தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 14

1

இன்னம்பூரான்

விநோத்ஸ்பீக்

சாணக்யரின் ‘அர்த்த சாத்திரத்தில்’ உள்ள தணிக்கை அறிவுரைகளை ‘ஆசியன் ஜர்னல் ஆஃப் கவர்ன்ட்மெண்ட் ஆடிட்’ என்ற இதழில், நான் அவ்விதழின் ஆசிரியனாக இருந்த காலத்தில் பதிவு செய்திருந்தேன். நல்ல வரவேற்பு. 40 கட்டுரைகளுக்கான வித்து அவை எனலாம். அவற்றை எடுத்துக்காட்டாக அமைத்து, தற்கால தணிக்கை முறைகளை ஒப்புமை செய்ய நினைத்தேன். ஆனால், மற்றொரு தகவல் முன்னுரிமை எடுத்துக் கொண்டது.  எனவே, அந்த அறிவுரைகளில் ஒன்றை மட்டும் குறிப்பால் உணர்த்தி விட்டு, வந்த காரியத்தை சொல்கிறேன்.

“இன்றைய வரவை நாளை கணக்கில் இடுவது குற்றமே.”

வந்த காரியம்: ஒரு பிரபலம் உரைத்ததை தொகுக்கும் போது, அதை அன்னாரின் பேச்சு என்று பொருள் பட ‘…ஸ்பீக்’ என்பது வழக்கம். இந்தக் கட்டுரை, தற்கால ஆடிட்டர் ஜெனரல் மதிப்பிற்குரிய திரு.விநோத் ராய் அவர்கள் பிரசித்தி பெற்ற ‘அவுட்லுக்’ என்ற ஆங்கில இதழுக்கு அளித்த நேர் காணலின் சுருக்கம். எனவே ‘விநோத் ஸ்பீக்’ என்ற தலைப்பு.

வினா: அ (அவுட்லுக்)/ விடை: வி: விநோத் ராய்.

அ: சரமாரியாக உம்மீது தொடுக்கப்படும் கணைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

வி. இது புது கேள்வி! எல்லோரும் ‘ஏன் இன்னார் இன்னார் மீது குறை காண்கிறீர். அடுத்த பலி யாரு?’ என்று தான் கேட்கிறார்கள். கணையேதும் இல்லையே!

அ. அரசியலாரும், தனியார் நிறுவனத்தாரும், உமது காமன் வெல்த் விளையாட்டு, 2ஜி, கச்சா எண்ணெய் குற்றச்சாட்டுகளுக்குப் பின், உமது திறனுக்கு அப்பாற்பட்டு நீங்கள் இயங்குவதாக, பழிக்கிறார்களே?

வி: தணிக்கையில் மூன்று விதம் -நிதியைக் கையாண்டது எப்படி?, ஆணைகளுக்கு உகந்த செயல்களா?, அரசு துறைகள் உருப்படியாக இயங்கியனவா? மூன்றாவது வகையை எமது பணியில் அடக்கம் என்று ஜூன் 2006லியே நிதி அமைச்சரகம் கூறியுள்ளது. நீங்கள் சொன்ன மூன்று தணிக்கைகளும் அதில் அடக்கம். பொது சொத்து, தனியார்-அரசு கூட்டுத் துறைகளில் பயன் படுத்தப்பட்டால், நாங்கள் வரத்தானே வேண்டும்.

வி: ரிலையன்ஸ் கம்பெனியின் கருத்துக்களை நாங்கள் ஏற்கவில்லை என்கிறீர்கள். அமைச்சரகம் கேட்டுக் கொண்டவாறு தணிக்கை செய்தோம். ரிலையன்ஸ் ஆட்சேபித்தனர். வாஸ்தவம் தான். ஒப்பந்ததில் இது போடப் படவில்லை. மூன்று வருடங்கள் கேஸ் நடந்தது. சாதகமான தீர்ப்பு வந்த பின் தான், தணிக்கையே தொடங்கப்பட்டது. அமைச்சரகம் தான் அவர்களுடன் உரியதை பகிர்ந்து, விளக்கம் பெற்றுத் தரவேண்டும்.

அ: கபில் சிபல் உமது ரிப்போர்ட்டை உதறி விட்டாரே! உங்கள் மீது உள்ள நம்பகத்துவம் பாதிக்கப்பட்டதா?

வி: இல்லையே. அவர் அதை ‘சரியே’ என்றல்லவா சொல்லியிருக்கிறார். இரு விஷயங்களில் சம்மதம். ஒன்றில் சம்மதமில்லை. முறை கேடுகளைத் தான் சம்மதிப்பதால்தான், விசாரிக்க கமிஷன் அமைத்தார். நஷ்டத்தைப் பற்றித் தான் அவருடைய கஷ்டம். ஆடிட் ரிப்போர்ட்டே, இது விவாதத்துக்குரியது என்று சொல்கிறதே.

அ: உமது அதிகாரிகள் மீது அரசியல்/ அதிகாரத்துவத்தின் தாக்கம் இருந்ததா?

வி: லவலேசமும் இல்லை. நாங்கள் எங்கள் வழி செல்வதில் தடை ஏதும் இல்லை.

அ: 2ஜி/ கச்சா எண்ணைய் ஆடிட் வரைவு ரிப்போர்ட்டுகள் கசிவு பற்றி, உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களே!

வி: அதில் எமக்கு ஆதாயம் என்ன? எங்கள் ஆக்கத்தை அல்லவா அது தாக்குகிறது? நாடாளுமன்றத்தில் வைத்த பின் டிபுடி ஸீ.ஏ.ஜி. ஊடகங்களுடன் பேசுவார். அந்த மின்னலடிப்பதை விட்டு விட்டு, பிட் நோட்டீஸ் விடுவோமா, என்ன?

அ: அரசுத் துறைகள் பல பட்டறை. இப்போது தனியாருடன் உடன்பாடுகள் வேறு. இதை எல்லாம் தணிக்கை செய்யும் திறன்/ வலிமை/ ஆற்றல்  உம்மிடம் உள்ளதா?

வி: ஆம். திறன் வேண்டும். ராணுவம்/ அணுசக்தி/ சுகாதாரம்/ கல்வி என அனைத்துத் துறைகளிலும். அதற்காகத் தான் அறிமுகக் கூட்டங்கள் –  நுட்பங்கள் அறியும் பொருட்டு.  எங்கள் வலிமையே, ஆற்றலும், திறனும், ஆக்கமும் மிகுந்தத் தணிக்கைப் படை எங்களிடம் இருப்பது தான். உலகளவில், முதல் மூன்று/ நான்கு இடங்களில் நாங்கள் இருக்கிறோம்.

அ: இந்தக் கச்சா எண்ணைய் விவகாரத்தில், உமது திறனும், புரிதலும் சர்ச்சைக்கு உள்ளாயினவே?

வி: எமது துறையின் 14 அதிகாரிகள் மேற்கு ஆசியாவில் இதே ஆய்வுப் பணியில் உள்ளனர். இந்தத் தணிக்கை செய்தவரும் கூட வளைகுடா பிராந்தியத்தில் இதேப் பணியை நான்கு வருடங்களுக்கும் மேல் திறம்படச் செய்தவர். எங்கள் அதிகாரிகளை நேரில் சந்திப்பவர்களுக்கு, எங்களின் ஆழ்ந்த புரிதலின் பேரில் செய்யும் பணியின் ஆற்றல் புரியும்.

அ: ஆடிட் ரிப்போர்ட்களின் மீதான நடவடிக்கைகள் பற்றி?

வி: ஒரு கால கட்டத்தில் அவற்றை யாரும் மதித்தது இல்லை. எங்கள் ரிப்போர்ட்டுகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு விளக்கம் வருவது இல்லை என்று, பிரதமர் முன்னிலையில் சொல்லி இருக்கிறேன். இப்போது பரவாயில்லை. ராணுவ அமைச்சரகமும், சுற்றுச் சூழல் அமைச்சரகமும் வழி முறைகளை மாற்றிக் கொண்டது, எனக்கு மகிழ்ச்சியே.

அ: சட்ட அமைச்சர் மொய்லி அவர்கள், நீங்கள் ‘வருமுன் காப்போனாக’ இயங்குவது இல்லை என்கிறார். ஆடிட் விதிகளை மாற்றினால் உதவுமோ?

வி: நாங்கள் கேட்ட வரங்கள் மூன்று: ஆடிட் தாமதம் ஏன்? நாங்கள் விளக்கம் கேட்டால், ஒரு நாளில்/ ஒரு மாதத்தில்/ ஆறு மாதங்களில் அதைத் தரலாம். தராமலும் இருக்கலாம்!  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ளது போல், 30 நாட்களில் பதில் போதும். அது வரம் ஒன்று.

ஆடிட் ரிப்போர்ட்டை ஜனாதிபதி/ கவர்னரிடம் சமர்ப்பிக்கிறோம், அரசியல் சாசனத்தின் 151 வது சரத்துப் படி. அது மன்றத்தில் வைக்கப்பட வேண்டும். இப்போது அமைச்சரகத்திடமே கொடுக்கின்றோம். அவர்கள் இஷ்டப்படி ஒரு மாதம்/ ஆறு மாதம்/ ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார்கள். இதை மாற்றி, குறிப்பிட்ட கெடு வைக்க வேண்டும் என்று கேட்கிறோம். அது வரம் இரண்டு.

மூன்றாவதாக, 1971க்குப் பிறகு பஞ்சாயத்து, அரசு-தனியார் கூட்டணி, தன்னார்வக் குழுக்களின் பங்கு எல்லாம் வந்து விட்டன. அவற்றை ஆடிட் செய்வது பற்றி ஒரு தெளிவு வேண்டுமல்லவா! அதை தான் கேட்கிறோம். அது வரம் மூன்று.

அ: எத்தனை ஆடிட் ரிப்போர்ட்டுகள்  நாடாளுமன்றத்தின் முன் வைக்கப் படவில்லை?

வி: எல்லாமே வைத்தாகி விட்டது. ஆனால், என்னே தாமதம்! – ஒரு வருடம் கூட! அன்றைய அரசுக்கு இஷ்டமில்லை என்றால். இந்தத் தாமதத் தந்திரம் மத்திய அரசில் இருப்பதை விட மாநிலங்களில் அதிகம். மஹாராஷ்டிராவில் ஒன்று, மெட்ரோ பற்றி ஒன்று – ஒரு வருடத்திற்கும் மேல் தாமதம்.

அ: உமது ஆடிட் ரிப்போர்ட்கள் எந்த அளவுக்கு இறுதி நிலை வரை…?

வி: பத்து/ஆறு வருடங்களுக்கு முன்னால் படு மோசம். முதற்கண்ணாக, தாமதம்: மக்களுக்கு ஆர்வமிருக்கவில்லை. கணக்கு வழங்கும் முறையும் சரியாக இல்லை. இப்போது படாபட். கணக்கு வழக்கு நிலைப்பாடு  வந்து தானே ஆகவேண்டும்.

அ: உமக்கு தோட்டக் கலையில் ஆர்வம் என்று கேள்வி. உமக்கா அல்லது உமது மனைவிக்கா?

வி: நான் தான் மாலி: தோட்டக்காரன்.வீட்டில் அவள் ராணி; வெளி உலகில் என் ராஜ்யம். ஏதோ இயற்கைக்கு உகந்த காய்கறி கொடுத்தால் என் கடமை ஒவர்!

இது அவுட்லுக் இதழில் வந்த நேர் காணலின் தமிழ் சுருக்கம். தமிழாக்கமும், சுருக்கமும் நான் செய்தது. பொறுப்பு எனது. ஆங்கிலத்தில் வந்துள்ள மூலக் கட்டுரையின் காப்புரிமை அவுட்லுக் இதழுக்கே. நமது நன்றி அவர்களுக்கு உரித்ததாகுக. தமிழாக்கத்திற்கு அனுமதி கொடுத்ததிற்கும் அவர்களுக்கு நன்றி  செலுத்துகிறேன்.

ஒரு நற்செய்தி. இனி ஆடிட் ரிப்போர்ட் பற்றி மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பிரசுரங்கள் வரப் போவதாக செய்திகள் வருகின்றன.

ஒரு சுவாரசியமானச் செய்தி: திரு. தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்து விட்டார்!

(தொடரும்)

உசாத்துணை

http://www.outlookindia.com/article.aspx?277467

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 14

  1. அவர்கள் இல்லாட்டி இன்னிக்கு பல விஷயம் வந்திருக்காது. தொடரட்டும் அவர்கள் பணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.