சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன்.

இங்கிலாந்துக் கலண்டரிலே இருக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்று இந்தச் சனிக்கிழமையன்று நள்ளிரவு நடைபெற இருக்கிறது.

அது என்ன நிகழ்வு என்று எண்ணத் தோன்றுகிறதா ?

Daylight Saving Time endsவருடா வருடம் இங்கிலாந்தில் “சம்மர்” (Summer) என்றழைக்கப்படும் கோடை காலத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவும் அதே போல ” விண்டர்” (Winter) என்றழைக்கப்படும் மாரி காலத்தில் ஒரு மணி நேரம் பின்னதாகவும் முடுக்கி விடுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் வரும் சனிக்கிழமை அதாவது நள்ளிரவு இந்நேரமாற்றம் நிகழவிருக்கிறது.

இந்நிகழ்வுகளின் போது கோடைகால மாற்றத்தில் இரவு நேர தூக்கத்தில் ஒருமணி நேரத்தை இழப்பதுவும் மாரிகால மாற்றத்தில் இழந்த அந்த ஒரு மணிநேரத்தை மீண்டும் பெறுவதும் சகஜம்.

இம்மாற்றம் எப்போதும் சனிக்கிழமை நள்ளிரவு நேரம் தான் நடைபெறும். ஏனென்கிறீர்களா ?

பெரும்பான்மையானவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாதலால் இம்மாற்றத்தின் தாக்கத்தை ஞாயிற்றுக்கிழமை சரி செய்து விடலாம் என்பதுவே இதற்கு முக்கிய காரணமாகிறது.

நான் இங்கிலாந்துக்குள் நுழைந்தது மாணவனாக அப்போது எனது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வார விடுமுறை நாட்களில் பகுதிநேரப் பணிபுரிவது வழக்கம்..

அப்போது நான் மட்டுமல்ல என்னைப் போலவே ஈழத்திலிருந்து மாணவர்களாக வந்த அனைவருமே அத்தகைய ஒரு நிலையில் தான் இருந்தார்கள்.

அப்போது எனக்கும் என்னைபோன்ற ஒத்த நிலையிருந்தவர்களுக்கும் இந்த நேர மாற்றம் எரிச்சலை ஊட்டுவதாகவே இருந்தது.

எப்படி ?

clock 1சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பகலில் பணிபுரிகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், கோடைகால நேர மாற்றத்தில் எமது ஓய்வு நேரத்தில் ஒரு மணி நேரத்தை இழக்கிறோம். ஆனால் மாரிகால மாற்றத்தின் போது தூங்க ஒரு மணிநேரம் அதிகமாகக் கிடைக்கிறது.

சரி சனி, ஞாயிறுகளில் இரவு நேர பணி என்று வைத்துக் கொண்டால் கோடை கால மாற்றத்தின் போது ஒரு மணிநேரத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்வதும் மாரிகால மாற்றத்தின் போது ஒருமணி நேரத்தை ஊதியமில்லாமல் பணிபுரிவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

நான் இங்கிலாந்துக்கு வந்து சுமார் ஒரு வருடத்தின் பின்னால் இரவு நேரக் காவலாளியாகப் பகுதிநேரப் பணிபுரிந்து வந்தேன். அப்போது சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை இரவும் பணிபுரிவது வழக்கம்.

clock 2கோடைகால நேரமாற்றத்தை எவ்வித தாக்கமுமின்றி ஏற்றுக் கொண்ட நான் (ஒரு மணி நேரம் குறைவாக அதே சம்பளத்திற்கு பணிபுரிவதானால் யாருக்குக் கசக்கும் ?) மாரிகால மாற்றத்தின் போது எனது கட்டுப்பாட்டு அதிகாரியிடம் ஒருமணிநேரம் அதிகமாகப் பணிபுரிந்திருக்கிறேனே அதற்கு ஒருமணி நேரம் அதிகமான ஊதியம் தர வேண்டாமோ ? என்று கேட்டேன்.

பலமாகச் சிரித்த அவர் ” கோடைகால மாற்றத்தின் போது ஒரு மணி நேரம் குறைவாகப் பணிபுரிந்த போது ஒரு மணி நேர ஊதியத்தைப் பிடித்துக் கொண்டேனா ?” என்று கேட்டார்.

புன்னகையோடு மெளனிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?
சரி இப்படியாக இங்கிலாந்திலும் அநேகமான மேற்கு ஜரோப்பிய நாடுகளில் இடம்பெறும் நேரமாற்றத்திற்கான காரணம் தான் என்ன ?

இந்நேர மாற்றம் முதன்முதலாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜி.வி.கட்சன் (G.V.Hudson) என்பவரால் 1895ம் ஆண்டு முதன் முதலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

Hudsonபூச்சிகளைப் பிடித்து அவற்றை ஆரய்ச்சி செய்யும் இவர் கோடைகாலங்களில் வெளிச்சமுள்ள நேரம் ஒருமணிநேரம் கூடுதலாக இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ந்து அதைப்பற்றி ஓர் ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தார்.

இங்கிலாந்தில் ஒரு கட்டிட ஊழியரான வில்லியம் விலெட்ஸ் (William Willets) என்பவரால் இது பிரஸ்தாபிக்கப்பட்டது.

கோடை காலத்தில் ஒரு நாளின் அளவு கூடுதலாக இருந்தும் அதிகமானவர்கள் கூடுதலான நேரத்தைத் தூக்கத்தில் கழிப்பதகாகக் கருதிய இவர் கோடைகால நேரத்தை இருமணி நேரம் முன்னொக்கித் தள்ளி வைக்க வேண்டும் என்று பிரஸ்தாபித்தார்.

இவரது இந்தப்பிரேரணையை ரோபெர்ட் பியர்சன் எனும் லிபரல் கட்சியைச் சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் 1908ம் ஆண்டு சட்டமாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

ஆனால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்து பலமுறை இக்கோரிக்கை பாரளுமன்ற முன்றலுக்கு கொண்டுவரப்பட்டும் நிறைவேறவில்லை.

முதன் முதலில் மேற்கு ஜரோப்பாவில் இந்நேரமாற்றம் 1916ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 திகதி ஜெர்மனியாலும் அதன் நேச நாடான ஆஸ்ட்ரியாவாலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இதைப்பற்றி அமராகிவிட்ட எனது தந்தை அவர் வாழும் காலத்தில் குறிப்பிடும் போது தான் பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நிகழ்ந்த நிகழ்வு என்று குறிப்பிடுவதுண்டு.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்தாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளினாலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.

ஆனால் இந்நேரமாற்றம் ஒருமணிநேரத்தை மட்டும் உள்ளடக்கியதாக இருந்தது.

ஒவ்வொரு வருடமும் ஏப்பிரல் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:59 முன்னொக்கி 03:00 மனிக்கு தள்ளப்படும். அக்டோபர் மாதம் மூன்றாவது வார விடுமுறைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:59 பின்னோக்கி 01:00 ஆக மாற்றப்படும்.

இதுவே நடைமுறை வழக்கத்திலிருந்து வருக்கிறது. ஓ …இவ்வாரம் சனிக்கிழமை தூங்கி ஞாயிற்றுக்கிழமை எழுந்திருக்கும் போது ஒரு மணிநேரம் அதிகமாக தூங்க முடியுமோ ?

இதே நேர மாற்றம் தான் அன்றைய மாணவ வாழ்வில் பிரச்சனை கொடுத்ததோ ?

மீண்டும் அடுத்த மடலில் …
அன்புடன்
சக்தி

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

 

படங்கள்: இணையத்திலிருந்து

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(127)

  1. நான் லண்டன் நகாத்தில் பின்னர் என்ற இடத்தில் இருந்த போது முதன் முதலில் இந்த நிகழ்வைக்கண்டேன் .முதலில் வேடிக்கையாக இருந்தது . பின்னர் மனது சமாதானமாகியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *