நினைத்துப் பார்க்க வேண்டும்

[ எம். ஜெயராமசர்மா B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) ]
(முன்னாள் கல்விப் பணிப்பாளர்)
[ மெல்பேண் ]

sanka_kalam

இருபத்தொரு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூட – சங்கத்தமிழை நினைத்துப்பார்க்கிறோமென்றால் அதற்குத் தக்க காரணங்கள் இருக்கத்தானே வேண்டும். அப்படிப்பட்ட காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலம் சங்கத்தமிழ் பற்றியும் அதற்கான சூழ்நிலை பற்றியும் எமக்கெல்லாம் தெரிய வருமல்லவா?

சங்கம் வைத்துத் தமிழை வளர்க்கும் அளவுக்கு அக்காலத்தில் கற்றறிந்தோர் பலர் இருந்திருக்க வேண்டும். சங்கம் வைத்துத் தமிழை வளர்ப்பதற்கு ஏற்ற அரச, சமூகச் சூழலும் இருந்திருக்க வேண்டும். அரச ஆதரவு இல்லாவிட்டால் எந்த இயக்கமும் வளரமுடியாது. சங்க காலத்தில் அரச ஆதரவும் பெருமளவில் தமிழ் வளர்ச்சியின் அடிநாதமாகவே இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறதல்லவா?

சங்க காலத்தில் அரசர்கள் பலர் புலவர்களாக விளங்கி இருந்திருக்கிறார்கள் என்பதை சங்கவரலாற்றால் அறியமுடிகிறது. அரசர்கள் புலவரை மதித்ததனர். புலவர்கள் அரசரை மதித்தனர். புலவர் வாயால் தான் பாடப்படவேண்டும் என்று அரசர்களிடத்து பேராவல் காணப்பட்டது. அறிவொழுக்கங்களில் சிறந்து விளங்கிய சங்ககாலப் புலவர்களைச் சான்றோர் என்றும் அவர்பாடிய செய்யுள்களைச் சான்றோர் செய்யுள் என்று சொல்லுவது தமிழ் வழக்காகும்.

சங்கப்புலவர்களால் பாடப்பட்ட பாட்டுக்கள் 2381. இவற்றைப் பாடிய பெயர் தெரிந்த புலவர்கள் என்றவகையில் 473 பேர் காணப்படுகின்றனர். அதே வேளை 102 பாட்டுக்களைப் பாடியவர்கள் பெயர்கள் தெரியவராது இருக்கிறது. 235 பாட்டு க்களை கபிலர் என்னும் புலவர் பாடியிருப்பதாகவும் அறிய முடிகிறது. இவற் றைவிட வேறு புலவர்கள் நால்வர் ஒவ்வொருவரும் நூற்றுக்கு மேற்பட்ட பாட்டுக்களைப் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாட்டுப்பாடியவர்கள் என்ற வகையிலும் புலவர்கள் சங்ககாலத்தில் வருகிறார்கள்.

நகரங்களைச் சார்ந்தவர்கள், சிற்றூர்களைச் சார்ந்தவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், பொன்வணிகர், ஆடைவணிகர், மருத்துவர், தச்சர், சோதிடர், பொற்கொல்லர், கொல்லர், சேனைத்தலைவர், அமைச்சர், பாணர், கூத்தர்  இவர்களுக்கிடையே இருந்தும் பலர் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். பல்  வேறு தொழில்களைப் புரிந்தவர்களும் புலவர்களாக விளங்கித்தமிழை வளம்படுத்தியிருக்கிறார்கள்.

பெண்களும் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். அரசர்களுள் புலமை மிக்கவர்களாக முப்பத்தொருவர் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.கோப்பெரு ஞ் சோழன், கிள்ளிவளவன், சோழன் நலங்கிள்ளி, பாண்டியன்நெடுஞ்செழியன் ஆகியவர்கள் புகழ்பெற்று விளங்கியுள்ளனர். புலவர்கள் அல்லாத அரசர்கள் —-  தங்களைப் புலவர்கள் பாடவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். புலவர்களால் பாடப்பெற்றுப் புகழுக்கு ஆளாகியவர்களுக்கே மறுமையில் தேவருலகம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையும் அவர்களிடத்துக் காணப்படடது. அதனால் கற்றறிந்த புலவோருக்கு உயிரிய இடத்தைச் சங்ககாலம் கொடுத்தது முக்கிய அம்சமாகத் தெரிகிறதல்லவா?

கற்றறிந்த புலவர்கள் கற்றதோடு நின்றுவிடாமல் — சாந்தி, சமாதானம், நல் உறவு, ஒற்றுமை இவற்றுக்காகவும் தமது நுண்ணறிவைப் பயன்படுத்தியும் இருந்திருக்கிறார்கள். இவர்களின் இந்தச் செயற்பாடு நமக்கெல்லாம் நல்ல ஒரு பாடமாக அமைகின்றது.

ஒரு அரசனுக்கு நாட்டு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கும் மரியாதை யும் இருந்ததோ அதே அளவுக்குப் புலவர்களுக்கும் இருந்தது. இதனால் அரசனிடம் சென்று எந்தவித அச்சமும் இன்றி தமக்கு மனதில் சரி என்று பட்டதைத் துணிவுடன் சொல்லும் வகையில் அக்காலப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். உண்மையென்று கண்டால் அதனை அரசனுக்கு எப்படியும் உரைத்துவிடுவார்கள். வாழ்த்தாயினும், பாராட்டாயினும் உரியவர்க்கே வழங்குவார்கள். பொருத்தமில்லாதவருக்கு ஒருபோதும் வழங்கவே மாட்டார்கள்.

இதனால் அரசர்கள் யாவரும் தம்மைப்புலவர்கள் பாடவேண்டும் என்னும் நோக்கோடு நல்லவற்றையே நாளும் செய்ய எண்ணுவர். வறுமையில் வாடினாலும், தக்கவரையே தமிழ்ப்புலவர் பாடினார்கள். அவர்களின் நாவில் வந்த தமிழுக்குத்தான் எவ்வளவு மரியாதை? எவ்வளவு உயர்வு? தமிழால் வைவதையும் வாழ்த்துவதையும் அக்காலச் சமுதாயம் பார்த்தது. வைதாலும் வாழ்த்தினாலும் அது வாழ்வில் பலிக்கும் என்னும் நம்பிக்கையும் திடமாக அவர்களிடத்தில் காணப்பட்டது. அந்த அளவுக்குத் தமிழ் மொழிக்கு ஆற்றல் இருந்ததை சங்காலம் நமக்கெல்லாம் காட்டி நிற்கிறது.

முடியுடை மூவேந்தர்களுக்கிடையிலும், அவர்களுக்கும் சிற்றசர்களுக்கும் இடையிலும் பிணக்குகள் வந்து போர்மூண்ட வேளை சமாதானத்தூதுவர்களாகப் பல புலவர்கள் விளங்கி பெரும்போரையே தவிர்க்கும் படி செய்தி ருக்கின்றார்கள்.

அதிகமான் என்னும் அரசனுக்காக ஒளவையார் தொண்டைமான் என்னும் அரசனிடம் துணிவுடன் சமாதானத்தூது சென்றுள்ளார்.சோழர்குடும்பத்தில் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையில் பெரும்பகை ஏற்பட்ட போது புலவர் கோவூர்கிழார் தலையிட்டுச் சமாதானப் படுத்தியுள்ளார். கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட வேளை, அது போராக மாறாமல் செய்தவர் புலவர் புல்லாற்றுர் எயிற்றனார்.

மலைநாட்டுத் தலைவனான பாரியோடு தமது வாழ்வைப் பிணைத்துக் கொண்டவர் பெரும்புலவர் கபிலராவார். பாரியின் இழப்பால் பரிதவித்த அவரின் புத்திரிகைகளை தாமே பாதுகாத்து அவர்களுக்கு மணம்முடித்த தையும் சங்க இலக்கியம் காட்டி நிற்கிறது.

அரசர்களிடம் நட்புரிமை பாராட்டி அவர்களை நல்வழிப்படுத்தும் மிகப் பெரிய கைங்கரியத்தை சங்கப்புலவர்கள் தமது தமிழ்ப்புலமையினால் செய்திருக்கிறார்கள். பொருத்தமான அறிவுரைகளை அவர்கள் அரசர்களுக்கு வழங்கி இருந்திருக்கிறார்கள். பிசிராந்தையர் என்னும் புலவர் அறிவுடைநம்பி என்னும்பாண்டிய மன்னனுக்குக் கூறிய அறிவுரை எப்படி இருக்கிறது பாருங்கள்.

“காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
 மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்
 நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
 வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
 கோடியாத்து நாடுபெரிது நத்தும்
 மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
 வரிசை அறியார் கல்லென் சுற்றமொடு
 பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
 யானைபுக்க புலம் போலத்
 தானும் உண்ணான் உலகம் கெடுமே”

ஒரு நாட்டை ஆளும்அரசன் மக்களிடம் எவ்வாறு வரியை அளவிடவேண்டும் என்று இந்தப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.ச ங்கப்பாடலாக இருந்தாலும் இதில் சொல்லப்படும் கருத்து இக்கால அரசாங்களுக்கும் மிகவும் பொருத்த முடையதாகவே இருக்கிறது.

வயலில் விளைந்த முற்றிய நெல்லை அறுவடைசெய்து அதனை அரிசியாக்கி உணவு செய்துகொடுத்தால்… சிறிதளவு நெல்லும் யானைக்குப் பலநாளுக்கு உணவாகிவிடும். அதைவிடுத்து யானை தானே வயலுக்குள் சென்று நெல்லை தின்னத்தொடங்கினால், நூறுவயல்கள் ஆனாலும் யாவும் அழிந்தே போய்விடும். வாயில் உணவாகிப் போவதைவிட காலினால் அழிவு படுவதே மிகுதியாகிவிடும். அறிவுள்ளஅரசனும் குடிகளிடம் முறையாக வரியை விதித்தால்  மக்களும் வாழ்வார்கள். அரசாட்சியும் நல்லபடி அமையும். அதைவிடுத்து பேராசையுடன் மக்களை வதைத்து வரியைப் பெற்றால் யானை புகுந்த வயலாகவே மாறிவிடும் நாடு. நாடும் வளம் பெறாது. நாட்டுமக்களும் நலன்பெறமாட்டார்கள். மிகவும் முக்கியமான செய்தியை இதைவிட இலகுவாகச் சொல்லிவிட முடியாது அல்லவா? அதனாலத்தான் சங்கத்தமிழை நினைக்க வேண்டியிருக்கிறது.

அரசாங்கங்கள் நல்லாட்சி புரியாவிட்டால் நாடும் மக்களும் என்ன செய்வது? மோசிகீரனார் என்ற புலவர் மிகவும் சுருக்கமாக தருகின்ற அறி வுரையைப் பாருங்கள்.
“உலகவாழ்க்கைக்கு அடிப்படையானது, உயிரானது,… நெல்லும் அல்ல! நீரும் அல்ல ! நாட்டுக்கு உயிராக உள்ள ஆட்சி புரியும் அரசனே, அதனால் யான் இந்த நாட்டுக்கு உயிராக இருக்கிறேன் என்பதை உணர்ந்து நல்ல  முறையில் ஆட்சி புரிவது அரசனுடைய கடமையாகும்”  இந்த அறிவுரை எல்லா நாட்டுக்கும் பொதுவான ஒன்றல்லவா? உயர்ந்த தத்துவங்கள், உயர்ந்த உண்மைகள் எல்லாம் சங்கப்புலவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கப் படிக்க இப்படியும் தமிழில் இருக்கிறதா என்று எண்ணவே தோன்றும்.

“ஓரில் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உன்கண் பணிவார்ப்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே”
நிலையாமையைப் பற்றி மிகவும் எளிமையான வகையில் இதை விட எவராலும் சொல்லிவிட முடியுமா என்பது கேள்விக்குரியதே! இதுதான் சங்கத்தமிழும் சங்கப் புலவனின் சாமர்த்தியமும் எனலாம்.

இன்றைய வாழ்க்கை ஓட்டத்திலே ஒரே ஓட்டம்தான். மனத்திலே மகிழ்ச்சி குறைவு. எந்த நேரமும் ஒரே பதட்டம். படபடப்பு. இளமையிலேயே முதுமை வந்த மாதிரியான தோற்றம். நாடும் அப்படி. வீடும் அப்படி. ஆனால் சங்ககாலத்தில் ஒரு முக்கிய காட்சி இங்கே குறும்படம் போல காட்டப்படுகிறது பாருங்கள்.

இருவர் வழியில் சந்திக்கின்றனர். ஒருவர் மற்றவரின் தோற்றத்தைப் பார்த்ததும் அவரிடம் கேட்பதாக இந்தப் பாடல் அமைகிறது.
“யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் எனவினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே”

நரை இல்லை. மூப்பு இல்லை. இளமையுடன் இருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்கு எப்படி விடை சொல்லப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? இதனைப் பாடியவர் பிசிராந்தையர் என்னும் பெரும்புலவர். இது ஒரு மனநலம் சார்ந்த குறுந்திரைப் படமாக மனத்திலே ஓடுகிறதல்லவா?

பாண்டியர் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெரும்வழுதி மிகவும் அருமையான ஒரு செய்தியை க்காட்டுகின்றார் பாருங்கள்.
“உண்டால் அம்மைவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே “
தன்னலமே இல்லாமல் பிறர் நன்மையே நாடி உழைக்கும் சான்றோர்கள் இருப்பதால்த்தான் இந்த உலகம் இருக்கிறது என்று சொல்லி அத்தகையவர்களின் பண்புகளை எல்லாம் இப்பாடல் எடுத்துக்காட்டி எமக்கெல்லாம் நல்ல ஒரு வாழ்க்கைப் பாடத்தை போதிக்கிறது எனலாம்.

தமிழனது உயர்வினை உலகம் முழுவதும் தெரியப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைகின்றது. கணியன் பூங்குன்றனாரின் மனத்தில் உதித்த இக்கருத்து தமிழனும் தமிழ் இனமே தரணியில் உயர்ந்து நிற்க வைத்திருக் கிறது என்பதில் யாது ஐயம் இல்லை எனலாம். ஐக்கிய நாடுகள் சபையிலே உரத்து ஒலித்த பாடல் இதுவே ஆகும்.
“யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்ரலும் இலமே மின்னோடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படுஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே “
இப்படி ஒரு ஆழமான அர்த்தம் நிரம்பிய பாட்டை தமிழைத்தவிர வேறு எந்த மொழியிலும் காணவே முடியாது எனலாம்.

” யாதும் ஊரே யாவரும் கேளீர் “

இப்படிச்சொல்லும் பரந்த நோக்கு தமிழினத்துக்குத்தான் இருக்கிறது என்பதை எங்கள் சங்கப் புலவன் தங்கத்தமிழ்கொண்டு உலகம் விழிப்படையச் சொல்லிச் சென்றுள்ளான். சங்கதமிழும் சங்கப் புலவனும் இல்லாவிட்டால் எங்கள் நிலை என்ன? எங்கள் உயர்வை பெருமையை உலகுக்கு பறை சாற்றும் பணியை சங்கப் புலவர்களின் தமிழல்லவா செய்திருக்கிறது. எனவே எங்களை வழிநடத்தும் சங்கப்புலவர்களையும் அவர்தம் அரிய படைப்புக்களான சங்கத்தமிழ் நூல்களையும் நினைத்துப் பார்க வேண்டும். நினைத்துப் பார்க்கும் பொழுது தான் நாங்கள் தமிழர்களாக தலை நிமிர்ந்து நிற்போம்.

வாழ்க தமிழ் மொழி! வளர்க தமிழ் மொழி!

படம் உதவிக்கு நன்றி: http://www.chennaizoom.com/tamil/img/sanka_kalam.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *