கே.ரவி

arvதிடீரென்று போன பகுதியில் நண்பன் கண்ணன் என்றொரு புதுமுகத்தைச் சந்தடி சாக்கில் நுழைத்து விட்டேனே. அவனைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நான் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, அதே பள்ளியில் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என் ஜூனியர்தான் கண்ணன். அவனுக்கும் உள்ளுக்குள் கவிதையார்வம் இருந்ததைக் காலப் போக்கில் நான் தெரிந்து கொண்டேன். நானும், நண்பர்களும் சிந்தனைக் கோட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அவன் தான் எழுதிய “சொர்க்கச் சுழல்” என்ற கவிதைக் குறுங்காவியத்தை என்னிடம் காட்டினான். அதில் நல்ல கவிதையோட்டம் தென்பட்டது. அதை அச்சடிக்கப் போதிய பணம் இல்லாத நிலையில், 50 பிரதிகள் சுழற்பதிவு (ஸைக்லோஸ்டைல்) செய்து சென்னை, மத்திய நூலக அரங்கில் அதற்கு ஒரு வெளியீட்டு விழாவும் நடத்தினோம்.

அந்த விழாவில் எங்கள் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் கண்ணனுக்கு எழுதிய வாழ்த்து வெண்பா இப்பொழுது கிடைத்தது:

கவிகண்ணன் வாழ்வில் கவிக்கண்ண னாகச்

செவிக்கினிய செம்பாடல் சேர்த்தான் – புவிப்புகழைப்

பற்றுகவே இன்றமிழில் இத்தொண்டு கற்கண்டு

சுற்றுகவே சொர்க்கச் சுழல்

A_perfect_sunrise_by_jchanders

அதன் பிறகு, பல ஆண்டுகள் கழித்து, நான் ஐ.ஏ.எஸ்., அதாவது இந்திய அரசுப் பணிக்கான தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு அவன் பொருளாதாரப் பாடம் சொல்லிக் கொடுத்துத் நான் தேர்ச்சிபெறத் துணை செய்தான்.
1980-ஆம் ஆண்டு ஒருநாள் மந்தைவெளி நார்ட்டன் தெருவில் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் விடியற்காலைப் போதில் நான் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தேன். மெல்லச் சூரியன் தலைக்காட்டத் தொடங்கியதும், கண்ணை மூடிக் கொண்டு கதிரவன் உதயக் காட்சியில் மனத்தைப் பறிகொடுத்து, ஏறக்குறைய ஒரு தியான நிலையில் அமர்ந்திருந்தேன். என்னைச் சுற்றி யாரும் இல்லை. எனக்குள் இருந்து ஒரு கவிதை பீறிட்டுக் கொண்டு வந்தது. அது வந்த வேகத்திலேயே, பித்துப் பிடித்தவன் போல், அந்தக் கவிதை வரவர, அதைச் சத்தமாக சொன்னேன்.

இதுதான் சமயம் இதயம் திறக்க

இருவிழி களிலும் தீப்பொறி பறக்கப்

பாடிக் கொண்டே ஓசை இழக்க

உதயம் என்ற பெயரில் இங்கே

பிடறி சிலிர்த்தொரு சிங்கப் பறவை

பிறந்து விட்டது பார்

சிதறிக் கிடந்த சிறுவிண் மீன்கள்

ஓடி ஒளிந்தன பார்

புதுமை வெள்ளம் புனலா வதுபார்

புதைந்து கிடக்கும் நினைவுக் குள்ளே

தங்கச் சூலம் தைப்பத னாலே

தகதக வெனவொரு கனலா வதுபார்

புதுமை வெள்ளம் புனலா வதுபார்

உற்றுப் பாரொரு கணமே போதும்

வெட்ட வெளியும் பற்றி எரியும்

புரண்டு படுக்கும் பூமித் தாய்க்குப்

புதிய கனவுகள் தோன்றும் நேரம்

உற்றுப் பாரொரு கணமே போதும்

வெட்ட வெளியும் பற்றி எரியும்

புலரப் போகும் பொழுதுக் குள்ளே

புகுந்து பார்த்துவிடு – நீ

சுமந்தி ருக்கும் ஜோதியை அங்கே

கொண்டு சேர்த்துவிடு – முடிந்தால்

நீயே இங்கொரு காலைப் பொழுதாய்

நீண்டு படுத்துவிடு

நீயே இங்கு நிரந்தர மாகி

இருட்டைத் தடுத்துவிடு

இதுதான் சமயம் இதயம் திறக்க

இருவிழி களிலும் தீப்பொறி பறக்கப்

பாடிக் கொண்டே … பாடிக் கொண்டே …

பாடிக் கொண்டே … ஓசை யிழக்க

முடிக்கும் போது எனக்கு வியர்த்து விட்டிருந்தது, ஒரு மைல் தொலைவு ஓடிவிட்டு வந்ததுபோல். சற்று நேரம் நான் கண் மூடியபடியே உட்கார்ந்திருந்தேன். கண்திறந்ததும், என் பின்னால் யாரோ நிற்பது போல் நிழலாடியது. திரும்பிப் பார்த்தேன். கண்ணன் நின்று கொண்டிருந்தான். அவன் எப்பொழுது வந்தான் என்று கேட்டேன். “நீ வெறி பிடித்தவன் போல் கவிதை சொல்லிக் கொண்டிருந்த போதே வந்து விட்டேன்” என்றான்.

இந்த நிகழ்ச்சியை நான் இங்குக் குறிப்பிடக் காரணம் உண்டு. ஒரு கவிதைப் பிரசவம் நிகழும் போதே, அதை அருகில் இருந்து பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லாருக்கும் அந்தப் பேறு கிட்டாது. கண்ணனுக்கு அன்று அது வாய்த்தது. எனக்கு அந்த வாய்ப்பைப் பலமுறை வழங்கியவன் ரமணன். அவனுடைய பல கவிதைகள் உதயம் ஆகி வெளிப்பட்ட தருணத்தில் நான் அருகில் இருந்து பார்த்துக், கேட்டுப் பரவசப் பட்டிருக்கிறேன்.

மேலே உள்ள கவிதை என் கவிதை வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். அதற்கு முன்பு நான் நிறைய கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால் முதன் முதலாக அந்தக் கவிதையைத்தான், அது வரும் போதே, வரவர எழுதாமல் அப்படியே சுடச்சுட வாய்விட்டுச் சொன்னேன். கவிதை எப்படி அறிவின் பெருமுயற்சியின்றிக் கவிஞனை மீறி வெளிப்படுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். புத்தி சிகாமணி கனைத்துக் கொள்ளும் சத்தம் கேட்கிறது.

மேலே குறிப்பிட்ட கவிதையைச் சில நாட்களுக்குப் பிறகே தாளில் எழுதி வைத்தேன். எழுதிய போது எழுதிய நாளைக் குறிப்பிடாமல், அந்தக் கவிதை உதித்த நாளை மறக்காமல் குறிப்பிட்டேன். இந்த வழக்கமே பிறகு தொடர்ந்தது. அதற்குப் பிறகு நிறைய கவிதைகள் உதித்து வெகுநாட்களுக்குப் பிறகே தாளேற்றம் கண்டன. ஆனால் மேற்சொன்ன கவிதையைப் போல் வரும் பொழுதே உரக்கச் சொல்லப்பட்ட கவிதை அது மட்டுமே. அதற்குச் சாட்சியான கண்ணன் இந்தக் கவிதை வரலாற்றில் இடம்பிடித்தது நியாயம்தானே!

“நீயே இங்கொரு காலைப் பொழுதாய் நீண்டு படுத்துவிடு” என்ற வரி என்னை அவ்வப்போது உலுக்கிக் கொண்டிருந்தது. அது சாத்தியமா? நடக்க முடியாத ஒன்றைக் கவிதையில் உயர்வு நவிற்சியாகச் சொல்லி விட்டேனோ? ஒன்று புரியத் தொடங்கியது. அறிவு நிலையில் நம்ப மறுக்கும் விஷயங்கள், நடக்கவே முடியாது என்று தோன்றும் விஷயங்கள் கவிதை நிலையில் அனாயசமாகச் சொற்களில் வந்து விழக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டேன். கை, கால், தசை, எலும்பு, குருதி, நரம்புகளால் ஆன இந்த உடல்தான் நான் என்ற நினைப்பின் ஆணி வேரை அசைக்கும் கவிதைகள் வரத் தொடங்கின. நான் வெறும் உடற்கூடு இல்லை. அதையும் கடந்து எங்கும் பரவ முடிந்த ஆன்மசக்தி. நானே இந்தப் பிரபஞ்சம். நானே அனைத்தும். காலங்களில் நான் மார்கழியாகவும், பொழுதுகளில் நான் உஷஸ் எனப்படும் வைகறையாகவும் இருக்கிறேன் என்று கீதாச்சாரியன் சொன்னதுபோல் என்னாலும், ஏன், எல்லாராலும் சொல்ல முடியும். ஒவ்வொரு துளியுமே எல்லையற்ற கடல் என்ற உணர்வு பெருகி வரலாயிற்று. தாகூரின் கீதாஞ்சலியின் வரிகளில் பொதிந்திருந்த மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கின. பூமண்டலத்தில் அன்பும் பொறையும் வளர்ந்து, புல், பூண்டு, பூச்சி, மரம், செடிகொடிகள், விலங்குகள் என எல்லா உயிர்களும் இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திட, ஞான ஆகாசத்தின் நடுவே நின்று தான் வாழ்த்த வேண்டும் என்று பாரதி விரும்பினானே, அந்தப் பேசாப் பொருளைப் பேசும் துணிச்சல் வந்தது.

ஒருபுறம், இந்த உடம்பின் உபாதைகளையும், அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டே, இந்த வாழ்க்கையின் இழுபறிகளுக்கு ஆளாகி அத்தனை இடர்ப்பாடுகளையும் முக்கல், முனகல்களோடும், அம்மா, அப்பா என்று அரற்றிக் கொண்டே, தாங்கிக் கொண்டு வாழும் என் அகங்கார வாழ்க்கை!

மறுபுறம், இதில் எதிலும் பட்டுக் கொள்ளாமல், தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தபடி உலகம் முழுவதையும், அதன் ஒவ்வோர் அணுவையும், அதில் நிகழும் ஒவ்வோர் ஆச்சரியத்தையும் வியந்து, ரசித்துக் கொண்டு எனக்குள் பாடல்களாகப் பாடிக் கொண்டே இருக்கும் கவிதை வாழ்க்கை. இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது புரியத் தொடங்கியது.

பல துன்பங்களுக்கு நடுவிலும், “எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்” என்று பாரதியால் எப்படிப் பாட முடிந்தது என்று புரிந்தது. “வையத் தலைமை கொள்” என்ற பாரதி மஹாவாக்கியம் அரசியல் தலைமை பற்றியில்லை என்பதும், தானே இந்தப் பிரபஞ்ச சக்தி என்ற தெளிவு பெறுதலே அத்தலைமையின் சாரம் என்பதும் புரியத் தொடங்கியது.

இதெல்லாம் புரிந்து விட்டதாலேயே, உடல் வாழ்க்கை, உலக வாழ்க்கை மாறிவிடுவதில்லை. அதில் உழல்வதும், அதன் மேடு பள்ளங்களில் விழுந்தெழுந்து சுழல்வதும், சின்ன சின்ன இழப்புகளை எண்ணி உள்ளுக்குள் அழுவதும், அற்ப சந்தோஷங்களில் ஆழ்ந்து மகிழ்வதும், எதுவும் மாறவில்லை. இவற்றை மாற்றுவது கவிதையின் பணி இல்லை. ஆனால், இவற்றிலிருந்து அவ்வப்போது விடுபட வைத்தும், சிறகு தந்து பறக்க வைத்தும், தான் பறந்து திரிவதற்காகவே விரிந்து கிடக்கும் வானம் தானே என்ற விரிவை உணர வைத்தும் கவிதை ஏதோ ஒரு வழியில் நம் ஆன்மப் பயணத்தின் இலக்கோடு ஒரு தொடர்பை உருவாக்கித் தருகிறது என்று தெரிந்து கொண்டேன்.

மேலே நான் குறிப்பிட்ட ‘இதுதான் சமயம்’ கவிதையைப் பற்றி இரண்டு குறிப்புகள் சொல்ல வேண்டும்.

வானவில் பண்பாட்டு மையம் பாரதி விழா நடத்தத் தொடங்கிய கதையை முன்பே சொல்லிவிட்டேன். முதல் ஆறு வருடங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும், நாரத கான சபாவிலும், ம்யூஸிக் அகாடமியிலும் பாரதி விழா நடத்திக் கொண்டிருந்த வானவில் பண்பாட்டு மையம் 2000-ஆம் ஆண்டிலிருந்து திருவல்லிக்கேணியில், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதி தன் இறுதி மூச்சை விட்ட பாரதி நினைவு இல்லத்தில் அதைக் கொண்டாட முன்வந்தது. இதற்குக் காரணம் கவிமாமணி குமரிச் செழியன். அவர்தான் அந்த யோசனையைச் சொன்னார். அந்த யோசனைப்படி அந்த ஆண்டிலிருந்து பாரதி விழாவை பாரதி நினைவு இல்லத்திலேயே ஆண்டுதோறும் மூன்று அல்லது நாலு நாட்கள் கொண்டாடி வருகிறோம். எட்டையபுர ஜமீந்தாருக்கு பாரதி எழுதிய சீட்டுக் கவியில், “சொற்புதிது பொருள்புதிது சுவைபுதிது ஜோதிமிகு நவகவிதை எந்நாளும் அழியாத மாக்கவிதை” தந்த தன்னை ஜமீந்தார் ஊரெல்லையில் எதிர்கொண்டழைத்துத் தனக்குச் சாலுவை, பொற்பை, வயப்பரிவாரங்கள் தந்து ஜதிபல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டிருந்தான். அவன் வாழ்நாளில் அது நடக்கவில்லை. அதனால், அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி, அன்று அவனுடைய உருவச் சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்தி, பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக் கொண்டு நடனமாடிவர, கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.

as

உவமைக் கவிஞர் சுரதா உயிருடன் இருந்த வரைக்கும் ஆண்டுதோறும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜதிபல்லக்கைத் தம் தோளில் சுமந்த காட்சியையும், சில ஆண்டுகள் ஒருபுறம் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனும், மறுபுறம் என் உடன்பிறவாச் சோதரர் திரு.இல.கணேசனும் ஆக நாட்டின் இருப்பெறும் தேசிய இயக்கங்களின் தலைவர்கள் ஜதிபல்லக்கைச் சுமந்து வந்த காட்சியையும் என்னால் மறக்கவே முடியாது.

இசைக்கவி ரமணன் பாடியது போல, “இதுபோதும் அம்மா இதுபோதும் ஈரேழு ஜென்மத்துக் கிதுபோதும்” என்று பாடிக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

ஜதிபல்லக்கு முடிந்ததும் பாரதி இல்லத்தில் முழுநாள் கவிப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். சுமார் 200 கவிஞர்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல், உணவு இடைவேளை கூட இல்லாமல், கவிதை சொல்லும் நிகழ்ச்சி அது. இந்தக் கவிப்பொழிவு நிகழ்ச்சியைக் கவிமாமணி குமரிச்செழியனும், ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் செயலாளராக நாற்பதாண்டுகளுக்கு மேல் நற்பணியாற்றி வரும் திரு.கெ.பக்தவத்சலம் அவர்களும் ஒருங்கிணப்பாளர்களாக இருந்து ஆண்டுதோறும் நல்ல முறையில் நடத்தித் தருகிறார்கள்.

