தஞ்சையில் களிமேடு பகுதிக்கு அந்தப் பெயர்வரக் காரணம்

0

-தஞ்சை வெ. கோபாலன்

தஞ்சை நகரத்தினுள்ளும், சுற்றுப்புறத்திலும் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. தஞ்சை நகரத்துக்குப் பெருமை சேர்ப்பது ’ராஜராஜேச்சுரம்’ எனும் பெரிய கோயில்தான் என்றாலும் இங்கிருக்கும் மற்ற பல சிறு ஆலயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சை நகரத்தில் மட்டும் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட சக்தி ஆலயங்கள் இருப்பதாகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள “தஞ்சை சக்தி ஆலயங்கள்” எனும் நூல் மூலம் தெரியவருகிறது.

தஞ்சையின் கீழ்ப்புற கோட்டைவாசல் அருகில் வெள்ளைப் பிள்ளையார் என்றொரு ஆலயம் உண்டு. இந்த ஆலயம் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களில் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கர் காலத்தில் ஒரு குறவஞ்சி இந்த வெள்ளைப் பிள்ளையார் மீது பாடப்பட்டிருக்கிறது. சிதலமடைந்த ஓலைச் சுவடிகளிலிருந்து படியெடுத்து அதனை சரஸ்வதி மகால் நூலகத்தார் வெளியிட்டிருந்தார்கள். புலவர் வீ. சொக்கலிங்கம் என்பார் இதன் பதிப்பாசிரியர் ஆவார். இந்த நூலில் அந்தக் குறவஞ்சியில் குறிப்பிடப்படும் பல சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், மற்ற பல ஆலயங்களைப் பற்றியெல்லாம் சிறு குறிப்பினை பதிப்பாசிரியர் கொடுத்திருக்கிறார். அவற்றில் சில குறிப்புகள் சுவையானவை, குறிப்பாகத் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அவை.

இங்கு சில ஆலயங்களைப் பற்றிய குறிப்புகளை முதலில் பார்ப்போம். ஆனைமுகன் என்று பொதுவாக விநாயகப் பெருமானை வணங்கி பெருவுடையார் என்று பெரிய கோயிலின் நாயகனைக் குறிப்பிட்டுவிட்டு மற்ற பல ஆலயங்களைக் குறிப்பிடுகிறார்.

தஞ்சை நாயகர் ஆனந்தவல்லி: இது தஞ்சைக்கு அருகில் விண்ணாற்றங்கரை (வெண்ணாறு என்று இப்போது அறியப்படுகிறது) தெற்கில் அமைந்துள்ள ஆனந்தவல்லி உடனாய தஞ்சேசர் (தஞ்சபுரீஸ்வரர்) ஆலயம்.

சொக்கநாயகர்: தஞ்சை கருந்திட்டைக்குடி (இப்போது கரந்தை) ராஜவீதியில் கோயில் கொண்ட மீனாம்பிகை சமேதரான சோமசுந்தரக் கடவுள். இதே பெயரில் தஞ்சை மேலவீதி ஐயன்குளக் கரையிலும் ஒரு ஆலயம் உண்டு என்கிறார்.

வைத்தீசர்: தஞ்சை பெரியகோயிலுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட கோயிலில் எழுந்தருளியிருக்கும் கருந்திட்டைக்குடி கருணாமூர்த்தி. இந்த மூர்த்தி கருங்குஷ்டம் தீர்த்ததால் “கருங்குட்டம் தீர்த்த இறைவன்” என்று குறிப்பிடப்படுகிறார், ஆகவே இந்த குறவஞ்சியில் குறிப்பிடப்படும் வைத்தீசர் இவராகத்தான் இருக்கவேண்டுமென்பது ஆசிரியர் கருத்து.

தொப்பாரங்கட்டி பிள்ளையார்: இந்த விநாயகப் பெருமான் தஞ்சை நாணயக்காரச் செட்டித் தெருவின் கீழ்புறத்தில் மிக உயரமாக எழுப்பப்பட்ட மேடையில் அமைந்த “தொப்பைக்கு ஆரம் கேட்ட பிள்ளையார்” என்று பெயர் பெற்றவர்.

இனி சில வைணவக் கடவுளர்களின் பெயர்களைக் காண்போம்.

கோபாலப் பெருமாள்: தஞ்சை வடக்கு வீதியும் ஐயன் கடைத்தெருவுக்கு இணையாக உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் தெருவும் சந்திக்கும் இடத்தருகே இருக்கும் கோயில். இப்போதும் ராஜகோபாலசுவாமி கோயில் என வழங்கப்படுகிறது.

சிங்கப் பெருமாள்: தஞ்சையை அடுத்த விண்ணாற்றங்கரை அடுத்தடுத்து சில வைணவ ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இதற்கு முன்பாக பழைய சோழர்கால தலைநகராக இருந்த இடத்தில் இருந்தவை என்றும், நகரம் அழிக்கப்பட்டபோது இந்த ஆலயங்கள் இங்கு கொண்டு வந்து நிறுவப் பட்டதாகவும் கூறுவர். இதற்கு ஆதாரமாக சீனிவாசபுரத்திலிருந்து ரெட்டிபாளையம் செல்லும் பாதையில் சிங்கப்பெருமாள் குளம் என்று ஒன்று இருக்கிறது. அந்தப் பகுதிதான் பழைய சோழர் தலைநகராக இருந்த இடம். அந்தக் குளம்தான் இந்தச் சிங்கப்பெருமாளின் புஷ்கரணியாக இருந்தது, அதன் கரையில்தான் இந்த ஆலயமும் இருந்தது என்று கூறுவாரும் உளர்.

மணிகண்டப் பெருமாள்: மேற்சொன்ன சிங்கப் பெருமாள் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளது இந்தக் கோயில். இதே பெயரில் தஞ்சைக் கீழவீதி ‘சர்ச்சா வாசல்’ என்று அழைக்கப்படும் சிறப்பு வாயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஆலயமெனவும், அங்குள்ள பெருமாளுக்கு ‘நீலமிடற்றான்’ எனப் பெயர் எனவும் தெரிகிறது.

நீலமேகப் பெருமாள்: இவரும் விண்ணாற்றங்கரையில் வரிசையாக அமைந்துள்ள ஆலயங்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் ஆலயத்தில் கோயில்கொண்ட பெருமாள்.

மின்மலை வெங்கடேசர்: தஞ்சை ஐயன்கடைத் தெருவுக்கு அருகில், முன்சொன்ன ராஜகோபாலசுவாமி கோயில் தெருவுக்கு அருகில், காசுக்கடைத் தெரு முடிந்து தெற்கில் திரும்பினால் அங்கு இந்த ஆலயத்தை மிக உயர்ந்த படிகளைக் கொண்ட மேடையில் காணலாம். இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் உயரமான உருவமுடையவர். இவ்வாலயத்தின் முன்பாக அமைந்துள்ள நாலுகால் மண்டபம் எனுமிடத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் பிரசித்தமானவர். ஒவ்வோராண்டும் இந்த நாலுகால் மண்டப ஆஞ்சநேயருக்கு பத்து நாட்களுக்கு இசைவிழா மிகச் சிறப்பாக நடந்து வருவதை அனைவரும் அறிவர்.

ஆதிகேசவப் பெருமாள்: இந்தப் பெருமாள் மேற்சொன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தின் தெற்குத் திருச்சுற்றில் எழுந்தருளியுள்ள பெருமாள்.

ரகுநாதப் பெருமாள்: தஞ்சைக் கீழவாசல் பகுதியிலுள்ள கீழ அலங்கம் எனும் பகுதியில் கோட்டை வாயிலுக்கு மேற்கே உள்ள கொண்டிராஜாபாளையத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ராமசுவாமி ஆலயம்தான் ரகுநாதப் பெருமாள் ஆலயம். இதன் மிகஅருகில் இப்போதும் கோட்டை மேட்டில் பழைய கால பீரங்கியொன்றை மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். கீழ அலங்கம் சாலையிலிருந்து படிகள் மூலம் மேலே ஏறிச்சென்று அந்தப் பீரங்கியைச் சுற்றுலா வரும் மாணவர்கள் கண்டு களிக்கிறார்கள்.

முப்பிலாறுமுகப் பெருமான்: தஞ்சை வடக்கு வாசலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி. அந்தக் காலத்தில் தஞ்சைக் கோட்டைக்கு இரண்டே வாயில்தான், ஒன்று கிழக்கு வாசல் மற்றது வடக்கு வாசல். கிழக்கில் வெள்ளைப் பிள்ளையாரையும், வடக்கில் இந்த முப்பிலாறுமுகனையும் நிறுவியதாகச் சொல்லப்படுகிறது.

மேல கோதண்டராமப் பெருமாள்: தஞ்சை ஐயன் கடைத்தெருவில் அமைந்துள்ள கோயிலில் குடிகொண்டுள்ள பெருமாள்.

தாழியான்: தஞ்சை மேலவீதியில் மிகப் பிரசித்தமான பங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்தையொட்டி வடக்கில் அமைந்த ஸ்ரீகிருஷ்ணன் கோயில் என அழைக்கப்படும் கோயிலில் இருக்கும் பெருமான். இவர் வெண்ணைத் தாழியைக் கைக்கொண்டிருப்பதால் தாழியான் என அழைக்கப்பட்டிருக்கிறார்.

நரசிங்கப் பெருமாள்: தஞ்சை கொண்டிராஜாபாளையத்திலுள்ள ரகுநாதப் பெருமாள் சந்நிதிக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியிருக்கிறார். இந்தப் பெருமாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான வரலாறு அல்லது கதை வழக்கில் இருக்கிறது. அந்தக் கதையை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சியின் பதிப்பாசிரியர் தன் நூலில் குறிப்பிடுகிறார். அந்தக் கதை என்னவென்பதையும் பார்ப்போமே.

மேற்சொன்ன நரசிங்கப் பெருமாள் ஆலயத்தின் வாசலில் கடைவைத்திருந்தார் ஒருவர். அவர் பெயர் பெத்ததாசர் என்பவர். தீவிர வைணவர். அவருக்கு இந்த நரசிங்கப் பெருமாள்தான் எல்லாம். அவரை வழிபடாமல் எந்தக் காரியமும் செய்வதில்லை அவர். தன் கடைக்கு திருமண் பூசிய வைணவர் யாரும் வந்துவிட்டால் இவர் எழுந்து அவர்களை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டுதான் மற்ற காரியங்களைப் பார்ப்பாராம். அப்போது தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் இவரது செயலைப் பரிகசிக்க எண்ணித் தன் அவைக்கு இரண்டு கழுதைகளைக் கொண்டுவந்து நிறுத்தி, ஒரு கழுதைக்கு நெற்றியில் திருமண் அணிவித்து, மற்றொரு கழுதையை வெறும் நெற்றியோடு நிறுத்திவைத்துவிட்டு பெத்ததாசரை அழைத்துவரச் செய்து பார்க்கச் சொன்னாராம். பெத்ததாசர் திருமண் இட்ட கழுதையை வலம் வந்து நமஸ்கரித்து எழுந்தாராம்.

அப்போது மன்னர் பெத்ததாசரைப் பார்த்து மற்றொரு கழுதையை ஏன் வணங்கவில்லை என்று வினவினாராம். அதற்கு அவர் இது திருமண் தரிக்காத கழுதை, உன்னைப் போன்ற கழுதை, திருமண் தரித்த கழுதை என்னைப் போன்ற கழுதை என்றாராம். இந்தப் பதிலைக் கேட்டு மன்னன் கோபம் கொண்டு இவரைக் கழுவில் ஏற்ற உத்தரவு இட்டாராம்.

தஞ்சை நகருக்கு மேற்கே சுமார் மூன்று கல் தூரத்தில் உள்ள ஒரு மேடான பகுதியில் அமைந்த கழுமரம் அமைந்த கொலைக்களத்துக்கு இவர் கொண்டு செல்லப்பட்டாராம். பெத்ததாசர் வழிநெடுகிலும் தன் இஷ்ட தெய்வமான நரசிம்மப் பெருமாளை நினைந்து “நரசிம்மா” “நரசிம்மா” என்று உச்சரித்துக் கொண்டே வந்தாராம். கழுமரத்தை அணுகியதும் அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்துபோனது. இந்தச் செய்தி அரசனுக்கு அறிவிக்கப்பட, மன்னனுக்குத் தான் செய்த தவறு புரிந்து அந்த பக்தரிடம் “ஐயனே! உங்களுக்கு நான் கொடுத்த தண்டனைக்காக என்மீது கோபப்படாமல், கழுமரத்தை எரிந்திடச் செய்தது என்மீதான தங்கள் இரக்க குணத்தினால்தான்; தங்கள் கருணைக்குத் தங்களை பணிகிறேன்” என்று சொல்லி அவர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தானாம். பிரகலாதனைக் காத்த நரசிம்மப் பெருமாள் எங்களையும் காத்தார் என்று மற்றவர்களும் அந்த அடியாரை விழுந்து வணங்கினார்களாம்.

