அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்!

-கவிஞர் ருத்ரா

அன்று ஒரு நாள் இப்படித்தான் சிரித்தாய்
என் நரம்பில் தெறித்த பூவாணமாய்ப்
பூத்தையல் போட்ட புது வானமாய்!
அப்படி என்ன சொல்லி விட்டேன்?              rudra1poovanam
நான் உன்னைக் காதலிக்கிறேன்
நீ என்னைக் காதலிக்கிறாயா? என்று

அது என்ன பண்டமாற்றா?
நீ கேட்டாய்!
ஏதாவது ஒரு வாக்கியத்தைத்தான்
நான் சொல்லியிருக்க வேண்டும்!
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று
நிறுத்தியிருந்தால்
அதற்கும் நீ சிரித்திருப்பாய்
ஆனால் அதற்கப்புறம்
உன் தூக்கம்
சூடான தோசைக்கல்லில் உடைத்த‌
ஹாப் பாயிலாய்
சிதைந்து
மஞ்சளும் வெள்ளையுமாய்
ரங்கோலி ஆகியிருக்கும்!

உன் எம் எம் ஃபோம் கூடச்‌
சுநாமியாய்
எங்கோ உன்னைச் சுருட்டி வீசியிருக்கும்
மறுநாள் என்னைப் பார்க்கும் ஆவலில்
கல்லூரி வகுப்புக்குள்
என்னை எதிர்பார்த்து ஆவலுடன்
விழித்தூண்டில் வீசிக்கொண்டு
கண்ணுக்குத் தெரியாத அந்த “தக்கையில்”
கண்பூத்து நின்றிருப்பாய்!

நான் வந்தவுடன் என்னைப் பார்த்தவுடன்
அதே அலட்சியம்…
வேறு ஒரு விட்டம் நோக்கி
வெறும் பார்வை
அப்போதும் இதே சிரிப்பு…

நான் கண்டுபிடித்து விட்டேன்
அந்தக் கதிர்வீச்சின் கண்ணாடி இழைக்கீற்றுகளில்
ஊமையாய்
ரகசியமாய்
ஒரு கண்ணீர்த்துளி
முத்துக்கோத்துக்கொண்டிருப்பதை
அது போதும்!

அதற்கே நான்
லுங்கி இல்லாமலேயே
லுங்கி இருப்பதாய்
உயர்த்திக்காட்டிக் காட்டி ஆடிக்கொண்டிருப்பேன்
நீ வெடுக்கென்று திரும்பினாலும்
அங்கு ஒரு “க்ளுக்” சிரிப்பு
எனக்கு பன்னீர் தெளித்துக்கொண்டிருக்கும் என்று!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க