-கவிஞர் காவிரிமைந்தன்

அன்பின் அலைகள் தவழ்ந்து கிடந்தால்
இன்ப நிலை தோன்றும்!
ஆசை அலைகள் துள்ளி எழுந்தால்
அடங்குதல் முறையாகும்!
எங்கே மனிதன் எல்லைக்குள்ளே
தன்னை வகுக்கிறான்?
எல்லைகள் அங்கே மீறும்போது                             heart
தொல்லைப் படுகின்றான்!

சொல்லத் தெரிந்த மொழியிலெல்லாம்
சொல்லிப் பார்க்கின்றான்!
சொல்லாததுவே அதிகமென்று
பின்னர் நினைக்கின்றான்!
காலையில் எழுவதும் மாலையில் விழுவதும்
கதிரவன் கணக்காகும்!
கண்ணுக்குள்ளே கண்ணைவைப்பது
கற்பனைச் செயலாகும்!

காட்சிப் பிழைகள் கண்ணில் தோன்றும்
காலத்தின் கட்டாயம்!
கனவுகள் கலைவது காலையில் எழுந்தால்
நிஜங்கள் தெளிவாகும்!
தொட்டது எங்கே… விட்டது எங்கே…
தொடர்ச்சி இங்கில்லை!
புள்ளிகள் வைத்த கோலத்திலும்கூட
புணர்ச்சிகள் கிடையாது!

எனக்குள் நானே எழுப்பும் கேள்விகள்
எல்லாமிங்கே அனுபவங்கள்!
எண்ணிப் பார்த்து இன்னும் நடந்தால்
எதிர்காலம் சுகமாகும்!
கண்ணில்வழியும் நீருக்குமட்டும்
களங்கங்கள் கிடையாது!
மன கங்கை வழியும் நேரத்திலே
மௌனங்கள் உடையாது!

ஒற்றை இதயம் எத்தனை காயம்
மனிதன் சுமக்கின்றான்!
அத்தனைக்கும் காரணமறிந்து
தனியே சிரிக்கின்றான்!
எண்ணத் தேரில் கண்ணனை வைத்தால்
வாழ்க்கைச் சீராகும்!
எடுத்துச் சொன்ன கீதையின் சாரம்
வாழ்க்கை நெறியாகும்!

என்ன சாதியில் பிறந்தாய்
என்பது கேள்வியில்லை!
என்ன சாதிக்கப் பிறந்தாய் என்பதைத்
தெளிந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை!
ஒவ்வொரு நாளும் உனக்களித்த
இறைவனின் பரிசாகும்!
உணர்ந்து நடந்தால் மனிதா
உனைத்தானே உலகே வழி கேட்கும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *