முயற்சியை முதலில் தூண்டி
.. முனைந்திடும் நேரம் காட்டி
இயற்கையின் இரும்புத் தாதை
.. ஏந்தியோர் கலத்தில் இட்டு
மயக்குறு நிலையிற் காய்ச்சி
.. மறுவுரு பிறக்கச் செய்யும்
வியத்தகு வாழ்வின் போக்கில்
.. விளைந்திடும் உளியென் காதை (1)

மண்ணெலாம் வென்ற பின்னர்
.. மன்னவன் நெஞ்சில் ஓர்நாள்
விண்ணெலாம் அளந்த தேவன்
.. விந்தையை என்றும் போற்றும்
வண்ணமோர் கோவில் செய்ய
.. வந்தநல் ஆசை அந்த
எண்ணமோ டியைந்து பின்னர்
.. எழுந்ததே பெரிய கோவில் (2)

மலையுடைத் தெறிந்த தும்நான்;
.. மண்ணடி வீழ்ந்த பின்னர்ச்
சிலைகொளும் அளவிற் சீராய்ச்
.. செப்பனிட் டதும்நான்; மெல்ல
தலைநிறை கனத்தி னூடே
.. தஞ்சையை அடைந்த போதும்
கலையெனும் உலகின் ஓங்கும்
.. கற்பனைச் செங்கோல் நானே (3)

கல்லெலாம் என்றன் முன்னர்க்
.. கதறிடும் வண்ணம் என்னால்
சில்லுடைந் தெகிரக் கண்டு
.. சிரித்துநான் இன்பங் கண்டேன்
மெல்லவென் கூர்மை தீட்ட
.. மேனியை வாட்டும் தீயால்
சொல்லொணாத் துயரம் உற்றேன்
.. சுருங்கிடத் தெளிவு கொண்டேன் (4)

கற்பனை ஓட்டங் காட்டிக்
.. கல்லொடு காதல் செய்தேன்;
நற்றிறன் நயத்தை ஊட்ட
.. நாணுமக் கற்கள் என்றன்
விற்பன விந்தை கண்ட
.. வியப்பினில் விரைத்து நிற்க
நிற்பவை நிசமோ என்னும்
.. நிலைதனை ஊட்டி நின்றேன் (5)

உச்சியை நோக்கிக் கற்கள்
.. உயர்ந்துவான் தொட்டு நிற்க
மெச்சிடும் வண்ணம் எங்கும்
.. மேன்மையாய்ச் சிற்பஞ் செய்யும்
தச்சனின் கரத்தார் நூலால்
.. தாவிடும் பொம்மை போலே
இச்சைகள் யாவும் செய்யும்
.. இயந்திரம் ஆகி நின்றேன் (6)

நிலமெழு சுவரின் நீளம்
.. நீண்டிடச் செய்தோன் நானே!
பலவிதத் தூண்கள் தாங்கும்
.. பரப்பினைப் படைத்தோன் நானே!
தலையமர் பெருத்த கல்லைத்
.. தழுவியோன் முதலில் நானே!
உலகினில் உயர்ந்த கோவில்
.. உயர்வினை உணர்ந்தோன் நானே! (7)

திண்ணிய கூர்மை செய்யும்
.. திறன்பல என்னில் கண்டு
நுண்ணிய வேலைக் கெல்லாம்
.. நுகர்வரென் சேவைக் காக;
கண்ணுதல் உருவங் காண
.. கல்லினைக் குடைவ தற்காய்
எண்ணினர் என்னை, அன்றே
.. இவ்வுயிர்ப் பயனைப் பெற்றேன் (8)

சித்தனின் சிந்தை சற்றும்
.. சிதைந்திடா வண்ணம் மெல்லத்
தத்துமென் முனையைக் கொண்டே
.. தேவனின் உருவம் கண்டார்;
கொத்தியென் உயரம் குன்றக்
.. குட்டையாய் போன தாலே
அத்தனின் அகன்ற பாதம்
.. அதனடி முட்டாய் நின்றேன் (9)

ஆனனென் அகந்தை கண்டான்;
.. ஆணவம் அழிக்க நின்றான்;
தானமாய் அமைந்த மெய்யைத்
.. தரையொடு நசுக்கி வென்றான்;
ஊனமாய் அமைந்த வாழ்வும்
.. ஒழிந்தது; மெல்ல மெல்ல
‘நானெ’னைப் பிரிந்த நேரம்
.. நம்பனின் பார்வை என்மேல்! (10)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க