இந்த பக்தருக்கு அந்தக் கழுமரம் இருந்த பகுதியைத் தானமாக வழங்கினானாம் மன்னன். இவரைக் கழுவேற்றுவதற்காக அமைந்த அந்த மேடுதான் கழுமேடு என்றாயிற்று, பின்னர் மருவி “களிமேடு” என வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. கழுதை காரணமாகக் கொடுக்கப்பட்ட இடம் என்பதால் இது கழுதைமேடு என்று வழங்கி பின்னர் களிமேடாயிற்று என்றும் சொல்வர்.

இப்படி மக்களின் விசனத்தைப் போக்கிய பெருமாள் இந்தக் குறவஞ்சியில் “விதனமே போக்கும் தஞ்சை நரசிங்கப் பெருமாள்” என்று அடைமொழியோடு புகழப்படுகிறார்.

மேற்கண்ட ஆலயங்கள் தவிர மற்ற ஆலயங்களையெல்லாம் ஒன்றாக்கி ஏனையோர் என்று பொதுவில் அழைத்து வணங்கியிருக்கிறார் இந்தப் பாடலில். இந்த ‘ஏனையோர்’ எனும் சொல்லினுள் பங்காரு காமாட்சி, கொங்கணேஸ்வரர், காசி விசுவநாதர் ஆகிய கோயில்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

அந்தப் பாடலை இங்கே பார்ப்போம்.

பாடல் 1.

ஆனைமுகன் அருள்பொழியும் ஆனந்தவல்லியுமை பிறைநாறு சீரடிக்கைம்
மானையுள பெருவுடையார் சொக்கநாயகரும் வயித்தீசரும் தஞ்சை நாயகரும்
சோனைமலைக் கைலாயக் கனியீன்ற தொப்பாரங்கட்டிப் பிள்ளையாரும்
மீன்வெல் கோழிக்கொடியோனும் மகிழ வெள்ளைப் பிள்ளை குறமெனக்கு
முன்னடக்க வேணும்.

பாடல் 2.

கோபாலப்பெருமாள் சிங்கப்பெருமாள் மணிகண்டப் பெருமாள்
மின்மலை வெங்கடேசர் ரகுநாதப் பெருமாள் ஆதிகேசவப் பெருமாள்
முகப்பிலாறுமுகப் பெருமாள் *கருடங்கோட்டை மேல் கோதண்டப் பெருமாள்
தாழியான் நீலமேகன் விதனமேபோக்கும் தஞ்சை நரசிங்கப் பெருமாள்
ஏனையோரும் தஞ்சை வெள்ளைபிள்ளையார் குறுவஞ்சிக்கு முன்னடக்க வேணும்.

*தஞ்சைக் கோட்டை கருடன் வடிவில் இருப்பதால் இதற்கு கருடங்கோட்டை எனப் பெயர். சத்ரபதி சிவாஜி மகாராஜ் தன் சகோதரர் ஏகோஜி தஞ்சையை ஆண்டபோது அவருக்குத் தெரியாமல் இராமேஸ்வரம் போய்த் திரும்பும் வழியில் தஞ்சைக்கு வந்து கோட்டையைச் சுற்றிப் பார்த்ததாகவும், பின்னர் ஊர் திரும்பித் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் கோட்டை கருடன் வடிவில் இருக்கிறது; ஒரு பகுதியை மட்டும் வலுப்படுத்தினால் இந்தக்கோட்டை மிக உறுதியானதாக இருக்கும் என்று குறிப்பிடுவதாக, சரபோஜி எழுதித் தஞ்சைக் கோயிலில் கல்வெட்டில் பதிக்கப்பட்ட “போன்ஸ்லே வம்ச வரலாற்றில்” குறிப்பிடப்படுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *