உணர்வுகள்!
-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
அதிகாலை எழுந்திடுவார்
அனுஷ்டானம் பார்த்திடுவார்
பூப்பறித்து வந்துநின்று
பூசைசெய்து நின்றிடுவார்!
சிவநாமம் அரிநாமம்
சிந்தனையில் ஓடிநிற்கும்
சிரித்துமே பார்த்தறியோம்
சிடுமூஞ்சி யாயிருப்பார்!
அப்பாவைக் கண்டதுமே
அனைவருமே அடங்கிடுவோம்
அந்தளவு வீட்டிலவர்
அடக்குமுறை காட்டிடுவார்!
அவர்நண்பர் சீனுவரின்
அரைகுறையாய்ப் பேசிடுவார்
அடுத்தகணம் அவர்கையில்
அமர்ந்திருக்கும் செய்தித்தாள்!
சாப்பிடும் வேளையிலே
சத்தம் போடக்கூடாது
சத்தம்யாரும் போட்டுவிடின்
சன்னதமே ஆடிடுவார்!
பண்டிகை வந்துவிட்டால்
பலவற்றைத் தந்திடுவார்
பார்த்துநாம் சிரித்துவிடின்
பளாரென்று அறைகிடைக்கும்!
உனக்குமா இப்படி
எனக்கேட்டோம் அம்மாவை
ஆமெனவே தலையசைத்து
அவர்மெளனி ஆகிவிட்டார்!
பொய்பேசும் பழக்கத்தைப்
பொறுக்க அவர்மாட்டாமல்
எல்லோர்க்கும் எச்சரிக்கை
எப்போதும் விட்டிடுவார்!
குடிப்பழக்கம் கொண்டோரைக்
கொன்றொழிக்க வேணுமென்பார்
குளறுபடிக் காரரொடு
கூடவேணாம் எனச்சொல்வார்!
தானதர்மம் எல்லாமே
தாரளமாகச் செய்வார்
சமயச் சடங்குகளை
சரியாகச் செய்துநிற்பார்!
ஆனாலும் எங்களிடம்
தாராளம் காட்டாமல்
அப்பாவும் இருப்பதற்கு
அடிப்படையை நாமறியோம்!
அம்மாவும் அப்பாவும்
ஆதரவாய்ப் பேசியதோ
அகமகிழ நின்றதையோ
ஆரும்நாம் கண்டதில்லை!
என்றாலும் எங்குடும்பம்
இன்னலின்றி ஓடியது
எல்லோரும் ஒன்றாக
இன்புற்று இருந்தோமே!
காலையிலே எழுந்த அம்மா
காப்பிகொண்டு வருகையிலே
கண்மயங்கி அவ்விடத்தில்
காப்பியுடன் விழுந்துவிட்டார்!
பூசைசெய்த அப்பாவும்
ஓசைகேட்டு ஓடிவந்தார்
ஆசையுடன் அம்மாவை
அரவணைத்து நின்றாரே!
அப்பாவின் செயல்கண்டு
அனைவருமே அசந்துவிட்டோம்
அப்பாவின் உள்ளத்தும்
அன்பூற்று இருக்கிறதா?
மடிமீது தலைவைத்து
மனைவிமுகம் பார்த்த அவர்
தலையிலே கையைவைத்து
”சாவித்ரி” எனவழைத்தார்!
அம்மாவை அணைத்தபடி
அழைத்தாரே அழுதபடி
அம்மாதான் அசையாமல்
அப்படியே மடிகிடந்தார்!
வீட்டிலே எல்லோரும்
வெலவெலத்துப் போய்விட்டோம்
பேசாமல் இருந்த அம்மா
பேசாமலே கிடந்தார்!
அழுதபடி அப்பாவும்
அப்படியே இருந்தாரே
எங்களையும் அருகணைத்து
ஏங்கிநின்று அழுதாரே!
இரக்கத்தை ஒழித்துவிட்டு
எங்களப்பா இருந்ததனை
இப்போது கண்டதும்
இரங்கியவர் முகம்பார்த்தோம்!
உள்ளுணர்வு வெளிவந்து
உலுக்கியே விட்டதனால்
ஒன்றுமே அறியாது
ஓலமிட்டார் எங்களப்பா!
அடக்கியெமை ஆண்ட அப்பா
அடங்கியே இருந்திட்டார்
அம்மாவின் அணைப்பிழந்து
அவரிப்போ அழுகின்றார்!
உணர்வுகள் எப்போதும்
உள்ளுக்குள் இருப்பதில்லை
உயிருள்ள மனிதர்க்கு
உணர்வுகளே உயர்வாகும்!
கண்டம்விட்டு கண்டம் சென்றால் கரைபுரளும் கன்னித்தமிழோ? கவிதை என்னும் வரம்பைத்தாண்டி கதைகள் சொல்லும் உங்கள் புலமை.. எண்ணிப்பார்த்தால் எவரும் வியப்பர்? எப்படி இத்தனை சாத்தியமாகும்? எழுத எழுத வருகிற வரிகள்.. இவருள் தமிழே உதயமாகும்!
உணர்வுகள் என்கிற தலைப்பினைத் தொட்டு ஓடியிருக்கும் தூரம் எத்தனை? நிச்சயமாய் சொல்கிறேன்.. கவிதைக்குள் கருத்திருக்கும் .. இன்றோ நீவிர் எழுதும் கவிதையிலே கதையிருக்கிறது! எழுத்தாளர் ஒருவர் உமக்குள்ளே இருந்து இயக்குகின்ற வித்தை தெரிகிறது!
பாசமிகு அப்பாதான்.. பலாப்பழம்போல! பார்த்தவரை முள்தெரியும்.. பழகினால் அன்பின் இன்பம் புரியும்! நேற்றுவரை அப்பாவின் நிறைய முகங்கள் அதிகார தோரணையில் காட்சியளிக்க.. இன்றோ நிலைகுலைந்த அம்மாவை மடியில் சாய்த்து அவர் பரிதவித்த காட்சியினை வடித்திருந்தீர்! பாசமது ஊற்றுநீர் போலத்தானே.. மனம் கனத்தால் வழிவதற்கே கண்கள் இரண்டு! அன்பினில் சுமந்திருந்த ஆசை மனைவி.. இன்று கண்திறக்க மாட்டாமல் விழுந்தபோது.. போட்டிருந்த வேஷம்கூட மறந்துபோக.. அப்பா.. அன்பினிலே விஸ்வரூபக் காட்சிதந்தாரே!!
பாராட்டுகள்..
காவிரிமைந்தன் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்.,