குறளின் கதிர்களாய்…(53)
-செண்பக ஜெகதீசன்
புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து. (திருக்குறள்:277- கூடாவொழுக்கம்)
புதுக் கவிதையில்…
குன்றிமணியின் உடலது
குன்றாத சிவப்பழகு,
களங்கமாய்க் கறுப்பு முகம்…
இப்படித்தான் சிலர்,
இருக்கிறார்கள் துறவறத்தில்-
புறத்தே தூய தவக்கோலம்,
அகத்தே
குன்றிமணியின் கருமைபோல்
குறைகளுடன்…!
குறும்பாவில்…
தவவேடத்தில் தவறு,
குன்றிமணியின் சிவப்பு உடலில்
கறுப்பு முகம்…!
மரபுக் கவிதையில்…
சொக்கத் தங்கம் எடைபோடச்
சேர்த்துக் கொள்ளும் குன்றிமணிதன்
சொக்க வைக்கும் சிவப்பழகில்
சேர்ந்த குறையாம் கருமுகமாய்,
பக்குவம் பெற்றுத் துறவுபூண்டு
பக்தி நெறியில் பணியாற்றும்
திக்கெலாம் புகழும் தவத்தோர்தம்
தவறுகள் பெரிதாய்த் தெரியுமன்றோ…!
லிமரைக்கூ…
சிவப்பழகு குன்றிமணியின் கறுப்பு குறை,
மன்பதை போற்றும் தவவேடத்தில்
மறைத்துச் செய்திடும் தவறுகள் கறை…!
கிராமிய பாணியில்…
குன்னிமுத்து குன்னிமுத்து
காட்டிலுள்ள குன்னிமுத்து,
செவப்பழகுக் குன்னிமுத்து
கொறயா
கறுப்புமூக்குக் குன்னிமுத்து…
தவசிவேசம் போட்டுக்கிட்டு
தவறுசெஞ்சா தெரிஞ்சிபோவும்
தெளிவா தெரிஞ்சிபோவும்,
குன்னிமுத்து மூக்குப்போல
கொறயெல்லாந் தெரிஞ்சிபோவும்…
குன்னிமுத்து குன்னிமுத்து
செவப்பா
கறுப்புமூக்குக் குன்னிமுத்து…!
//தவசிவேசம் போட்டுக்கிட்டு
தவறுசெஞ்சா தெரிஞ்சிபோவும்
குன்னிமுத்து மூக்குப்போல
கொறயெல்லாந் தெரிஞ்சிபோவும்…//
போலித் துறவிகளைக் கேலி செய்யும் வரிகள் நன்று! வாழ்த்துக்கள் நண்பரே!
நண்பர் சச்சிதானந்தம் அவர்களின்
கருத்துரை மற்றும் வாழ்த்துரைக்கு,
மிக்க நன்றி…!