கோழிகள் உன்னைத் தேடுகின்றன
வெ.ஜனனி
பாரதி!
இன்று நீ அனைவரின் கனவு நாயகன்!
அன்று உன்னை ஒதுக்கியவர்கள் ஏராளம்.
உன்னை உச்சரிக்காத பட்டிமன்ற விழாக்கள்
எங்கும் இல்லை இந்த அவனியிலே!
குன்றிமணி அரிசி இல்லை என்றாலும்
அந்த விண்மீன்களைக் கலையாக்கிக் கவி சமைத்தவன் நீ!
உன் கவிதைகள் மனனம் செய்தாலே போதும்
காத்திருக்கிறது பரிசு மழை!
தென்றலும் சரி, புயலும் சரி
உன் வரிகளில் ஆனந்தப்படும்!
உன் கவிதைகளில் பண்டமாற்றம் கற்பனை கண்டதில்லை
பண்டமாற்றம் கற்பனை இல்லாமல் கவி ஒன்றும் இல்லை இன்று.
அதிர்வுகள் உன் வரிகளில்!
தெளிவுகள் படிப்போர் கண்களில்!
இன்று சில்லரைகள் போல் மக்கள்
அரசியல் தலைவரைப் பார்த்து விழுகிறார்கள்!
நீ கண்ட உலகம் வேறு அமைந்த உலகம் வேறு!
கல்விச் சாலை தெருவெல்லாம் வேண்டும் என்பது உன் கனவு!
கல்விக் கடன், தெருவெல்லாம் அமைந்தது அரசியல்வாதியின் கனவில்!
உன் கவிதைகள் மேற்கோள் காட்டும் நாங்கள்
அப்படி வாழப் பழகவில்லை!
இன்றும் கோழிகள் தேடுகின்றன எங்கே என் கவிஞன் என்று?
கோழிக் குஞ்சுகளை அக்கினிக் குஞ்சு என்றாய்.
உன்னைப் போற்றுகிறோம்! புரிந்துகொள்ளாமல்!