Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்

”என் இதின் உறுதி அப்பால் ”

திருச்சி புலவர் .இரா.இராமமூர்த்தி

இந்தியத் திருநாட்டின் இமாலயப் புகழுக்குக் காரணம்
நம் தேசத்தின் பேரிலக்கியங்களாகிய பாரதமும்
இராமாயணமும் என்று கற்றறிந்தோர் கூறுவர்.
இந்தியத் தன்மை என்ற நல்லொழுக்கமுறையை
உலகறிய வைத்தவை அவ்விரண்டு பேரிலக்கியங்களே!

ஒரு நாட்டின் அரசன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
குடிமக்களின் கடமைகள் யாவை? குடும்பத்தலைவனின்
கடமைகள் யாவை? தாயின் கடமைகள் மக்களின் கடமைகள்
பணியாளர்களின் கடமைகள் எனப் பல்வேறு வகையினரின்
கடமைகளையும் உரிமைகளையும் இவ்விலக்கியங்கள்
கற்பிக்கின்றன.

இவற்றை ஆரிய சம்பத்து என்று பாரதி போற்றுவார்!
இலக்கியம் நாட்டின் நிலையை உணர்த்தி எதிர்கால வாழ்க்கை
எப்படி அமைய வேண்டும், என்பதைநோக்கி இயங்குவதாகும்
இலக்கு என்றால் குறிக்கோள்!இயங்குவது இயம் ஆகவே
‘இலக்கியம் வாழ்க்கையின் இயல்பை எடுத்துக் கூறுகிறது’
என்பர்.அவ்வகையில் திருக்குறள் வாழ்க்கையின் இலக்கண
மாகவும் இலக்கியமாகவும் விளங்குகிறது. திருவள்ளுவரை ‘
தெய்வ மாக்கவி’என்று கம்பர் போற்றுகிறார்.

‘வையம்என்னை இகழவும் மாசெனக்கு
எய்தவும் இ.:.தியம்புவ தென்னெனின்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகழ்
‘தெய்வ மாக்கவி’ மாட்சி தெரிக்கவே!

என்பது அவர் பாட்டு. மேலும்,

‘தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவரானவர் தம்முளும் முந்தைய
நாவினார் உரையின்படி நான்தமிழ்ப்
பாவினால் இ.:.துரைத்திட்ட பண்பரோ!’

என்ற பாட்டிலும் அதையே உறுதி செய்கிறார்.

‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.’

என்பது தெய்வமாக்கவி திருவள்ளுவரின் வாக்கு.

இந்த வாழ்வியல் நெறியை இராமபிரான் எவ்வாறு
பின்பற்றிவெற்றி பெறுகிறார் என்பதை விளக்குவதே
இக்கட்டுரை!

புலனடக்கம் பணிவு ஆகியவற்றைத் திருவள்ளுவர்
‘அடக்கம்’ என்ற சொல்லால் குறிக்கிறார்.அத்தகைய அடக்கம்
இராமபிரானிடம் நிரம்பி யுள்ளதை இராமாயணம்
புலப்படுத்துகிறது.

”இராமா நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரிய
வேண்டும்;இவ்வாறு அரசர் கட்டளயிட்டார்!” என்று கைகேயி
கூறிய வாசகத்தை கேட்டு இராமன் ‘ அவ்வாறே செய்கிறேன்
தாயே!’என்று மிகுந்த பணிவுடன் கூறிய விடை இராமபிரானின்
அடக்கத்தை உணர்த்துகிறது.

கைகேயியின் சூழ்ச்சி நாடறிந்த ஓன்று! அதனால் இராமனிடம்
மிகவும் சாதுரியமாக,

ஆழிசூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள நீபோய்த்
தாழிரும் சடைகள் தாங்கித்
தாங்கரும் தவமேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணிப்
புண்ணியத் துறைக ளாடி
எழிரண் டாண்டில் வாவென்
றியம்பினன் அரசன் என்றாள்!

அதைக் கேட்ட இராமபிரான், ‘இப்பணி தலை மேற்
கொண்டேன்;போகின்றேன்; விடையும் கொண்டேன்!’ என்று
பணிவுடனும் ,அடக்கத்துடனும் விடை கூறுகின்றார்.
அதனைக் கம்பர்,

”மன்னவன் பணியன் றாகில்,
நும்பணி மறுப்பெ னோ?என்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்ற தன்றோ?
என்னிதின் உறுதி அப்பால்?
இப்பணி தலைமேற் கொண்டேன்,
மின்னொளிர் கானம் இன்றே
போகின்றேன்; விடையும் கொண்டேன்!”
என்று பாடுகிறார்.

கைகேயி கூறிய பாடலும் அதற்கு இராமன் கூறிய
விடையும் , சூழ்ச்சியையும், சோகத்தையும் விளைவிக்கிறன!
அவற்றின் பொருளைச் சற்றே விரிவாகப் பார்த்தோமானால்,
இணையற்ற புதிய புதிய பொருள் நயங்களுடன் அப்பாடல்கள்
விளங்கும் அழகை உணரலாம்!

கைகேயி பெற்ற வரங்கள் இரண்டு! அவற்றில் ஓன்று,
பரதன் நாடாள வேண்டும் என்பது; மற்றொன்று இராமன்
காடேக வேண்டும் என்பது; ஆனால் கைகேயி தான் பெற்ற
வரத்தை இராமனிடம் கூறும் போது ஒரு வரத்தை விரி
வாக்கி,
1), நீ போய், தாழிரும் சடைகள் தாங்க வேண்டும்;
2) தாங்கரும் தவம் மேற்கொள்ள வேண்டும்;
3) புழுதி நிறைந்த கொடிய கானகம் செல்ல வேண்டும்;
4) புண்ணியத் தலங்களில் புனித நீர் ஆட வேண்டும்;
5) இவ்வாறு எழிரண்டாண்டுகள் கழித்து நீ மீண்டும்
இந்நாட்டிற்கு வர வேண்டும்: என்று அரசன் இயம்பினான்”
என்றாள்.

இராமன் காட்டிற்குப் போய் என்னென்ன செய்ய
வேண்டும் என்று பட்டியல் இட்டுக் கைகேயி கூறினாள்!
இப்பட்டியலில் திருக்குறள் கருத்துக்கள் செழிப்புடன்
விளங்கி நம் உள்ளத்தில் புத்துணர்ச்சி உண்டாக்குகின்றன!
கைகேயி இப்படி இராமனிடம் கூறுவதற்கு ஓர்
உயர்ந்த காரணம் உள்ளது! தசரதன் மூன்று மனைவியரின்
கணவன்; முதல் மனைவி கோசலை; இரண்டாம் மனைவி
கைகேயி: மூன்றாமவள் சுமித்திரை!

இவ்வாறு வரிசைப் படுத்தும் முறை கம்பர் தாமே
கருதிச் செய்தது!வான்மீகத்தில் கைகேயி மூன்றாம் மனைவி!
இவ்வாறு கம்பன் மாற்றியதற்குக் காரணம் உண்டு!
வான்மீகத்தில் கைகேயி தசரதனை மணந்து கொண்டபோது
ஓர் உறுதிமொழி பெற்றாள்; அது மணம்புரிந்து கொள்வதற்காக
ஏற்றுக் கொண்ட நிபந்தனை! அதனைக் ‘கன்யா சுல்கம்’ என்பர்!
அதன்படி தசரதன்- கைகேயிக்குப் பிறக்கும் குழந்தையே ஆட்சி
புரியும் உரிமை பெறும்! ஒருவேளை மூத்த மனைவிக்கு மகன்
பிறந்து விட்டாலும் அவன் ஆட்சிபுரிய உரிமை கோரக் கூடாது!
இது வான்மீகத்தில் உள்ளது! ஆனால் கம்பன் இந்தக் கன்யா
சுல்கம் என்ற நிபந்தனை பற்றித் தம் காவியத்தில் எங்கும் ஏதும்
கூறவில்லை!

இந்த நிபந்தனையைக் கைகேயி தசரதனிடம் கூறுவதானால்
பரதனுக்கே ஆட்சி என்ற ஓர் உறுதி மொழியைத்தான் கேட்டல்
இயலும்! இராமன் காட்டிற்குச் செல்லவேண்டும் என்ற
வகையில் எந்த உறுதி மொழியோ , வரமோ இதில் வர
வேண்டிய அவசியம் இல்லை! கன்யாசுல்கம் என்ற
நிபந்தனையில் அடுத்த மனைவியின் மகன் என்பதே ஒரு
கற்பனைதானே? ஏனென்றால், வான்மீகத்தின் படி முதல்
இரண்டு மனைவியருக்கும் குழந்தைப்பேறு இல்லாத
சூழ்நிலையில் தானே, மூன்றாம் மனைவியை(அதாவது
கைகேயியை) தசரதன் மணந்து கொண்டான்!

இந்தக் கன்யா சுல்கம் இராமவதார நோக்கம் ஆகிய
இராவண வதத்துக்கு உதவாது என்பதால், கம்பர் தம்
இராமாயணத்தில் கைகேயி பெற்ற ஓர் உறுதி மொழியை
, மறைத்து விட்டு, இரண்டு வரங்கள் என்ற புதிய யுக்தியைத்
தாம் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டார்!
அதன்படி, பரதன் ஆட்சி பெறுதல், இராமன் காட்டிற்குச்
செல்லுதல் ஆகிய இரண்டையும் கதைக்குள் கொண்டு
வரலாமே!

இராமன் காடேக வேண்டும் என்று கைகேயி காட்டிய
பிடிவாதமே, இராமனின் பெரும் புகழாகிய அமுதத்தை
உலகம் பருகக் காரணம் ஆயிற்று என்று கம்பர் பாடுகிறார்!

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க, நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மை யன்றோ இவ்வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே!
என்பது அவர் பாட்டு!

கைகேயி கருணை இல்லாமல் தசரதனிடம் நடந்து
கொண்டாள்; அதுவே இராமன் புகழுக்குக் காரணம்
என்கிறார் கம்பர்! கைகேயி இரண்டாம் மனைவி!ஆனால்
தசரதன் நாள்தோறும் ஆட்சி அலுவல்கள் முடிந்தபின்,
மற்ற மனைவியரிடம் செல்லாமல் கைகேயி வாழும்
அரண்மனைக்கே சென்றான் என்பதைக் கம்பர் குறிப்பாகப்
புலப்படுத்தி உள்ளார்! அதனால் தசரதனின் முழு வாழ்க்கை
யையும் கைகேயி அறிந்து கொண்டிருப்பாள் என்பது நமக்குப்
புலனாகும்!

காட்டில் தசரதன் தவறாக யானை மேல் அம்பு
எய்வதாகக் கருதி, சிரவணன் என்ற சலபோசன முனிவர்
மகன் மேல் அம்பெய்து, சாபம் பெற்ற வரலாற்றையும்
அறிந்திருந்தாள் என்பதை நாம் உய்த்து உணரலாம்.

மேலும் இதனைக் கோசலையிடம் தசரதன் மயங்கி
வீழ்ந்த நிலையில் முதன்முதலாகக் கூறுவதாகக் கம்ப
ராமாயணம் குறிப்பிடுகிறது.கோசலைக்கு இது புதிய
செய்தி! ஆனால் கைகேயி இதனை முன்னதாக அறிந்
திருந்தாள் என்பதைக் கைகேயி இராமனிடம் பேசிய
சொல்லே புலப்படுத்துகிறது! ஆம்! இராமன் காடேக
வேண்டும் என்ற வரம் இராமனை ஆட்சியை விட்டுத்
துரத்த அல்ல; அவனை ஆபத்திலிருந்து காப்பாற்றவே!
என்பதை நமக்கு நன்றாகவே கம்பர் புரிய வைக்கிறார்!

கம்பர் கைகேயியைப் பற்றிக் கூறிய தொடர்களைப்
பாருங்கள்!- ‘தூமொழி மடமான்!- ‘சிறந்த தீயாள்’ இவை
வசவு பாடுவதாக இல்லாமல் பாராட்டுப் போலே
தோன்றுகின்றன! இங்குதான் கம்பசூத்திரம் ஒளிவீசுகிறது!

தசரதன் முன்பு காட்டில் பெற்ற சாபம் அவனுக்கு
மகன் பிறப்பான் என்ற மகிழ்ச்சியைத் தந்தபோதே, அதே
சாபத்தால் அருமை மகனுக்கு, உயிர் ஆபத்து வருமோ?
என்ற வருத்தமும் உண்டாயிற்று என்பார் கம்பர். இதனை
விஸ்வாமித்திரன் ”இராமனைக் கொடுப்பாயாக”, என்று
கேட்டபொழுது, – கண்ணிலான் (சலபோசனமுனிவன்)
பெற்று (சிரவணனை மகனாகப் பெற்று) இழந்தான் என
(புத்திரனை இழந்து அவ்வாறே மரணம் அடைக, என்ற
சாபத்தை அளித்த முனிவனைப் போல்) உழந்தான்
கடுந்துயரம் காலவேலான் (சிரவணனுக்குக் காலனாகி
வேலேந்திய தசரதன்)என்ற தொடர்களால் குறிப்பாகப்
புலப் படுத்துகிறார்.

சலபோசன முனிவன் தந்த சாபம் ,” நாங்கள் எங்கள்
புதல்வனை இழந்து மரணம் அடைவதைப் போலவே நீயும்
உன் மகனைப் பிரிந்து மரணமடைக” என்பதாகும்.
அப்படியானால் இராமனைப் பிரிந்து தசரதன் மரணம்
அடைவது நிச்சயம்! அந்தப் பிரிவை நாமே உருவாக்கி,
அதையும் தற்காலிகப் பிரிவு ஆக்கினால் இராமபிரானுக்கு
வரும் மரண ஆபத்தை நீக்கி, அவனைக் காக்கலாம், என்ற
எண்ணத்தினால் தான், கைகேயி நாடக மயிலாகி ஒரு
சிறந்த தீமையைச் செய்கிறாள். மேலும் முனிவனின் சாபம்
அப்படியே பலிப்பதானால் காட்டுக்குச் செல்லும் இராமனுக்கு
எங்கிருந்தாவது ஆபத்து உறுதி என்று எண்ணி எண்ணி
அதை நீக்கும் வழியைத் தேடுகிறாள். தன் மனங்கவர்ந்த
மகனைக் காப்பதற்காக காட்டில் அவன் செய்ய வேண்டிய
கடமைகளைப் பட்டியல் இட்டு அவ்வாறே நடந்து கொள்ள
அறிவுறுத்துகிறாள். அதற்காக தாழிருஞ்சடைகள் தாங்கித்
தாங்கரும் தவம் புரியச் சொல்கிறாள்! இதுவும் திருக்குறள்
கருத்தின் படி உயிர் காக்கும் நடவடிக்கை ஆகும்.தவத்தின்
வலிமை ஒருவனைக் கூற்றுவனின் வாயிலிருந்து பிழைக்க
வைக்கும் என்பது குறட்பாவின் கருத்து!

”கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு!”

என்ற குறள் நெறிப்படி காட்டில் இராமனைக் கூற்றுவன்
அணுக மாட்டான். பூழிவெங்கானம் ஒருவனை உண்ணா
நிலையில் வைக்கும்; அந்த உண்ணாநோன்பு ஆயுளை
நீட்டிக்கும்! புண்ணியத் துறைகளில் நீராடி, இறைவழிபாடு
செய்தால் எமபயம் சிறிதும் இல்லை!
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாகப் பணிந்தால்,
”தீர்காயுஷ்மான் பவ:” என்ற குருவின் ஆசி கிட்டும்!

இதனைப்
”புண்ணியத் துறைகள் ஆடி” என்ற தொடர் புலப்படுத்துகிறது!
இவ்வாறு பல வழிகளிலும் முயன்றால் மரண ஆபத்து
விலகி விடும்; அதனால் ,இராமன் எப்படியாவது பிழைப்பான்
என்ற எல்லையற்ற பாசத்தினால் கைகேயி தசரதனிடம் வரம்
கேட்டுக் கொடியவள் போல் நடித்தாள்! இதனைப் ”பிரதிமா
நாடகம்” என்ற பாசகவியின் வடமொழி நூல் சுட்டுகிறது!

இவ்வாறு இராமனைச் சிறிது காலம் பிரிய வைத்த
சூழ்ச்சி , நல்ல விளைவை, அதாவது இராமாவதார
நோக்கத்தை நிறைவேற்றியது.அதுமட்டுமல்ல;
இராமன் போலவே பரதன், இலக்குவன், சத்ருக்னன்
ஆகியோரும் தசரதன் மைந்தர்கள் தாமே? அவர்களுக்கும்
ஆபத்து வராத படி இராமன் செய்யும் தவத்தையே பரதன்
செய்யவும், சத்ருக்னன் பாகவத கைங்கரியம் செய்யவும்,
இலக்குவன் தூங்காமலும், உண்ணாமலும் இராமனுடனேயே
கானகம் சென்று தவ வாழ்வு வாழவும் கைகேயி செய்த
சூழ்ச்சி வழிகாட்டியது.

இவற்றையெல்லாம் நன்றாக உணர்ந்த இராமபிரான் தம்
தாயாகிய கைகேயி கூறியவற்றை அப்போதே செய்வதாக
இசைவு தெரிவித்தார். அந்தப் பாடலில்,”மன்னவன் பணி
அன்று! ஆகில் நின் பணி!”(இது நீயே நினைந்து செய்த பணி!)
இதனை மறுப்பெனோ? என்று கூறிக் கானகம் செல்கின்றார்!
மேலும் ”என் பின்னவனாகிய பரதன் நின் வரத்தால் பெற்ற
செல்வம் , அடியேன் பெற்ற தவச்செல்வம் தான்!”
என்கின்றார்.அதாவது நீ எனக்குக் கொடுத்த மரவுரி என்
பின்னவனும் பெறத் தக்கதன்றோ? ”என் பின்னவன் பெற்ற
செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?”

பின்னால் பரதன் நந்தியம்பதியில் தவம் செய்து,
இராமனின் பாதுகைகளை ஆட்சி பீடம் ஏற்றிப் போற்றி
ஆள்கிறான்!இராமனாகிய இறைவன் திருவடியைப்
போற்றும் பரதன் ,

”மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்”

என்ற திருக்குறள் காட்டும் வழியில் , நீண்டநாள்
வாழ்வான். சத்ருக்னனும் அண்ணன் பரதன் போலவே
தவவாழ்வு வாழ்வதால் அவனுக்கும் ஆபத்தில்லை!
இலக்குவனோ, பகவத் கைங்கரியம் செய்வதால்
கைங்கர்யஸ்ரீ யைப் பெற்று நெடிது வாழ்கிறான்.

இவ்வாறு நால்வரையும் காப்பாற்றிய கைகேயி என்ற
உத்தமத் தாயை ”தீயள் என்று நீ துறந்த தெய்வம்!” என்று
இராமபிரான் தசரதனிடம் கூறுகிறான்.
இராமன் கைகேயியிடம் கூறும் விடைக்குள்
மற்றொரு பொருளும் இருக்கிறது.

”என் இதின் உறுதி அப்பால்?”என்ற தொடர் என் உயிருக்கு
உறுதி பயக்கும் கடமை வேறு ஏது?என்ற பொருள் தருகிறது.
மற்றும் ”மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன்” என்ற
தொடர் ,” நீ கூறிய பூழி வெம் கானம் எனக்கு மின் ஒளிர் கானம்
ஆகும் : அதாவது மேகம் சூழ்ந்த வானத்தில் மின்னல்
ஒளிரும் குளிர்ந்த காடாகும்!”என்று இராமன் கூறியது,

”ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து ”

என்ற குறள் கூறும் வானம் கைவசமாகும் தவநிலையைக்
குறிக்கிறது!

அது மட்டுமல்ல! மின் என்ற சொல் இங்கு சீதையைக்
குறிக்கும். மின்னல் போன்று சீதையின் புகழ் இனிக்
கானகத்தில் ஒளிவீசி விளங்கும்’ என்ற புதிய பொருளைத்
தருகிறது.

ஆம்! ”இராமகாதை சிறையிருந்தாள் ஏற்றம்
கூறுகிறது”. என்ற ஸ்ரீ வசன பூஷணத்தின் வாக்கியம் காட்டும்
வழியில், காட்டில் சீதையின் ஒளி மின்னல் போல்
விளங்கப் போகிறது, என்றும் , அதற்கு அவள் அசோக
வனத்தில் செய்யப் போகும் தவம் காரணமாகி அவள்
உயிரையும் காக்கப் போகிறது” என்றும் பொருள்
படுகிறது.

இப்போது பாடலை மீண்டும் படிப்போம்.

”மன்னவன் பணிஅன்று ஆகில்
நும்பணி மறுப்பெ னோ?என்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றது அன்றோ?
என்னிதின் உறுதி அப்பால்?
இப்பணி தலைமேல் பூண்டேன்!
மின்ஒளிர் கானம் இன்றே
போகின்றேன்! விடையும்கொண்டேன்!”

இப்பாடல் மூலம் நாமும் நம் ஐயங்களைத்
தீர்க்கும் சரியானவிடையையும் கொண்டோம்!
இராமன் புகழ் பரவுக உலகமெல்லாம்!

-திருச்சி புலவர் இராமமூர்த்தி.

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க