இசைக்கவி ரமணன்

trees cityscapes rain houses couple leonid afremov artwork parks umbrellas rivers_www.wallpaperhi.com_55

மழையின் இழைகள் ஒன்றுக்கொன்று
பேசிக்கொண்ட ரகசியங்களை
மவுனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மரங்கள்
இலைகளின் நுனிவரை எழுதிவைத்துக் கொண்டன

நனைந்த இரவின் கருத்த தெருவில்
அளைந்த கால்களுடன்
பிணைந்த விரல்களுடன்
இணைந்து ஒசிந்த தேகங்களுடன்
இடையறாத தாகங்களுடன்
நீயும் நானும்

ஒரு குடைக்கீழ் கலந்த
இரண்டு இதயங்களின்
கொஞ்சலில் கொஞ்சம்
உறக்கம் கலைந்து துணுக்குற்றன
ஒற்றைக் காலில் கண்களை இறுக
மூடி நின்ற மைனாக்கள்

இங்குமங்கும் பார்த்த மரங்கள்
இனிமேல் தாங்க முடியாதென்று
இவர்கள்தான் சரியென்று
இலைகளிலிருந்து ரகசியங்களை
மல்லிகை மொட்டுக்கள் போல்
குடையின் மீது கவிழ்த்தன
ஒன்றிரண்டு மஞ்சள் மலர்களும்
ஒட்டிக்கொண்டுதான் வந்தன

குடைக்குக் கீழே நமது ரகசியங்கள்
குடைக்கு மேலே மழையின்
மரம்நனைந்த இலைசுமந்த ரகசியங்கள்

ரகசியங்களும் ரகசியங்களும்
சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?

நீயும் நானும் சந்தித்தது போல்தான்
இருக்குமென்று பேசிக்கொண்டார்கள்
பாதி நிலா பளபளக்கும்
பாதையோரக் குளக்கரை அருகே
பாதிக் கலவியில் நம்மைப் பார்த்துப்
பதறி வியந்த கந்தர்வர்கள்

இரண்டில் ஒன்றாய்
ஒன்றே இரண்டிலுமாய்
மாறாமல் மாறி மாறி
மாயமாய்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஒரு குடைக்கீழ்

  1. அருமையான கவிதை ரமணா! அதுவும் அந்தப் பாதிக் கலவியி பார்த்துப் பதறி வியந்த கந்தர்வர்கள்….. ஓ, பதறிக்குத் தான் துட்டு! இளமையும், முதுமையும் ஒரே குடைக்கீழ் ……! கவிதை மழைக்குக் கொண்டாட்டம்தான்!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *