–சக்தி சக்திதாசன்.

“மக்கள் திலகம்” என்றதுமே ஏதோ இனம்புரியாப் பரவசம் என் மனதில் ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் மூலத்தைத் தேடிக் கொண்டே சென்றேன் அது என்னை எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றது .

ஆமாம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து, “சக்தி” எனும் இந்த மூன்றெழுத்துடன் பின்னிப்பிணைந்தது இன்று நேற்றல்ல.

அப்படி என்னதான் இந்த மனிதனுடன் என்னைப் பிணைத்தது?

மிக ஆழமான கேள்வி? ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் காலடி வைத்திருக்கும் இந்நிலையில் நான் என்னைக் கேட்கிறேன்.

பதில் மிகவும் விசித்திரமானது.

“மனிதனாக வாழந்திட வேண்டும் மனதில் வையடா, தம்பி மனதில் வையடா !” என்று மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடலொன்றில் வரிகள் உண்டு.

உலகில் நன்னெறி கொண்ட மனிதனாக, மக்கள் மனங்களில் கோலோச்சும் மன்னனாக நடைபோட வேண்டுமென்றால் மக்கள் திலகத்தின் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எனும் உன்னத கருத்தே இம்மாமனிதனுடன் என்னை இணைத்தது என்பதே உண்மையாகும்.

யார் இவர் ? ஒரு சாதாரண நடிகர் தானே! இவருக்கென்ன இத்தனை விளம்பரம் என்று எண்ணுபவர்கள் இருக்கலாம்.

இவரின் படத்தில் வரும் பாத்திரங்களில் மயங்கி விட்டாய் என்று சொல்பவர்கள் கூட இருக்கலாம் .

சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் இம்மானிதர் மக்களுடைய மனங்களில் பிடித்திருக்கும் இடம் காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்றாக இருப்பதற்குக் காரணம் என்ன என்றாவது நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா ?

மக்கள் திலகம் எனும் இம்மாமனிதருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இவருடன் பழகிய பலருடன் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

அவர்களில் முக்கியமானவர் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் கவிஞர் வாலி அவர்கள்.

அவரைப் பலமுறை சந்தித்து அளவளாவும் பாக்கியம் பெற்றிருந்தேன் . எமது ஒவ்வொருமுறைச் சந்திப்பின் போதும் அவர் எனக்கு மக்கள் திலகத்தின் உயரிய பண்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி உன்னதமாக விளக்குவார்.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தனது குடும்பத்தில் ஒருவராக மதித்து அவர்களது தேவை என்னவோ அதைத் தனது தேவையாகக் கருதி நிறைவேற்றும் அவரது இளகிய மனம் ஒன்றே அவருக்கு “பொன்மனச் செம்மல்” எனும் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் வல்லமை பெற்றது.

எனது மானசீகக் குரு கவியரசர் கணவிதாசன் அவர்களை தமிழக ஆஸ்தானக் கவிஞராக்கி மகிழ்ந்த அவரது உள்ளத்தை என்னவென்று போற்றுவது.

கவியரசரது விழுதுகளில் ஒன்றான கண்மணி சுப்பு அவர்களின் சந்திப்பின் போது
தனது தந்தையின் வேண்டுகோளை சிரமேல் ஏற்று கவியரசரின் மறைவிற்கு பின்னர் அதைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்த பண்பினை மிக அழகாக எடுத்தியம்பியபோது மக்கள் திலகம் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் மர்மம் புரிகிறது.

நான் படித்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது .
பணத்தோட்டம் எனும் படத்திற்காக டி.எம்.எஸ் உம் , பி.சுசீலா வும் பாடிய “பேசுவது கிளியா ?“ எனும் பாடலில் ஒரு பகுதி

பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா …
என்று வரும் .

இந்தப் பாடல் எழுதப்பட்ட சமயம் மக்கள் திலகத்தை அவரது தோட்டத்தில் சந்தித்த ஒரு தயாரிப்பாளரிடம் இப்பாடலைக் கேட்டு அவரது கருத்தைக் கூறும்படி மக்கள் திலகம் கேட்டாராம் .

பாடலைக் கேட்ட அத்தயாரிப்பாளர் உங்களது சரித்திரத்தையே இருவரிகளில் கவியரசர் கண்ணதாசனை விட வேறுயாரால் கூற முடியும் என்று சொன்னராம்.

அதற்கு மக்கள் திலகம் அது எப்படி ? என்று கேட்க,

சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா

எனும் இந்த இருவரிகள் உங்கள் சரித்திரத்தைத் தானே கூறுகிறது என்று கூற மக்கள் திலகம் வியப்பில் ஆழ்ந்து கவியரசரின் திறமையை ரசித்தாராம் .

எனக்கு அப்போது 9 வயது என்று நினைக்கிறேன். எனது தாய்மண்ணாம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.

“எங்க வீட்டுப் பிள்ளை” யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் யாழுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.

திறந்தததொரு ஜீப் வண்டியில் பலாலி விமான நிலயத்திலிருந்து பலாலி வீதி வழியாக யாழ் நகருக்கு ஊர்கோலமாக அழைத்து வரப்பட்டார்கள்.

மிகவும் பரபரப்பாக இருந்த என்னை அப்போது விடுமுறையில் வந்திருந்த என் தந்தை எதற்காக இந்தப் பரபரப்பு என்றதும் மக்கள் திலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கேட்டதும் சைக்கிளில் என்னை உட்கார்த்தி யாழ் கந்தர்மடத்தில் பலாலி வீதிச் சந்தியில் எம்.ஜி.ஆரையும் , கன்னடத்துப் பைங்கிளியையும் நேராகப் பார்க்கும் வாய்ப்பை என் அன்புத்தந்தை ஏற்படுத்திக் கொடுத்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?

அப்பப்பா ! பொன் வண்ணம் என்பார்களே அப்படியான வதனம், அன்பான புன்னகை அவரைப் பற்றி அவ்வயதில் நான் கொண்டிருந்த கற்பனையை அக்காட்சி எவ்விதத்திலும் சிதறடிக்கவில்லை .

பின்பு எனது பதினாறவது வயதில் எங்க வீட்டுப் பிள்ளை மீண்டும் யாழ் வெலிங்டன் தியேட்டரில் திரையிடப்பட்ட போது டிக்கெட் கிடைக்காமல் மதில் வழியாகப் பாய முற்பட்டு தியேட்டர் ஊழியர் என் சட்டையைப் பிடித்திழுக்க முதுகுப் பக்கச் சட்டை கிழிந்து சட்டை அவர் கையிலும் நான் உள்ளேயும் விழுந்த அனுபவம் இனிக்கிறது.

முதுகுப் பக்கச் சட்டை இல்லாமலே அத்திரைப்படத்தை என் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தது மக்கள் திலத்தின் ஞாபகத்திற்கு ஒரு மகுடமாய் நெஞ்சில் திகழ்கிறது .

மக்கள் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் எப்போதும் மனதில் அளவிடமுடியாத உற்சாகத்தைக் கொடுக்கும்.

இப்போது கூட லண்டனில் எப்போது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பார்ப்பதே என் மனதிற்கு ஆனந்தத்தை அளிக்கும்.

நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்

காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்

மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !

மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்

பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்

தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *