்ற ஒன்றை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பணியாற்றி வந்திருக்கின்றன. ஆனால் இடைக்காலங்களில் ஆங்கிலக் கல்வி மோகம் தலையெடுத்த காலங்களில் தனியார் பள்ளிகள் புற்றீசல் போலக் கிளம்பி கல்விக் கட்டணங்களும் விசம் போல உயர்ந்து கொண்டே சென்று இன்று தாங்க முடியாத ஒரு சூழலில் பொது மக்கள் நீதி மன்றத்தின் தயவை நாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று 10,954 பள்ளிகள் இருக்கின்றன. இந்த தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க சென்ற ஆட்சி ஏற்படுத்திய குழு, கல்விக் கட்டணத்தை நிர்ணயத்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது. இந்தக் கட்டணத்தை எதிர்த்து 6400 பள்ளிகள் இந்த குழுவிடமே மேல் முறையீடு செய்துள்ளனர். சென்னையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் எச்சரித்துள்ளார்.நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கும் மேலாக கட்டிய கல்விக்கட்டணத்திற்கேற்ப மாணவர்களைப் பிரித்து பாடம் நடத்தும் கொடுமையும் நடந்துள்ளது சில பள்ளிகளில். ரவிராஜ பாண்டியன் நிர்ணயித்த கட்டணத்தைக் கட்டும் மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்தாமல், அவர்களை தனியாக ஒதுக்கி வைத்துள்ளனர்.வகுப்பறையில் இத்தகைய பாரபட்சம் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு ஆசிரியரின் மீதும் மற்றும் பள்ளியின் மீதும் எங்கிருந்து மரியாதை வரப்போகிறது.
அதேசமயம், பள்ளி நிர்வாகம் கூறும் கட்டணத்தைச் செலுத்தும் மாணவர்களுக்கு தனியாக பாடம் நடத்துகிறார்களாம்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த பாரபட்சப் போக்குக்கு பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.இதே போல தமிழகத்தின் பல பகுதிகளிலும் பள்ளி நிர்வாகங்களைக் கண்டித்து பெற்றோர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.ஒரு பள்ளியில் கூடுதலாக ரூ. 6000 வரை வசூலிப்பதாகவும், கட்டாயமாக ரூ. 1000 கொடுத்து காலணிகள் வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் பெற்றோர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் நடுத்தர வகுப்பு பெற்றோர் கூட தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியை தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக செலவிடுகின்றனர். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகங்களோ மென்மேலும் அட்டையைப் போல அந்தப் பெற்றோரை உறிஞ்சுவது மனிதாபிமானமற்ற செயலாகவே இருக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வாக மேலை நாடுகளில் உள்ளது போல அரசாங்கமே ஏன் பள்ளிக் கூடங்களை எடுத்து நடத்தக் கூடாது ? ஒரு ஆட்சி நல்லாட்சியாக மக்கள் மனதில் பதிய வேண்டுமானால் மக்களின் அடிப்படைத் தேவைகளில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அந்த வகையில் கல்விக்கட்டணம் என்ற இந்தப் பெரிய பிரச்சனையை அரசாங்கம் கையாளப் போகிற விதமும் கருத்தில் கொள்ளப் படுவதாகவே இருக்கும் என்பது திண்ணம்.
கல்வியா?செல்வமா? தலையங்கத்தில் கல்வி நிறுவனங்கள்
பணத்திற்கு ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்தியும், குறைத்தும்
மாணவர்களுக்குக் கல்வியை வழங்குவதாக அறிந்தேன். இந்தச்
செய்கையால் கல்வி நிறுவனங்களின் தரமும் ஆசிரியர்களின்
தரமும் தாம் குறைந்துவிட்டன.” பொருட்செல்வம் பூரியார்
கண்ணும் உள” என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர்
சொல்லியுள்ளார். கொலைகாரன், கொள்ளைக்காரன், கயவன்
போன்றோரிடமும் பணம் இருக்கிறது. இப்போது இந்தக் கல்வி
நிறுவங்களின் நிர்வாகிகளிடமும் பணம் இருக்கிறது. ஆனால்
பண்பு எங்கோ போய்விட்டது. பண்பில்லாதவன் எவ்வளவு
அறிவாளியாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும்
மனிதனே அல்ல என்பது வள்ளுவர் வாக்கு. கல்வியைப் பற்றி
ஆட்சியாளர்களுக்கும் நற்சிந்தனை இல்லை என்பதையே
இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. வாழ்க ஜனநாயகம்!
இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.
நல்லதொரு தலையங்கம். எனினும், சிக்கல்களை சாவதானமாக, ஆய்வு செய்து பார்த்தால் தான் விடை காண இயலும். ஒரு 70 வருடங்களுக்கு முன்: எனக்கெல்லாம், பள்ளிக்கட்டணம் கட்டியது நினைவில் இல்லை. இலவசம். அல்லது மிகக்குறைவு. தரம் உயர்வு. ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு. நிறை குடங்கள். அரசு பள்ளியிலும், குலபதிகள் என்ற சான்றோர்களின் தனியார் பள்ளிகளிலும். அதற்கு முன்பு திண்ணைப்பள்ளிகள். நடத்தியது வெள்ளைக்காரன். இன்றைய நிலையை ஒப்பிடுங்கள். ஆனால் ஒன்று. Today’s Reach is awesome. We have to reorient. கேட்டால், பார்க்கலாம்!