நான் அறிந்த சிலம்பு – 142
–மலர் சபா
மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை
மாதவியின் திருமுகத்தைத் தன் தந்தைக்குக் கோவலன் அனுப்புதல்
மடலைப் படித்து முடித்ததும்
கௌசிகனிடம் கோவலன் கூறினான்:
“இலச்சினையிடப்பட்ட இந்த ஓலையில்
எனக்காக வருந்துகின்ற என் பெற்றோர்க்கும்
விடை பொருந்தியிருக்கிறது.
எனவே இதைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்து
குற்றமற்ற அவர் மலரடி தொழுதேன் என்று கூறுவாயாக.
இந்த ஓலையை அவரிடம் காட்டுவாயாக” என்று கூறினான்.
எம் பிரிவால் ஏற்பட்ட
அவர்தம் நடுக்கத்தைப் போக்கி,
அவர்கள் உள்ளத்தில் உறைந்துள்ள
துயரத்தை நீக்க இப்போதே
புகார் நகரம் விரைந்து செல்வாயாக என்றான்.
கோவலன் மீண்டு வந்து, பாணர்களுடன் இசை பாடிப் பொழுது போக்குதல்
குற்றமில்லாக் கற்புநெறி கொண்ட
தன் மனைவியாம் கண்ணகியோடு இருந்த
தவறில்லாக் கொள்கையுடைய
கவுந்தியடிகளிடம் சென்று இணைந்து,
போர்க்கோலம் பூண்ட துர்க்கையின் வெற்றியைப்
பாடும் பாணருடன் உரிமையுடன் சேர்ந்து,
செம்மையாகச் செய்யப்பட்ட செங்கோட்டு யாழில்
தந்திரிகம் திவவு உறுப்புகளைத் திறம்படக் கட்டி,
ஒற்று உறுப்பைக் கொண்ட யாழ் அது என்பதால்
பற்று உறுப்பையும் கூட்டி
உழை குரலாகவும், கைக்கிளை தாரமாகவும்
நரம்புகளை நிறுத்தினான்.
மூவகைத் தானத்தாலும்
துள்ளிப் பாயும் மானை ஊர்தியாகக் கொண்ட
கொற்றவையின் புகழ்பாடும் பண்ணை
ஆசான் திறம் என்னும் பண்ணோடு பொருந்துமாறு
அவற்றைச் செவியால் கேட்டுணர்ந்து
தன் யாழில் இசைத்தான்.
பின் அவன் அப்பாணர்களிடம்,
“மதுரைக்கு இன்னும்
எத்தனை காததூரம் உள்ளது?” என்று கேட்டான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 96 – 113
http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–