பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.

4

Rotation of planets

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

 

சூரிய குடும்பப் பிணைப்பிலே
சுற்றிடும் கோள்கள் தன்னச்சில்
சுழலும் விந்தை யென்ன ?
கோள்கள் சுழல்வதால்
உயிரினம் நிலைத்ததா ?
நீள் வட்ட வீதியில் அண்டங்கள்
மீளும் நியதி என்ன ?
கோள்கள் அனைத்தும்
சீராகச் சாய்ந்து
ஒரே திசை நோக்கிச்
சுற்றுவ தென்ன ?
பூமியில் மட்டும்  உயிரினங்கள்
தாமாய்ப் பிறப்ப தென்ன ?
புவிச் சுழற்சி ஓர் காரணமா ?
யுரேனஸ் அச்சும்
சரிந்து போய்ச் சாய்ந்த தென்ன ?
பரிதி மண்டலத்தில்
வக்கிரமாய்ச் சுழன்று
சுக்கிரன் மட்டும்
திக்குமாறிப்
போன தென்ன ?
நின்று சுழலாமல் பொன்னிலா
முன்னழகைக் காட்டிப்
பின்னழகை
மறைப்ப தென்ன ?

+++++++++++++

jay

அண்டக்கோளின் சுழற்சி ஒரு பெரும் விளைவை கோளுக்கு உண்டாக்குகிறது.   உயிரனத் தகுதி பெறாதவை என்று  முன்பு  அறவே விலக்கட்ட அண்டக் கோள்கள், தற்போது தகுதி வாய்ப்புள்ளவை என்று கருதப் படுகின்றன. புதிய ஆய்வு முடிவு கூறுவதென்ன வென்றால், ஒரு கோளின் சுழற்சி வேக வீதம் அதில் உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு உதவும் என்பதே.  அண்டக்கோள்  சுழற்சி பகல் இரவு நீட்சியைக் கட்டுப் படுத்துவது மட்டுமில்லாமல், காற்றோட்டத்தைப் பற்றிக் கொண்டு முடிவாக முகில் மந்தைச் சூழ்வெளி வடிவாக்கத் தூண்டுகிறது.

டோரியன் அப்பட் [Dorian Abbot]  [சிகாகோ பல்கலைக் கழகம்]  ஆகஸ்டு 9, 2014

விண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால், முகில் மண்டலம் பரவிய மேற்குப் பசிபிக் வேனில் தள அரங்கின் பெரும்பகுதியில்  உஷ்ணம் [-70, -50 டிகிரி செல்சியஸ்] இடைப்பட்டதாகத் தெரிகிறது.   அந்தப் பகுதிகளில் தள உஷ்ணம் 30 டிகிரி செல்சியஸுக்கு மேற்பட்டிருந்த போதினும் முகில் மூட்டம் பேரளவு தென்படுகிறது.

டோரியன் அப்பட் [Dorian Abbot]

Habitability

 அண்டக் கோளின் சுழற்சி உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.

2014 ஆகஸ்டு 9 ஆம் தேதி வானியல் பௌதிக இதழ் [Astrophysical Jounal] அறிவிப்பில் நாசா கெப்ளர் விண்ணோக்கி மூலம் கண்ட 2000 மேற்பட்ட அண்டவெளிக் கோள்களில் பரிதியை உயிர்த்தகுதி அரங்குகளில் [Habitable Zones] சுற்றிவரும்  சில கோள்கள் பூமிபோல் சிறியதாய், பாறை மேடுகள் கொண்டு, உயிரினத் தோற்ற வாய்ப்பு உ ள்ளதுபோல் தெரிந்தது.  “உயிர்த்தகுதி அரங்கம் என்றால் என்ன ?   உயிரின வசிப்புக்கு ஏற்ற நீர் திரவமாய் நிலவ ஏதுவான உஷ்ணமுள்ள  சுற்றுப் பாதையில் ஒரு பரிதியைச் சுற்றியுள்ள வட்ட அரங்கம்.   அந்த சுற்றுப்பாதை அரங்கின் உட்புற முனை, பரிதியின் எரிக்கும் கனல், நீரை ஆவியாக்கி மேகமாக்கி சூழ்வெளி மண் டலத்தில் மீறிடும் பரிதிப் பசுமைக் குடில் விளைவாய்  [Runaway Greenhouse Effect] ஏவி விடும்.  அரங்கின் வெளிப்புற முனையில்,  உஷ்ணம் குளிர்ந்து மிதமாகி, கார்பன் டையாக்ஸைட்டு முகில் உருவாகி, கோள் உறைப்பனி வீண் தளமாய்ப் போகும் [Frozen Wasteland].

உயிர்த் தகுதி அரங்கில் பூமியை நெருங்கிச் சுற்றிவரும் நிலவில் பூமிபோல் ஏன் உயிரின வசிப்பு நேரவில்லை என்னும் கேள்வி எழுகிறது.   முதல் காரணம் : நிலவின் மிக மிக மெதுவான சுழற்சி.  நிலவு தன்னைத் தானே சுற்றிக் கொள்ள சுமார் 27 நாட்கள் பிடிக்கின்றது !  பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரம் [ஒரு நாள்] எடுக்கிறது.  நிலவில் பூமிபோல் வாயுச் சூழ்வெளி இல்லை.  உஷ்ணம் மிகையாகி நீர் திரவமாய் இருப்பதில்லை.  சூரிய ஒளி புகாத குகைகளில் நீர் பனியாக உருகிக் கிடக்கிறது.

Cloud Formation

ஒரு கோளின் உயிர்த் தகுதி வசதிக்குத் தேவையான முறைப்பாடுகள் பற்பல.  புதிய ஆராய்ச்சி கூறுவது என்ன வென்றால், ஓர் அண்டக்கோள் சுற்றும் சுழற்சி வேக வீதம்  கோளில் உயிரின வசிப்புக்கு ஆதரவு அளிக்கும்.  கோளின் சுழற்சி பகற் பொழுது, இராப் பொழுது நீட்சிகளைக் கட்டுப்படுத்துவதோடு, காற்றை நகர்த்தி, உருவான முகில் ஓட்டத்தைச் சூழ்வெளியில் இயக்குகிறது.  இந்த அறிவிப்பு  2014 ஆகஸ்டு முதல்வாரத்தில் வானியல் பௌதிக வெளியீட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டு [Astrophysical Journal] முன்பதிப்பாக [Preprint] இடப் பட்டுள்ளது.

பூமத்திய ரேகைப் பகுதியில் விழும் பரிதியின் கதிர்வீச்சு தீவிரமுள்ளது.  அந்த அரங்களில் உள்ள காற்று சூடேறி மேல் எழுந்து சூழ்வெளியில் கலந்து  துருவப் பகுதிகளுக்கு விரைகிறது.  பின்னர் அங்கே காற்று குளிர்ந்து போய்த் தாழ்ந்து பூமத்திய ரேகைக்கு மீள்கிறது. இந்தச் சூழ்வெளிச் சுற்று இயக்கத்துக்கு   “ஹாட்லி சுழற்சி முகில்”  [Hadley Cell] என்று பெயர்.   உருவாகும் முகில் மூட்டம் பூமத்திய ரேகைப் பகுதியில் பேரளவு தங்கி, பூமியில் விழும் சூரிய ஒளியை விண்வெளிக்குத் திருப்பி அனுப்புகிறது.   பரிதிக்கு அருகே சுற்றும் புதன், வெள்ளி  போன்ற கோள்களில் விழும் கதிர்வீச்சு மிக மிகத் தீவிரமானது.   மேலும் புதன் கோள் போன்ற அகக்கோளில் பூமத்திய ரேகை, துருவப் பகுதி உஷ்ண வேறுபாடு மிகக் குறைவு.  ஆகவே பூமத்திய ரேகைப் பகுதியில் உருவாகும் மெலிந்த முகில் மூட்டம் மிகச் சிறிதே.  அதே சமயத்தில் வெள்ளி போன்ற மெதுவாகச் சுழலும் கோள்களில் ஹாட்லி சுழற்சி முகில் பெரிதளவு பரவிக் கோள் முழுப் பகுதியும் மூடிக் கொள்கிறது.  பூதக்கோள் வியாழன், சனிக்கோள் போன்று வெகு விரைவாகச் சுற்றும் போது இந்த ஹாட்லி சுழற்சி முகில்கள் மேலிருந்து கீழே இறங்கி தணிவு நிலையில் அகப்பட்டுக் கொள்கின்றன.  இவை யாவும் உயிரினத் தோற்றத்தைக் குன்றச்  சூழ்வெளி முகில் மூட்டத்தைப் பெரிதும் பாதிக்கின்றன.

Effect of Rotation

சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்ட மானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

Rotation, clouds humidity

 

அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !   அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

Hadley Cells

பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agensy)  [ஏப்ரல் 15, 2008]

யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போது தான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

[தொடரும்]

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html [சூரியன்]
16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008].

19.  http://en.wikipedia.org/wiki/Planetary_habitability  [August 9, 2014]

20.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/08/speed-of-a-planets-rotation-has-a-huge-effect-on-possibility-of-life.html  [August 9, 2014]

21.  http://www.spacedaily.com/reports/Rotation_of_Planets_Influences_Habitability_999.html  [August 11, 2014]

22.  http://en.wikipedia.org/wiki/Earth  [August 12, 2014]

23.  http://beyondearthlyskies.blogspot.ca/2014/05/influence-of-planetary-rotation-on.html  [May 7, 2014]

******************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  August 15, 2014

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.

  1. அன்பு  ஜெயபாரதன் விக்ஞான கட்டுரை எழுதுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. எல்லாவற்றுக்கும் தகுந்த ஆதாரத்துடன் விளக்க வேண்டும் .இதில் நீங்கள் மிகச்சிறப்பாக பணியாற்றுவதைப்பார்க்க எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.நான் சயின்ஸ் மாணவி இல்லையென்றாலும் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது .வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *