மீ. விசுவநாதன்

அத்தியாயம் : ஐந்து

கற்க, கசடறக் கற்க …

அவனை அழைத்துக் கொண்டு அந்தப் பள்ளியின் முதல் வகுப்பு அறைக்குள் அவனுக்கு அப்பா நுழைந்த பொழுது, அங்கு தயாராக அமர்ந்திருந்த பெரியவர் சுந்தரவாத்யார் ஒரு குழந்தைக்கு அதன் முன்னால் பரப்பி இருந்த “நெல்லில்” அதன் வலதுகையைப் பிடித்து, சனாதன தர்மப் படி “ஓம் ஸ்ரீ குருப்யோ நம: ஹரி: ஓம்” என்று எழுதக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சுந்தர வாத்யார் அவனைப் பார்த்துச் சிரித்தபடி,”வா..வா..விஸ்வம்..இப்படி உக்காரு” என்று தனது வலது பக்கத்து இடத்தைக் காண்பித்தார். அவனும் மெல்ல அவர் அருகில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு சுந்தர வாத்தியாரின் அன்பான முகம் பிடித்திருந்தது. அவரும் அவனுடைய மாமாத் தாத்தாவும் நெருங்கிய நண்பர்கள். ஒரே தெருவில் வசிப்பவர்கள். அதனால் அவன்மீது சுந்தர வாத்தியாருக்குக் கொஞ்சம் கூடுதல் கரிசனம் இருந்தது. பதினைத்து இருபது குழந்தைகள் தரையில் ஒரு பெரிய பலகையில் வரிசையாகப் பறவைகளைப் போல அமர்ந்து கொண்டு ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிரித்தும், சில நேரம் சத்தமாகவும் பேசிக்கொண்டிர்ந்தனர்.

அவனது வலது கை ஆட்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு, முன்னால் பரப்பி இருந்த நெல்லில் அவனுக்கும் அட்ஷராப்யாசம் செய்து வைத்தார். உடனேயே அவனுக்கு அப்பா தன்னுடன் ஒரு பையில் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் அவற்றுடன் ஒரு இரண்டு ரூபாயும் எடுத்து அங்கு வைத்திருந்த ஒரு தாம்பாளத்தில் வைத்து,” இந்தா இத அப்படியே சார்ட்டக் கொடுத்து நமஸ்காரம் பண்ணிக்கோ” என்று அவனிடனம் தந்தார். அவனும் சுந்தர வாத்தியாரை நமஸ்காரம் செய்தான். அவர் ஒரு பழத்தை எடுத்து அவனிடம் தந்து,” நன்னா படிக்கணும்..நன்னாரு” என்று ஆசீர்வாதம் செய்தார்.

படம் உதவி: H.கிருஷ்ணன்
படம் உதவி: H.கிருஷ்ணன்

“இன்னிக்கி ஆத்துக்கு போய்கோ..நாளைலேந்து சரியா காலைல எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் வந்துடணும்” என்று சிரித்துக் கொண்டே அனுப்பி வைத்தார். அந்த லெக்ஷ்மீபதி நடுநிலைப் பள்ளியில் இருந்த கண்ணம்மா டீச்சர், சுப்புலக்ஷ்மி டீச்சர், செட்டியார் சார், செல்லப்பா சார், இராமநாதன் சார், G. R. சார் , குளத்து சார், A. R. சார், சீதாராமன் சார் என்று மிக அருமையான ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தது கடலளவு. அவன் கற்றுக் கொண்டதோ ஒரு கை அளவு கூட இல்லைதான். ஒவ்வொரு ஆசிரியருக்கும் அந்த மாதச் சம்பளம் கூடச் சரியான தேதிக்கு வராது. அப்படி இருந்தும் அவர்கள் மாணவர்களுக்கு அன்போடு கற்றுக் கொடுக்க எடுத்துக் கொண்ட கடமை உணர்வுக்கும், அர்ப்பணிப்புக்கும் விலையே கிடையாது.

அவன் பள்ளிக்குச் சேர்ந்த அன்றுதான் அவனது பக்கத்து வீட்டு “ஐயா வாத்தியாரின்” மகன் ராஜாமணியும் முதல் வகுப்புக்குச் சேர்ந்தான். இருவரும் காலையில் சேர்ந்து பள்ளிக்குச் சென்று மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவார்கள். மீண்டும் பள்ளிக்குச் சென்று மாலையில் கன்றுக் குட்டிகளைப் போலத் துள்ளிக் குதித்துக் கொண்டு, உடம்பெல்லாம் புழுதியாக வீட்டுக்குத் திரும்புவார்கள். வீட்டினுள் நுழைந்த உடனேயே அவனது கை,கால்களை அவனுக்கு அம்மா நன்றாகக் கழுவி விடுவாள். பிறகு ஒரு சின்னத் தட்டில் தட்டையும், முறுக்கும் வைத்து சாப்பிடத் தருவாள். அவனுக்குக் குடிப்பதற்காக அவன் அம்மா “காப்பி” எடுத்து வருவதற்குள் தட்டை, முறுக்குகளைப் பாதி தின்றும் மீதியை “ட்ராயர் பையில்” அடைத்துக் கொண்டும் வெளியில் விளையாடத் தயாராகி விடுவான். காப்பியை அவசர அவசரகாகக் குடித்துவிட்டு ஒரே ஓட்டமாக வாசலுக்குப் போய்விடுவான். “கண்ணா..சாயங்காலம் ஆறு மணிக்குள்ள ஆத்துக்கு வந்துரு..” என்று அம்மா சத்தம் போட்டுச் சொல்வது அவன் காதிலேயே விழாது. அப்படி ஒரு விளையாட்டுப் பைத்தியம் அவன்.

அவன் படிக்கும் காலத்தில் ஐந்து வயது முடிந்துதான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். இப்பொழுது போல இரண்டரை வயதிலேயே ப்ரீக்கேஜி, எல்கேஜி, யுகேஜி என்றெல்லாம் கிடையாது. ஐந்து வயது வரை நங்கு விளையாடியும், தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டும், அம்மாவின் கையால் ஆசை ஆசையாய் சாப்பிட்டும்தான் அவனும் வளர்ந்தான்.

டுண்டி விநாயகர் கோவில்

Painting17கல்லிடைக்குறிச்சியில் உள்ள பதினெட்டு அக்ரஹாரங்களில் ஒன்றுதான் “டுண்டி வளாகம்” தெரு. இந்தத் தெருவில் கோவில் கொண்டுள்ள தெய்வம் “ஸ்ரீ டுண்டி விநாயகர்” . கால வழக்கில் தொந்தி விநாயகர் தெரு, தொந்திவிளாகம் தெரு என்றெல்லாம் அழைக்கப் பட்டாலும், டுண்டி விநாயகரின் வளாகத்திலேயே அதாவது அவர் அருகிலேயே இருப்பதால் “டுண்டி வளாகம்” தெரு என்று சிறப்பாக வழங்கப் படுகிறது. அழகான சொப்பு போன்ற சிறிய கோவில்தான். நல்ல வரப்ப்ரசாதி இந்த கணபதி. வடக்கே கங்கைக் கரையில் காசி நகரத்தில் உள்ள “டுண்டி விநாயகரைப்” போலத் தெற்கே தாமிரபரணி நதிக் கரையில் இந்த “டுண்டி விநாயகர்” கோவில் இருக்கிறது. இரண்டு புறமும் அழகான வீடுகள் சுமார் எழுபது இருக்கும். நல்ல கட்டுக்கோப்பான ஒற்றுமையான மக்கள் வாழ்கிற தெரு. வைதீகமும், லௌகீகமும் கைகோர்த்து இசைந்து இருக்கின்ற தெரு. விளையாடும் பொழுது கூட தங்கள் தெருக் குழந்தைகளைத் தவிர மற்ற தெருக் குழந்தைகள் வந்தால் “ஏய்…அவன் அசல் தெரு..நம்ம தெரு இல்லை..” என்று சொல்லும் தீவிரத் தெருப் பற்று உள்ளவர்கள். நன்கு படித்தவர்கள். மருத்துவர்களும், சிறந்த வியாபாரிகளும் இருக்கும் தெரு. தங்கள் தெருப் பிள்ளையார் மீது அபார நம்பிக்கை அவர்களுக்குண்டு. அந்தத் தெருவில் நடக்கும் திருவிழாக்களுக்கு வெளி ஆட்களிடம் அவர்கள் காணிக்கை கேட்பது இல்லை. அவர்களாகத் தரும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்வார்கள் அவ்வளவுதான்.

 ரவி விஸ்வம்
ரவி விஸ்வம்

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழாவை மிக விமர்சையாகக் கொண்டாடுவார்கள். ஒன்பது நாட்கள் நடைபெறும் அந்த விழாவின் கட்டளைக் காரர்கள் அனைவரும் அந்தத் தெருக் காரர்களாகத்தான் இருப்பார்கள். ஒன்பது தினங்களும் மாலை ஆறுமணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நடைபெறும். அது சமயம் அந்தத் தெருவில் உள்ள குழந்தைகள் சுவாமி ஊர்வலத்தில் முன்பாக இருபுறமும் வரிசையாகத் தங்களின் கைகளில் ஒரு கொடியை ஏந்திக் கொண்டு மெல்ல நகர்ந்து செல்வார்கள். அந்தக் கொடிக்கு “ஆலவட்டம்” என்று பெயர். அந்தக் கொடி பல வண்ணங்களில் இருக்கும். குழந்தைகளின் பெற்றோர்கள் அந்த ஆலவட்டத்தைத் தங்கள் குழந்தைகளுக்குப் பெற்றுத்தருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

எப்பொழுதும் ஒரு ஆலவட்டம் அவனுக்கும் மாமாத்தாத்தா வாங்கித்தருவார். அவனுடனேயே நடந்து கொண்டும் வருவார். அந்தத் தெரு முழுதும் ஒவ்வொரு வீட்டிலும் சுவாமிக்கு நிவேதனம் செய்வார்கள். சுவாமி திரும்பவும் கோவிலுக்குள் வந்த பொழுது தீபாராதனை நடைபெறும். அதன் பிறகு அனைவருக்கும் சுண்டலும், சர்கரைப் பொங்கலும் விநியோகிப்பார்கள். அவனுக்கு மாமாத் தாத்தாவின் வீட்டுக் கொட்டிலில் உள்ள பெரிய அடுப்பில் பெரிய வார்ப்பை வைத்து சுவாமிக்கான நிவேதனச் சுண்டலை மாமாத் தாத்தா செய்து கொண்டிருப்பதை அவன் பார்த்திருக்கிறான். சிறுவனாக அவன் இருக்கும் பொழுது “அப்பாச்சி கிருஷ்ணையர்” என்னும் கிராமத்துப் பெரியவர்தான் சுண்டலையும், சர்க்கரைப் பொங்கலையும் விநியோகிப்பார். கோவிலின் பெரிய வாயில் படியில் உட்கார்ந்து கொண்டு எல்லோருக்கும், அளந்து வைத்தது போல அவர் விநியோகிக்கும் அழகே தனிதான். அதை அவன் இப்போதும் அந்தக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யப் போகும் பொழுதெல்லாம் நினைத்து உள்ளுக்குள் மகிழ்ச்சி கொள்வதுண்டு. ஒன்பதாவது நாளன்று, அதாவது விநாயக சதுர்த்தி அன்று சிறப்பு ஹோமங்களும், கிராம போஜனமும் (அன்னதானம்) நடைபெறும். அன்று இரவில் ஸ்ரீ டுண்டி வினாயகருக்குச் சிறப்பு அலங்காரம் செய்து, அழகான சப்பரத்தில் சுவாமியை ஊர்வலமாக பதினெட்டு அக்ரஹாரத்திற்கும் அழைத்து வருவார்கள். ஊர்வலம் முடிந்து சுவாமி கோவிலுக்குத் திரும்பும் பொழுது மறுநாள் அதிகாலை ஐந்து மணியாகிவிடும்.

இந்தத் தெருவில் GLAD கிருஷ்ணையர் , இராமலிங்கம் ஐயர், L. M. சுந்தரம் ஐயர் , சாமு வாத்தியார், மணி டாக்டர் , மில் ராமநாத ஐயர், ரங்கநாத வாத்தியார், மகாதேவா தீக்ஷிதர், ராமகிருஷ்ண தீக்ஷிதர், பட்டாம்பிச் சங்கர ஐயர் போன்ற பெரியோர்கள் மிகச் சிறப்பாக வாழ்திருந்தார்கள். இப்பொழுது அவர்களது வாரிசுகள் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மிகவும் சிரத்தையுடன் செய்து வருகிறார்கள்.

இப்பொழுது இந்தப் பிள்ளையார் கோவிலுக்கு தர்மகர்த்தாவாக இருப்பவர் செங்கோட்டை சந்திர விலாஸ் வான்ஜீஸ்வர ஐயரின் மகன் சிவராமகிருஷ்ணன். ஆன்மீக உணர்வும், வைதீக சிரத்தையும் கொண்ட சிவராமகிருஷ்ணனின் அத்தாந்தான் கவிமாமணி கு. தேவநாராயணன். அவருக்கும் இதே டுண்டிவளாகம் தெருதான்.

ரெங்கநாத வாத்தியார் சாம வேதி. அவரும், சுந்தர வாத்தியாரும்தான் கல்லிடைகுறிச்சி, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, செங்கோட்டை போன்ற ஊர்களுக்கான “சாமவேத வாத்தியார்”. இப்பொழுது ரங்கநாத வாத்தியாரின் இளைய மகன் “ஸ்ரீராமன்”தான் ஊருக்கே சாமவேத வாத்தியார். நல்ல ஒழுக்கமும், பெரியோர்களிடம் மதிப்பும் உள்ள இளைஞர். பெரிய வேள்வியும் செய்யத் தெரியும், தேர் ஊர்வலப் பொழுதில் அதன் சக்கரத்திற்கு “சரக்கும்” வைக்கத்தெரியும்.

ஒரு வருடம் விநாயகச் சதுர்த்தி சுவாமி புறப்பாடு முடிந்து தீபாராதனை சமயத்தில் அந்தத் தெருவில் குடி இருந்த “கல்யாணப் பாட்டர்” பாடிய,

“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
உன்னடி என்மனத்தே என்றும்
வழுவாதிருக்க வரம்தர வேண்டும்” என்ற

திருநாவுக்கரசரின் பதிகம் அவனது இளவயது நெஞ்சிலே நன்கு பதிந்து விட்டது.

இரவு வெகு நேரமாக அந்தப் பிள்ளையார் கோவிலில் அவனும், அவனது நண்பர்கள் சுப்பாமணி, கண்ணன், எல்லோருமாக விளையாடிக் கொண்டிருந்தால்,”எல்லாரும் ஆத்துக்குப் போங்கோ…நேரமாச்சு….நாளைக்குப் பள்ளிக் கூடம் உண்டு” என்று ஒரு குரல் மென்மையாக அவர்களை விரட்டும். அந்தக் குரல் அனேகமாக சுந்தர வாத்தியாருடையதாகத்தான் இருக்கும்.

அந்தப் பெரியவரை, நல்லாசிரியரைச் சிறுவயது முதலே கவனித்து வந்ததால் பிற்காலத்தில் அவன் “சுந்தர வாத்தியார்” என்ற சிறுகதையை எழுதி தினமணி கதிருக்கு அனுப்பி வைத்தான். அதை அதன் ஆசிரியார் “கஸ்தூரிரங்கன்” அவர்கள் மார்ச்,12 1995 இதழில் வெளியிட்டார்கள். அப்போதைய இணையாசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், அவனை சந்தித்த சமயம் அந்தக் கதையைப் பாராட்டிச் சொன்னது அவனுக்கு மிகுந்த ஊக்கமளித்தது.

இனியவன் அடுத்த வாரம் வருவான்   ……….

1 thought on “அவன், அது, ஆத்மா! (5)

  1. From Ganesh Iyer Grand son of Sundaravadyar .It is heartening and inducing my memories from the bottom of the heart. Happiest days are recollected. Waiting for More and More.

    Viswa Sir, Impressed on your Guru Bhakti.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க