ஓய்வு!
-பொன்ராம்
அசையாத திரைச்சீலை
எனது இதயக்கனத்தைப்
புரிந்துகொண்டதோ!
டிக்! டிக்! கடிகாரம்
இந்த வீட்டின் சப்தம்
எழுப்பும் சிறுகை அளாவிய
குழந்தைமணி!
சன்னலில் கட்டி விடப்பட்ட
பாசிமணிகளுடன் தென்றல்
நண்பர்களுடன் விளையாட்டுச் சப்தம்!
தாள் கிழிக்கும் ஓசை
எனது செவிகளுக்கு
இன்னிசை நாதம்!
சாய்வு நாற்காலியின்
கிரீச் ஒலிகூட
என்னுடன் சரிகமபதநி
விளையாடி
அலுத்துக் கிடக்கிறது!
மௌனத்துடன் சங்கமிக்கும்
எனதருமை முள்நாட்களுடன்
நாட்காட்டி குறிப்பிட்டது
எனது ஓய்வு வயதை!
வாழ்க்கைப்படகு ஓடிய
ஓட்டத்தில் அப்போதுதான்
உணர்ந்தேன் என்னுடன்
பயணித்த யாருமில்லை
என்னருகில்!
ஓடி வந்த நாலுகால்
நன்றியினத்துடன்
நான் மட்டுமே
தீவாய்த் தனித்திருந்தேன்!
தொலைத்த வாழ்க்கையை
எங்குத் தேடியும் எனக்கு
இன்றுவரை கிடைக்கவில்லை!
வீசிய தென்றலாய்
தெங்கொன்றில்
குயிலொன்று இன்னிசையாய்க்
கொடை கானம் பாடி
வாழ்க்கைப்பாதை
தேடிப் பறந்ததோ!