கே. ரவி

சமூகப் பிரக்ஞை இன்றி எழுதப்படும் கவிதைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு கருத்து நிலவுகிறதே! அதற்கு என் பதில் என்ன?

சூழலின் தாக்கமின்றி எந்தப் படைப்பும் வருவதில்லை. ஆனால், ஒரு கவிஞனின் கவிதைகள் எந்தச் சூழலில் பிறக்க வேண்டும் என்பதை அவனே எப்படி முடிவு செய்ய முடியும்?

என் உடனடிச் சூழலில் உள்ள சிக்கல்கள் எல்லாம் மனிதனால் தீர்வு காணக் கூடிய பிரச்சினைகளே. அந்தப் பிரச்சினைகள் பற்றி நானும் பலவாறு சிந்தித்து, அவற்றுக்குத் தக்க தீர்வுகளையும் முன்மொழிந்திருக்கிறேன். நான் என்னுடைய தத்துவத் துறை எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வுரைக்கு எடுத்துக் கொண்ட பொருள், “நல்வாழ்வுச் சிந்தனைகள்” (Philosophy of Welfare). அதில் தத்துவம் அதிகமா, பொருளாதாரச் சிந்தனைகள் அதிகமா, சமூகவியல் சிந்தனைகள் அதிகமா என்ற குழப்பமும், தடுமாற்றமும் நேர்முகத் தேர்வுக் குழுவினர்க்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. அந்தக் குழுவில் மேற்சொன்ன மூன்று துறை வல்லுநர்களும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எப்படியோ நல்ல மதிப்பீடுகள் தந்து என்னைத் தேர்ச்சி பெறச் செய்தனர். அந்த ஆய்வுரையில் நல்வாழ்வுச் சமுதாயம் எப்படி அமைய வேண்டும் என்று ஒரு மாதிரிப் படிமமே, ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ஒரு ப்ளூ ப்ரிண்டே கொடுத்திருந்தேன். அதில் முக்கியமான, ஆனால், புதுமையான ஒரு பரிந்துரையைச் செய்திருந்தேன். பணத்துக்குக் குறைந்த பட்சம் இரண்டு பரிமாணங்கள் இருக்க வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரையின் சாரம். ரூபாய், அல்லது டாலர் தாளுக்கு அதன் மதிப்பு, 1, 10, 100 என்று குறிப்பிடப்படுவது போல், அதன் ஆயுளும், அதாவது அது எந்த நாள் வரை செல்லுபடியாகும் என்ற தேதியும் குறிப்பிடப்பட வேண்டும். அந்தத் தேதிக்கு ஒரு வாரம் முன்பிலிருந்து காலாவதியாகப் போகும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்திப் புதுப்பணம் அதற்கு பதிலாகப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் எல்லாப் பணமும் வங்கிக் கணக்குக்குள் வந்தே ஆக வேண்டும்; கருப்புப் பணம் அறவே இல்லாமற் போகக்கூடும்.

என் உரை நடைப் படைப்புகளில் சமூகச் சிந்தனைகளும், சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் விரவியிருந்தும், என் கவிதை மட்டும் சற்றுத் தனித்தே இருந்தது.

நம் நல்வாழ்வுக்குத் தேவையான தளவாடங்களையும், சூழ்நிலைகளையும் இயற்கையிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் பொறுப்பு நமதே. அந்தப் பொறுப்பைக் கவிதை எழுதித் தட்டிக் கழிக்க முடியாது. சுதந்திரம் கிடைத்த பிறகு எத்தனை ஆயிரம் கவிதைகள் சமூகக் கொடுமைகள் பற்றிய குமுறல்களைக் கொட்டித் தீர்த்திருக்கின்றன! அவற்றால், அந்தக் கொடுமைகள் ஒழிந்து விட்டனவா? இல்லையே. எதைச் சிந்தித்துச் செயல்படுத்திச் சரிசெய்ய வேண்டுமோ அதை வெறும் புலம்பல்களால் தீர்க்க முடியாது. சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சிந்தித்துத் தான் ஆகவேண்டும். சிந்தனை ஒதுங்கியிருக்க வேண்டிய கவிதைக் கணங்களில் சிந்திப்பதே இடர்ப்பாடாகிவிடும். இதுவே என் தன்னிலை விளக்கம்.

பாரதியிடம் ஆழ்ந்த பற்றுக் கொண்ட நான் இப்படிச் சொல்லலாமா? பாரதி வாழ்ந்த காலத்தில், மக்களை உணர்வுப் பூர்வமாகத் தட்டி எழுப்ப வேண்டியிருந்தது. அது அவன் வாழ்ந்த காலத்தின் கட்டாயம். இன்றைய சூழ்நிலையில், நம்மை நாமே ஆண்டுகொள்ளும் சுதந்திரம் பெற்றுவிட்ட பிறகும், சிந்தித்துத் திட்டங்கள் தீட்டிச் செயல்படாமல், இன்றும் உணர்ச்சி பொங்கப் பேசிக் கொண்டிருந்தால் பயனில்லை. வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மக்களின் உணர்ச்சிகளைப் பற்ற வைத்து, அதன்மூலம் ஆட்சியைப் பிடித்துப் பின் நாட்டையே ஊழற் காடாக்கிவிட்ட அரசியல் வாதிகளே இதற்குச் சான்று. இதற்கு மேலும் இதுபற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

சில சமயங்களில் நானே இந்தக் கேள்வியை மனத்துக்குள் எழுப்பியிருக்கிறேன். நம் எழுத்து என்ன சாதிக்கப் போகிறது?

அப்படியொரு நாள், 2000-ஆம் ஆண்டு, என் அலுவலக அறையில் தனியாக, நெஞ்சு நிறைய கேள்விகளுடன் அமர்ந்திருக்கிறேன். மேஜை மேல் இருந்த வெற்றுத் தாள்கள் காற்றில் படபடக்கின்றன. எழுதுகோலை எடுத்து ஏதாவது எழுதலாமா? ஒரு தயக்கம். அப்போது சடாரென்று வந்து கதவைத் தட்டுகிறது, ஒரு கவிதை; மனக்கதவைத்தான்!

எழுதுகோல் என்னெதிரே ஏளனம் செய்கிறது

எழுதி எழுதிநீ என்னதான் சாதித்தாய்

பழுதுகளைச் செப்பனிடப் பாதை அமைத்தாயா

எழுதுகோல் என்னெதிரே ஏளனம் செய்கிறது

 

வெற்றுத்தாள் படபடத்து வெடிச்சிரிப்(பு) உதிர்க்கிறது

மற்றவர்க் காகநீ மனம்திறந்து பேசுகிறாய்

சற்றேனும் உன்மனத்தைச் சரிபார்த்துக் கொண்டாயா

வெற்றுத்தாள் படபடத்து வெடிச்சிரிப்(பு) உதிர்க்கிறது

 

ஏளனத்தை வெடிச்சிரிப்பில் ஏற்றிவைத்(து) ஒருகணத்தில்

காலத்தை நிறுத்துகிறேன் காகிதமும் பேனாவும்

ஓலத்தை நிறுத்தியென்முன் ஓருருவாய்க் கலந்துவிடச்

சூலுடைத்து வருகிறதே சொப்பனமாய் ஒருகவிதை

மீண்டும், மீண்டும் சொல்கிறேன், கவிதை என் கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை; என் ஆயுதமோ, கருவியோ, சாதனமோ இல்லை. நானே கவிதையின் கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்!

யாருக்கும் என் கவிதை பயன்படப் போவதில்லை என்றால் நான் ஏன் கவிதை எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்கான விடை, ‘பயன்’ என்ற சொல்லின் அர்த்தத்தைப் பொறுத்தது. 1980-ல் இப்படித்தான் ஒரு கவிதை வந்தது:

ன்கவிதை எந்நாளும் பயன்படாது

எற்றத்துக்(கு) இன்பத்துக்(கு) இடம்தராது

மின்னல் போலத் துள்ளியெழும்

அடுத்த கணமே தடுக்கிவிழும் – ஆனால்

எண்ண அலைகள் எழுப்பிவிடும்

ஏகாந்தத்தில் வளையவரும்

நின்று வரவேற்றால்

நிச்சயம் உங்கள் தளையவிழும்

 

நேற்று பெய்த மழைத்துளிகள் – என்

நெஞ்சக் கதவை இடிப்பதும்

காற்றில் அசையும் மலர்கள்போல்

கனவுத் தளிர்கள் துளிர்ப்பதும்

இன்றிப் பொழுதை என்றைக்கும்

இருக்க வைக்க நினைப்பதும்

நினைவுக் குள்ளே நழுவிக் கொண்டே

நிற்ப தைப்போல் நடிப்பதும் – அட

இருட்டைத் தேட வெளிச்சம் போடும்

அறிவீ னம்தான் கவிதைகளா – இதைக்

கேட்ப தற்கு வாய்திறந் தாலும்

தாளம் போடும் வார்த்தைகளா

 

என்கவிதை எந்நாளும் பயன்படாது – அது

எல்லைகளை ஏற்காத மாயச் சூது

“நின்று வரவேற்றால் நிச்சயம் உங்கள் தளையவிழும்” என்பதை ஒரு பொருட்டாக எண்ணாதவர்க்கு என் கவிதை எந்நாளும் பயன்படாது.

அப்படியானால், என் கவிதைகளைப் படித்துவிட்டு யாராவது முக்தி அடைந்திருக்கிறார்களா என்று கேட்டுவிடக் கூடாது.

கூட்டத்தில் என் கவிதையைக் கேட்பது, ரசிப்பது வேறு; அதையே தனிமையில், மனத்துக்குள் மெல்ல அசைபோட்டு, அசைபோட்டு, அதன் த்வனியாகிய வாகனத்தில் ஏறிக்கொண்டு அது கூட்டிச் செல்லும் உயரத்துக்கோ, ஆழத்துக்கோ துணிச்சலாகப் பயணித்து, அதன் அனுபவக் களத்தில் நின்று வரவேற்றால், கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால், நிச்சயமாகத் தளையவிழும். “ஏகாந்தத்தில் வளையவரும்” என்ற வரி புரிகிறதா? “நின்று வரவேற்றால்” என்ற வரியில் நின்று கொண்டிருக்கும் “நின்று” என்ற சொல்தான் இந்தக் கவிதையையே நிற்க வைக்கும் சொல் என்பதும் புரிகிறதா?

“வா வா நயினா ஒண்ணா சேந்து வாரவதிக்கே போயிடலாம்”. இப்படித்தான் என் கவிதை உன்னை அழைக்கும் தோழா! வரத் தயாரா? அந்த வாராவதி, யாரும் எளிதில் வாரா பதி. மூட்டை முடிச்சுகள் வேண்டாம். தூக்கியெறி. அணிந்திருக்கும் சட்டையைக் கூடக் கழற்றியெறி. ஏன், உன் உடம்பே உனக்கு பாரமாகப் போகிறது. வள்ளுவக் கிழவனின் எச்சரிக்கைக் குரல் கேட்கிறதா?

மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்(கு) உடம்பும் மிகை

“அதெல்லாம் சரி நயினா. நீ என்னமோ கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்தே, அப்புறம் சடார்னு மாறிட்டேன்னு ஒரு வார்த்தை முன்னே சொன்னியே, அந்தக் கதையைக் கொஞ்சம் எடுத்து வுடுப்பா.”

சொல்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் படித்த நாட்களில், கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகத்தான் இருந்தேன். எதையும் தர்க்கம் செய்துதான் ஒப்புக் கொள்வது என்ற தீர்மானத்தோடு நான் இருந்த நாட்கள் அவை. ஹிந்தி வகுப்புகளில், அந்த மொழியின் இலக்கணம் பற்றி நான் கேட்ட கேள்விகளில் திக்குமுக்காடி, எங்கள் ஹிந்தி ஆசிரியர் வகுப்பில் எல்லார் முன்னிலையிலும் எனக்குச் சாபமிட்டார்: “உனக்குத் தர்க்கமே தொழிலாகக் கடவது”. அந்த நல்ல உள்ளத்தின் வாழ்த்துப் பலித்து விட்டது. நீதி மன்றங்களில் தர்க்கம் செய்வதே என் தொழிலாகிவிட்டது.

டாக்டர் சீனி சுந்தரம்ஒருநாள், ஹிந்தி வகுப்பில் உட்கார்ந்து கொண்டு ஹிந்தி ஆசிரியரை ஓவியமாக வரைந்தான் என் வகுப்புத் தோழன் சீனி. சுந்தரராஜன். அதைப் பார்த்து விட்டு அவர், அப்போது தலைமை ஆசிரியராக இருந்த சகோதரர் ஆன்ஸலம் அவர்களிடம் புகார் செய்ய, அவர் சுந்தரராஜனைத் தம் அலுவலக அறைக்கு வரச்சொன்னார். அடிவிழப் போகிறது என்று பயந்து கொண்டே போன அவனிடம் அவன் வரைந்த ஓவியத்தைப் பாராட்டிச் சாக்லேட் கொடுத்து யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி அவனை அவர் அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் பயின்றதால்தான் நாங்கள் சுதந்திர உணர்வோடு வளர்ந்தோம். வீடு திரும்ப மாலை ஆறு மணிக்கு மேல் ஆனால் சுந்தரராஜன் வீட்டில் அவனுக்கு உதைவிழும். அப்படிக் கட்டுப் பெட்டியாக வளர்க்கப்பட்ட அவன் பிறகு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது தன் தந்தையையே எதிர்த்து வீட்டை விட்டுச் சென்றதும், பிறகு டாக்டராகி, இப்பொழுது உலக வங்கியின் நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருவதும், திருமணம் செய்து கொள்ளாமல் சுதந்திரமாக வாழ்ந்து வருவதும், தான் சேர்த்த பணத்தில் இருந்து தான் பயின்ற சாந்தோம் உயர்நிலைப் பள்ளி, விவேகானந்தா கல்லூரி, ஜிப்மர் ஆகியவற்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து சூரிய ஆற்றல் கருவிகள், அதாவது, சோலார் ப்ளாண்ட், வாங்கித் தன் தாய் தந்தையர் பெயரில் கொடை வழங்கியதையும் நினைத்துப்பிரதர் ஆன்சலம் பார்க்கிறேன். இதையெல்லாம் சாத்தியமாக்கியவர்கள், சுதந்திரமாகவும், கலையுணர்வோடும் எங்களை வளர்த்த ஆசிரியப் பெருமக்களே. தலைமையாசிரியர் ப்ரதர் ஆன்ஸலம், தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன், தமிழாசிரியர் கிருஷ்ணராமானுஜம் பிள்ளை, குப்புசாமி வாத்தியார், ஹிந்திப் பண்டிட் போன்ற நல்லாசிரியப் பெருமக்கள் கிடைத்தது எங்கள் பேறு. பதினோராம் வகுப்பு முடித்து நாங்கள் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இருந்து விடைபெறும் போது நடந்த நிகழ்ச்சியில் நான் படித்த ஒரு வெண்பாவின் இறுதி வரிகள் நினைவுக்கு வருகின்றன:

கல்வியெனும் சீரேந்திக் கண்களிலே நீரேந்திச்

செல்கின்றோம் சேவிக்கின் றோம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.