கே.ரவி

ஆன்மிகப் பாதையில் நான் அடியெடுத்த வைத்த பிறகு ஒருநாள் மாலை மீண்டும் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். வெளிச்சம் மறைந்து, இருட்டு மெல்லத் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் அலையலையாய் மேகச் சுருள்கள்; நடுவே பிறை நிலவு. திடீரென்று ஒரு மின்னல் மின்னி மூன்றாகக் கிழித்துச் சென்றது, வானத் திரையை! என் மனம் சற்றுப் பின்நோக்கிச் சென்றது. 1983-ஆம் ஆண்டு நான் குடும்பத்தோடு கஷ்மீர் சென்றிருந்த போது …..!

மன்னிக்க வேண்டும், அது கஷ்மீர்தான். அதை நிறுவதற்காகத் தொலைக்காட்சியில் ஷோபனா போராட வேண்டியிருந்தது. தஞ்சாவூர் என்ற தமிழ்ச்சொல் சரியாக உச்சரிக்க முடியாதவர்கள் அதைத் ‘டேஞ்சூர்’ என்று மாற்றியதை எண்ணி நான் வருந்தியது போலவே, கஷ்மீர் என்ற பெயரைக் ‘கேஷ்மீர்’ என்று சொல்லக் கேட்டும் வருந்தினேன். சரி, கதைக்கு வருவோம்.

aravi

நாங்கள் கஷ்மீர் சென்று ஒரு படகு வீட்டிலேயே நாலைந்து நாட்கள் தங்கியதையும், 7 வயதும், 3 வயதும் ஆகியிருந்த என் மகள் மதுமதியும், ஐஸ்வர்யாவும் அங்கே ரசம் சாதம் வேண்டுமென்று கேட்டதும், அந்தப் படகு வீட்டை நடத்தி வந்த இஸ்லாமியர் வீட்டுச் சமையலறைக்குள் சென்று, என் வளர்ப்பு அன்னை அலங்காரவல்லி என்ற அலாப்பாட்டி, பர்தா அணிந்த மகளிர் புடைசூழத் தானே ரசமும், சாதமும் பண்ணி எடுத்து வந்து என் பெண்களுக்கு ஊட்டி விட்ட கதையையும் நான் இப்பொழுது நீட்டிச் சொல்லப் போவதில்லை. அதேபோல், கஷ்மீர் சென்றதும் அந்த மாநில மக்கள் எங்களை இந்தியர்களா என்று கேட்ட வருத்தத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. ஆனால், கஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் எங்கள் பேருந்து நுழைந்த போது, பாதித் தூக்கத்தில் இருந்த என்னைத் தட்டியெழுப்பி ஷோபனா காட்டிய காட்சியை மட்டும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும். நெடிதுயர்ந்த பனிமலை, உடலெங்கும் வெண்ணீறு அணிந்து கொண்டு சிவபெருமானே தவக்கோலத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறாரோ என்பது போல் காட்சி தந்த மலைப்பு நீங்க வெகுநேரம் ஆயிற்று. வியப்பதா, கைகுவித்து வணங்குவதா என்ற குழப்பம்! ஆனால் அப்போது நான் இன்னும் மேலே சொன்னவாறு ஆன்மிகப் பாதைக்கு வரவில்லை. பிரமிப்பூட்டிய அந்தக் காட்சி என் மனத்தைக் கொஞ்ச நேரம் சலனமற்றதாகச் செய்ததனால், கவிதை எதுவும் வரவில்லை. ‘புதிய வானம் புதிய பூமி’ என்று பாடியாடத் தோன்றவில்லை.

aravi1

முதலில் சொன்னேனே, நான் ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைத்த பிறகு மொட்டை மாடியில் சுருள் மேகங்கள், அவற்றுக்கிடையே நிலாப்பிறை, மின்னல் வெட்டு, மூன்றாய்க் கிழிந்த வானத்திரை என்றெல்லாம்! அந்தக் காட்சியிலிருந்து நான் மீண்டும் கஷ்மீருக்கு மானசீகமாகச் சென்றுவிட்டேன். கஷ்மீரில் பேருந்து நுழைந்த போது ஷோபனா என்னை எழுப்பிக் காணச் செய்த காட்சியை, மலைத்தொடரே சிவனோ என்று மலைக்க வைத்த அனுபவத்தை மீண்டும் நினைத்துக் கொண்டேன். அப்போது நெஞ்சின் ஆழத்தில் ஒரு கவிதை உயிர்த்துக் கொண்டு புரளும் சப்தம் கேட்டது. அதற்குள், யாரோ வந்து என் த்யானநிலையைக் கலைத்ததால், நான் வாய்ப்பேச்சில் ஈடுபட வேண்டியதாயிற்று. பிறகு உறங்கி விட்டேன். மறுநாள் காலையில் கவிதையுடன்தான் கண்விழித்தேன். மாலையும், இரவும், காலையும் கலந்த காட்சியாய் அதில், ஆகாசமாகவே விரிந்தபடி, அதோ அந்தப் பரமசிவம்…….!

கவிதையைப் படிப்பதோடு, என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்தக் கவிதையைப் பாடியுள்ளதையும் கேட்கலாமே!

பாடலைக் கேட்டு மகிழ இங்கே சொடுக்கலாமே

நிலவை அணிந்து கொண்டு – சடைlord shiva

புரளப் புரளவிழி நிறைந்தது வானம்

மின்னல் த்ரிசூலம் – எட்டுத்

திசையும் அதிரநகை குலுங்கிய தேகம்

புலரும் போது சாம்பல் – பனிப்

புகையப் புகைய மெல்லப் படர்ந்தது வெள்ளி

காயழல் ஏந்தும் கைகள் – ஒளிக்

கதிர்கள் விரியுமொரு கனக விதானம்

ஆகாசம் சிவம் – உயிர்

ஆதாரம் சிவம்

தேஜோ மயம் சிவம்

இருள் ஒளி எனும் பகை அறும் நிழல் சிவம்

புயல் வடிவம் பூத கணங்கள்

கோள்களாய் விண் மீன்களாய்

சுழல் நடனம்

அண்டமெல்லாம் ஜனிக்கும் மஹாசூன்யம்

ஆனந்தமயம் மஹாதேவம்

ஆனந்தமயம் மஹாதேவம்

ஆகாசம் சிவம் – உயிர்

ஆதாரம் சிவம்

தேஜோ மயம் சிவம்

இருள் ஒளி எனும் பகை அறும் நிழல் சிவம்

ப்ரணவ ஸ்வரூபம் – கங்கை

ப்ரவாகமாய் அருள்மழை பொழியும் ஜடாதரம்

ப்ரளையமாகி உலகைப் புசிக்கும் காலதேவம்

ஆனந்தமயம் மஹாதேவம்

ஆனந்தமயம் மஹாதேவம்

மங்கலம் சிவம் – சுப

மந்திரம் சிவம்

சங்கல்பம் சிவம்

சலனமில் லாதது சதாசிவம்

அந்தப் பாடலின் அனுபவக் களத்தை நினைத்தால், இன்னும் மெய்சிலிர்க்கிறது! இப்படிப்பட்ட சிலிர்ப்புகளும், சிறகடிப்புகளும் இல்லாத வரண்ட பாலைவனம் போன்ற தர்க்கப் பாதையில், சிற்றறிவுப் பட்டறையில் எத்தனைக் காலம் வீணடித்து விட்டேன்!

ஒருநாள் ரமணன் என் வீட்டில் ஏதோ ஒரு கவிதை உதிக்கப் போகிறது என்று கட்டியம் கூறும் வெறித்த பார்வையோடு மெளனமாக அமர்ந்திருந்தான். திடீரென்று பாடினான். அப்போது, எஸ்.பி.பி. பாடி மிகவும் பிரபலமாகியிருந்த ஆதிசங்கரரின் சிவாஷ்டகம் மெட்டிலேயே ரமணனின் தமிழ்ப்பாட்டு வந்தது.

images (3)

இசைக்கவி ரமணன் பாட அதைக் கேட்கலாமே:

மனம் கொன்ற பாவம் தனைக் கண்ட கோலம்

மலர் மாலை யாகிப் பதம் சூடும் காலம்

விசித்ரம் வினோதம் விளங்காத போதம்

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அசைவற்ற கண்கள் அகண்ட ப்ரபஞ்சம்

அமைதித் தடாகம் அலைகள் சுநாதம்

சினத்தோடிருக்கும் தனித்தேன் தரங்கம்

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

துரும்பாகி நெஞ்சில் துளிர்க்கின்ற கண்ணீர்

அரும்பாத முன்வந் தணைக்கின்ற தெய்வம்

கரங்கள் விசாலம் வரங்கள் சுபாவம்

காருண்யமே ஈசன் காட்டும் ப்ரபாவம்

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அவன்தந்த வார்த்தை அவன்வைத்த போதை

அவன்செய்த மாயை அகந்தைப் பதாகை

சிவன்சொந்தம் என்கின்ற போதே வசந்தம்

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அலுக்காது நாமம் அடங்காது தாகம்

கணம்தோறும் நெஞ்சத்தில் காபாலி நடனம்

நடுங்கித் துகள்போல் நொறுங்கட்டும் காலம்

பயங்கள் விதிப்பேய்கள் யாவும் நிர்மூலம்

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

புயல்வீசும் பாதம் நிழல்தேடும் வேதம்

புஜம்போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்

கணங்கள் யுகங்கள் மயங்கும் ஸ்வரங்கள்

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

சிரம்தாழ்த்தி எங்கள் சிவன்வெற்றி சொல்ல

கரம்பற்றி மெல்லக் கரைசேர்க்கும் செல்வன்

கபாலன் தயாளன் கனல்மின்னும் சூலன்

அருள்தேடும் கைக்குள் அமர்கின்ற பாலன்

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

உயிர்நின்ற போதும் உணர்வாக மோதும்

அருள்வீசும் தீபம் அகண்ட ப்ரகாசம்

பதம்கண்ட நெஞ்சில் கணம்தோறும் தில்லை

சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

அவன் பாடி முடித்ததும், உடுக்கைச் சத்தம் கேட்டது போல் ஓர் ஓசை எழுந்தது. சிவபெருமானே வந்து விட்டாரோ? ரமணனே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அப்புறம்தான் புரிந்தது, என் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த ‘ரோமுலஸ்’ என்ற நாய் தன் வாலை இருபுறமும் சுழற்றிச் சுழற்றி உடுக்கடித்துக் கொண்டது. என்ன புரிந்தது? அந்த வேளையில் உடுக்கடிக்கும் சத்தம் கேட்டதற்கு என்ன பிரபஞ்ச காரணம் என்று புரிந்து கொண்டோமா? அறிவு திகைக்கும் தருணத்தில், சிந்தனை ஸ்தம்பித்துவிடும் கணத்தில் என்ன புரியும், என்ன புரியாது?

இப்படியாகக் கவிதை ஜனித்த கணங்களில், மெய்மறந்த நிலையில், ரிஷிகள் போல், பூத கணங்கள் போல், இந்திராதி தேவர்கள் போல், அட, எத்தனை அனுபவச் சுழல்களில் நாங்கள் சிக்கித் திக்குமுக்காடி எக்களித்திருக்கிறோம்! அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது என்று திருவிளையாடலில் சிவனாக வந்து சிவாஜி பேசிய வசனத்தைத்தான் பேச வேண்டும். என்னத்தைப் புரிந்து கொண்டோம் போங்கள்!

கவிதையின் ஜனன ரகசியத்தைக் கொஞ்சம் புரிந்து கொண்டு விட்டேனோ என்று மலைக்க வைத்த இன்னொரு சம்பவம் நடந்தது.

1986-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தூக்கத்தில் நான் பாடுவதாக ஒரு கனவு. கனவு என்று சொல்லக் கூடக் கூச்சமாக இருக்கிறது. எது நிஜம், எது கனவு என்று சொல்ல முடியுமா? வ.வே.சு.வின் ஒரு பல்லவி நினைவுக்கு வருகிறது:

கனவுக்குள் நானொரு கனவினில் ஆழ்ந்திருந்தேன்

கனவு மறைந்திடக் காட்சிகள் மாறியும்

கனவு தொடர்கிறது – வேறொரு

நனவாய்ப் படர்கிறது

1970-களிலேயே நானும் ஒரு பாடல் எழுதியிருந்தேன், ஆபோகி ராகத்தில்:

உனக்கொரு சிலைநான் செய்வதற்குள் – நீ

உருவம் மாறி விட்டாய்

கணப்பொழு தெந்தன் கலைப்பொரு ளாகிக்

கனவாய் ஓடி விட்டாய்

தூக்கத்திலே ஒரு பாடல் எழுதி

துயில்கலைந்ததும் அதை மறந்து விட்டேன் – பனித்

துளிகளிலே ஒரு மாலை தொடுத்துச்

சூரியன் வந்ததும் தோற்று விட்டேன்

நீரில் வரைந்த கோலத்தைப் போலென்

நிழலின் வடிவம் கலங்குவதை

யாரிடம் சொல்வேன் எப்படித் தடுப்பேன்

இதுதானோ மனச் சித்ரவதை

மீண்டும் 1986 நிகழ்ச்சிக்கு வருவோம். தூக்கத்தில், சரி, கனவில், நான் பாடுகிறேன். தூக்கம் கலைந்து எழுந்ததும் அந்தப் பாடல் மறந்துவிட்டது. ஷோபனாவிடம் கனவு பற்றிச் சொல்லிவிட்டுப் பாடல் மறந்து போனதையும் சொல்லி அங்கலாய்க்கிறேன். சற்று நேரத்துக்கெல்லாம் தொலைபேசி மணியடிக்கிறது. அதை எடுக்கிறேன். எடுக்கும் போதே, நான் கனவில் பாடிய பாடல் முழுதும் அப்படியே நினவுவர, அதை மனத்துக்குள் பாடிக் கொண்டே தொலைபேசியை, அப்போதெல்லாம் செல்பேசி கிடையாது ஓய், காதில் எடுத்து வைத்துக் கொண்டு, ஆனால் எதுவும் பேசாமல் ஏறக்குறைய ஒரு நிமிடம் இருந்து விட்டேன். அடுத்த முனையிலிருந்த நபரும் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தது வியப்பாக இருந்தது. அந்த மெளனத்தை எனக்கு நன்கு தெரிந்த ஒரு சிரிப்பொலி கலைத்தது. தொலைபேசியின் எதிர்முனையில் டாக்டர்தான் சிரித்தார். சிரித்துவிட்டுக் கேட்டார், “என்னப்பா பாட்டுப் பாடி முடித்தாகி விட்டதா?” நான் வாயடைத்துப் போய் விட்டேன். யார் கனவில் யார் நுழைந்து ‘எப்படிப் பாடினரோ!’

krishna

ஆதி சேஷன் ஆகவா – ஓர்

ஆலிலை என்றாகவா

மாதவா ஶ்ரீ ராகவா – என்

தாகம் தீர்க்க வா

பார்த்தசாரதி உனக்குப் பாஞ்சசன்ய ம் ஆகவா

கீதைசொன்ன பாதையோரம் வேணுகானம் ஆகவா

அரிதுயில் கலைப்பதற்குக் கோதையாகிப் பாடவா – நீ

ஆலிங்கனம் செய்யும் ராதையாக மாறவா

மாதவா ஶ்ரீ ராகவா – என்

தாகம் தீர்க்க வா – ஓ

மாதவா ஶ்ரீ ராகவா – என்

தாகம் தீர்க்க வா

முதலைவாய் விழுந்த நெஞ்சின் கதறல் கேட்க வில்லையா – என்

இதயத் தூணை இரணியன் உதைப்ப தறிய வில்லையா

சார்ங்கமென்று சாற்றுகின்ற சத்தியத்தின் வில்லையா

சார்வதிந்தச் சஞ்சலங்கள் தர்மவீரம் இல்லையா

சங்குச் சக்ரம் ஏந்தி வா – என்

சங்க டங்கள் நீங்க வா

தர்ம வீரம் ஆனவா

சர்வ லோக நாயகா

கனவில் உதித்துக் கண்விழித்ததும் மனத்துக்கு வெகுதொலைவில் சென்று மறைந்த பாடல், தொலைபேசியில் டாக்டர் அழைத்ததும், மேலெழும்பி மலர்ந்த கதையைச் சொல்லி விட்டேன். அதைக் கனவில் நான் பாடிய மெட்டு மட்டும் நினவு வரவில்லை. பிறகு, அமீர்கல்யாண் ராகத்தில் பல்லவி தொடங்க, ராகமாலிகையாக இசையமைத்து ஷோபனா அதைப் பாடிக் காட்டினாள்.

மறந்துபோய், மனத்தில் மீண்டும் பதிவான இந்தப் பாடல், ஒலிவடிவில் பதிவாகவே இல்லை. பதிவு ஆனது, ஆனால் ஆகவில்லை. ‘அட, நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா’ என்கிறீர்களா? எல்லாம் விளையாட்டுத்தானே. அவனே அலகிலா விளையாட்டுடையான்; தீராத விளையாட்டுப் பிள்ளைதானே!

மலர்ந்தும் மலராத பாதிமலர் போலப் பதிந்தும் பதியாத பாடலின் கதையை அடுத்த முறை சொல்கிறேன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *