— பி. தமிழ்முகில் நீலமேகம். 

 

இணையம் – இன்று பலதரப்பட்ட மனிதர்களால், பலதரப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இணையம் இன்று உலகத்தினை நம் உள்ளங்கைகளுக்குள் கொண்டு வந்து விடுகிறது. நமது அன்றாட வாழ்வில், பலவகையான தேவைகளுக்காக நாம் இணையத்தினை பயன்படுத்துகிறோம். நமது தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல நிறுவனங்கள் செயல் படுகின்றன. அவற்றில் சில நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கினறன, சில நிறுவனங்கள் இலவச சேவையாக செய்கின்றன. இக்கட்டுரையில், இலவச வரைபட ( Maps ) உதவிகள் வழங்கும் நிறுவனங்கள் குறித்து காணலாம்.

முதல் நிறுவனம், நாம் அனைவரும் அறிந்த கூகுள் (Google). இவர்கள் வழங்கும் வரைபட சேவை கூகுள் மேப்ஸ் (Google Maps).
கூகுள் மேப்ஸ் இணைய தளத்தின் முகவரி : maps.google.com
கூகுள் வரைபடத்தின் உதவியுடன் நாம் ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு செல்வதற்கான வழித்தடங்கள், அவ்விரு இடங்களுக்கும் இடையே உள்ள தூரம், செல்ல ஆகும் காலம் போன்றவற்றை கணக்கிடலாம்.

நடந்து செல்ல விரும்புவோருக்கு வழித்தட உதவி, செல்ல ஆகும் கால நேரம், அதேபோல், வாகனங்களில் செல்வதானல் ஆகும் கால நேரம் போன்றவற்றை கணித்து தருகிறது. அவ்வழித்தடங்களில் செயல்படும் போக்குவரத்து சேவைகள், நாம் கிளம்பும் இடத்திற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்தத்திற்கு பேருந்து வரும் நேரம், அது செல்லும் வழித்தடம், வழித்தடத்தில் இருக்கும் ஏனைய நிறுத்தங்கள், ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் செல்ல ஆகும் கால அளவு போன்ற விபரங்களையும் கணித்து தருகிறது. எடுத்துக்காட்டாக, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து, வடபழனி முருகன் கோவிலுக்கு செல்லும் வழித்தட விபரங்கள் கூகுள் வரைபடங்களின் உதவியுடன் கீழ்க்கண்டவாறு:

map1

இந்த வரைபடத்தில், இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழித்தட விபரங்கள், போக்குவரத்து நேரமும் நீல நிறத்தில் காட்டப்பட்டிருக்கும் வழித்தடத்திற்கானவை. அதற்குக் கீழே இருக்கும் மற்றோர் வழித்தடம் குறித்த விபரங்கள் அறிய விரும்பினால், அதன் மீது சுட்டியினை வைத்தால், அதன் விபரங்கள் காண்பிக்கப்படும். காரில் செல்ல ஆகும் நேரம் 24 நிமிடங்கள் , கடக்கும் தூரம் 10.1 கி. மீ. பேருந்தில் செல்ல ஆகும் நேரம் 58 நிமிடங்கள், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஓர் பேருந்து வசதி உண்டு போன்ற விபரங்களை நமக்கு இந்த வரைபடம் அளிக்கின்றது.

இது வாகனங்களில் செல்வதானல் உதவும் வழித்தடம்

map2

இது பேருந்தில் செல்வதானால் உதவும் வழித்தடம்

map3
இந்தப் படம் இரயில் நிலையத்திலிருந்து வடபழனி முருகன் கோயிலுக்கு செல்ல பேருந்து ஏற வேண்டிய நிறுத்தம், பேருந்து அந்த குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு வரும் நேரம், பேருந்து எண்கள் மற்றும் அவை செல்லும் இடங்களின் விபரம், இடையில் இருக்கும் நிறுத்தங்களின் எண்ணிக்கை, செல்ல ஆகும் கால நேரம், இறங்கும் இடம், இறங்கிய இடத்திலிருந்து நடக்க வேண்டிய தூரம், நடக்க ஆகும் நேரம் போன்ற விபரங்களையும் வழங்குகிறது.மேலும், நாம் தேடும் வழித்தடத்தில் மின் இரயில்      (Electric Trains ) திட்டம் இருப்பின், அது குறித்த விபரங்களையும் வழங்குகிறது.

கூகுள் வரைபடங்கள் உதவியுடன் கிடைக்கும் இன்ன பிற சேவைகள் :

குரல் மூலம் வழி நடத்தும் கூகுள் வரைபடங்கள் ( Google Voice Navigation )

கூகுள் வரைபடங்கள், குரல் மூலம் வழிகாட்டும் வசதியை நமக்கு அளிக்கின்றன. தற்சமயம், இந்த வசதி ஆன்ட்ராய்ட்( Android ) இயக்க அமைப்பில் ( Operating System ) கிடைக்கிறது. இவற்றை, ஆன்ட்ராய்ட் தொலைபேசிகள் ( Android Phones ) மற்றும் ஆன்ட்ராய்ட் வரைவு லக்கமாக்கிகள் ( Android tablets ) ஆகியவற்றில் பயன் படுத்தலாம்.
தற்சமயம் இந்த வசதி அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, கோயமுத்தூர், டில்லி, ஐதராபாத், இந்தூர், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, மைசூர், நாக்பூர், பூனா, சூரத், திருவனந்தபுரம், வதோதரா, விசாகப்பட்டினம் ஆகிய இந்திய நகரங்களுக்கு கிடைக்கிறது. இந்த வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது.

கூகுள் எர்த் ( Google Earth) மற்றும் கூகுள் வீதி வரைபடங்கள் ( Google Street View maps )

கூகுள் வீதி வரைபடங்கள் உலகின் தெருக்களை, அவற்றின் அமைப்புகளை அப்படியே காட்டும். நாம் புதிதாக ஓர் இடத்திற்கு / நாட்டிற்கு செல்ல இருக்கிறோம் எனில், அங்கு நாம் செல்லும் இடம் / தெரு / இடத்தின் முகவரி தெரியுமேயானால், வீதி வரைபடங்களின் உதவியுடன், நாம் செல்லவிருக்கும் இடம் நேரில் பார்க்க எப்படி இருக்கிறது, அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் போன்ற அடிப்படை தேவைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

map4
எடுத்துகாட்டாக, அமெரிகாவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் என்ற இடத்தில் இருக்கும் அருள்மிகு வெங்கடேஸ்வரர் கோயிலின் தோற்றம் கூகுள் வரைபடத்தின் தெருப் பார்வையில் மேற்கண்டவாறு தெரிகிறது.

map5
இந்த வரைபடத்தில் கீழே வரைபடத்தின் வலது பக்க ஓரத்தில் சிறியதாக மஞ்சள் நிறத்தில் மனித உருவம் போன்ற குறியீடு உள்ளது. அதன் பெயர் பெக்மேன் (peg man). அக்குறியீட்டினை எடுத்து வந்து வரைபடத்தில் நீல நிற பாதையில் விட்டால், அந்த பாதை உண்மையில் எப்படி இருக்கிறதோ அப்படியே நமக்கு காட்டும். அதுவே கூகுளின் தெருப்பார்வை ஆகும்.

இது அக்கோயிலின் வெளிப்புறத் தோற்றத்தின் புகைப்படம்

map6

(நன்றி, இப்புகைப்படம் yelp.com ல் இருந்து எடுக்கப்பட்டது)

 

கூகுள் உள்ளரங்க வரைபடங்கள் ( Google Indoor Maps )

முக்கிய கட்டிடங்களின் உள்ளரங்க வரைபடங்கள் ( Floor Plans ) நமக்கு கூகுள் உள்ளரங்க வரைபடங்களின் உதவியுடன் கிடைக்கிறது. தற்சமயம் இந்தியாவில் இவ்வசதி சில குறிப்பிட்ட வணிக வளாகங்கள் (Malls) , அருங்காட்சியகங்கள் (Museums), விமான நிலையங்கள் (Airports) ஆகியவற்றிற்கு கிடைக்கிறது. இது குறித்த விபரங்கள் நமக்கு கீழ்காணும் இணைய பக்கத்தில் கிடைக்கிறது.
https://support.google.com/gmm/answer/1685827?hl=en

ரெயில் ராடார் ( Rail Radar)

இந்தியன் இரயில்வே நிறுவனத்தார், கூகுள் வரைபடங்களின் உதவியுடன் உருவாக்கிய தகவல் தளம் ரெயில் ராடார். நாம் ஓர் குறிப்பிட்ட இரயில் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு இரயில் கிளம்பிய இடம், கிளம்பிய நேரம், அடுத்து வரவிருக்கும் இரயில் நிலையம், இரயில் செல்லும் வழியில் இருக்கும் ஏனைய இரயில் நிலையங்கள், அந்நிலையங்களுக்கு செல்லும் நேரம், அங்கிருந்து கிளம்பும் நேரம் போன்ற விபரங்களை வழங்குகிறது.இந்த வசதி கூகுள் வரைபடங்களின் உதவியுடன் வழங்கப் பட்டு வந்தது. வரைபடத்தில் இரயில் செல்லும் பாதை, தற்சமயம் இரயில் இருக்கும் இடம், சரியான நேரத்தில் இலக்கை சென்றடையுமா அல்லது காலதாமதங்கள் இருக்கக் கூடுமா போன்ற விபரங்களையும் வழங்கியது. ஆனால், தற்சமயம் இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டது. வரைபடம் இல்லாது, இரயில் குறித்த விபரங்கள் மட்டும் தற்சமயம் கிடைக்கிறது. இந்த சேவையை கீழ்காணும் இணையதளத்தில் பெறலாம்.
http://enquiry.indianrail.gov.in/ntes/

கூகுள் மேப் மேக்கர்
இந்த சேவையை பயன்படுத்தி, நாமே வரைபடத்தில் புதிதாக விபரங்களை சேர்க்கவோ, ஏற்கனவே இருக்கும் விபரங்களை மாற்றி அமைக்கவோ முடியும்.

ஒரு பகுதியில் கிடைக்கும் சேவைகள், எடுத்துக்காட்டடாக, உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள்,பள்ளிகள், மருத்துவமனைகள்/மருத்துவர்கள் குறித்த விபரம், சாலைகள்,ஒரு குறிப்பிட்ட பாதைக்கான பேருந்து அல்லது இரயில் சேவைகள், நகரின் முக்கியமான கட்டிடங்கள், வங்கிகள், வங்கிகளின் தானியங்கி பணம் எடுக்கும் எந்திரங்கள் இருக்கும் இடங்கள் போன்ற விபரங்களை பயனாளர்கள் உள்ளீடு செய்யலாம். அந்த விபரங்களை கூகுள் நிறுவனம் சரி பார்த்து, பின்னர் அவ்விபரங்களை வரைபடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்.
ww w.google.com/mapmaker மேற்குறிப்பிட்ட அனைத்து சேவைகளும் கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படும் கூகுள் வரைபடங்கள் மூலம் கிடைக்கப் பெறலாம்.

 

இனி, இலவச வரைபட சேவைகள் வழங்கும் இன்னபிற நிறுவனங்கள் / வலைதளங்கள் குறித்து காணலாம்.
1. மேப் க்வெஸ்ட் ( Map Quest ) www.mapquest.com
2. யாகூ மேப்ஸ் ( Yahoo Maps ) https://maps.yahoo.com/
3. பிங் ( Bing ) ( MSN நிறுவனம் வழங்கும் சேவை) http://www.bing.com/maps/
4. மேப் மை இந்தியா மேப்ஸ் ( MapmyIndia Maps) http://maps.mapmyindia.com/  – இதில் வழித்தட விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
5. ஹியர் (Here ) (Nokia நிறுவனம் வழங்கும் சேவை) https://www.here.com

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பயன்மிகு இணையவழிச் சேவைகள் – வரைபடங்கள்

  1. பயன் தரும் சிறந்த கட்டுரை ஒன்றினை வழங்கி, அதற்காக சிறந்த கட்டுரையாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி. தமிழ்முகில் நீலமேகத்திற்கு பாராட்டுகள்.  தொடர்ந்து மற்றொரு இணைய சேவையை அறிமுகப் படுத்துமாறும் தோழியைக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *