கம்பனும் வால்மீகியும் – இலக்கிய ஒப்பீடு 3

ஒரு அரிசோனன்

சென்ற இரு ஒப்பீடுகளில் கம்பனும், வால்மீகியும் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதைக் கண்டோம்.  இந்த ஒப்பீட்டில் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்வதைப் பற்றிக் கண்ணுறுவோம். இவண், மரபுப் பண்பாடு மாற்றம் மிக நன்றாகவே தெரிகிறது. அது மட்டுமன்றி, சீதையின் வாக்குத் திறனும் புலனாகிறது.

 வால்மீகி ஆரண்ய காண்டத்தில், நான்கு சர்க்கங்களில் (46-49), 130 குறள் பாக்களில் (260 வரிகள்), இராவணன்-சீதையின் வாக்கு வாதத்தை எழுதி உள்ளார்.

அக்காட்சியே, சடாயு உயிர் நீத்த படலத்தில் 53 விருத்தப் பாக்களில் (212 வரிகள்) கம்பனால் தீட்டப் பட்டிருக்கிறது. இருவரின் கைவண்ணமுமே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகிறது.

சீதை சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொன்னதால் மனம் உடைந்த இலக்குவன், இராமன் சென்ற இடம் நோக்கிச் சென்றான்.  சீதை தனியாக விடப்பட்டாள். அது கண்டு, இராவணன் ஒரு துறவியைப் போல வேடம் அணிந்துகொண்டு, சீதை இருக்கும் பர்ணகசாலையை அடைந்தான்.

வால்மீகியின் ஆரண்ய காண்டத்தின் 46வது சர்க்கத்தில் துவங்குவோம்:

संदृश्य न प्रकंपन्ते न प्रवाति च मारुतः |

शीघ्र स्रोताः च तम् दृष्ट्वा वीक्षंतम् रक्त लोचनम् || ३-४६-७

स्तिमितम् गंतुम् आरेभे भयात् गोदावरी नदी |

ஸந்த்ருஷ்ஸ்ய ந ப்ரகம்பந்தே ந ப்ரவாதி ச மாருத: |

ஸீக்ர ஸ்ரோதா: ச தம் த்ருஷ்ட்வா வீக்ஷந்தம் ரக்த லோசனம் || 3-46-7

ஸ்திதமிதம் கந்தும் ஆரேபே பயாது கோதாவரீ நதீ |

அவனைக் கண்ட காற்றும் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. குருதிச் சிவப்பான கண்களை உடைய அவனைப் பார்த்த அச்சத்தால் வேகமாகச் செல்லும் கோதாவரி ஆறும் மெல்லச் செல்ல ஆரம்பித்தது. – 3.46.7

अभ्यवर्तत वैदेहीम् चित्राम् इव शनैश्चरः |

सहसा भव्य रूपेण तृणैः कूप इव आवृतः || ३-४६-१०

அப்யவர்த்தத வைதேஹீம் சித்ராமிவ சனைச்சர: |

ஸஹஸா பவ்ய ரூபேண த்ருணை: கூப இவ ஆவ்ருத: || 3-46-10

புற்களால் மறைக்கப்பட்ட கிணறுபோல, தகுந்த (துறவி) வேடத்தில் (மறைத்துக்கொண்டு), சித்திரையில் (தோன்றும்) சனியைப்போல வைதேகி முன்னால் சென்றான். – 3.46.10

दृष्ट्वा काम शर आविद्धो ब्रह्म घोषम् उदीरयन् |

अब्रवीत् प्रश्रितम् वाक्यम् रहिते राक्षस अधिपः || ३-४६-१४

த்ருஷ்ட்வா காம ஸ’ர ஆவித்தோ ப்ரஹ்ம கோஷம் உதீரயன்னு |

அப்ரவீது பிரஸ்ரிதம் வாக்கியம் ரஹிதே ராக்ஷசம் அதிப: || 3-46-10

ताम् उत्तमाम् त्रिलोकानाम् पद्म हीनाम् इव श्रियम् |

विभ्राजमानाम् वपुषा रावणः प्रशशंस ह || ३-४६-१५

தாம் உத்தமாம் த்ரிலோகானாம் பத்மஹீனாமிவ ஸ்ரியம் |

விப்ராஜமானாம் வபுஷா ராவண: பிரஸ’ஸ’ம்ஸ ஹ || 3-46-15

காமனின் அம்புகளால் அடிக்கப்பட்ட அரக்கர் தலைவன் தனியளான (சீதையைப்) பார்த்துவிட்டு, பிரம்ம கோஷங்களை (வேதங்களை) முழங்கிக்கொண்டு, மரியாதையான சொற்களைச் சொன்னான். மூன்று உலகங்களிலும் சிறந்தவளும், தாமரை இல்லாத (தாமரையில் நிற்காத) இலக்குமியைப் போன்ற அவளின் உடலை முன்னும் பின்னுமாக (முன்னழகையும், பின்னழகையும்) இராவணன் புகழ்ந்தான். – 3.46.14-15

…இராவணன் பதினோரு சுலோகங்களில் சீதையின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் கொச்சையாக வர்ணிக்கிறான். அதன் பிறகு, நான்கு சுலோகங்கள் மூலமாக தன்னந்தனியளாக ஏன் சீதை இருக்கிறாள் என்று கேட்கிறான்….

द्विजाति वेषेण हि तम् दृष्ट्वा रावणम् आगतम्  |
सर्वैः अतिथि सत्कारैः पूजयामास मैथिली || ३-४६-३३

த்விஜாதி வேஷேண ஹி தம் த்ருஷ்ட்வா ராவணம் ஆகதம் |

ஸர்வை: அதிதி ஸத்காரை: பூஜயாமாஸ மைதிலீ || 3-46-33

प्रसह्य तस्या हरणे धृढम् मनः समर्पयामास आत्म वधाय रावणः || ३-४६-३७

பிரஸஹ்ய தசா ஹரணே த்ருடம் மன: ஸமர்ப்பயாமாஸ ஆத்ம வதாய ராவண: || 3-46-37

ब्राह्मणः च अतिथिः च एष अनुक्तो हि शपेत माम् |

इति ध्यात्वा मुहूर्तम् तु सीता वचनम् अब्रवीत् || ३-४७-२

ப்ராஹ்மண: ச அதிதி: ச ஏஷ அனுக்தோ ஹி சபேத மாம் |

இதி த்யாத்வா முஹூர்த்தம் து சீதா வசனம் அப்ரவீது || 347-2

இருபிறப்பாளரின் (அந்தணரின்) வேடத்திலேயே வந்த அந்த இராவணனைப் பார்த்த மைதிலி, எல்லாவிதமான விருந்தினர் உபசாரத்துடன் பூசித்தாள்.  – 3.46.33

இராவணன் அவளைக் கட்டாயப்படுத்திக் கடத்தவேண்டுமென்ற உறுதியைத் தன் அழிவிற்காக மனதில் அர்ப்பணித்தான். – 3.46.37  

மறையவராகவும் விருந்தினராகவும் (இருக்கும்) இவர் பதில் கூறாமல் இருந்தால் என்னைச் சபித்து விடுவார் என்று சிறிது நேரம் சிந்தித்த சீதை பதில் சொன்னாள்.  – 3.47.2

…மிதிலையின் அரசமுனி ஜனகனின் மகள் சீதை தான் என்றும், பேரரசன் தசரதனின் மைந்தன் இராமனை மணமுடித்து, அயோத்தியில் பன்னிரண்டு ஆண்டுகள் இனிது வாழ்ந்ததையும், கைகேயின் சொற்கேட்டு, தசரதன் இராமனை பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வருமாறு பணித்ததால், தனது கணவன் இராமன், தான், மற்றும் இளையோன் இலக்குவன் கங்கையைத் தாண்டி தண்டகாரண்யம் வந்ததையும், பொன்மானைப் பிடிக்க இராமன் சென்றதையும், சீதை வாய்மொழியாக இருபது சுலோகங்களால் வால்மீகி வரைந்திருக்கிறார்…

आगमिष्यति मे भर्ता वन्यम् आदाय पुष्कलम् |

रुरून् गोधान् वराहान् च हत्वा आदाय अमिषान् बहु || ३-४७-२३

ஆகமிஷ்யதி மே பர்த்தா வந்யம் ஆதாய புஷ்கலம் |

ருருனு கோதானு வராஹானு ச ஹத்வா ஆதாய அமிஷானு பஹு  || 347-23

सः त्वम् नाम च गोत्रम् च कुलम् आचक्ष्व तत्त्वतः |

एकः च दण्डकारण्ये किम् अर्थम् चरसि द्विज || ३-४७-२४

ஸ: த்வம் நாம ச கோத்ரம் ச குலம் ஆசக்ஷ்வ தத்த்வத: |

ஏக: ச தண்டகாரண்யே கிம் அர்த்தம் சரஸி த்விஜ || 347-24

என் கணவர் காட்டிலிருந்து நிறையக் கருவரி மான்கள், கீரிப்பிள்ளைகள் (போன்ற மிருகங்கள்), பன்றிகளையும் கொன்று, நிறைய இறைச்சி எடுத்துக் கொண்டு வருவார்.  இருபிறப்பாளரே (அந்தணரே), உண்மையில் உமது பெயரையும், கோத்திரத்தையும், குலத்தையும், தெளிவு படுத்துவீராக;  தண்டகாரண்யத்தில் தனியாக எதற்காக அலைகிறீர்? – 3.47.23&24

…தான் அரக்கர்கோன் இராவணன் என்றும், கடலின் நடுவில் உள்ள இலங்கைக்கு அரசன் என்றும், அழகுள்ள பல மனைவியர் இருந்தும், அவளிடம் தான் மனதைப் பறிகொடுத்ததாகவும்,  அவள் தன்னுடன் வந்தால், அனைவருக்கும் தலைவியாக ஆக்குவதாகவும், (9 சுலோகங்கள்) ஆசை காட்டுகிறான்.  அதனால் கோபம் அடைந்த சீதை.பதினேழு சுலோகங்களில் தான் இராமனின் கற்புள்ள மனைவி என்றும், தன் கணவனின் பெருமையைப் பற்றியும், இராவணனால் தன் கணவரை வெற்றி கொள்ள இயலாது என்றும், இந்திரனின் மனைவி சசிதேவியைக் கடத்திச் சென்றாலும் ஒருவேளை அவனிடமிருந்து தப்பிவிடலாம், ஆனால் இராமனிடமிருந்து அவன் தப்ப இயலாது என்றும் அறிவிக்கிறாள். இபாடி ஒரு அரக்கனிடம் தனியாகச் சிக்கிகொண்டோமே என்று…

गात्र प्रकंपात् व्यथिता बभूव वात उद्धता सा कदली इव तन्वी || ३-४७-४९

காத்திர பிரகம்பாது வ்யதிதா பபூவ வாத உத்ததா கதலீ இவ தன்வீ || 347-49

…காற்றினால் வீழ்த்தப்பட்ட வாழைமரத்தைப் போல உடல் நடுங்கி சித்திரவதைக்கு உள்ளானாள் (சீதை).  – 3.47.49

…குபேரனின் மாற்றாந்தாய் மகனான தான் மிகுந்த பலவான் என்றும், மானிடனான இராமன் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும் இராவணன் தற்பெருமை பேசுவதாக நாற்பத்திஎட்டாம் சர்க்கத்தில் 19 சுலோகங்களில் விளக்குகிறார் வால்மீகி….

कथम् वैश्रवणम् देवम् सर्व देव नमस्कृतम् |

भ्रातरम् व्यपदिश्य त्वम् अशुभम् कर्तुम् इच्छसि || ३-४८-२१

கதம் வைஸ்’ரவணம் தேவம் சர்வ தேவ நமஸ்க்ருதம் |

ப்ராதரம் வ்யப்திஸ்’ய த்வம் அசுபம் கர்த்தும் இச்சஸி || 348-21

அதைக் கேட்ட சீதை, “எல்லா வானவர்களாலும் வணங்கப்படும் தேவனான வைஸ்ரவனை (குபேரனை) உடன்பிறப்பு என்று அறிவித்துக்கொண்டே, நீ எப்படி நலமில்லாததைச் (தீய செயலை) செய்ய விரும்புகிறாய்?” என்று கோபிக்கிறாள்.  – 3.48.21

…அதனால் சினமடைந்த இராவணன், தனது அரக்க உருவத்தைக் காட்டி, (12 குறட்பாக்களில்) தற்பெருமை பேசுகிறான். அதன் பிறகு சீதையின் சொற்களால் மிகவும் கோபம் அடைந்து, தனது பெரிய வடிவத்தை எடுக்கிறான். தனது பலத்தால் எதையும் அழிக்கும் ஆற்றல் தனக்கு இருக்கிறது என்று மார் தட்டுகிறான். அந்தண வடிவை விட்டுவிட்டு, பத்து தலையுடனும், இருபது கைகளுடனும் காட்சி அளிக்கிறான்…

जग्राह रावणः सीताम् बुधः खे रोहिणीम् इव || ३-४९-१६

ஜக்ராஹ ராவண: சீதாம் புத: க்கே ரோஹிணீம் இவ || 349-16

वामेन सीताम् पद्माक्षीम् मूर्धजेषु करेण सः |

ऊर्वोः तु दक्षिणेन एव परिजग्राह पाणिना || ३-४९-१७

வாமென சீதாம் ப்த்மாக்ஷீம் மூர்த்தஜெஷு கரேண ஸ: |

ஊர்வோ: து தக்ஷிணேன ஏவ பரிஜக்ராஹ பாணினா || 349-17

तम् दृष्ट्वा गिरि शृंग आभम् तीक्ष्ण दंष्ट्रम् महा भुजम् |

प्राद्रवन् मृत्यु संकाशम् भय आर्ता वन देवताः || ३-४९-१८

தம் த்ருஷ்ட்வா கிரி ஸ்ருங்க ஆபம் தீக்ஷ்ண தம்ஷ்ட்ரம் மஹா புஜம் |

ப்ராத்ரவன்னு ம்ருத்யு ஸங்காஸ’ம் பய ஆர்த்தா வன தேவதா: || 349-18

புதன் ரோகிணியைப் பிடித்தது போல, இராவணன் சீதையைப் பற்றினான். அவன் தாமரையைப் போன்ற கண்களை உடைய சீதையின் கூந்தலை இடது கையாலும்,, வலது கையினால் தொடைகளின் பின்புறத்தையும் பிடித்தான். நீண்ட கோரைப் பற்கள் உள்ளவனும், பெரிய புஜங்கள் உடையவனும், காலனைப் போன்றவனுமான அவனைப் பார்த்துப் பயந்து வனத்தின் தெய்வங்கள் விரைந்தோடின.  – (3.49.16-18)

…அப்படியே சீதையைத் தனது புஷ்பக விமானத்தில் இராவணன் கவர்ந்து சென்றான் என்கிறார் வால்மீகி…

சடாயு உயிர்நீத்த படலத்தில் கம்பநாட்டார் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதைக் காதுறுவோம்:

 

ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன்

சேண் நெறி வந்தது ஓர் வருத்தச் செய்கையன்

பாணியின் உழந்து இடைப் படிக்கின்றான் என

வீணையின் இசைபட வேதம் பாடுவான்.  – 3-823

உணவே இல்லாதவன் போல மெலிந்த உடல் உடையவன்; நீண்ட தூரம் வந்ததால் துயர் அடைந்து, தாளத்திற்கு ஏற்றவாறு பாடுவதைப்போல வீணையின் இசையைப்போன்ற குரலில் (சாம)வேதத்தைப் பாடினான்.

இவ்வாறு தவசியின் வேடத்தைப் புனைந்த இராவணன் தூய்மையான மனமுடைய அருந்ததிக்கு இணையான கற்புடைய சீதை இருந்த இடத்தை அடைந்து நாக்குழற, “இங்கு இருப்பது யார்?” என்று கேட்டான்.

தோகையும் அவ் வழி தோம் இல் சிந்தனைச்

சேகு அறு நோன்பினர் என்னும் சிந்தையால்

பாகு இயல் கிளவியாள் பவளக் கொம்பர் போன்று

ஏகுமின் ஈண்டு என எதிர் வந்து எய்தினான்.  – 3.827

குற்றமற்ற நினைவு உடையவர் ஆறு (விதமான) நோன்புகளைச் செய்பவர் (அந்தணர்) என்ற நினைப்பால், (சர்க்கரைப்) பாகு போன்ற மொழியுடையவுளும், தோகை மயிலைப் போன்றவளும், பவளக்கொடி போல இருந்த (சீதை), இங்கு வாருங்கள் என்று (அழைக்கவும்), எதிரே வந்து நின்றான்.

சீதையின் அழகில் மயங்கிய இராவணன், தன்னை மறக்கிறான். தான் பெற்ற நீண்ட ஆயுளும், இருபது கண்களும் சீதையின் அழகைக் கண்டு களிக்கப் போதாது என்று மறுகுகிறான்.  மூன்று உலகத்தில் இருக்கும் அனைவரும் இவளுக்கு தொண்டு செய்யும்படி செய்வேன்.  இவள் காலடியில் விழுந்து கிடப்பேன், இவளைப் பற்றிச் சொன்ன என் தங்கை சூர்ப்பனகைக்கு என் அரசைத் தந்து விடுவேன் என்று பகல் கனவு காண்கிறான்.  அந்தணன் வேடத்தில் வந்த அவனுக்கு பிரம்பினால் செய்த ஆசனத்தை அளித்து உபசரிக்கிறாள் சீதை….

நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து

அடங்கின பறவையும் விளங்கும் அஞ்சின

படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதகக்

கடுந்தொழில் அரக்கனைக் காணும் கண்ணினே.  – 3.837

மற்றவர்களுக்குக் தீமை விளைவிக்கும் கொடிய செயல்களைச் செய்யும் அரக்கன் (இராவணனைக்) கண்ட உடனே, மலைகளை கூட நடுங்கின.  (காற்றில் இலைகளை அசைத்து ஒலி எழுப்பிக் கொண்டு இருக்கும்) மரங்களும் பேச முடியாமல் அடங்கிப் போய்விட்டன.  பரவைகளும், (காட்டில் இருக்கும்) மிருகங்களும் பயந்து (அமைதியாகி விட்டன).  படம் எடுத்து ஆடக்கூடிய பாம்புகளும், (படத்தை) குறுக்கிக்கொண்டு ஒதுங்கி (ஒளிந்து) கொண்டன.

 ..இராவணன் சீதையிடம் அவளைப்பற்றிக் கேட்கிறான். சிற்றன்னையின் சொல்லை நிறைவேற்றுவதற்காகக் கானகம் வந்திருக்கும் தனது கணவர், தம்பியுடன் தானும் வந்திருக்கிறேன் என்று பதில் சொல்கிறாள் சீதை.  அவன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று வினவுகிறாள். அதிற்கு எட்டு விருத்தப் பாக்களில் இராவணன் பதில் அளிப்பதாகச் சொல்கிறார் கம்பர். துறவி வேடம் பூண்ட அரக்கர் தலைவன், தான் இராவணின் தலை நகரான இலங்கையில் நீண்ட காலம் இருந்து விட்டுத் திரும்பியதாகக் கூறுகிறான்.  திருக்கயிலை மலையையே பெயர்த்து எடுத்தவன் இராவணன், படைக்கும் கடவுளான பிரம்மனின் குளத்தில் தோன்றியவன், மிகவும் அறிவாளி, பலசாலி, சிவபெருமான் தந்த வாளைப் பெற்றவன், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான் என்று சீதையிடம் தன்னைப்பற்றியே பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான். அதைக் கெட்ட சீதை…

வேதமும் வேதியர் அருளும் வெஹ்கலா

சேதன மன்னுயிர் தின்னும் தீவினைப்

பாதக அரக்கர்தம் பதியின் வைகுதற்கு

ஏகு என் உடலமும் மிகை என்று எண்ணுவீர்.  —  3.851

“என் உடம்புகூட துறக்கப்பட வேண்டிய ஒன்று என்று நினைக்க வேண்டிய (துறவியான) நீங்கள், வேதங்களையும், வேதியர் (வேதத்தைக் தந்த சிவபெருமானின்) அருளையும் வேண்டித் (தவம்) புரியாமல், ஆறறிவு உடைய மனிதர்களைத் உண்ணகூடிய தீய செயல்களைச் செய்கின்ற பாவிகளான அரக்கர்களின் நகரத்தில் தங்குவதற்காக எதற்காகச் சென்றீர்கள்?” என்று கேட்கிறாள்.

…நீங்கள் மிகவும் தவறான செயலைச் செய்து விட்டர்கள் என்று அவனைக் கடிந்து கொள்கிறாள்.  சீதை தன்மீது சந்தேகம் கொள்கிறாள் என்று இராவணன் அறிந்து கொள்கிறான்.  எனவே, மனிதர்களைப் புசிப்பது  அரக்கர்களின் இயல்பு, நாம் என்ன செய்ய முடியும் என்று அதற்குச் சமாதானம் சொல்கிறான். அதை சீதை ஒப்புக் கொள்ளாமல் அவனுடன் வாதம் செய்கிறாள்.  இருவரும் தங்கள் பக்கமே சரி என்று விவாதம் செய்கிறார்கள்.

அரண் தரு திரள் தோள் சால வள எனின் ஆற்றல் உண்டோ

கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன்

திரண்ட தோல் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்தன்னில்

இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள்.  —  3.863

மதில்கள் போன்று பாதுகாப்புத் தருகின்ற சிறந்த தோள்கள் பல இருந்தால் மட்டும் வலிமை உண்டாகி விடுமா?  நீர்க் காக்கைகள் மிகுந்த இலங்கையின் அரசனை (இராவணனை) வீரக் கழல்கள் (சிலம்புகள்) அணிந்த வீரன் (கார்த்த வீர்யார்ச்சுனன்) சிறைப் பிடித்தான்.  (அப்படிப்பட்ட கார்த்த வீர்யார்ச்சுனனின்) காட்டு மரங்கள் போன்ற (ஆயிரம்) பலம் பொருந்திய தோள்களை, இரண்டே தோள்கள் கொண்ட ஒருவன் (பரசுராமன்)தான் கோடாரியால் வெட்டி எறிந்தான் என்று கேட்டாள்

…அதனால் கடும் கோபம் கொண்ட இராவணன், தனது துறவி வேடத்தை நீக்கிவிட்டு, தனது இயல்பான அரக்க உடலை எடுத்துக் கொள்கிறான்.  சீதை அதைக்கண்டு பயப்படுகிறாள் “என்னை இவ்வாறு தூற்றிய எவரையும் நான் கொன்று தின்று விடுவேன். நீ பெண் என்பதால் உன்னை விட்டு விடுகிறேன்.  நீ என்னுடன் வந்துவிடு, உன்னை மிகவும் சிறப்பாக வைத்துக் கொள்கிறேன்” என்று கூறுகிறான்…

புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்குஎரி புனிதர் ஈயும்

அவியை நாய் வேட்டதென்ன என் சொனாய் அரக்க என்னா.  —  3.869

“இந்த உலகத்தில் ஒழுக்கமாக இருப்பதை விரும்ப மாட்டாய்; பெரிதாக எரிகின்ற (யாக அக்னியில்) தூயவர்கள் இடப்போகும் ஆகுதியை நாய் விரும்புவதைபோல எத்தகைய (இழிவான சொற்களைச்) சொல்கிறாய், அரக்கா?” என்று கேட்டாள்.

… என் கணவர் இராமனின் கூரிய அம்புகள் உன் மீது பாய்வதற்கு முன் இங்கிருந்து ஓடிப்போய் உன் இலங்கையில் ஒளிந்துகொள் என்று சிறிதும் அஞ்சாமல் சீறி எழுகிறாள் சீதை.  அதைப் பொருட்படுத்தாமல், இராமனின் அம்பு என்னை ஒன்றும் செய்யாது. என்னை ஏற்றுக்கொள் என்று தரையில் விழுந்து அவளை வணங்கிக் கேட்கிறான் இராவணன்.  தன்னை இந்த இக்கட்டான் நிலைமையில் இருந்து காக்குமாறு இராமனையும், இலக்குவனையும் சீதை, கூவி அழைக்கிறாள்…

ஆண்டு ஆயிடை தீயவன் ஆயிழையைத்

தீண்டான் அயன் முன் உரை சிந்தைசெயா

தூண்தான் எனல் ஆம் உயர்தோள் வலியால்

கீண்டான் நிலம் யோசனை கீழ்ப் புடையே.  —  3.874

முன்காலத்தில் பிரம்மா கொடுத்த (சாபச்) சொற்களை நினைவில் கொண்டு, அப்பொழுது தீயவனான (இராவணன்), நூலைப்போன்ற இடையுடைய (சீதையை)த் தொட வில்லை.  தூண்கள் போன்ற உயர்ந்த தோள்களின் வலிமையால், (சீதையையும் சேர்த்து ஒரு) யோசனை அளவுக்கு நிலத்தைத் தோண்டி எடுத்தான்.

அதனால் மயக்கம் அடைந்த சீதையை, தான் தோண்டி எடுத்த நிலத்துடன் புஷ்பக விமானத்தில் எடுத்துச் சென்றான் என்று எடுத்துரைக்கிறார் கம்பர்.

ஒப்பீடு

 

துவக்கம் ஒரே மாதிரி இருந்தாலும், வால்மீகியும், கம்பனும் இந்நிகழ்ச்சியைக் கூறியிருப்பதில் நிறைய மாற்றமிருக்கிறது.  எனவே, மாற்றங்கள் என்ன என்று பார்ப்போம்.

  1. மிகப் பெரிய மாற்றம், இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் முறைதான். சீதையின் தலை மயிரை ஒரு கையாலும், தொடைகளின் பின்புறத்தை இன்னொரு கையாலும் பிடித்துத் தூக்கிச் சென்றான் என்று வால்மீகி எழுதி உள்ளார்.  ஆனால், ஒரு யோசனை நிலத்தை அகழ்ந்து, சீதையைக் கவர்ந்தான் என்று கம்பர் குறிப்பிடுகிறார்.  “அயன் முன் உரை சிந்தைசெயா தீயவன் ஆயிழையைத் தீண்டான்”, அதாவது, பிரம்மா முன்நாளில் அளித்த சாபத்தைக் கருதியே, சீதையைத் தீயவனாகிய இராவணன் தொடவில்லை என்று எழுதி இருக்கிறார்.

கற்பில் சிறந்த சீதையை இராவணன் தொட்டுத் தூக்கிச் செல்வதைத் தமிழ் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், எனவே, மரபு காரணமாக கம்பர் இராவணனுக்கு ஒரு சாபம் இருந்தது என்று கம்பர் புனைந்து விட்டார் என்று எண்ணிவிடக் கூடாது.  அந்த சாபத்திற்கு ஆதாரத்தை அவர் வால்மீகியின் வடமொழி மூலத்திலிருந்துதான் பெற்றிருக்கிறார். யுத்த காண்டத்தில், பதிமூன்றாம் சர்க்கத்தில், பத்திலிருந்து பதினைந்தாம் சுலோகங்களில் அதை இராவணனின் வாய்மொழியாகவே, வால்மீகி எழுதிருக்கிறார்.  மகாபார்ச்வனுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன் என்று இராவணன் தனது சாபத்தைப் பற்றிக் கூறுகிறான்.  புஞ்சிதஸ்தலை என்ற தேவகன்னிகையைத் தான் பலாத்காரம் செய்ததாகவும், அதை பிரம்மா அறிந்து மிகவும் கோபம் கொண்டு சபித்ததாகவும் சொல்கிறான்.

अद्यप्रभृति यामन्याम् बलान्नारीम् गमिष्यसि |

तदा ते शतधा मुर्धा फलिष्यति न संशयः || ६-१३-१४

அத்யப்ரபூதி யாமன்யாம் பலான்நாரீம் கமிஷ்யஸி |

ததா தே சததா முர்த்தா பலிஷ்யதி ந ஸம்சய: || 349-18

இன்றிலிருந்து எந்த பிற பெண்ணிடம் பலவந்தமாகச் செல்கிறாயோ (பலாத்காரம் செய்கிறாயோ), அப்பொழுது உன் தலை நூறாக வெடிக்கும், சந்தேகமில்லை.  —  6.13.14

இதற்குப் பயந்தே நான் சீதையைக் கட்டாயப்படுத்தித் தன் விருப்பத்திற்கு உள்ளாக்கவில்லை என்று இராவணன் தெரிவிக்கிறான்.  இந்த ஆதாரத்தையே, கம்பர் குறிப்பிட்டு, சீதையை, அத்தீயவன் தீண்டவில்லை என்று தமிழ் மரபுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார்.  இதிலிருந்து கம்பருக்கு வால்மீகி இராமாயணத்தில் இருந்த புலமையும், வடமொழித் திறனும் புலனாகிறது.

இருவருமே சீதையை கற்பில் சிறந்தவளாகத்தான் போற்றி இருக்கிறார்கள். இராவணன் சீதையை பலாத்காரமாகத் தூக்கித்தான் சென்றான், ஆனால் பலவந்தம் செய்யவில்லை என்பதை இராவணனின் மூலமாகவே வால்மீகி தெள்ளக் தெளிவாக்கி உள்ளார்.

அந்தணத் துறவியாக வேடம் அணிந்து வந்த இராவணனை சீதை வரவேற்று உபசரித்தாள் அரக்கரின் அரசன் சீதையை அங்கம் அங்கமாக, அவளிடமே வர்ணிக்கிறான் என்று வால்மிகி கூறியிருந்தாலும், ஒரு பெண்ணை, அவள் முன்னே அப்படி வர்ணிப்பது தமிழ் மரபாகாது என்று கம்பர் தவிர்த்து விடுகிறார்.

அதற்குப் பதிலாக, சீதையின் காலடியிலேயே விழுந்து கிடப்பேன், அவளைப் பற்றிச் சொன்ன தனது தங்கை சூர்ப்பனகைக்குத் தனது அரசையே பரிசளிப்பேன் என்று மனதிற்குள் மருகியதாக எழுதிவிடுகிறார்.

அரக்கன் அப்படித் தன்னை வர்ணித்தாலும், தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்றே சீதை அவனுக்குப் பதில் சொல்கிறாள் என்று வால்மீகி சொல்கிறார்.

கம்பர் சொல்லாத ஒரு செய்தியை வால்மீகி சீதையின் வாயிலாகத் தெரிவிக்கிறார். காட்டு மிருகங்களின் இறைச்சியை (மாமிசத்தை) என் கணவர் நிறையக் கொண்டு வருவார், அந்த உணவு கிடைக்கும் என்று தெளிவு படுத்திய பின்னரே, கள்ளவேடம் பூண்ட துறவியின் குலம், கோத்திரம் பற்றி வினவுவதாக எழுதி இருக்கிறார். இதன்மூலம், இராமாயண காலத்தில் அனைவரும் இறைச்சி உண்டார்கள் என்று புலனாகிறது.

ஆயினும், கம்பனுக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, திருவள்ளுவர் புலால் மறுத்தல், கள் உண்ணாமை போன்ற இரண்டு பண்புகளையும் வலியுறுத்தி இருக்கிறார். எனவே, மறையவர்கள், துறவிகள் மாமிசம் உண்ணுவது என்பது திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ் நாட்டில் இருந்திருக்க இயலாது. அதனாலேயே கம்பர் இவ்வாறு எழுதாமல் தவிர்த்திருக்கிறார்.

மேலும் புறநானூற்றில் எவர் வீட்டில் எப்படிப்பட்ட உணவு கிடைக்கும் என்பது பற்றிய பாட்டில், அந்தணர் வீட்டில், அரிசிச் சோறும், கீரையும் கிட்டும் என்று நான் படித்திருக்கிறேன். ஆகவே, இடத்திற்குத் தகுந்தவாறு உணவும் மாறுபட்டது. இன்றும் காஷ்மீர் பண்டிதர்கள் ஆட்டிறைச்சியும், வங்காள பிராமணர்கள் மீனும் உண்ணுகிறார்கள். ஆனால் தென்னிந்தியா, குஜராத், ராஜஸ்தானில் புலால் (இறைச்சி) அவர்களால் தவிர்க்கப்படுகிறது.

எனவே, வால்மீகியை ஆதாரம் காட்டி தவறாக யாரையும் பழிக்கக் கூடாது என்பதற்காகவே, சீதை வாய்மொழியான இந்த சுலோகம் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டது. எவர் மனத்தையும் புண்படுத்தவதற்காக அல்ல.

யார் என்று சீதை கேட்டதும், தன்னை இலங்கை மன்னன் என்றே அறிமுகம் செய்துகொள்வதாக வால்மீகி சொன்னாலும், கம்பர் அதை வேறுவிதமாகச் சொல்கிறார்.

இலங்கை மன்னனின் அரசவையில் சுகமாகக் காலம் கழித்து விட்டுத் திரும்பி வருவதாக அவன் சொல்வதாகக் கூறுகிறார்.  அதோடு மட்டுமல்லாமல், சீதையின் அறிவையும், வாதத் திறமையையும் கம்பர் வெளிப்படுத்துகிறார்.  தவசி வேடத்தில் இருந்த இராவணன், இலங்கை அரசனின் புகழை – அதாவது, தந்து புகழையே — பாடியதைக் கேட்டதும், “ஆறு நோன்புகளை மேற் கொள்ளவேண்டியவரும், யாக்கையின் (உடலின்) நிலையாமையை அறிந்த நீர் எப்படி மனிதரைத் தின்னும் அரக்கனை அண்டி இருந்தீர்?” என்று கேட்கிறாள். வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், வேள்விகளைச் செய்தல், மற்றவர்களுக்குச் செய்வித்தல், தானம் வாங்குதல், தனது அன்றாடத் தேவைக்கு மீந்ததை மற்றவர்க்குத் தானமாக அளித்தல் என்ற ஆறு நோன்புகளையும் அந்தணர்கள் செய்யவேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருக்கிறாள்; துறவிகளும், அந்தணர்களும் மற்றவர்களை அண்டியே இருக்கவேண்டும் என்றாலும், நல்லவர் அல்லாதோரை அண்டி இருக்கக் கூடாது என்ற அறிவுரையையும், ஒரு துறவிக்குச் சுட்டிக்காட்டத் தயங்காதவளாகவே சீதை கம்பரால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறாள்.

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள்.  வாதிட்ட விதம்தான் மாறி உள்ளது.

எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார்.

ஆனால், உடல் வலிமை பயனற்றது, உன்னை ஆயிரம் கை கொன்ற கார்த்தவீர்யாஜுனன் சிறைப் பிடித்தான், அவனை இரண்டே தோள் கொன்ற பரசுராமன் வெட்டித் தள்ளினார் என்று இராவணனின் வரலாற்றையும், கார்த்தவீர்யாஜுனனின் வரலாற்றையும் சொல்லி அவனை எள்ளி நகையாடுகிறாள்.

சீதையின் சீரிய கல்வி அறிவை இதன்மூலம் நமக்குக் கம்பர் புலப்படுத்துகிறார்.  அதுமட்டுமல்ல, வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். அவளது வீர்த்திற்கு அடி பணிந்து என்னை ஏற்றுக்கொள் என்று அவள் காலிலேயே இராவணன் விழுகிறான் என்று சீதியின் கற்புச் செருக்கை ஏத்தி இருக்கிறார் கம்பநாட்டார்.

இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்.

சீதையின் அந்தத் துணிச்சலை, இராவணன் அழிவுக்குப் பின்னர், இராமனுக்கும் சீதைக்கும் இடையில் நடக்கும் உரையாடலை, அடுத்த ஒப்பீட்டில் காண்போம்.

 

=====================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.