நாகேஸ்வரி அண்ணாமலை

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருபத்தோராம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு அதிசயத்தைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. மொத்த இந்தியாவிலும் குற்றம் புரிந்த ஒன்பது இந்துச் சாமியார்கள் அரசிற்குச் சவாலாக இருந்து தீராத பிரச்சினைகளை உருவாக்கி வருவதாக ஒரு தமிழ்ப் பத்திரிக்கை பட்டியல் கொடுத்திருந்தது. இவர்களில் பலர் பாலியல் குற்றங்கள் புரிந்தவர்கள். இதில் நான் கீழே குறிப்பிடப்போகும் சாமியாரும் அடக்கம். ஆனால் அவருடைய சிஷ்யர்கள் அவர் இறந்த பிறகும் அரசிற்கு இடைஞ்சல் கொடுத்துவருகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

இவர் ஒரு பெரிய ஆசிரமம் நடத்திவந்தார். நானூறு ஏக்கர் நிலத்தில் இவரது ஆசிரமம் நடந்துவருகிறது. பல ஏழை மக்கள் அங்கு வாழ்ந்துவருகிறார்கள். அங்கு எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து நிலங்களில் பாடுபடுகிறார்கள். ஆனந்தமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஒரு ஆயுர்வேத மருந்தகமும் ஆசிரமத்திற்குள் இருக்கிறது. தினமும் 25 லிட்டர் பால் கொடுக்கும் 750 கறவைப் பசுக்கள் இருக்கின்றன. ஏழை மக்களுக்கு வாழ வழிவகுத்திருக்கும் இந்தச் சாமியாருக்கு ஏராளமான பக்தர்கள். இப்படிச் சில பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன.

இவர் 2013-ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமாகிறார். ஆனால் அவருடைய சிஷ்யர்களும் பக்தர்களும் அவர் மறுபடியும் உயிர்பெற்று வருவார் என்று நம்பிக்கொண்டு அவருடைய உடலைத் தகனம் செய்யாமல் ஒரு குளிர் பெட்டியில் பத்திரமாக பதப்படுத்தி ஆசிரமத்தின் ஒரு உள் அறையில் வைத்திருக்கிறார்கள். அவருடைய மகன் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வந்து அவருக்கு மகன் என்ற முறையில் ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் என்கிறார். ஆனால் அவர் இறக்கவில்லை, எப்படியும் மறுபடி உயிர்பெற்று வருவார் என்று திடமாக நம்பிக்கொண்டிருக்கும் அவருடைய சிஷ்யர்களும் மற்ற பக்தர்களும் இதற்குச் சம்மதிக்கவில்லை. இந்த விஷயம் நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்பட்டு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் பதினைந்து நாட்களுக்குள் இவருடைய உடல் தகனம்செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது. ஆயினும் நீதிமன்ற ஆணைக்கு ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. இப்போது ஆசிரமத்திற்குள் ஒரு சிலரையே அனுமதிக்கிறார்கள். சாமியார் உயிரோடு இருந்தபோது அவருக்கு வேண்டாதவர்களால் ஆபத்து ஏற்படும் என்பதால் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இப்போதும் அதே பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. அதாவது அவருடைய உடலை தகனம் செய்யக் கூடாது என்று அடம்பிடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய ஆசிரமத்தைச் சுற்றிப் பலத்த காவல் இருக்கிறது. இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அதுபோல் இவருக்கு உயிரோடு இருக்கும்போதும் பாதுகாப்பு, இறந்த பிறகும் பாதுகாப்பு.

அரசு உயர் அதிகாரிகளில் பலரும் காவல்துறையைச் சேர்ந்தவர்களில் பலரும் இவருடைய பக்தர்கள். இவருடைய ஆசிரமத்திற்கு அடிக்கடி வருபவர்கள். இவர்களுக்கு இப்போது தர்மசங்கடமான நிலை. தாங்கள் கடவுளுக்குச் சமமானவர் என்று நினைத்து மதிக்கப்பட்டவரை உயர்நீதிமன்ற ஆணையின்படி தகனம் செய்வது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதே சமயம் நீதிமன்ற ஆணையை மீறவும் முடியவில்லை. ஆசிரமத்தைச் சுற்றியிருக்கும் சுவர்களுக்கு உள்ளே யூனிபார்ம் அணிந்த காவலர் யாரும் தென்படவில்லை. ஒரு சிலரே ஆசிரமத்திற்குள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆசிரமத்திற்கு வெளியே இருக்கும் ஊரில் உள்ள மக்களிடையே அவரது உடலை வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்போரும் அவர் திரும்பி வருவார் என்போரும் ஆக இரு தரப்பினர் இருக்கிறார்கள். அந்த ஊரில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் ஒருவர் கடந்த மூன்று வருடங்களாக அவருடைய வியாபாரம் செழித்துவருவதாகவும் அதற்கு அவர் அடிக்கடி ஆசிரமத்திற்குச் சென்று சாமியாரைத் தரிசித்து வந்தது ஒரு காரணம் என்றும் அவர் எப்படியும் உயிர்பெற்று வருவார் என்றும் ஏனெனில் அவருடைய ஆத்மா மிகவும் சுத்தமானது என்றும் வாதிடுகிறார். 81 வயதான ஒரு விவசாயி அவருடைய ஊரில் பலர் சாமியாரின் பக்தர்கள் என்றும் ஆனால் ஒருவர் கூட அவரைப் பார்த்ததில்லை என்றும் கூறுகிறார். முந்தையவர் அவரைத் தான் பார்த்ததாக உறுதியாகக் கூறுகிறார். இப்போது அவர் உயிரோடு இருக்கிறார் என்றால் எழுந்துவந்து எல்லோருக்கும் தரிசனம் கொடுக்க வேண்டியதுதானே என்கிறார் பிந்தையவர். ‘சமாதி’ நிலையில் இருப்பவர் குளிர்சாதனப் பெட்டியில் இருப்பானேன் என்பதும் இவருடைய கேள்வி.

மற்ற மாநிலங்களிலிருந்து வேலை தேடி வந்திருக்கும் பலருக்கு இவர் வேலைவாய்ப்பும் வாழ்க்கை வசதிகளும் செய்துகொடுத்து அவர்களுடைய ஓட்டுக்களை இவர் வாங்கிக் கொடுத்ததால் சாமியாருக்கு நிறைய அரசியல்வாதிகள் நண்பர்கள். சாமியார் இறந்த பிறகும் அரசியல்வாதிகளும் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இறந்த சாமியாருக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.

விஞ்ஞான வளர்ச்சியும் சிந்திக்கும் திறனும் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இறந்த ஒரு மனிதர் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கை மனிதர்களுக்கு இருக்குமானால் சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் சிலுவையில் உயிர்துறந்த இயேசு உயிர்த்தெழுந்தார் என்று அப்போது மக்கள் நம்பினார்கள் என்றால் அதில் வியப்பேதும் இல்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *