விலங்குகளின் விநோத ராஜ்யம் – ZOO KEEPER – ஹாலிவுட் திரைப்படம்
தமிழ்த் திரையுலகில், மிருகங்கள் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கின்றன. அந்தக் கால தேவர் படங்கள் தொடங்கி, இந்த கால இராமநாரயணன் படங்கள் வரை இதற்கு உதாரணமாக பல படங்களைக் கூறலாம். ‘அன்னை ஓர் ஆலயம்’ – யானை, ‘ஆட்டுக்கார அலமேலு’ – ஆடு, ‘துர்கா’ – குரங்கு போன்றவை பரந்த அளவுக்கு பிரபலமானவை.
விலங்குகளை கதாபாத்திரமாக்கி உருவாகும் படங்கள் பெரும்பாலும் குழந்தைகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டாலும் போகப்போக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விடும்.
அந்த வகையில் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள படம் “Zoo Keeper”.ஒரு விலங்கு நடித்தாலே சுவாரஸ்யம் கூடும். இதில் ஒரு மிருகக் காட்சி சாலையில் உள்ள பல விலங்குகள் கதாப் பாத்திரங்களாக வருவது மேலும் சிறப்பு.
ஃப்ராங்க்ளின் பார்க் விலங்கியல் காட்சி சாலையில், அனைத்து விலங்குகளும் ஒருவர் மீது அன்பாக உள்ளன. அவர் தான் கிரிஃப்பின் (Griffin). அவர்தான் விலங்குகளுடன் மிகவும் சினேகமாக இருந்து கவனித்துக் கொண்டிருப்பவர்.
தங்கள் மனதுக்கினிய அவரை விலங்குகள் கோயில் கட்டி கும்பிடாத குறையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அவர் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அன்பைப் பொழிகின்றன. ஆனால் அவரோ தனியாளாக இருக்கிறார்.
எத்தனை நாள் தான் அங்கேயே முடங்கிக் கிடப்பது? தனக்கென ஒரு துணையைத் தேடிக் கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும். அதற்கு இந்த விலங்கு காட்சிச் சாலையிலிருந்து வெளியே செல்ல வேண்டும். இப்படி கிரிஃபின் தீர்மானிக்கிறார். இதை அறிந்த விலங்குகள் அதிர்ச்சியடைகின்றன. அவை தங்களுக்குள் என்ன திட்டம் போட்டன? தங்கள் தலைவனுக்கு வாழ்க்கைத் துணை தேடிக் கொடுத்ததா…? திட்டங்கள் என்ன மாதிரி விளைவுகளைத் தந்தன…? என்பது சுவாரஸ்யத் தோரணங்கள். இப்படித்தான் போகிறது கதை. க்ரிஃபினாக கெவின் ஜேம்ஸ் நடித்துள்ளார்.
இதில் சிங்கம், யானை, கரடி, ஓநாய், கொரில்லா, ஒட்டகச் சிவிங்கி போன்றவை முக்கிய பாத்திரங்களாக வலம் வருகின்றன.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணச் சித்திரம் படைக்கப் பட்டிருப்பது சுவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரும் உண்டு. தனி பயோடேட்டா கூட போட்டு தகவல்கள் சேகரிக்கும் அளவுக்கு பாத்திரங்களுக்கு விவரங்கள் உள்ளன.
உதாரணம் லீ -ஜெனட் ஒரு சிங்க ஜோடி. தூங்குவது, மற்ற விலங்குகளைப் பயமுறுத்துவது, அடிக்கடி விலங்குகள் பொதுக்குழு கூட்டுவது, இவற்றின் பொழுது போக்குகள். ஒரு கரடி ஜோடி ஜேரோம் – ப்ரைஸ். உண்பது, உறங்குவது, பின்பக்கத்தை ஆட்டிக் கொண்டு சிரிக்க வைப்பது பொழுது போக்குகள். இப்படி ஒவ்வொன்றுக்கும் பயோடேட்டா மட்டுமல்ல பயடேட்டாவும் உண்டு.
படத்தில் இவை பேசும் விலங்குகளாக வருகின்றன. இவற்றுக்கு குரல் கொடுத்திருப்பவர்கள் ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் சில்வஸ்டர் ஸ்டோலன், முதல் படம் சாண்ட்லர் வரை பலரும் இந்த விலங்குகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
படம் முழுக்க நகைச்சுவை களைகட்டிக் கிடக்கும். செண்டிமெண்டும் உண்டு.
உருவத்தில் கனபாடியான கெவின் ஜேம்ஸ் தோன்றினாலே திரையரங்கில் சிரிப்பு அலையடிக்கும். விலங்குகள் சேட்டைகள் சேர்ந்தால் கேட்க வேண்டுமா…! முழுநீள நகைச்சுவை விருந்தாகப் படம் உருவாகியிருக்கின்றது.
கெவின் ஜேம்ஸூடன் ரோசரியோ டாசன், லெஸ்லி பிப் போன்றோரும் நடித்துள்ளனர். இயக்கியிருப்பவர் ஃப்ராங்க் காரஸி.
படத்தில் தோன்றும் விலங்குகளில் இயற்கையின் படைப்பு எது? தொழில் நுட்ப வளர்ப்பு எது? என்று அறிய முடியாத அளவுக்கு தொன்மையும் நவீனமும் பின்னிப் பிணைந்து இருப்பது சிறப்பு.
புது விதமான ஒரு விலங்குகள் உலகத்தில் ரசிகர்களைக் கொண்டு செல்லும் ’ZOO KEEPER’ நிச்சயமாக படம் பார்ப்பவர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.
ரின் -டிந் -டின், சாபு படங்கள் ஞாபகம் இருக்கா?