மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
— திருமதி. மீனாட்சி நாகப்பன்.
என்னுரை:
“பச்சைக்கிளி முத்துச்சரம்” . . . . . .என்ற பாடலில்
“வள்ளல் குணம்” யாரோ . . . . . . . என்ற பாடல் வரிகளின் கதாநாயகர்!
காவியமாய்! நெஞ்சின் ஓவியமாய்! – காலங்கள் கடந்தாலும் எல்லோர் மனதிலும் என்றும் துடிக்கின்ற இதயமாய் வாழ்கின்றவர் திரு. எம்.ஜி.ஆர் என்றழைக்கப்படும் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆவார்!
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர்சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளுக்கு உயிர் ஊட்டியவர்! இலக்கண இலக்கியமாய்த் திகழ்ந்தவர்! இவ்வாறு மக்களின் மனதில் மக்கள்திலகமாய் விளங்கிய எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றிய என் மனத்துளிகள் சில!
சிறியோர் நலன் சில வரிகள்:
“திருடாதே பாப்பா திருடாதே..” என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்..
“திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில் பாடினாலும் மக்கள்திலகம் மூலமே அதுபோன்ற பாடல்கள் மக்கள் மனதில் நிலைபெற்று இன்றளவும் பாடப்படுகின்றன!
‘சின்னப்பயலே.. சின்னப்பயலே! சேதி கேளடா..
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆளும் வளரணும்.. அறிவும் வளரணும்..
அதுதாண்டா வளர்ச்சி!” என்று இளம் குழந்தைகளை நோக்கி இனிமையாய் சொன்ன விதமும்,
தூங்காதே தம்பி தூங்காதே!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்ற பாடலில்.. பொன்னான வேலைகள் .. பணி நிறைவு செய்ய காத்திருக்கும்போது தூங்கிக் கழிக்கக்கூடாது என்கிற அறிவுரையைப் பாடலின் மூலம் நடித்துக்காட்டிய விதம் அருமை!
“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி!”
என்று இளைஞர்களுக்கும் திரையிசைப் பாடல்மூலம் திகட்டாத கருத்துக்களை வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்!
இளமை இனிமை என்றும் என்றென்றும்:
“ஹலோ! ஹலோ!! சுகமா..
ஆமா! நீங்க நலமா..”
என்று காதலனாய் காதலியுடன் பாடும்விதமும்…
“மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப்போ “
என்று காதலியின் நடையை வருணித்து…
“தொட்டால் பூ மலரும்..
தொடாமல் நான் மலர்ந்தேன்”
என்ற பாடலில் காதலியைப் பார்த்து கண் சிவந்த விதமும், ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் அன்றைய காலக்கட்டத்தில் “காதல்” எனும் உணர்வும், உணர்ச்சியும் எழாமல் இருந்திருந்தால் ஆச்சர்யமே! அவ்வளவு இனிமை என்றும் என்றென்றும் காணும்போது!
நாட்டின் நலனில் பற்றுகொண்ட பாடல்கள்:
“தாய் மேல் ஆணை! தமிழ்மேல் ஆணை..” என்று சத்தியம் செய்யும் பாடல்! சாத்தியமான பாடல் அது!
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!”
என்கிற பாடல் பயத்தை நீக்கும் பாடல் அல்லவா?
“உன்னையறிந்தால் நீ
உன்னையறிந்தால் உலகத்தில் போரடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல்
நீ வாழலாம்!”
என்ற பாடல் உன்னை அறிந்து கொள்! மற்றவர்களை குறை சொல்லுமுன் என்கிறது!
“நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால். . . . . . . .” என்று பாடிய திரைப்படக் கதாநாயகர், பிறகு தமிழக முதல்வராய் ஆணையிட்டு மக்களின் நலன் காத்தது இறைவனின் அருளாசி!
1960களில் கொடிகட்டிப்பறந்தவர் திரைப்படங்களில்!
“அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்..” என்கிற பாடலில் வாழ்க்கைக் கடலில் துன்ப அலைகள், துயர அலைகள் வரும்.. அதை துடுப்புப்போல் தள்ளிவிட்டு இன்பமயமான வாழ்க்கை தொடர வேண்டும் என்று உணர்ச்சி பொங்க உரைத்தார்!
மக்கள் பணி:
திரைப்படங்களில் முதல்வராக… கதாநாயகராக… இருந்த மக்கள்திலகம், மக்களின் முதல்வராக பணியாற்றியது அவர் வாழ்க்கையின் உச்சம்! ஏழை எளிய மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்கள் நலன் காத்த அருட்செல்வர்! சென்னையில் போரூர் செல்லும்வழியில் இராமாபுரத்தைக் கண்டால் எம்.ஜி.ஆரின் நினைவுகளில் மூழ்காதவர் எவரும் இலர்!
காலஞ்சென்ற காவியத்தலைவன்!
காரிருள் நீக்கிட வந்த கதிரவன்!
வாழ்வில் பேரொளி கொடுத்த பெருஞ்சுடர்!
இன்றளவும் உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையாம் மெரீனாவிலே வங்கக்கடலோரம் மக்களின் நம்பிக்கைச் சுடராய் காட்சிதருகிறார்!
“பொதுவாக.. மண்ணைத் தோண்டி தங்கமெடுப்பதைக் அறிவோம்! முதன்முறையாக மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தையல்லவா புதைத்தோம்” என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வைர வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்!
மக்கள் திலகம் பற்றி மனம் நிறைந்தவை:
சொல்லலாம்! சொல்லிக் கொண்டே இருக்கலாம்! அன்றும் இன்றும் என்றும் … இசையும் பாடலும் இருக்கும்வரை மக்கள் திலகத்தின் படக்காட்சிகள்..மனக்காட்சியாக மனம் நிறைந்து நிலைக்கும்!
திருமதி.மீனாட்சி நாகப்பன்
புதுக்கோட்டை