இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(35)

-செண்பக ஜெகதீசன்

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. (திருக்குறள்:500 – இடனறிதல்)

புதுக் கவிதையில்…

இடமறிந்து செயல்படாதபோது
இடர்தான் வாழ்விலே…
களத்திலே வீரர்களை அழித்திடும்
அஞ்சிடாப் போர்யானையும்
அற்ப நரியால் அழியும்,
களர்நிலத்தில் மாட்டிக்கொண்டால்…!

குறும்பாவில்…

இடமறிந்து செயல்படு,
போரில் வென்றிடும் யானையும்
பலியாகும் நரிக்கு, புதைநிலத்தில்…!

மரபுக் கவிதையில்…

வீரரைப் போரினில் வென்றழிக்கும்
     வெற்றி முகத்து யானையுமே
நீருடன் சேறும் நிறைந்திருக்கும்
     நிலமாம் களரில் விழுந்திட்டால்,
வீரமும் வலிமையு மில்லாத
     வனத்து நரிக்குப் பலியாகும்,
பாரிதைப் பார்த்துத் தெரிந்திட்டே
     பணிகளைச் செய்திடு இடமறிந்தே…!

லிமரைக்கூ…

வீரமிகு போர்யானையையும் வென்றிடும் நரி
புதைநிலத்திலது வீழ்ந்தால்,
இடமறிந்து செயல்பட்டால் இடரில்லை தெரி…!

கிராமிய பாணியில்…

யான யான போர்யான
யாருக்கு மஞ்சாப் போர்யான,
எப்பவும் செயிக்கும் போர்யான…

போர்க்களத்த வுட்டுவந்து
பொதகுழில மாட்டிக்கிட்டா
பெலமில்லா நரிகிட்டத்
தோத்திடுமே போர்யான..

கதயிதுதான் தெரிஞ்சிக்க
எடமறிஞ்சி நடந்துக்க
எடஞ்சலத்தான் தடுத்துக்க…! 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    இடம், பொருள், ஏவல் மிக முக்கியம். இடமறிந்து நடந்துக்க இடஞ்சலைத்தான் தடுத்துக்க பொருளுரைக்கு இன்று வந்தது அத்தனையும் அருமை என்றாலும் மரபுக்கவிதை ரொம்ப அழகு.

  2. Avatar

    கருத்துரை வழங்கிச் சிறப்பித்த 
    நண்பர் அமீர் அவர்களுக்கு மிக்க நன்றி…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க