சுகி ரங்கா ரங்கான்னு சொல்லு

விசாலம்

“தந்தையே இங்கே வாருங்கள். அழகான ஒன்றை நான் காட்டப்போகிறேன்.”

“இதோ வருகிறேன் கோதை. அந்த அழகான ஒன்று எது?”

“இதோ என் தோள் மேல் பாருங்கள்.  அழகான கிளி! நந்தவனத்தில் பறந்து என் தோளில்  வந்து அமர்ந்துவிட்டது.”

“ஆமாம் மிக அழகான கிளிதான். தோளை அசக்கிவிடு  பறந்து போய்விடும்.”

“இல்லை தந்தையே அது பறக்காமல் இருக்க வேண்டும் என்று நான் சிலைப்போல் அமர்ந்திருக்கிறேன். அன்பு தந்தையே இந்தக் கிளியை நானே வைத்துக்கொள்கிறேனே! ஆசையாக வளர்க்க விரும்புகிறேன்.”

“சரி. அப்படியே செய். ஆனால் கூண்டில் அதைப்போட்டு அடைக்காதே. சுதந்திரமாக இருக்கட்டும்.”

“சரி தந்தையே. இதற்கு நான் என்ன பெயர் சூட்டுவது?”

“அம்மா கோதை நம் வீட்டிற்கு சுக பிரும்ம ரிஷியே வந்திருக்கிறார். அதனால் சுகர் என்றே பெயர் வை.”

“தந்தையே அது என் பிரிய தோழியாக ஆக்கிவிடுவேன். அதனால் அதை சுகி என்று அழைக்கிறேன். “

“சரி கோதை. நான் கோயிலுக்கு போக வேண்டும். அதற்கு பசிக்கப்போகிறது. ஏதாவது பழம் கொடு.”

கோதையின் அன்பை நினைத்தபடியே அவளது தந்தை பெரியாழ்வார் அங்கிருந்து நகர்ந்தார்.

“சுகி என் பட்டு சுகி. என்  பெயர்  கோதை. கோதைன்னு சொல்லு. அப்போ  இந்தப்பழம் தின்னக்கொடுப்பேன்.”

“கோ……க்கோ……. கோதை”

“ஆஹா அருமை. மிக சரியாக சொன்னாய். இந்தா இனிப்பான மாம்பழம்.”

“இரு. சற்று பொறு. இன்னொரு சொல்  சொல்லட்டுமா? ரங்கா… ரங்கா… ரங்கா… சொல்லு பார்க்கலாம்.”

“ர… ங்… கா… ரங்கா…”

“ஆஹா என் காதில் தேன் வந்து பாயுது. யார் தெரியுமா அந்த  ரங்கா. நான் மணந்துக் கொள்ளப் போகும் மஹா புருஷர்.”

சுகியும்  எல்லாம் புரிந்தது போல்  கீ கீ என்று சொல்லி ரசித்தது. மறு நாளிலிருந்து செல்லக்கிளிக்கு  பாடம் ஆரம்பமாகியது. பகவானின் நாமங்கள் அதன் வாயில் வர ஆரம்பித்தன. பேசும் பேச்சுக்கள்; புரிய ஆரம்பித்தன. நாளாக நாளாக  அரங்கனின் மேல் உள்ள காதல் அதிகமாகி தன் பிரேமையைத் தெரிவிக்க   குயிலை தூதாக அனுப்புகிறாள். மழை காற்று என்று பலவற்றை தூதாக அனுப்புகிறாள்.

உணவு பிடிக்கவில்லை. தூக்கம் வரவில்லை. எப்பொழுதும் அவர் நினைவே. எங்கும் அவரே  வந்து வந்து மறைகிறார். அவரைப் பார்க்கமுடியாமல் வருந்தி உடல் மெலிந்து போகிறது. சோகப்பதுமையாக அமர்ந்திருக்கிறாள்.

“கோதை கோதை ஏன் இத்தனை சோகம்?”

“சுகி  பலரை தூது அனுப்பியும்  என்  ரங்கா  ஒரு செய்தியும் அனுப்பவில்லை. அதுதான்  கவலையாக இருக்கிறது.”

“என்னை அனுப்பு கோதை. நான் அந்த ரங்கனை கையோடு அழைத்து வருகிறேன் .கவலைப்படாதே.”

“உனக்கு அந்த ரங்கநாதன் எங்கு இருக்கிறார் என்று தெரியுமா? நீயும் என்னைப்போல் இந்த இடத்தைவிட்டு வேறு ஒரு இடத்திற்கும் போகவில்லை. அவர் இருக்கும் கோயில் மிகப் பெரியது. பிராகாரமே மிகப்பெரிய அளவில் உள்ளது.”

“என்னால் போக முடியும் கோதை.”

“உஹூம் நான் விடமாட்டேன். அங்கு உள்ளே செல்ல பலத்த காவல் உண்டு. கட்டுக்காவல்களை மீறி உள்ளே போனால் பிடிபடுவாய். பின் எப்படி தப்பித்து வருவாய்? நீ இல்லாமல் நான் எப்படி உயிர் வாழ்வேன்?”

“அழாதே கோதை. நான் உன்னுடனே இருக்கிறேன்.”

நாட்கள் ஓடின. கோதையின் சோகத்தைப் பார்க்க இயலாமல் அவள்  சோகத்தில் மயங்கியிருக்கையில் கிளி அங்கிருந்து பறந்து வந்தது.

பல இடங்கள் தேடி திருவரங்கம் வந்து சேர்ந்தது. நாலு பக்கமும் கோபுரங்கள். நாலு பக்கங்களும் வாசல்கள்.எங்கு செல்வது? எப்படி செல்வது? சரி அந்த ரங்கநாதனை மனதில் நினைத்து நுழையலாம் என்று எண்ணி  மனதில் தோன்றிய வாசலில் நுழைந்தது. அங்கு கம்பீரமாக கருடாழ்வார் அமர்ந்திருந்தார். அவர் பக்ஷிகளுக்கெல்லாம் ராஜா. உடனே அவர் காலடியில் அப்படியே விழுந்தது.

அங்கு சமர்ப்பணம் நிகழ்ந்தது. அப்படியே கோதையின் சோக  சித்திரத்தைச் சொல்லி அவள் நிலைமையை எடுத்துக்கூறியது.

“வணங்குகிறேன் கருடாழ்வாரே. தயவு செய்து என் கோதைக்கு ஏதாவது வழி சொல்லுங்கள். எப்படியும் ஶ்ரீ ரங்கநாதனை அழைத்து வாருங்கள். அப்போதுதான் அவளது முகம் மலரும்.”

“கவலையை விடு. உன் கோதை தேடுவதற்குள் ஊருக்குச்செல். நான் அரங்கனிடம் இதைப்பற்றி பேசி அவரை அனுப்பி வைக்கிறேன். அங்கு கோதையை மனம் தளராமல் இருக்கச்சொல். நம்பிக்கையுடன் காத்திருக்கச்சொல். இந்தா பழமும் பாலும். இதை உண்டுவிட்டு நல்ல தெம்புடன் வீடு செல்.”

“கருடாழ்வாரே தங்கள் இந்த உதவிக்கு நான் எப்படி நன்றியைத் தெரிவிக்கபோகிறேன்? சரி போய் வருகிறேன்”    என்று சொல்லி பறந்து வந்தது சுகி.

“கோதை,  ஏன் உணவு ஒன்றும் உண்ணாமல் வேதனையாக இருக்கிறாய்? நானும் நேற்றைய தினத்திலிருந்து பார்த்து வருகிறேன். என்னிடம் சொல்லு கோதை.”

“தந்தையே! என் சுகி எங்கு போயிற்று? தாங்கள் கண்டீர்களா?  அதைக் காணாமல் தவிக்கிறேன். அதுதான் என் வேதனைக்குக் காரணம்.”

“இதோ பார் உன் கிளிக்கு பூரண ஆயுசு. நான் சொல்லி முடிப்பதற்குள்  வந்துவிட்டது பார். இப்போது மகிழ்ச்சிதானே!”

“அட வந்து விட்டாயா?  என்னிடம் சொல்லாமல் என்னை விட்டு எங்கே சென்றிருந்தாய்? என் செல்லமே! என்னை அழ வைத்துவிட்டாயே!”

“கோதை நான் உனக்காகத்தான் போயிருந்தேன். பக்ஷிராஜா திரு கருடாழ்வாரைப் பார்த்து உங்கள் நிலைமையைச் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். காரியம் ஜெயம் தான்.”

“சுகியே எனக்காக இத்தனை சிரமம்  எடுத்து எத்தனை பெரிய வேலையைச் செய்து விட்டு வந்திருக்கிறாய்? நான் உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்? கேள் உனக்கு என்ன  வேண்டும்?”

“கோதை நீ எங்கே இருந்தாலும் நானும் உன்னுடனேயே இருக்க வேண்டும் இதுதான் என் ஆசை, வேண்டுகோள் எல்லாம்.”

ஒரு வாரம் ஓடியது. அரங்கன் பலரது கனவில் வந்தார். கோதையின் தந்தையின் கனவிலும் வந்தார். பின்னர் பேசினார்.

“கோதை நான் இருக்கும் திருவரங்கத்திற்கு வரட்டும். நான் அவள் வர முத்துச்சிவிகை  அனுப்புகிறேன். நான் அவளை மணந்துகொள்கிறேன்.”

சொன்னபடியே முத்துச்சிவிகை வந்தது. முத்துச்சிவிகையில் ஆண்டாள்  மணமகளாக,  அலங்காரமாக  தலையில் அழகிய முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட  கொண்டையுடன்    பட்டுப்பீதாம்பரம் உடுத்திக்கொண்டு  பவனி வந்தாள். அவளுடன்  சுகியும் அமர்ந்து வந்தது. திருவரங்கம் கோயிலும் வந்தது. ஆண்டாள் சிவிகையிலிருந்து  எழுந்து வந்தாள். அவளது வாய் ரங்கா ரங்கா என அழைத்தபடி இருந்தது.அப்படியே உள்ளே கர்ப்பக்கிரகத்திற்குள் சென்றாள். கருவறையில் நுழைந்தாள். பின் அவள் வெளியிலே வரவில்லை.

கொஞ்சம் நேரம் பார்த்தபடி இருந்த சுகி தன் கோதையைக் காணாமல் தேடியது. பின் அவளைக் காணாமல்  கதறி அழுதது. அங்கேயே வட்டவட்டமாகச் சுற்றியது . கோதை வரவில்லை. அங்கிருந்தவர்கள் எல்லோரும் இந்த அதிசயத்தைக்கண்டு வியந்துப்போனார்கள்.

கோதை அரங்கநாதனுடன் ஐக்கியமாகிவிட்டாள் என்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இந்த சுகிக்கு இது தெரியவில்லை. அங்கேயே சுற்றிச்சுற்றி வந்து மயங்கி விழுந்தது. கோயில் காப்பாளர்கள் அந்தக்கிளியை எடுத்து ஒரு கூண்டில் வைத்தார்கள். உள்ளே சில பழங்களைப்போட்டுவிட்டு ஒரு மண்டபத்தில் மேற்கூறையில் தொங்க விட்டனர். கிளி மயக்கம் தெளிந்தது. “கோதை நீ எங்கே?

நீ எங்கே என்னைவிட்டுவிட்டு சென்று விட்டாய்?” என்று அழுதது. பின் “ரங்கா ரங்கா! என்  கோதை எங்கே? என்று சொல்லியபடியே இருந்தது. உணவைத் தொடவே இல்லை. பின் ரங்கா என்றபடியே உயிரை விட்டது. ரங்கநாதன் அதையும் தன்னிடம்  ஐக்கியமாக்கிக்கொண்டார். அங்கு சென்ற சுகி ஆண்டாளுடன் சேர்ந்தது. இன்றும் கிளி இருந்த அந்த இடம் “கிளி  மண்டபம்” என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூரில்  இன்றும் ஆண்டாள், ரங்கமன்னாரும் எழுந்தருளி இருக்க  தன்னை அரங்க நாதனுடன் சேர்த்துவைத்த  கருடாழ்வாருக்கு சம ஆசனம் கொடுத்திருக்கிறாள் கோதை பிராட்டி. கிளிக்கு எங்கே இடம் தெரியுமா? முதன் முதலில் அந்தக் கிளி எங்கே வந்து அமர்ந்ததோ அந்தத் தோளின் மீதே தன் உயிர்த்தோழியான சுகிக்கு இடம் கொடுத்து தன்னிடம் எப்போதும் சுகி இருக்கும்படி அமைத்துக்கொண்டாள். இப்போதும் ஒரு இனத்தவர் ஆண்டாளுக்கு திருமாலைக் கைங்கரியத்தில் பச்சை இலைகள் பூக்கள் கொண்டு அழகிய கிளியைச்செய்து அதை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கின்றனர். பின் மறுநாள் மாலைகள் வடபத்ரசாயிக்கு கோயிலுக்குச்சென்று அங்கு பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றன. அப்போது இந்தக் கிளியும் அங்கு சாற்றப்படுகிறது. பின் அதை அன்பளிப்பாக ஒரு சில பக்தர்களுக்கு  அளிக்கப்படுகிறது. இந்தக்கிளி வாடாமல் பல நாட்கள் இருக்கிறதாம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடக்கும் விவாகத்தில் ஆண்டாள் மாலையும், இலைக்கிளியும் நிச்சயம் பங்கு  பெறும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.