-மேகலா இராமமூர்த்தி

anna

 

 

 

 

 

 

 

 

 

உருவமது சிறிதாக இருந்த போதும்
  உள்ளத்தால் உயர்ந்தவர்தான் நமது அண்ணா!
அருவியாய்க் கொட்டுகின்ற அவரின் பேச்சு
  அருந்திமகிழ்ந் திடத்திகட்டா அமுத ஊற்று!

கருவமே சிறிதுமில்லா எளிமை யோடுக்
  கருமமே கண்ணாகக் கொண்ட வாழ்வு!
அரசியல் துறையினிலே இருந்தும் கூட
  அவ்வியம் அறியாத குழந்தை அண்ணா!

அன்பாய்த் தான் வளர்த்த திமுகவின்
  அவல நிலையை இன்று கண்டிருந்தால்
’என்ன கொடுமையிது!’ என்றே ஏங்கி
  இடிந்து போயிருப்பார் இதயம் சோர்ந்து!

ஏழையின் சிரிப்பினிலே இறையைக் கண்ட
  ஏந்தலாய்த் திகழ்ந்தவர்நம் அன்பு அண்ணா!
தாழையின் மலர்போலே மணத்தைச் சிந்தி
  என்றுமே நிலைத்திருப்பார் அமர ராக!

4 thoughts on “நமது அண்ணா!

 1. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனப்படும் முச்சொற்களில் புத்தர் போல் ஒழுக்கம் கடைப்பிடிக்க வழி வகுத்த ஒரே  சிந்தனைச் சிற்பி.

  கவிதைக்குப் பாரட்டுகள் மேகலா.

  சி. ஜெயபாரதன்

 2. அண்ணாவின் பெருமைதன்னை 
   அழகாய் உணர்த்திய கவிதை!
  கண்ணான தலைமகனை 
   கண்டிருந்த தலைமுறைதான்!
  பொன்னான மனதைக்கொண்டு 
    புன்முறுவல் வதனம்தந்து
  எந்நாளும் நம் இதயங்களில் 
    வாழுகின்றார்  நிரந்தரமாய்!
  நேர்மைக்கு வழிகாட்டி…
     திறமைக்கு உயிரூட்டி…
  தமிழுக்குப் பெருமைசேர்த்து 
     கடமைக்கு முதலிடம் தந்தாரே..
  அறிவுக்கும் ஆற்றலுக்கும் 
      அடைக்கலமாய் ஆனாரே!
  பலகோடி மாந்தரிலே 
     பண்பட்ட மனிதராய் 
  வந்துதித்த கதிரவனோ…
      வாழட்டும் அவர் புகழே…

 3. கவிதையைப் பாராட்டிச் சிறப்பித்துள்ள ஜெயபாரதன் ஐயாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

  அன்புடன்,
  மேகலா

 4. என் கவிதையைப் பாராட்டியதோடு அல்லாமல் தாமும் அறிஞர் அண்ணாவைப் போற்றி அருங்கவிதை ஒன்றை யாத்தளித்துள்ள அருமை நண்பர், கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும்!

  அன்புடன்,
  மேகலா

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க