கே. ரவி

awilliஎன் கல்லூரி நாட்களில் ஆங்கிலக் கவிதைகள் நிறையவே படித்து, ரசித்து, அந்தச் சுவையில் தோய்ந்திருந்தேன். கீட்ஸும், ஷெல்லியும், பைரனும் பள்ளி நாட்களிலேயே என்னைக் கவர்ந்ததோடு, மிகவும் பாதிக்கவும் செய்திருந்தார்கள். சற்று நிதானமாக, ஆனால் மிகவும் அழுத்தமாகப் பிறகு சுவடு பதித்தவர்கள், வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தும், அவருடைய நெருங்கிய நண்பர் எஸ்.டி.கோல்ரிட்ஜ்ஜும்.

கோல்ரிட்ஜ் என்றதும் நினைவுக்கு வருவது அம்பத்தூர்தான். அம்பத்தூருக்கும் கோல்ரிட்ஜ்ஜுக்கும் என்னய்யா சம்பந்தம்? அது ஒரு சுவாரசியமான கதை.

ar1

1970-ஆம் ஆண்டு, நாங்கள், அதாவது, சிந்தனைக் கோட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள், அம்பத்தூரில் இருந்த ஒரு பள்ளியில் இரண்டு நாட்கள் முகாம் இட்டோம். அது உண்மையிலேயே ஓர் இலக்கிய முகாமாக, அல்லது, எங்கள் இலக்கிய வளர்ச்சியின் இன்னொரு முகமாக அமைந்தது. அந்தப் பள்ளியும் என் தந்தை விஸ்வம் நடத்திக் கொண்டிருந்த பள்ளிதான். நான், சுகி சிவம், சு.ரவி, ஆ.பாபு, கண்ணன் மேலும் சில நண்பர்கள் கும்பலாகச் சென்று அம்பத்தூரையே ஒரு கலக்குக் கலக்கி விட்டோம். அங்கே நாங்கள் அடித்த லூட்டிகளையும், அருகில் இருந்த வைஷ்ணவி கோயில், திருமுல்லை வாயில் கோயில் ஆகியவற்றுக்கு நடைப்பயணம் சென்றதையும், அதுவும், சிவத்தின் “தேவியின் கருணை மிகமிகப் பெரிது தேர்ந்து கொள்ளடா மானுடா” என்ற பாடலைப் பல ஸ்ருதிகளில் சத்தமாகப் பாடிக்கொண்டே சென்றதையும், அம்பத்தூர் பள்ளியின் புழக்கடையில் எங்களில் ஒருவனைத் தொட்டியில் போட்டு பாபு நீர் மொண்டு ஊற்றிக் குளிப்பாட்டிய கண்கொள்ளாக் காட்சியையும் இன்னும் நினைத்துப் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது, என் தந்தை விஸ்வம், ஒரு மரத்தடியில், எங்களுக்கு ஆங்கிலக் கவிதைகளைப் படித்துப் பாடம் நடத்தியதுதான். அங்கேதான் கோல்ரிட்ஜ்ஜின் ‘ரைம் ஆஃப் தி ஏன்ஷியன்ட் மெரினர்’ (ஒரு கிழ மாலுமியின் கவிதை) என்ற அருமையான ஆங்கிலக் கவிதையை அவர் எங்களுக்கு முழுதாகப் படித்து, விளக்கி, நடித்துக் காட்டி அந்தக் கவிதை வெள்ளத்தில் அவர் எங்களை மூழ்கடித்தார்.

ஒரு திருமண வைபவத்துக்குச் செல்லும் விருந்தினர்களில் ஒருவனை, ஒரு கிழ மாலுமி வழிமறிக்கிறான். ஏன் வழிமறிக்கிறாய் என்று விருந்தினன் கேட்டதும், கிழவன் அவன் கையைத் தன் மெலிந்த கரத்தால் பற்றுகிறான். “கப்பலொன்று இருந்தது” என்று கதையைத் தொடங்குகிறான். “கையை விடு” என்று விருந்தினன் சொன்னதும் கையை எடுத்துவிட்டு, ஒளிமின்னும் தன் கண்களால் அவனைப் பற்றி நிறுத்துகிறான் அந்தக் கிழவன். விருந்தினன் அசையாமல் நிற்கிறான். மூன்று வயதுக் குழந்தையைப் போலக் கதை கேட்கிறான். மாலுமி அவனை இப்படித் தன் வழிக்குக் கொண்டு வருகிறான். இப்படித்தான் ஒரு நாடகமாக ஆரம்பிக்கிறது அந்த நீண்ட கவிதை:

He holds him with his skinny hand,boat

‘There was a ship,’ quoth he.

‘Hold off! unhand me, grey-beard loon!’

Eftsoons his hand dropt he.

 

He holds him with his glittering eye—

The Wedding-Guest stood still,

And listens like a three years’ child:

The Mariner hath his will.

இந்த வரிகள் என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கின்றன. அந்த மாலுமிக் கிழவனைப் போலவே, சற்றே சிவந்த கண்களாலும், தம் கனத்த குரலாலும் என் தந்தை விஸ்வம் எங்களைக் கட்டிப் போட்டுவிட, நாங்கள் எல்லாரும் அசையாமல் அந்தக் குறுங்காவியம் முழுதும் அமர்ந்து கேட்டோமே, அந்தக் காட்சியும் அப்படியே பசுமையாக நினைவில் தங்கிவிட்டது!

வேர்ட்ஸ்வொர்த்தின் “மைக்கெல்” என்ற அருமையான கவிதைச் சிறுகதையையும், தாமஸ் க்ரேயின் “எலிஜி வ்ரிட்டன் இன் அ கன்ட்ரி சர்ச்யார்ட்” (ஒரு புறநகர் இடுகாட்டில் எழுதப்பட்ட இரங்கற்பா) என்ற கவிதையையும் என் தந்தை அங்கேதான் படித்தும், நடித்தும் பாடம் நடத்தினார்.

வொர்ட்ஸ்வொர்த்தின் இரண்டாம் நூற்றாண்டு விழாவைச் சிந்தனைக் கோட்டம் 1970-ஆம் ஆண்டு கொண்டாடியது. அதில் வொர்ட்ஸ்வொர்த் பற்றி நான் ஒரு கவிதை படித்தேன். ஆனால் ஏனோ அந்த நிகழ்ச்சி என் நினைவில் பின்தங்கிவிட்டது. சில நாட்களுக்கு முன்னால் நண்பன் சு.ரவி அதை ஞாபகப் படுத்தியதோடு, தான் பத்திரப் படுத்தி வைத்திருந்த என் கையெழுத்துப் படிவத்தை நகலெடுத்து மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியதும் நான் நெகிழ்ந்து போனேன். அனுமன் கொண்டுவந்த சூடாமணியைக் கண்ட ராகவன் நிலையைக் கவிச்சகரவர்த்தி பாடுகிறானே, அதுபோல் நானும் ஆனேன்:

பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்ravi

துடித்தன, மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;

மடித்தது, மணி வாய்; ஆவி வருவது போவது ஆகித்

தடித்தது, மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்?

வொர்ட்ஸ்வொர்த் பற்றி நான் எழுதிய அந்தக் கவிதை இதோ:

புலமைக் குன்றேறிப் பூரிக்கும் இயற்கையதன்

வளமைச் செழிப்பினிலே வைத்திழந்த நெஞ்சினனே

இயற்கை எழிலில் இறைவன் திருவுருவின்

நயம்தோன்றக் கண்டவனே நற்சிந்தைப் பாவலனே

ஆங்கிலத்தில் தன்னேரும் அற்றதொரு மாகவியே

பூங்குமுதப் பொற்றமிழிற் பொங்கும் புலமைக்கோ

பாரதியை ஒத்தவனே பார்போற்றும் வித்தகனே

ஓரத்தில் நின்றே மைய ஒளிப்பொருளாய்

உன்னை உணர்ந்தவனே ஒப்பில்லா உத்தமனே

சொன்ன கவிதையெலாம் சொட்டும் சுவையமுதே

இன்னுமுன் ஏற்றத்தை என்னென்று சாற்றிடுவேன்

சொன்னவையும் சொற்பமடா சொர்க்கக் கவித்திருவே

நாலைம்ப தாண்டுகளுன் நாவை அழிக்கவிலை

காலைக் கதிரவன்போல் என்றும் கவியுலகில்

மாறாப் புதுமையுடன் மாண்பொளியே வீசிடுவாய்

சீரார் தமிழ்மொழியின் சின்னஞ் சிறுகவிஞன்

உன்னை வணங்குகிறேன் உண்மைத் திருவிளக்கே

என்னை அருள்செய்வாய் இன்று

17 வயதினிலே எழுதியது இந்தக் கவிதை. நினைத்துப் பார்த்து நெகிழாமல் இருக்க முடியுமா? மனோன்மணியின் மெல்லிய விசும்பல் ஒலி. ஆற்றின் சலசலப்பொலி போல, இதமாகச் செவியில் மோதுகிறது!

