’ப்ரஹார்’ ஏவுகணைச் சோதனை – வெற்றி – செய்திகள்
21 ஜூலை 2011, ஒரிசா மாநிலம், சாந்திப்பூர் என்னும் இடத்தில் கடலோரத்தில் இருந்து, பரிசோதனைக்காக ‘ப்ரஹார்’ என்னும் ஏவுகணை ஏவப்பட்டது. சோதனை நடந்த பொழுது மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இது, வாகனத்தில் வைத்து எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று, தரையில் இருந்து ஏவப்பட்டு, தரையில் இருக்கும் இலக்குகளைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது.
150 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக் கூடியது ‘ப்ரஹார்’ ஏவுகணை. ஒரே சமயத்தில் ஆறு ‘ப்ரஹார்’ ஏவுகணைகளை ஒரே வாகனத்தில் இருந்து செலுத்த முடியும். இதில் திட நிலை எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.
40 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக் கூடிய ‘பினாகா’ ஏவுகணைக்கும், 250 முதல் 350 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக் கூடிய ‘ப்ருத்வி’ ஏவுகணைக்கும் இடைப்பட்ட இடைவெளியை நிரப்பும் வகையில் ‘ப்ரஹார்’ ஏவுகணை இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சோதனையின் முன்னேற்பாடாக சோதனைத் தளம் அமைந்துள்ள இடத்தின் 2கிமீ சுற்றுப் பரப்பில் வசிக்கும் 3,220 மக்கள் தற்காலிகமாக வேறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.