எஸ் வி வேணுகோபாலன்

asv
சீருடையை அணிவித்துச்
சிரிக்க வழியனுப்பிச்
சிங்காரச் செல்லம்கொஞ்சித்
திரும்பிவரக் காத்திருந்தோம்

போருடையைப் போட்டுவந்த
பொல்லாத கும்பலொன்று
பொய்யாக்கும் என்றா
பாவிமக்கள் கனவு கண்டோம்?

கொத்துகொத்தாய்ப் பூத்திருக்கும்
குழந்தைகளைக் கண்டதுண்டு
மொத்தமொத்தமாய்க் கண்ணெதிரே
மடிந்துவிழப் பார்த்ததுண்டா?

ரணமொன்று பார்த்தாலே
பெற்றமனம் பதைபதைக்கும்
பிணமாகப் பிள்ளையுடல்
பார்ப்பதற்கோ உயிர்தரித்தோம்?

மென்குரல்கள் வதிகின்ற
பள்ளிக்கூட வீதியிலே
வன்குரலாய் உலுத்தர்கள்
வழிமறிக்கப் பார்த்ததுண்டா?

கூச்சல் கும்மாளம்
கொண்டாட்டம் கேட்பதுண்டு
தோட்டாவின் சத்தத்தை
வகுப்பறைக்குள் கேட்டதுண்டா

ஆசிரியை அமர்ந்திருக்க
அன்றாடப் பாடமுண்டு
அவரையே கட்டிவைத்து
எரியூட்டக் கேட்டதுண்டா?

புயலுக்குப் பெருமழைக்குக்
கொள்ளைநோய் போன்றதற்கு
ஓயாமல் புதைத்ததுண்டு
பலியான மனிதருடல்

ஆத்திர நெஞ்சினரின்
அறியாமைக் கொடுந்’தீ’க்கு
ஆகுதியாய்ப் போனவுடல்
அள்ளியள்ளிப் புதைப்பதுண்டா?

நோற்றுப் பெற்றெடுத்துப்
போற்றி வளர்த்தவுயிர்
நூற்றுக் கணக்கில்
இடிந்துவிழ சகிப்பதுண்டா ?

தீவிர வாதமென்ன
திடீர் பிறப்பெடுத்ததுவா ?
ஆதிக்க சக்திகளின்
அராஜகத்தில் தழைத்ததுவா

மனிதத்தை மதிக்காத
வெறிக்கென்ன மதத்தின் பேர்?
உயிர்வதைக்கு அஞ்சாத
பேயாட்டமா புனிதப்போர் ?

ஓலங்கள் கதறல்கள்
ஓயாத குமுறல்கள்
கோபங்கள் சாபங்கள்
கொதிகலனாய் உள்ளங்கள்

ஆனாலும் சொல்கின்றார்
அத்தனை பெற்றோரும்
அச்சமில்லை அச்சமில்லை
தோற்றுப்போக விருப்பமில்லை

இறந்துபோன குழந்தைகளை
அழுதே புதைத்துவிட்டு
மிகுந்தோரைப் பள்ளிக்கு
அனுப்பாமல் ஓய்வதில்லை

தீவிர வாதத்தின்
வெறித்தனத்திற் கொருநாளும்
அடிபணியப் போவதில்லை
அடக்காமல் சாய்வதில்லை.

*****************
நன்றி: தீக்கதிர்: டிசம்பர் 19, 2014

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *