சிட்டுக்குருவி
-றியாஸ்முஹமட்
நான் சின்னஞ்சிறிய
சிட்டுக்குருவி
உன் வாள் உருவி
என்னை வெட்டிப் போடு!
உன் துப்பாக்கிச் சொண்டால்
என்னைச் சுட்டுப்போடு!
கைகட்டி வாழ்வேனோ?
உன் கால்பட்டு மகிழ்வேனா?
சிறுபான்மைதானே
சிறுமை என்கிறாய்!
சிறகு விரித்து நான் பறக்கச்
சிறகு முறித்துச்
சிறையில் அடைக்கிறாய்!
நான் கூண்டுக்குள் இருந்தால்
உமக்குக் குதூகலம்
வெளியே பறந்தால்
வேடத்தனம்!
நாடகத்தனம் ஆடும் மனிதா!
உமக்கு மட்டும் ஏனடா
இத்தனை வெறித்தனம்?
இறைவன் வகுத்த
பாதையிலேதானே பறந்தேன்
உன் வீட்டு சோற்றுப்
பானையிலா விழுந்தேன்?
அன்று…
மக்களோடு மக்களாகக்
கொஞ்சித்திரிந்தோம்
கொஞ்சித் திரிந்த எங்களை
அஞ்சித் திரியவைத்தாய்!
அஞ்சித்திரிந்த
எங்களை இன்று
பூண்டோடு அழித்துக்
கதை முடித்தாய்!
மலடியாக எங்கள் குலத்துப்
பெண்களை வாழ வைத்தாய்
மனம் நொந்து அவர்களையும்
சாபமிடவைத்தாய்!
மரத்தை வெட்டி
எங்கள் கூடுகளைத்
தூக்கி எறிந்தாய்!
எங்கள் தோப்புக்களை மனையிடங்களாக்கினாய்
மனமில்லாது எங்கள் குஞ்சுகளை
எட்டி உதைத்தாய்!
கேட்டுப்பார்
உங்கள் மூதாதையர்களை…
நாங்கள் ஒரே வீட்டில்
ஒன்றாக நடத்திய
கூட்டுக் குடும்ப
வாழ்க்கையைச்
சொல்வார்கள்!
கேட்டுப்பார்
அந்த வயல்வெளிகளையும்
வரப்பு மேடுகளையும்…
குதூகலமாய்ப் பேசி
கும்மாளம் அடித்த
கதை சொல்லும்!
எங்கள் இனத்தையே
கொன்று குவித்து விட்டு
இன்று சிட்டுக் குருவி தினம்
கொண்டாடுகிறாயோ….?
கொண்டாடு !
கொண்டாடுவதும்
பந்தாடுவதும்தானே
உங்கள் இனத்தின் பண்பாடு!!
அருமை நண்பரே
வாழ்த்துக்கள்.
அருமை நண்பரே,
மானுடம் செத்ததனால்தான் மண்னினம் அழிகிறது! புள்ளினம் அழிகிறது! நாம் மட்டும் என்ன விதிவிலக்கா? முன்னால் அவை செல்லப் பின்னால் நாம் செல்வோம்!
நச்செனச் சொன்னீரே……
நச்சாய் இருப்பவனுக்கு!
நாகரீக வாழ்க்கையென்று
நாடகமாடும் நிழலுக்கு!
குகுவிக்கும் குரல்
கொடுத்த உன்னில்
வாழ்கிறது
கொஞ்சம் ஈரம்….
அதுதான் இந்த மண்ணின்
கடைசி ஈரமும்!
அன்புடன்
சுரேஜமீ