அம்மா எனும் அதிசய காந்தம்!

-ஜெயஸ்ரீ ஷங்கர்

நான் பிறந்ததும்
எனக்குத் தெரியாது
என் ஊரும்
பெயரும் தெரியாது!

ஏதோவொரு கதகதப்பு
அதன்  பாதுகாப்பு
அன்பின் உணர்வு
அது தான் அன்று நீயெனக்கு!

நானோ உனதாகி
உன்னோடு  ஒட்டிக்கொண்டேன்
நீயோ எனக்குத் தாயாய்
எனைக் காத்தாய்!

ஆடும் கோழியும்
பசுவும் காகமும்
நீ சொல்லித்தான்
நான் தெரிந்து கொண்டேன்!

மேகமும் நிலவும் அதோ
பாரெனச் சுட்டிக் காட்டிப்
பசிக்கும் முன்னே
வயிறு நிறைத்தாய்!

தத்தித்தத்தி என்னோடு
நடையில் நீயும் பிள்ளையாய்
நடந்தபோதும் நினைவில்லை
எனக்கு நீ  அம்மா என்று!

உறவு சொல்லிக்
கிளிப்பிள்ளையாய்ப்
பழக்கி முத்தமிட்டு
உச்சி முகர்ந்தாய்!

சீராட்டி அலங்கரித்து
நீ மகிழ்ந்த போதும்
புரியவில்லை நீயே
தெய்வத்தின் கருணை என்று!

உன்னோடு பின்னிப்
பிணைந்தது நம் பந்தம்
எனக்கு  உலகைக்
காட்டிய நிர்ப்பந்தம்!

நீயே  உலகமாய்
நான் நினைக்க…
என்னையே உலகமாய்
நீ நினைத்தாய்!

தியாகமும் கருணையும்
உனக்கே சொந்தம் அதுபோல்
என்னுள் தாய்மையை
விதைத்த தாய் நீ!

உன் அனுபவச் சொல்லை
அவ்வபோது மீறினால்
தொல்லை எனநான்
ஏசியும் நீ எனை நேசித்தாய்!

நீ சொல்லித்தந்த
எதையும் நான்
ஏற்கவில்லை மாறாகச்
செய்தாலும் நீ ஆதரித்தாய்!

நீ நடந்த பாதை வேறு
நான் நடக்கும் பாதை
வேறானாலும் நீயென்
ஆணிவேர் நான் மறுக்கவில்லை!

வாழ்க்கை சொல்லித்
தராத  பாடங்களை
வார்த்தையால் கற்றுக்
கொடுத்த அனுபவப்பள்ளி நீ!

நான் புகுந்தவீடு
வந்தபின்பும் பிறந்த
வீட்டின் நினைவுகள்
உயிரெனச் சுமப்பவள்!

தென்றலும் புயலுமாய்க்
கடந்து வந்த பின்பும்
வாழ்வென்று உண்டாயின்
அங்கும் நீ தான்!

மரம் கொடுத்த விழுதோ நான்
விழுதுகள் தாங்கும்
விருட்சமாய்  நீ
ஏங்கும் தாய்மை
எங்கும் நிழலாய்த் தொடருமோ?

சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தில்
தாய்மையே  வெல்லும் தரணியில்
தாய்மையே  இதயங்கள் ஈர்க்கும்
அதிசய காந்தம்…என் அம்மா
நீ நீடூழி வாழ்கவே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.