இலக்கியம்கவிதைகள்

பச்சை மழைக் கிராமம்!

-எம்.எல்.எம்.அன்ஸார், இலங்கை

இதயம் தேடிக் கண்டுபிடித்த இன்பம்
இதுதான் சோக்கான சுகம்!                                              Ansar

பயணப் பாதி வேளையில் தரிக்கிறேன்
கண்களின் மீது வரையப்பட்ட குளிர் ஓவியங்களென
தாவரங்கள் தழைத்துக் குதூகலிக்கின்றன.
வட்ட வீட்டில் குளமொன்று
தன்னந்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது
சொண்டு முளைத்த தேவதைகளான கொக்குகள்
காவலுக்கு நிற்பதைக் காணுகிறேன்!

பச்சை நிறத்தில் மழை பெய்து
ஓய்ந்திருக்குமோ இக் கன்னடக் கிராமத்தில்?
விழி அகலும் வழி முழுதும்
நெல் வயலும் புல் நிலமும்
வெறுங்காலால் நடந்தே விருப்பங்களைக்
கண்களால் சூப்பித் தின்கின்றேன்

நான் தேடும் அமைதியை அள்ளிக் கொட்டவென்றே
இவ்வொற்றை மாமரம்
நிழலை விரித்து நிலத்தில் வைத்திருக்கிறது
கல்லெறி விழுந்து காயம் வந்துவிடுமென்று பயந்தா
கனிகளும் காய்களுமாகத்
தூக்குப் போட்டுத் தொங்குகின்றன என்று
கற்பனை எண்ணிப் பார்க்கின்றேன்!

இம்மாதிரிக்
குளத்தில் தூசு கழுவிக் குளித்து
மரக்கிளைகளில் தலைதுவட்டி வரும்
வெள்ளைக் காற்றைச்
சுவாசித்து விழுங்கிய நாட்கள் நினைவில்லை!

நிற்பதற்குத் தயாராகிவிட்ட புகை(யி)ரதம் போல
வலது பக்க ’கிறவள்’ வீதியைக் கடந்து
நடந்து போகிறது சிற்றோடை
பிரயாணிகளாகப் பயணிக்கின்ற மீன்குஞ்சுகள்
கையசைத்துக் காட்டுகின்றன!

நான் புறப்பட்டுப் போக வேண்டும்
இறக்கிவைத்த மனசை மீளப் பொருத்தும்
ஆற்றல் அறவே இல்லை
இழப்பொன்று நிகழ்ந்துவிட்டது மட்டும்
காய்ச்சல் காயத் தொடங்குகிறது!

வாசலுக்கு வந்து வழியனுப்பும் புதுப் பொண்டாட்டி போல
பாதையோரக் காட்டுப் பூக்கள்
ஆசீர்வதித்து அனுப்பி வைக்கின்றன!

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க