இலக்கியம்கவிதைகள்

திரும்பி நீ வரவேண்டும்!

-எம். ஜெயராம சர்மாமெல்பேண்

subramanya-bharathi-jpg

 

 

 

 

 

 

 

 

 

முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்
பண்டாரமா  யிருந்து பலகவிதை தந்தாயே
தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே!

பாரதத்தின் குரலாக பாட்டெல்லாம் ஒலித்தனவே
பாரதியுன் குரல்கேட்டுப் பாரெல்லாம் அதிர்ந்ததுவே
சீரான சிந்தனைகள் சீற்றமொடு சொன்னாயே
சிம்மக் குரலோனே திரும்பிநீ வரவேண்டும்!!

அச்சமதை மடமையென்று அனைவருக்கும் சொன்னாயே
உச்சிமீது வான்விழினும் அச்சம்தவிர் என்றாயே
மெச்சும்படி வாழுஎன்று மெய்சிலிர்க்கச் சொன்னாயே
இச்சைகொண்டு தமிழதனை இணைத்தபடி இருந்தாயே!

வேதநெறி வழிவந்த வித்தகனாய் இருந்தாலும்
சாதிநிலை தகர்த்தெறியச் சலியாது உழைத்தனையே
ஓதி உணர்ந்ததனால் உண்மைதனை நீயறிந்து
போதிமரமாக நின்று போதித்தாய் யாவருக்கும்!

பாரதியுன் பாட்டாலே பண்டிதர்கள் பரிதவித்தார்
பாட்டல்ல என்றவர்கள் பறையடித்து நின்றார்கள்
பாமரர்கள் கைகோத்துப் பாரதியைப் பார்த்தவுடன்
பண்டிதக் கூட்டமெலாம் பஞ்சாகப் பறந்தனவே!

பல்கலைக் கழகமெல்லாம் பாரதியின் பாட்டிப்போ
பாடமாய் இருக்கிறது படிக்கின்றார் பலபேரும்
பாரதியின் பாட்டிப்போ பல்லக்கில் இருக்கிறது
பாரதத்தில் பாரதியார் பக்குவமாய் உலவுகின்றார்!

முத்தமிழும் பாரதியின் சொத்தாக இருந்தனவே
எத்திக்கும் தமிழோங்க எண்ணியவர் இருந்தாரே
சத்தாகத் தமிழையவர் சாகும்வரை நினைத்தாரே
கைதூவி மலர்கொண்டு காதலித்து நிற்போமே!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க