“சரிண்ணே! 17 வயது, 20 வயதுண்ணு பேசிக்கிட்டே இருந்தா எப்படி? போன பகுதியிலே நான் கேட்டேனே கேள்வி அதற்கு இன்னும் பதில் வரலியே!” நம்ம புத்தி சிகாமணிதான் கேட்கிறான். அவனுக்கு பதில்சொல்வது போலவே அமைந்த ஒரு கவிதை, 1993-ஆம் ஆண்டில் நானெழுதிய ஒரு கவிதை, இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

முதுமையின் கனிவை நேசிக்கிறேன் – இருந்தாலும்

இளமையைத் தான்நான் யாசிக்கிறேன்

இளமையில் இருந்து முதுமையில் நுழைய

இருமுறை நானும் யோசிக்கிறேன்

 

அருவியின் வேகம் அலைகளின் ஆற்றல்

தென்றலைப் போலெங்கும் செல்லும் சுபாவம்

உதயத்தின் செம்மை உள்ளத்தில் உண்மை

இவையனைத் தும்,என் இளமையின் தன்மை

 

முதுமையின் கனிவை நேசிக்கிறேன்

இளமையின் கனவை யாசிக்கிறேன்

இளமையில் இருந்து முதுமையில் நுழைய

இருமுறை நானும் யோசிக்கிறேன்

 

மதுச்சுமை யால்மலர் தளர்வதில்லை

வாடி யுதிர்ந்துபின் வளர்வதில்லை

புதுச்சுமை யால்நான் தளரவில்லை – என்னை

நானே சுமப்பதை உணருகிறேன்

 

எதுவரைக் கும்நான் எனத்தெரி யாமல்

எதைநான் முதுமை யென்பேன்

இதுவரை எத்தனை என்றுண ராமல்

இதைப்போய் இளமை யென்றேன்

 

முதுமையின் கனிவை நேசிக்கிறேன்

இளமையின் கனவை யாசிக்கிறேன்

இளமையில் முதுமை முதுமையில் இளமை

இரண்டையும் ஒன்றாய் வாசிக்கிறேன்

aravஅம்பத்தூர் பள்ளியிலே, நள்ளிரவு நேரம் வரை, மொட்டை மாடியில், அங்கே தரையில் பதித்திருந்த சதுரமான கண்ணாடி வழியாக வந்த வெளிச்சத்தில் கவிஞர் முருகுசுந்தரத்தின் கவிதைகளை நான் படிக்க, சிவமும், சு.ரவியும் மற்ற நண்பர்களும் சுற்றிப் படுத்துக் கொண்டு கேட்டு ரசிக்க, ஓ, சொர்க்கமே அதுதானோ என்பதுபோல் சொக்கிக் கிடந்தோம்!

ஆங்கிலக் கவிஞன் பைரன், இத்தாலியப் பெண், அதுவும் வேறொருவனுக்கு மனைவியாகி விட்ட மங்கை, தெரெஸாவுக்கு எழுதிய கவிதைக் கடிதத்தைத் தமிழ் விருத்த நடையில் முருகுசுந்தரம் அழகாகத் வடித்திருந்த பாடல் இன்னும் நினைவில் இருக்கிறது:

புதுமொட்டுப் பருவத்தைப் பொன்னிழைத்த தொட்டிலிலே கழித்து விட்டு

மதுமொட்டுப் பருவத்தை மதக்கன்னி மாடத்தில் கழித்து விட்டு

பதினெட்டுப் பருவத்தைப் பஞ்சணையில் கழிக்கின்ற படுக்கைப் பூவே

மதிநட்டுக் கொலுவிருக்கும் கழுத்தழகி நானுன்னை மறப்ப தெங்கே!

நட்சத்திரக் குவியலுடன் பரந்து, விரிந்து கிடக்கும் வானத்தைப்போல், சொற்குவியல்களால் அலங்கரிக்கப்பட்ட இளநெஞ்சங்களை இணைத்துக் கொண்டு எங்களுக்குள்ளேயே, எங்கள் எல்லாரையும் உள்ளடக்கி, ஒரு கவிதை வானம் விரியக் கண்டோம். எங்களை நாங்களே வியந்து கொண்டோம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *