சந்தர் சுப்ரமணியன்

BlueMarble_monthlies_animation

சித்திரையில் சூரியனின் சிரிப்பைக் கண்டு
.. சிலிர்த்தபடி வரவேற்றாள் செம்பெண் பூமி;
நித்திரையை உடைத்தொழிக்கும் நெருப்பைப் பேதை
.. நெடுநாளாய் நினைந்திருந்தாள்; நிறைந்த பெண்மை
அத்தனையும் அவன்விழிக்கே அளிக்க வேண்டி
.. அவளுடலைத் தினஞ்சுழற்றி அழகு சேர்த்தாள்;
இத்தரையின் சுழல்நோக்கி இளகி வெப்பை
.. இளவேனிற் பருவமென ஈந்தான் வெய்யோன் (1)

வைகாசி வரும்வரையில் வளைவான் நோக்கி
.. வஞ்சியவள் காத்திருந்தாள் வளைவான் என்றே;
பொய்யாகிப் போய்விடுமோ புகைந்த காதல்?
.. பொழுதெல்லாம் நினைத்துமனம் புகைந்த பின்னர்
‘நொய்யாதென் நெஞ்சடைந்தீர் நீரே’ என்று
.. நுண்மடலாய் ஆவியதில் நீரே சொல்லாய்
எய்தாளே வானோக்கி எழும்பும் ஆவி
.. இளவேனிற் பருவமதில் எழும்பும் போதே (2)

ஆனியெலாம் அவளனுப்பும் அன்பின் சொல்லை
.. அசையசையாய் கேட்டபினும் அவள்தான் அந்த
தேனினிய மடலனுப்பும் சொந்தம் என்றே
.. தெளியாத பகலவனும் சோர்ந்தான் உள்ளம்,
ஏனெவளோ எழுதுகிறாள், என்றும் நாம்முன்
.. எதிர்பார்க்கும் நிலமடந்தை எழுதாப் போதில்?
மோனவுளம் இதைநினைக்க மூச்சின் வெப்பே
.. முதுவேனிற் பருவமென முன்னர்த் தோன்றும் (3)

ஆடிவர அங்குலவும் அடர்ந்த மேகம்
.. அதிலீரம் படிந்தமடல், அழகுக் காலை;
ஓடிவரும் கருமுகில்கள், ஒன்றைத் தள்ள
.. உறவாடும் புவிகண்டான்; விண்ணை நோக்கிக்
கோடியென மடல்விடுக்கும் கோதைச் செம்மண்!
.. கூடிவிழிச் சிவந்ததுவோ? கொள்ளை நாணம்!
மூடுமனக் கண்திறந்து முன்காண் மண்ணில்
.. முதுவேனிற் பருவமென முகிழ்த்தான் வெய்யோன் (4)

ஆவணியில் அவள்மடல்கள் அனைத்தும் சேர்த்தே
.. ஆதவனும் நனைகின்றான், அன்பாய் வானில்
பூவழியச் செய்கின்றான்; பொழியும் மாரிப்
.. பூவிதழில் தன்விருப்பைப் பூக்கச் செய்தான்;
தாவியெழும் நீர்த்துளியில் தாக மாக
.. தங்கிநின்ற அவன்விருப்பு தாளில் வீழ
காவியுடை துறக்குமுடல் காதல் தன்னை
.. கார்காலம் முழுவதுமண் காத்து நிற்கும் (5)

புரட்டாசி மழைகண்டாள்; புரண்டங் கோடும்
.. புதுப்புனலாய் அகமகிழ்ந்தாள்; பொங்கும் பூவின்
திரட்டாலே துகிலுடுத்தாள்; செவ்வான் நீரைத்
.. தேக்குதற்கே நெஞ்சென்றாள்; தேடுந் தேனைத்
தரத்தானே மலரணிந்தாள்; தாகங் கொண்டே
.. தலைநோக்கிப் பொழிநீரை தானே ஏந்த
கரங்காட்டும் மரங்கொண்டாள்; கானில் எங்கும்
.. கார்காலம் வந்தவிதம் காட்டி நின்றாள் (6)

ஐப்பசியும் வந்ததவள் அன்பை ஊட்ட
.. ஆதவனை அருகழைத்தாள்; அடுப்பை மூட்டிக்
கைப்பதத்தைக் காட்டுகின்றாள்; கானே பானை,
.. கலமெங்கும் மலர்பொங்கும்; கடக்கும் ஆறே
நெய்ப்பரப்பாய் நெளிந்தோடும்; நிற்கும் வான்வில்
.. நீளகப்பை; மலர்வாசம் நெய்யில் தோயக்
குய்ப்புகையாய் முகிழெலுந்து கோலம் காட்டக்
.. குளிர்கால விருந்துணவைக் கோதை தந்தாள் (7)

கார்த்திகையில் நிலமளித்த காதற் சோற்றைக்
.. களித்துள்ளம் மகிழ்கின்றான் கண்ணால் வெய்யோன்
நீர்த்துகளில் நிலம்பதித்த நினைவின் ஈரம்
.. நிற்கின்ற நனவிலெலாம் நெகிழக் கண்டான்;
போர்த்தமுகில் எடுத்துலகைப் பொத்திப் பொத்திப்
.. பொன்போலக் காக்கின்றான்; பொழியும் வெப்பின்
கூர்தரையைக் கிழிக்கவொளி குறுக்கிக் கொண்டான்;
.. குளிர்காலம் எனும்பருவ கோலந் தந்தான் (8)

மார்கழியும் வந்ததங்கு வான மெல்லாம்
.. மலர்விரித்த வெண்பஞ்சு மஞ்சத் தோற்றம்;
வேர்கழித்துப் பூவனமே விண்ணில் சேர்ந்த
.. விந்தையிதோ? நிலமடந்தை வேணி சூட்ட
நார்தொடுக்கும் பகலவனின் நறும்பூ மாலை
.. நாரேறத் தாரகையோ? நனைக்கும் பாலோ?
மோர்பனியாய்ப் பொழிகிறதோ? முகிலின் தோய்வே
.. முன்பனியாய்ப் பெய்கிறதோ? முத்த நீரோ? (9)

தைக்கென்றே காத்திருந்தாள் தையல், கொஞ்சம்
.. தன்நடனம் காட்டுதற்காய்; தனியே நின்று
துய்க்கின்றான் அவன்பொருட்டு தோகை நெல்லைத்
.. தோதாய்க்காற் சலங்கையெனத் துணையாக் கொண்டு
வைக்கின்றாள் பாதமவள்; வனப்புச் சேர
.. வயலெங்கும் நாட்டியந்தான்; வானின் வெய்யோன்
மொய்க்கின்ற வண்டானான்; மோக மூட்டும்
.. முன்பனியே தேனாகும், முன்னர்ப் பூவே (10)

மாசியதும் வந்ததுகாண்; மங்கை சொல்லில்
.. மனங்களிப்பான் பகலவனும்; மனத்தில் ஆழ்ந்த
ஆசைமொழி அவன்முடிக்க ஆகும் நேரம்,
.. அந்நேரம் பின்னிரவே; அலையும் புள்ளின்
ஒசையினால் துயில்விடுப்பான்; உழைக்க வேண்டி
.. ஓடிடுவன்; சென்றபினும் ஒருத்தி மட்டும்
பேசியதை முணுமுணுக்கப் பேச்சின் மௌனம்
.. பின்பனியாய்ப் பொழிகையிலே பிறக்கும் நாளே (11)

பங்குனியில் படர்கொடியாய்ப் பலநாள் காதல்,
.. பார்க்காத இரவெல்லாம் பசலை மண்ணில்;
அங்கமெலாம் அவள்நினைவே அடர்ந்தி ருக்க
.. ஆதவனும் அயர்ந்திருக்க அல்லின் நீட்சி;
தங்கிவிட வேண்டுமென தரணி கெஞ்சத்
.. தாமதமாய்க் கதிரெழும்பும், தண்மை நீங்கப்
பொங்கியெழும் புத்தொளியாய்ப் புதிய போக்கில்
.. பின்பனியாய் மின்மினுக்கப் பேசும் பூவே (12)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பருவ காலங்கள்!

  1. கவிதை அருமை. மிகவும் ரசித்தேன்.சந்தரின் கவியுள்ளம் ஒரு பொக்கிஷம்; இல்லை, அமுதக் குடம்! வாழ்க. “கானே பானை” மட்டும் விளங்கவில்லை. எழுத்துப் பிழை ஏதாவது ..  ? கே.ரவி

  2. உங்கள் கருத்துக்கு நன்றி. கான்=காடு என்னும் பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன். காடே பானையாகவும், மலர்களே அரிசியாகவும், ஆறே நெய்யாகவும், வானவில்லே அகப்பையாகவும் கொண்டு நிலமகள் கதிரவனுக்காகச் சமைக்கும் அந்தப் பருவத்தில், மேகங்களே குய்ப்புகையாய் மேலெழும் என்னும் கற்பனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *