பிரம்மாண்டமான மாயா ஜாலம் இணைந்த

‘தி ஸ்மர்ப்ஸ் 3D’

(The Smurfs 3D)

நம் நாட்டுத் தலைவர்களின் பெயர்கள் தெரிகிறதோ இல்லையோ டாம் &ஜெர்ரி, பப்பாய், ஸ்கூபீடு, டென்னிஸ், கிட், கேட், கிக் பட்டோஸ்கி போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களின் பெயர்கள் நம் குழந்தைகளுக்கு அத்துப்படி.  இதைப் போலவே Studio Peyo உருவாக்கிய Smurfs கதாபாத்திரங்களும் மேலை நாடுகளில் பிரபலம்.

இந்த ஸ்மர்ப்ஸ் பாத்திரங்கள் சின்னத் திரை, விளையாட்டுக்களில் தனி ராஜ்யம் படைத்து கோலோச்சி வருகின்றன.  பெரிய திரை வடிவத்தில் ஸ்மர்ப்ஸ் பாத்திரங்களைக் கொண்டு வந்தால் வெற்றியும் வசூலும் பல மடங்கு கிடைக்குமல்லவா?

அந்தப் பாத்திரங்களை, வாழும் மனித பாத்திரங்களுடன் இணையச் செய்து படம் எடுத்தால்…? அதில் தொழில் நுட்ப  நேர்த்தி காட்டினால்…? விசில், வசூல் இரண்டுமே தூள் கிளப்பும்.  ஆனால் அந்தக் கதாபாத்திரங்களின் வடிவங்களைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும் அல்லவா? 2002 முதல் 2008 வரை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  தங்களது படைப்பைப் பயன் படுத்த ஸ்டுடியோ பியோ நிறுவனம் எளிதில் மசியவில்லை. நீண்ட நெடிய பேச்சுகளுக்குப் பின்தான் சம்மதித்தது.  பாரமவுண்ட் பிக்சர்ஸ், நிக்கலோடியன் மூவீஸ், கொலம்பியா பிக்சர்ஸ், சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் போன்றவை ஒருவழியாக படம் தயாரிக்க அனுமதியைப் பெற்றன.

சோனி பிக்சர்ஸ் அனிமேஷன், இந்தச் சவால் நிறைந்த படப்பிடிப்புப் பணியை 2010 மார்ச் 26ல் நியூயார்க்கில் தொடங்கியது.  இதை ஒரு 3D அனிமேஷன் தொழில் நுட்பப் படமாக எடுப்பது என்றும் முடிவு செய்தனர்.  படத்தையும் ’The Smurfs’ என்று பெயரிட்டு அழைக்கலாயினர்.  படமும் எடுத்து முடித்தனர்.

முழுநீள லைவ் ஆக்க்ஷன் – குடும்பப் படமான இதில் நீல் பேட்ரிக் ஹாரிஸ், ஜெய்மா மேப்ஸ், ஹாங்க் அஜாரியா, சோபியா வெர்கரா ஆகியோர் நடித்துள்ளனர்.  நீல் பேட்ரிக், ஜெய்மா இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

இயக்கியிருப்பவர் ராஜா காஸ்னெல்.  தயாரிப்பு : ஜோர்டான் கெர்னர்.  படப்பிடிப்பு நிலையங்கள் : சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் மற்றும் தி கெர்னர் எண்டர்டெயின்மெண்ட் கம்பெனி.

படத்தில் சிறப்பம்சங்களில், கையடக்க அளவில் வரும் ஆறு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கியமானவை.  இந்த ஆறும் ஆறு வெவ்வேறு முகங்கள் காட்டும்.  ஒவ்வொன்றுக்கும் தனித் தனி குணச் சித்திரங்கள் உண்டு.

இதில் வரும் ஸ்மர்ப்ஸ் கிராமம் உங்களை வண்ண மயமான புதிய உலகத்துக்கு இட்டுச் செல்லும்.  அங்கு இருக்கும் மரம், செடி, கொடி பின்னணி வர்ண ஜாலம் என்பதற்கு ஓர் உதாரணமாக இருக்கும்.

கதை என்றால், இதுவும் ஒரு மாயா ஜாலக் கதை தான்!  மாயா ஜாலக்காரர், பிரச்சினை, விடுதலை, முடிவு என்கிற ரீதியில் போனாலும் இதில் வரும் பிரம்மாண்டம் கண்களை விரிய வைக்கும்.  மேஜிக் என்பது அழகானது ,அற்புதமானது என்பது மட்டுமல்ல ஆபத்தானது என்பதையும் எடுத்துக் காட்டுகிற கதை.

அந்த அனிமேஷன் பாத்திரங்கள் செய்யும் லூட்டிகள் – கலாட்டாக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  அப்போதெல்லாம் நாமும் குழந்தையாகி சிரித்து குதூகலிப்போம்.  குறிப்பாக நீல், ஜெய்மா தம்பதிகளிடம் வீட்டில், காரில், சமையல் அறையில் சாலையில், சோபாவில், ஆடைகளில் அவை செய்யும் சேட்டைகள் சிரிப்போ சிரிப்பு.

பிரம்மாண்டம், மாயா ஜாலம் இவை இரண்டையும் கலந்து பல தரப்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்ட படமாக ‘தி ஸ்மர்ப்ஸ் ‘ இருக்கும்.

முற்றிலும் புதிய அனுபவத்துக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புக்காக காத்திருங்கள் இப் படத்தை வழக்கம் போல உலகெங்கும் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “‘தி ஸ்மர்ப்ஸ் 3D’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *