புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும், கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்

0

–எம்.ஜெயராமசர்மா.

 

புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும்,
கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்

 

[எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS]
(முன்னாள் கல்விப்பணிப்பாளர்)

yoga-youth-camp-33

“சமயம்” என்றால் என்ன?  “மதம்” என்றால் என்ன? என்பதை நாங்கள் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது  இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு.  அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் ….   எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.

சமயம் என்பது நல்ல வழியைக்காட்டுவது. மதம் என்று அதற்கு இன்னுமொருபெயர்.   மனிதனிடம் காணப்படுகின்ற ஆணவம் என்கின்ற மதத்தை இல்லாமல் செய்ய உதவுவதால் ஒரு காரணப்பெயராக இப்படி அழைத்தனர். நான் என்னும் தன்முனைப்பு வாழ்க்கையில் இருக்குமானால் எவ்வளவு வரமும் உரமும் இருந்தும் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீர்போலவே ஆகிவிடும். ஆகவே தன்முனைப்பு அற்ற நல்ல பாதை அமையுமானால் அதுவே மனித வாழ்வில் கிடைக்கும் நல்ல சமயமாக அமையும். இப்படி நல்ல ஒரு வாய்ப்பே சமயமானது. எனவே வேறு பெயர்களும் வேறு காரணங்களும் அடிப்படையாக அமைந்த பொழுதிலும் “சமயமும்” மதம்  என்ற ஒன்றேதான் என்பதை நாமும் தெரிந்திருப்பதோடு நமது பிள்ளைகளுக்கும் விளக்கி நிற்கவேண்டும்.

வெளிநாட்டில் பல்வேறுவிதமான கலாசாரச் சூழல்களில் நாமே திக்கித்திணறுகின்றோம். நாங்களே இப்படி என்றால் எங்களின் பிள்ளைகள் என்னதான் செய்வார்கள்? இப்படியான சூழலில் வாழும் நாங்கள் சமயத்தை எப்படி அணுக வேண்டும் என்பது மிகவும் இலகுவான ஒரு காரியமல்ல.

ஊரிலே எங்களுக்குச் சமயம் கற்பது பாடசாலைகளிலே கட்டாயமானது. விரும்பியோ விரும்பாமலோ சமயம் என்பது பாடசாலைகள் மூலம் கொடுக்கப்படுகிறது. ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து திருவருட்பயனும், தேவாரங்களும் பாடமாக்கினோம். இளம்பருவத்தில் விருப்பமில்லாமல் படித்தாலும் — வயது வந்தபின்னர் அவை விளங்கிய பொழுதுதான் அவற்றின் அருமையும் பெருமையும் எங்களுக்கெல்லாம் தெரியவந்தது எனலாம். அதைவிட எங்களது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஏனைய உறவினர்கள் அத்தனை பேருமே எங்களின் சமய வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. நாங்கள் சற்று வழிதடுமாற நினைத்தாலும் அவர்கள் அனைவ ருமே எம்மைத் தாங்கிப்பிடித்து மடைமாற்றம் செய்து நின்றார்கள். இவை எல்லாவற்றையும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ வந்த அத்தனை பேரும் மனங்கொள்வது அவசியமானதாகும்.

எங்கள் பிள்ளைகள் படிக்கும் சூழல் பழகும் சூழல் யாவும் எமக்குப் புதிதானவை. அவர்களது பாடசாலைச் சூழலும் மிகவும் வித்தியாச மானதாகும். அங்கே சந்திக்கும் பல தரப்பட்ட சமூகச் சூழலிலிருந்து வந்த பிள்ளைகளும் ஆசிரியர்களும் எங்கள் பிள்ளைகளில் பல தாங்கங்கள் ஏற்படக் காரணமாகிவிடுகிறார்கள்.

பெரும்பாலானவர்களுக்குச் சமயம் பற்றிய அக்கறையும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதைப்பற்றியே பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. இந்த நிலைமையில் படிக்கும் எங்கள் பிள்ளைகளுக்குச் சமயத்தைப் பற்றிச் சொல்லுவதில்.. கட்டாயம் என்பது இருக்கவே கூடாது. அவர்களுக்குச் சமயத்தை மிகவும் இலகுவாக .. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொருத்தமாக மறுமொழி சொல்லியே .. விளங்கவைக்க முனைதல் வேண்டும். எங்களுக்குச் சமயம் போதித்த முறைகளை அடிமனத்தில் வைத்துக்கொண் டு .. செயற்பட முற்பட்டோமே யானால் யாவும் ஆரம்பத்திலேயே ஆட்டம் காண ஆரம்பி த்துவிடலாம்.