a1

ஒவ்வோர் ஆண்டும் கவிப்பொழிவில் நான் கலந்து கொண்டு கவிதை சொல்வேன். அந்த அரங்கின் ஓர் ஓரத்தில் எங்கிருந்தோ “பலே பாண்டியா” என்று பாரதி குரல் கொடுத்துப் பாராட்டுவதாக அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன். 2000-ஆம் ஆண்டுக் கவிப்பொழிவில், “இதுதான் சமயம்” என்ற கவிதையைச் சொன்னேன். சொல்லி முடித்துவிட்டு வந்ததும், அரங்கில் அமர்ந்திருந்த ஒளவை நடராஜன் அவர்கள் என்னைப் பாராட்டிவிட்டு சொன்னார்: “அது சரி ராஜா, நீ கவிதை படித்த போது ‘சிங்கப் பறவை’ என்ற சொல் காதில் விழுந்தது. தமிழில் சிம்புட் பறவை என்று சொல்வதுண்டு. அப்படி நீ எழுதியிருக்கலாமோ?” அவருடைய அந்தக் கேள்விக்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. ஆனால், பிடறி சிலிர்த்துக் கொண்டு ஒரு சிங்கம் பறக்கத் தொடங்கினால் எப்படியிருக்குமோ, அப்படிச் சூரியன் தன் கிரணங்களை விரித்துக் கொண்டு எழுந்த பிரும்மாண்டமான காட்சிச் சிறப்பைச் சிம்புட் பறவை என்ற சொற்சிமிழுக்குள் அடக்கிவிட முடியுமா என்ற பதில் கேள்வி என் மனத்தில் எதிரொலித்தது. அறிவைக் கடந்த மேற்பரப்புகளில் கவிதை சஞ்சாரம் செய்யும் நுட்பம் தெளிவாகியது. கவிதையை வெறும் அறிவுத் துலாக்கோல் வைத்து அளக்க முடியாது என்பது புரிந்தது. அறிவுக்கு முரணாகக் கவிதை அமையக் கூடாது என்று பாடம் சொன்ன ஒளவை நடராஜன் அவர்களுக்கு, அறிவே கவிதைக்கு எல்லையாகிவிடக் கூடாது என்று நான் பதில் பாடம் நடத்த முடியுமா? அவருக்குத் தெரியாதா என்ன? என் சிந்தனையைத் தூண்டுவதற்காகவே அவர் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறார் என்று எனக்குத் தெரியும்.

“இதுதான் சமயம்” கவிதை பற்றிய இன்னொரு குறிப்பைச் சொல்ல இதுதான் சமயம்.

கடந்த சில மாதங்களாகக் குரல் எழுப்பிப் பேசவும் சிரமப்படும் நிலை எனக்கு உண்டானது. கணீர் என்ற குரலில் சத்தமாகப் பேசியும், பாடியும் வந்த எனக்கு இது ஒரு பெரிய சோதனையாகியது. நீதிமன்றத்தில் வாதாடுவதிலும் மிகுந்த சிரமம் உண்டானது. நாலைந்து நாட்களுக்கு முன்பு என் முதல் மகளின் கணவன் ஷெளகத் என் வீட்டிற்கு வந்த போது ‘உன்னோடுநான்’ என்ற என் கவிதை நூலைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘அங்கிள், இந்த புக் எப்போ எழுதினீங்க?’ என்று கேட்டான். ஏறக்குறைய பதினந்து ஆண்டுகளுக்கு முன் என்று பதில் சொன்னேன். ஓ, சமீபத்தில் எழுதினீர்களோ என்று நினைத்தேன் என்றான். ஏன் அப்படி நினைத்தாய் என்று கேட்டேன். “பாடிக் கொண்டே ஓசை இழக்க” என்ற வரியால், எனக்குக் குரல் போனபின் அப்படி எழுதியிருப்பேனோ என்று நினைத்ததாகச் சொன்னான். தன்னால் பாட முடியவில்லயே என்று மனமுருகி நண்பன் சு.ரவி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரிகள் நெஞ்சில் அலைமோதுகின்றன:

என் குரல் நாண்களிலே இசையே நீயேன்

குலவ மறுக்கின்றாய் – இதமாய்க்

குழைய மறுக்கின்றாய்

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.