புராணக்கதைகளைப் பிள்ளைகளுக்குக் கூறலாமா? புராணக்கதைகளைச் சமயம் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாமா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகின்றன அல்லவா? மிகவும் கவனமாகக் கதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் பன்றிக்குட்டிகள் சில யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொழுது வந்துவிட்டன. எனது மனைவி அருவருப்போடு அவற்றைப் பார்த்து வெறுப்படை ந்து கல்லெடுத்து எறிந்து விரட்டி அடித்தார். உள்ளே இருந்த எனது ஏழுவயதுடைய மகள் ஓடிவந்து அம்மா .. அம்மா .. என்ன செய்துவிட்டீர்கள். நீங்கள் செய்தது பாவம் இல்லையா? எனக் கேட்டதும் எனது மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது. மகளை முறைத்துப் பார்த்து அசிங்கத்தை விரட்டாமல் அடுப்படியிலா வைப்பார்கள் என்று  பொரிந்து தள்ளி விட்டார். அம்மாவின் கத்தலுக்கு ச் சற்றும் அசையாத எனதுமகள் .. அம்மாவைப்பார்த்து .. அம்மா இந்தக்குட்டிகளுக்குச் சிவபெருமான் தாயக வந்து பால் கொடுத்தார் என்று நீதானே நேற்று எனக்குப் புராணக்கதை சொல்லித்தந்துவிட்டு இப்போது அசிங்கம் என்று விரட்டுகிறாயே! சிவன் தாயாகிவந்து பால் கொடுத்தபடியால் இவையும் சிவனின் பிள்ளைகள்தானே என்றதும் ..  அம்மா அதாவது எனது மனைவி வாயடைத்து மெளனியாகிவிட்டார் இதனை ஓரத்தில் நின்று கவனித்த நான் எனது பிள்ளையின் சமய அறிதலையும் உணர்தலையும் பார்த்து மெய்சிலிர்த்தேன்.

அதே மகளுடன் புலம்பெயர்ந்து இங்கு வந்தபின் அவளுக்குப் பிறந்த மகள் எனது பேரப்பிள்ளை கோவிலில் “சூரன் போரைப்பார்த்து”  தாயிடம் கேட்டாள்.. சாமி ஏன் அம்மா மற்றவர்களைக் கொலை செய்யவேணும்? சாமி என்றால் நல்லது என்றுதானே நீங்கள் சொல்லித்தந்தது. இதைக் கேட்டதும் எனது மகள் தனது மகளுக்குத் தலையில் ஒரு குட்டுக் குட்டினாள். அவள் அழுதபடியே கோவிலில் நின்றாள். அதைத் தொடர்ந்து அவள் கோவில் என்றாலே விருப்பம் இல்லாத நிலைக்கு வந்துவிட்டாள்.

இது ஒரு குடும்பப் பிரச்சனை போல இருந்தாலும் இங்குதான் .. புலம்பெயர் நாடுகளில் சமயத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் பாடம் உருவாகிறது என நினைக்கின்றேன். பெரிய புராணத்திலே வருகின்ற கதைகள் பலவற்றை எந்தவிதக் கேள்விகளும் இல்லாமல் பயபக்தியோடு நாங்கள் படித்தோம். பிரசங்கங்கள் மூலமாகவும் கேட்டோம். ஆனால் அதைப்பற்றிய சந்தேகங்கள் எங்களுக்கு வந்தாலும் அப்பா இடமோ அம்மா இடமோ கேட்கவே மாட்டோம். காரணம் அது தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்று மனத்தில் இருந்த பயமாகும். ஆனாலும் எங்கள் மனத்திலும் கேள்விகள் இருந்தன என்பதை ஒத்துகொள்ளுதல் வேண்டும். எங்கள் சூழலால் அவை அப்படியே மனத்துள் புதைந்தே விட்டன என்றே எண்ணமுடிகிறது.

இன்றைய புலம்பெயர் சூழல் அப்படிப்பட்ட தல்ல. கண்ணப்பர்கதை, சிறுத்தொண்டர்கதை, திருநீலகண்டர் கதை, நால்வர் வரலாறுகளில் காணப்படும் சம்பவங்கள்.. இவைபற்றி யெல்லாம் சமயத்தினூடாகக் கற்பிக்கும் பொழுது மிகவும் அவதான மாகவே கையாள வேண்டியுள்ளது. இங்கு வளரும் பிள்ளைகள் பல வித விஞ்ஞானக் கருவிகளோடு உறவாடுகிறார்கள். விரல் நுனியிலே விஞ்ஞானம் நிற்கிறது. எதற்கெடுத்தாலும் விஞ்ஞான விளக்கங்கள்தான் முன்னிற்கின்றன. இதனால் சமயத்தைக் கற்பிப்பது என்பது புலம்பெயர் நாடுகளில் மிகவும் இலகு என்று எடுத்து விடக்கூடாது.

கோவில்களில் இடம்பெறும் யாவுமே இங்கு வளரும் பிள்ளைகளுக்கு விளங்காதன. அவற்றைச் சமயத்தோடு இணைக்கும் பொழுது அவர்கள் தடுமாறாமல் இணைத்துக் காட்டும் வகையில் சமயக்கல்வியைப் போதிக்க வேண்டும். சந்தேகமோ , தடுமாற்றமோ ஏற்படாவண்ணம் சமயபாட போதனை அமைதல் கட்டாயமானது. சந்தேகம் எழுந்தால் அதற்குத் தக்கபடி பதிலைக் கொடுக்க வேண்டும். இதுவாக இருக்கலாம், அல்லது அதுவாக இருக்கலாம் என்னும் வகையில் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூ டாது.

சமயம் என்பது அறிவு ஆராய்ச்சிக்கு உட்பட்டதன்று. அது உணர்வு ரீதியானது என்பதை வலியுறுத்துவது சமயபோதனையில் மிக அவசியமானதாகும். விஞ்ஞான கூடப்பரிசோதனை.. சமயம் அல்ல என்று சொல்ல வேண்டும். கற்கண்டு இனிக்கும். மிளகாய் உறைக்கும். ஐஸ்கிறீம் இனிக்கும். பிஸ்கற்றுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு  சுவை. இவற்றை எப்படி அறிவீர்கள் என்று அவர்களையே சமய பாடவேளையில் கேட்கும்பொழுது ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பதில் சொல்ல முன்வருவார்கள். அப்பொழுது அவர்களை எங்கள் விஷயத்துக்குள் இலகுவாகக் கொண்டுவந்து விட முடியுமல்லவா?

சுவைகள் பல. அவற்றின் உருவம் எமக்குத்தெரியாது. ஆனால் அவற்றைச் சுவைத் தால்த்தான் என்ன சுவை என்பதை அறியமுடிகிறது. இங்கே சுவை என்பது உணர்வினால்தான் எமக்கு வந்து சேர்கிறது. அந்த உணர்வுதான் சமயம். அந்த உணர்வால் வரும் சுவைதான் கடவுள் என்று சமய போதனையை நடத்திப் பார்த்தோமேயானால் பிள்ளைகளிடம் நல்ல வரவேற்புக் கிடைப்பதோடு மனத்திலும் பதிந்து விடும்.

புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவைகளையும், தமக்கு ஆசிரியர் எப்படிப்படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துகொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்த்தான் எமது நினைப்பு நிறைவேறும் என்பதை மனங்கொள்வது பொருத்தம் என நினைக்கின்றேன்.

1) சமயத்தை ஆழமாகப் படிப்பித்தல் நல்லதல்ல.
2) தேவையற்ற கதைகளை சொல்லிப் படிப்பித்து குழப்பமான மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல.
3) கூடியவரை இலகுவான மொழிப்பிரயோகமே கையாளுதல் நன்று.
4) மனத்தில் பதியும் வண்ணம்  திருமுறைகளை பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் .
5) கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும்.
6) பண்ணோடு பாடப்பழக்கலாம். சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம்.
7) கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகுமுறையை எடுத்துச் சொல்லலாம்.
8) ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றை சமயத்துடன் சேர்த்து விளக்கலாம்.
9) அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ளதால் அதற்கும் சமயத்துக்குமான நெருக்கத்தை விளக்கலாம்.
10) கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு .. உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவைமனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும்,

சமய வாழ்வு வாழத்தான் இவைகள் யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் முக்கிய மானது ”  என்பதே சமயஇயலாளரது அசையாத நம்பிக்கையாகும்.

“கற்றதனால் ஆயபயன் இறையுணர்வு பெறுதலே” இதை மனத்திற்கொண்டு செயற்பட்டால் எண்ணியது நிறைவேறும்.

படம் உதவிக்கு நன்றி: http://vedicodyssey.com/spiritualadventures/tag/sv-youth-camp/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.